மீன லக்னம் - தனித்து நிற்கும் குரு தரும் யோகங்கள்கிரகங்கள் தரும் யோகங்கள் - 112

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

இருப்பதிலேயே பள்ளமான லக்னமே மீன லக்னம்தான். அதனாலேயே பல விஷயங்களை ஆழ்மனதில் பதுக்கி வைத்திருப்பார்கள். பள்ளத்தை தேடி வெள்ளம் பாய்வதுபோல விஷயங்களைத் தேடி மனம் ஓடிக் கொண்டேயிருக்கும். சின்ன விஷயத்தைக் கூட தன் அனுபவத்திற்கு வந்தாலொழிய ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தனுசு குருவை சேர்ந்தவர்கள் பொட்டில் அடித்தமாதிரி பேசுவார்கள். மீன குரு இதமாக, பதமாக, பக்கம் பார்த்து பேசுவார்கள்.

தனுசு திட்டமிடாது திடீர் முடிவுகள் எடுப்பார்கள். ஆனால், மீனமோ எல்லாமே திட்டமிட்டபடி நடத்துவார்கள். தனகாரகனான குருவின் ராசியில் இவர்கள் பிறந்திருப்பதால் பணத்தை விட மனம்தான் பெரியது என்பார்கள். யாராவது தன்னை அவமானப்படுத்தினால் வாழ்க்கை முழுவதுமே ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டு முடிப்பார்கள். நச்சரித்தாவது விஷயத்தை முடித்து விடுவார்கள்.

மேலே சொன்னவை பொதுவான பலன்கள். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான குரு தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? மீன லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே குரு இருந்தால், அதாவது லக்னாதிபதியே லக்னத்தில் இருந்தால் லக்ன மாலிகா யோகம் எனப்படும். அறச் செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஈடுபடுவார்கள். எதில் ஆர்வத்தோடு ஈடுபட்டாலும் முன்னுக்கு வருவார்கள். பார்ப்பதற்கே கம்பீரமாக இருப்பார்கள்.

வஞ்சனையே இல்லாமல் எல்லோரையும் பாராட்டுவார்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றபடி இருப்பார்கள். பாரம்பரியத்தை நிலைநாட்டுவார்கள். பலநேரங்களில் பிழைக்கத் தெரியாத மனிதராகவும் இருப்பார்கள். வேதமந்திரங்களில் மிகவும் ஈடுப்பாட்டோடு இருப்பார்கள். இரண்டாம் இடமான மேஷத்தில் குரு நின்றால் பாரம்பரிய முகத்தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வசீகர முகமும் மக்களை வசியம் செய்யும் தனமையும் இருக்கும். தான் சார்ந்திருக்கும் மரபு, சம்பிரதாயங்களை தூக்கிப் பிடிப்பார்கள். இவர்களின் உள்ளுணர்வானது அசாத்தியமான வகையில் இருக்கும். படைப்பாற்றல் இருக்கும். புராணங்கள், இதிகாச சொற்பொழிவாளர்களாக இருப்பார்கள். ஊருக்கு உதவும் முன் தன் குடும்பச் சூழ்நிலையைப் பார்த்துக் கொள்வதும் முக்கியம். நாலு பேருக்கு உபதேசமாக நிறைய விஷயங்கள் கூறுவார்கள். ஆரம்பக் கல்வியில் படிப்பைக் காட்டிலும் பேச்சு, பாட்டுப்போட்டி போன்றவற்றில் மிகவும் ஈடுபாடு காட்டுவார்கள்.

மூன்றாம் இடமான ரிஷபத்தில் குரு இருந்தால் இதமான பேச்சும் ஆறுதலாகவும் இருப்பார்கள். சினிமா, நாடகத் துறையில் மிகச் சிறந்த வசனகர்த்தாவாக வருவார்கள். இயல் இசை என்று சிறந்து விளங்குவார்கள். தொடர்ச்சியான வெற்றிகளுக்கே ஆசைப்பட வேண்டும். அதனால், ஓரிரு வெற்றிக்குப் பிறகு அலட்சியமாக இருத்தல் கூடாது. இவர்கள் நண்பர்களின் வார்த்தைகளைவிட குரு போன்றிருப்பவர்களின் பேச்சையே கேட்க வேண்டும்.

