காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்யுவகிருஷ்ணா - 27

போதையும், பணமும் கொழித்துக் கொண்டிருந்த எஸ்கோபாரின் சாம்ராஜ்யத்தில் பெண்களே இல்லையா, கவர்ச்சி மருந்துக்கும் இந்தத் தொடரில் இல்லையே என்று பலரும் நினைக்கலாம். பணம் கொழிக்கும் இடங்களில் பெண்கள் இல்லாமலா? எஸ்கோபாரிடம் ஏழைகளுக்கு உதவும் கல்யாண குணம் ஏகத்துக்கும் இருந்தது என்பதை கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். அவருடைய நெகட்டிவ்வான முகம், பெண்கள் தொடர்பானது.

அதிலும், இளம் பெண்கள். பதினாலு முதல் பதினேழு வயதுக்குள் இருக்கும் டீன் ஏஜ் பெண்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நாட்களை நினைவுகூர்ந்து சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார் மரியா (பெயர் மாற்றப்பட்டது) என்கிற பெண். அப்போது மரியா டீன் ஏஜில் இருந்தார். அவருடைய தோழி ஒருத்தி பாப்லோவின் மெதிலின் கார்டெல்லோடு தொடர்பில் இருந்தாள். அவள் ஒருமுறை மரியாவைக் கேட்டாள்.

“ஒரே ஓர் இரவு. ஒரு விஐபியோடு நீ கழித்துவிட்டால் போதும். வாழ்க்கை முழுமைக்குமான செல்வத்தை சேர்த்துவிடலாம்...” மரியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “அப்படியானால், நீ அதை செய்து வளம் பெறலாமே?” என்று கேட்டார். அதற்கு அவள் சொன்ன பதில் அதிர்ச்சிக்குரியதாக இருந்தது. கார்டெல்லில் பணிபுரியும் அவளது காதலனால் அவள் கன்னித்தன்மையை இழந்துவிட்டாளாம். ‘கன்னி’களுக்கு மட்டும்தான் அந்த ஆஃபர் வழங்கப்படுமாம்.

மரியா மறுத்துவிட்டார். தோழியும், அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது போலவே காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல மரியாவோடு பழகிக் கொண்டிருந்தாள். ஒருநாள் மரியாவும், தோழியும் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு திருப்பத்தில் மூன்று ஆண்கள் தோழிக்காக காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் அவளுடைய காதலன். அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தார்கள். மரியா சற்று தூரத்தில் தன்னுடைய தோழிக்காக காத்து நின்றுகொண்டிருந்தார்.

அவர்கள் திடீரென மரியாவை நோக்கி வேகமாக வந்தார்கள். ஒருவன் வாயைப் பொத்தினான். மற்ற இருவரும் அவரைத் தூக்கிக்கொண்டு, அவர்கள் வந்த காருக்கு அருகே போனார்கள். இதையெல்லாம் தோழி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தாள். மரியா திமிற முயற்சிக்க, அவர்களில் ஒருவன் சொன்னான். “கத்தாதே. எங்களோடு ஒத்துழைக்க மறுத்தால், உன் குடும்பத்தில் ஒருவர்கூட உயிரோடு இருக்க முடியாது!” காருக்குள் திணிக்கப்பட்ட மரியா, அழுதுகொண்டே இருந்தார்.

புறநகரில் இருந்த சிறிய கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக கார் நின்றது. மரியாவை அவர்கள் இழுத்துச் சென்றார்கள். உள்ளே ஓர் வயதான பெண்மணி இருந்தார். அவர் மரியாவுக்கு ஆறுதல் சொன்னார். குளிக்க வைத்து புதிய துணிமணிகளை அணிந்து கொள்ளச் சொன்னார். மேக்கப் போட்டு விட்டார். மூவரில் ஒருவன் மரியாவை விதவிதமாக படமெடுத்தான். அவ்வளவுதான். காரிலேயே வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.