நான்காம் இடமான மிதுனத்தில் குரு இருந்தால், இவர்களின் பேரில் வீடு இல்லாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். யாரிடமேனும் காசு கொடுத்து ஏமாறுவது என்றெல்லாமும் நடக்கும். நிறைய ஊர்களுக்குச் சென்ற வண்ணம் இருப்பார்கள். இவர்கள் ஒரு தேசாந்திரி. புத்தி, வித்தை, சரஸ்வதி கடாட்சமெல்லாம் மிகுந்து வரும். தாய்வழிச் சொந்தங்கள் அவ்வப்போது தொந்தரவு கொடுப்பார்கள். இவர்களில் சிலருக்கு சிறிய வயதிலேயே தாயாரின் இழப்பு ஏற்படும். இவர்கள் பெயரில் தனி வீடோ அல்லது பூமியோ வைத்துக் கொள்ளக்கூடாது. இங்கு குரு தனித்து நிற்காமல் வேறு கிரகங்களோடு அமர்ந்தால் நல்லது.

ஐந்தாமிடமான கடகத்தில் குரு நின்றிருந்தால், இவர்களுக்கு கண்கள் பேசும். எதையுமே ஜாடை மொழியிலேயே பேசுவார்கள். சங்கீதம், வாய்ப்பாட்டு என்று கற்றுக்கொண்டு முன்னேறுவார்கள். இவர்களின் வாரிசுகள் பெரும் புகழோடு விளங்குவார்கள். பூர்வீகச் சொத்தை விட்டுக்கொடுக்கும் அளவிற்கு சொத்து சேர்ந்துவிடும். அதேபோல போதும் என்கிற மனப்பாங்கோடு இருப்பார்கள். நதிபோல எதையோ தேடிச் செல்லும் யாத்ரீகன்போல தேடலோடு இருப்பார்கள். மூதாதையர்களை மிகவும் மதித்து அவர்களின் நினைவாக ஏதேனும் ஸ்தாபனத்தை தொடங்குவார்கள்.

ஆறாம் இடமான சிம்மத்தில் குரு இருந்தால், அதாவது மறைவதால் சோம்பேறித்தனம் இருந்து கொண்டேயிருக்கும். ‘‘பார்த்துக்கலாம்... பார்த்துக்கலாம்...’’ என்று தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். நாலு விஷயங்கள் தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால், ஆழமாக இருக்காது. இந்த அமைப்பில் பிறக்கும் குழந்தைகள் மஞ்சள் காமாலையோடு பிறப்பார்கள். எப்போதும் ஏதாவது புலம்பியபடி இருப்பார்கள். எத்தனை வசதி வந்தாலும் நிம்மதியே இல்லை என்று சொல்லுவார்கள்.

ஏழாம் இடமான கன்னியில் குரு இருந்தால் அழகும் கம்பீரமும் அந்தஸ்தும் மிக்கவராக இருப்பார். போக உணர்வு மிகுதியாக இருக்கும். திருமணமும், குழந்தை பாக்கியமும் தாமதமாகக் கிட்டும். வாழ்க்கைத் துணை நல்ல பெரிய இடத்திலிருந்து அமையும். இந்த அமைப்பில் ஆண்கள் பிறந்தால் மனைவிக்குத் தெரியாமல் எந்தவித பணப்பட்டுவாடாவும் செய்யக்கூடாது. திருமணம் நிச்சயமாகி நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்குமிடையே அதிக இடைவெளி கொடுக்கக்கூடாது.

எட்டாமிடமான துலா ராசியில் குரு இடம்பெற்றிருந்தால் குடும்பத்தை விட்டு அன்னிய தேசத்தில் வசிப்பவர்களாகவும் இருப்பார்கள். சின்னஞ்சிறு ஆசாபாசங்கள், காம குரோதங்கள் போன்றவற்றிற்கு மிக எளிதில் ஆட்படுவார்கள். வரவுக்கு மீறிய செலவு செய்து சிக்கிக் கொள்வார்கள். எல்லாவற்றிற்கும் கௌரவம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பழைய ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் பத்திரப்படுத்துவார்கள். தூக்கமின்மையும் கண்களைச் சுற்றிலும் வளையமும் வரும். இவர்களிடமுள்ள முக்கிய பலவீனமே எல்லாவற்றையும் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே மறந்துபோவது.