படமெடுப்பதற்கா இவ்வளவு வன்முறை என்று மரியா நினைத்தார். அன்று படமெடுத்ததின் விளைவை ஆறு மாத காலம் கழித்துதான் சந்தித்தார். இந்த முறையும் மரியா, அதே போல காரில் கடத்தப்பட்டார். தனக்கு மேக்கப் போட்டுவிட்டு படமெடுத்து அனுப்பி விடுவார்கள் என்றுதான் நினைத்தார். அதுவேதான் நடந்தது. ஆனால் - இம்முறை படமெடுத்துவிட்டு, மரியாவை காரில் வேறு ஒரு பங்களாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, மிகவும் வயதான ஜப்பானிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார்.

அவரது அறையில் மரியாவைத் தள்ளி... ஒத்துழைக்க மறுத்த மரியாவுக்கு வலுக்கட்டாயமாக போதை செலுத்தப்பட்டது. தன்னுடைய கன்னித்தன்மையை, யாரென்றே தெரியாத ஒரு காம மிருகத்திடம் இழந்தார் மரியா. இது ஒரே ஒரு மரியாவின் கதை அல்ல. ஆயிரக்கணக்கான இளம்பெண்கள், இம்மாதிரியாகச் சீரழிந்தார்கள். போதை பிசினஸ் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரும் அயல்நாட்டு டான்கள், ‘கன்னிப் பெண்களாக’ தங்களுக்கு வேண்டுமென்று விரும்புவார்களாம்.

ஆரம்பத்தில், அவர்கள் மனம் கோணக்கூடாது என்றுதான் எஸ்கோபார் போன்ற கார்டெல் உரிமையாளர்கள் இதுபோன்ற ‘மாமா வேலை’களைச் செய்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் இதுவே போதை கடத்தலைவிட அதிகம் லாபம் கொடுக்கும் தொழிலாக உருவெடுத்தது. முதன்முறை மரியா கடத்தப்பட்டு, மேக்கப் போடப்பட்டு படமெடுக்கப் பட்டார் இல்லையா? அவருடைய படங்கள் ஏகத்துக்கும் பிரிண்ட் போடப்பட்டு ஆல்பமாக்கப்பட்டு சந்தையில் உலவியது.

அந்த ஆல்பத்தை பார்க்கும் பெரும் தொழிலதிபர்களும், போதை பிசினஸ் மகாராஜாக்களும் ஏலத்தில் கலந்து கொண்டார்கள். அதிகபட்சத் தொகை கேட்ட அந்த ஜப்பானிய கிழவருக்குத் தான் அடித்தது யோகம். டீன் ஏஜ் பெண்களின் கன்னித்தன்மைக்குத்தான் பெரிய தொகை விலையாகக் கிடைக்கும். அதற்குப் பிறகும் அவர்களிடம் கொஞ்சநஞ்சம் இளமை மிச்சமிருக்கும் வரை மொத்தமாக பாலியல் ரீதியாக சுரண்டப்படுவார்கள். பிரதிபலனாக மாதாமாதம் ஏதோ ஒரு தொகை சம்பளம் மாதிரி கொடுக்கப்படும்.

சில குறிப்பிட்ட பெண்களை எஸ்கோபாரே கூட பதம் பார்த்ததாக தகவல்கள் உண்டு. ஒரு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டால் அவளை நிரந்தரமாக தன்னுடைய ஆசைநாயகிகளில் ஒருவராக சேர்த்துக் கொள்வார். அவளுக்கு என்று தனியாக வீடு எடுத்துக் கொடுத்து, வேண்டிய வசதிகளைச் செய்து, அவ்வப்போது இளைப்பாற வருவார்.

போதை தொழில் கொடுக்கல் வாங்கலில் எவ்வளவோ ரிஸ்க்குகளை ரஸ்க் மாதிரி அனாயாசமாக சாப்பிட்ட எஸ்கோபார், ஒருமுறை இந்த கன்னி பிசினஸில் மாட்டி மயிரிழையில் போலீசாரிடமிருந்து தப்பினார். நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஒரு பதினாறு வயதுப் பெண்ணை போலீசே செட்டப் செய்து, மெதிலின் கார்டெல்லுக்குள் அனுப்பி வைத்தது. அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் எஸ்கோபாரின் ஆட்கள் பலரும் சிக்கினார்கள்.

எஸ்கோபார் முக்கியஸ்தர்களுக்குக் கொடுத்த ஒரு பெரிய பார்ட்டியில் இதுபோல ஏராளமான பெண்களை அழைத்துப் போயிருந்தார்கள். போலீசின் உள் கையான அந்தப் பெண் கொடுத்த தகவலையடுத்து பார்ட்டி நடந்த இடம் கமாண்டோக்களால் சுற்றி வளைக்கப்பட்டது. மெதிலின் போதை விஐபிக்கள் பலரும் கைது செய்யப்பட்ட அந்த சம்பவத்தில், எஸ்கோபார் மட்டும் எப்படியோ தப்பித்து விட்டார். எஸ்கோபாருக்கு கிடைத்த தகவல்களின் படி இந்தப் பெண்களில் யாரோ ஒருவர்தான் தகவல் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தது. எனவே சந்தேகத்தின் பேரில் ஒவ்வொரு பெண்ணாக கொல்லப்பட்டார்கள்.

அந்த சம்பவத்தின்போது ஒரே நேரத்தில் மெதிலின் நகரின் வெவ்வேறு பகுதிகளில் சுமார் ஐம்பது இளம்பெண்களின் சடலங்களை போலீஸ் கைப்பற்றியது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மாணவிகள், டிவி நடிகைகள், மாடல்கள், அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் போன்ற வகைமைகளில் அடங்கியவர்கள் அவர்கள்.

எஸ்கோபார் கும்பலின் போதைத் தொழிலைக் கூட ஏதோ ஒருவகையில் சகித்துக் கொண்ட போலீஸ், இந்த கன்னி பிசினஸைக் கண்டு கொதித்தெழுந்தது. கார்டெல்களின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்களை பல்வேறு ஆபரேஷன்கள் நடத்தி மீட்டார்கள். அந்தப் பெண்களில் சிலர் கொடுத்த தகவல்களை வைத்தே எஸ்கோபாரின் நடவடிக்கைகள் குறித்த விஷயங்களை போலீஸ் அறிந்து கொள்ள முடிந்தது.

எஸ்கோபாருக்கு இரவில் தூங்கும் பழக்கமே கிடையாதாம். விடியற்காலையில்தான் தூங்குவார். முற்பகலில் முழித்துக் கொள்வார். தன்னுடைய சகாக்களோடு போனில் தொடர்பு கொண்டு சங்கேத மொழியில் கட்டளைகளை இடுவாராம். தாக்குதல், கடத்தல், சரக்கு கைமாற்றுதல் போன்றவற்றைப் பற்றியெல்லாம் தொலைபேசியில் பேச எஸ்கோபார் கும்பல் தங்களுக்குள்ளே ஒரு புதுமொழி தயாரித்து வைத்திருந்திருக்கிறார்கள். இந்த தகவல்கள் மொத்தமும் இந்தப் பெண்கள் மூலமாகத்தான் போலீசுக்கு கிடைத்தது.

இந்த கன்னிகளால் ஒருமுறை சூடுபட்டவுடனேயே எஸ்கோபார், பெண்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை அடைந்தார். எனினும் அவர் தொடங்கி வைத்த ‘கன்னி பிசினஸ்’, இன்றும்கூட கொலம்பியாவில் வெகுசிறப்பாக நடக்கிறது. பல உள்ளூர் பொறுக்கிகள் எஸ்கோபார் வைத்த புள்ளியில் பெரியளவில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் இன்டர்நெட்டில் கன்னித்தன்மைக்கு ஏலம் நடக்கிறதாம். செக்ஸ் டூரிஸம் என்கிற கேடுகெட்ட தொழில், இன்றும் கொலம்பியாவில் கொடிகட்டிப் பறக்கிறது. உலகெங்கும் இருந்து நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு கன்னிவேட்டையாட பெரும் பணக்காரர்கள் கொலம்பியாவுக்கு பறக்கிறார்கள். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர்களில் ஒருவர், நம் காட்ஃபாதர்.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்