ஒன்பதாம் இடமான விருச்சிகத்தில் குரு இருந்தால் தந்தையைவிட திறமைமிக்கவராக இருப்பார்கள். வாழ்வின் முக்கிய நிகழ்வு அனைத்திலும் தந்தையாரின் பங்களிப்பு இருக்கும். வெளி மாநிலம், வெளிநாட்டில் இருக்கின்ற காலகட்டங்கள் மிகுந்த திருப்புமுனையாக அமையும். யாரும் யோசிக்காத விஷயங்களை, சமூகத்தில் சுத்தமாக மறந்துபோன பாரம்பரியமான கிரியைகளை இவர்கள் மீண்டும் உயிர்ப்பிப்பார்கள்.

பத்தாம் இடமான தனுசில் குரு இடம் பெற்றிருந்தால் வாழ்க்கையை ரொம்பவும் சிரமமில்லாது வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். எப்படியாவது அடிப்படை சிரமங்கள் இல்லாது பார்த்துக்கொள்வார்கள். தான் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில் திருப்பணி மற்றும் விழாக்களில் முக்கியப் பங்காற்றுவார்கள். மத்திய அரசுக்கே ஆலோசனை கூறும் அளவிற்கு உயர்ந்த பதவிகளில் அமர்வார்கள். இவர்களின் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்கள் எப்படியிருந்தாலும் இவர்கள் சிறப்பாகப் படித்து விடுவார்கள்.

 திடீரென்று சுயதொழில் தொடங்கி முன்னேறுவார்கள். சொந்தமாக கன்சல்டன்சி வைத்து நடத்துவார்கள். மெரைன் இன்ஜினியர், கல்லூரி விரிவுரையாளர், ஆன்மிக புத்தகங்கள் பதிப்பித்தல் என்று முன்னேறுவார்கள். எல்லோரையும்போல ஏதேனும் ஒரு வேலை செய்தாலும் தனிப்பட்ட முறையில் தனக்கென்று பிடித்த வேலையை இணைத் தொழிலாகவும் செய்து வருவார்கள்.

பதினோராம் இடமான மகர ராசியில் குரு தனித்து நிற்கிறது. அதுவும் இங்கு குரு நீசம். நீங்கள் சொன்னால் யாரும் கேட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்கிற ஆதங்கம் இருக்கும். ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும். பெண்களுக்கு ஆண்தன்மை மிகுந்து காணப்படும். மூத்த சகோதரர் உதவியாக இருப்பார். பன்னிரண்டாம் இடமான கும்ப ராசியில் குரு அமர்ந்தால் ஆழ்ந்த தூக்கம் இருக்கும். அடுத்த பிறவியே இருக்காது எனும் அளவுக்கு தீவிர ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். தயாள குணம் மிகுந்திருக்கும். வீண் பழி வந்து நீங்கும். அன்னதானம், கோயில் கும்பாபிஷேகம் என்றெல்லாமும் ஈடுபடுவார்கள்.

இந்த தனித்த குருவானது கொஞ்சம் விசித்திரமானது. நல்ல மற்றும் தீய பலன்களை கொடுக்கக் கூடியதாகும். எனவே, எதிர்மறை கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து விடுபட கழுகுமலை முருகனை வழிபட்டு வாருங்கள். சம்பாதி என்னும் கழுகு முனிவர் இவ்வூரில் முருகனை வழிபட்டதால் கழுகுமலை எனப்பெயர் பெற்றது. முருகனை கழுகாசலமூர்த்தி என அழைக்கின்றனர். குடவரை கோயிலான இதன் விமானம் மலைமீது அமைந்துள்ளது. பௌர்ணமி தோறும் சுமார் ஐந்தாயிரம் பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி கிரிவலம் வந்து முருகனை தரிசனம் செய்கின்றனர். கருவறையில் வள்ளி தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார்.

முருகன் வாகனமான மயில் இடது பக்கம் முகம் காட்டுவது சிறப்பு. இங்கு இந்திரனே மயிலாக தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது. வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி முருகன் முன்னால் காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். முருகனுக்கு ஒரு முகமும், ஆறு கரங்களும் உள்ள திருத்தலம் இது மட்டும்தான் என்கிறார்கள்.

தாரகாசூரனை வதம் செய்வதற்காகவே இக்கோலத்தில் இவர் காட்சியளிக்கிறாராம். கழுகுமலை தென்பழனி என்றழைக்கப்படுகிறது. பழனியைப் போலவே முருகன் மேற்கு பார்த்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி -சங்கரன்கோயில் பாதையில் 6வது கி.மீட்டரில் கழுகுமலை அமைந்திருக்கிறது.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்