Dummies for BITCOIN- கிங் விஸ்வா

கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசாங்கமும் இணைந்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்துகின்றன. பணத்திற்கான மதிப்பினை, அதன் வீழ்ச்சியை, வீக்கத்தினை நிர்ணயிப்பதே இவர்கள்தான். வங்கிகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், இவர்களின் முடிவுகளால் பாதிக்கப்படுவது என்னவோ, பாமர மக்கள்தான். ஆகவே, இந்த விளையாட்டையே மாற்றி, பொருளாதாரத்தின் மீது அரசாங்கத்துக்கு இருக்கும் கட்டுப்பாட்டை அகற்றி, அதை சாதாரண மக்கள் கையில் கொடுத்தால், சமூகம் எப்படி முன்னேறும்? இந்த மாற்றத்திற்கான முதல்படிதான் பிட் காய்ன் என்ற ஆன்லைன் கரன்சி.

பெயர் தெரியாத பிரம்மா:
இந்த பிட் காய்னை உருவாக்கியவர் யாரென்று இதுவரையில் யாருக்குமே தெரியாது. ஆனால், அவருக்கு ஒரு பெயர் வேண்டுமென்று ‘சடோஷி நகோமோட்டோ’ என்று ஜப்பானியப் பெயர் ஒன்றைச் சூட்டி, இல்லாத ஓர் ஆளை உருவாக்கினார்கள். 2009ம் ஆண்டு முதல் இந்த பிட் காய்ன் புழக்கத்தில் இருந்தாலும் இன்னமும் பலருக்கு அதைப்பற்றி சரியாக புரிதல் இல்லை. அதை சரி செய்யவே இந்த கிராஃபிக் நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர்: பாப் என்பவர்தான் சடோஷி நாகோமோட்டோவாக இருக்கக் கூடுமென்று நினைத்து அவரைப் பின்தொடர்கிறது ஒரு கூலிப்படை.

ஆனால், அந்தக் கூலிப்படையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்களுக்கே தெரியாமல் உன்னிப்பாக மேற்பார்வையிடுகிறது அரசாங்கத்தின் ரகசிய அமைப்பு ஒன்று. ஒரு கட்டத்தில் கூலிப்படையும் அரசாங்க உளவாளிகளும் அந்த ஆளைச் சுற்றி வளைத்துவிட, அவரை ஒரு மர்ம நபர் காப்பாற்றுகிறார். மர்ம நபரும் பாப்-பும் தப்பிக்கிறார்கள். அவர்களை இரு குழுக்களுமே துரத்த, ஒரு கட்டத்தில் இரு குழுவினரிடமும் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.

முடிவில் நாம் எதிர்பாராத ஓர் இடத்திலிருந்து இவர்களுக்கு உதவி கிடைத்து, பாப் தப்பிக்கிறார். இந்த அசத்தலான சேஸிங்குக்கு இடையே பிட் காய்ன் என்றால் என்ன, அது எப்படி மக்களுக்கு உதவும், என்றெல்லாம் மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. சில்க் ரூட் என்ற இணையம், டபுள் ஸ்பெண்டிங் போன்றவற்றை அனைவருக்கும் புரியும்படியாகச் சொன்னதுடன் ஏன் சீனா போன்ற நாடுகளில் பிட் காய்னுக்குத் தடை விதித்திருக்கிறார்கள் என்றும்; ஏன் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் இதைக் கொண்டாடுகிறார்கள் என்பதையும் கதையினூடாகவே விளக்கியிருக்கிறார்கள்.

புதுமையும் குறியீடுகளும்: வழக்கமாக இதுபோன்ற ஆக்‌ஷன் கதைகளுக்கு ரியலிஸ்டிக் பாணியில்தான் வரைவார்கள். ஆனால், இங்கே செமி ரியலிஸ்டிக் ஆக வரைந்திருப்பதுடன் கதையை ஓவியங்களைக் கொண்டு முன்னெடுத்துச் செல்கிறார் ஆரெஸ். ஒரு பக்கத்தில் பாப்-பிடம் மர்ம நபர், அவர்தான் நகோமோட்டோ என்று அனைவரும் நம்புவதாகச் சொல்ல, அந்த உணர்வு அவருக்குள் முழுமையாகச் சென்றடைவதை நிழல்களைக் கொண்டே அழகாக விவரித்திருக்கிறார்.

கதையின் முடிவில் கவித்துவமான ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை பாப்-தான் அவரோ என்று படிக்கும் நாம் நினைக்கும்போது, அதிகாரத்துக்கு எதிராக நேர்மையாகப் போராடும் ஒவ்வொருவரும் நகோமோட்டோதான் என்று முடித்திருக்கிறார்கள். அதனால்தான் எட்வர்ட் ஸ்நோடன், ஜூலியன் அஸாஞ்சே போன்றவர்கள் பிட் காய்னை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.

எழுத்தாளர் ஜூஸப் புக்கெத் (42, ஸ்பெயின்): சித்திரக்கதை மற்றும் ஓவியங்களைப் பற்றி முறையாக ஐந்தாண்டுகள் படித்த ஜூஸப், கடந்த 21 ஆண்டுகளாக காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை எழுதி வருகிறார். இவரது படைப்புகள் ஸ்பானிஷில் இருந்தாலும், மொழிபெயர்க்கப்பட்டு பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவலாக விற்பனையாகிறது.

அலெக்ஸ் ப்ரூக்ஸ்சா 1975 (42): ஸ்பெயினில் பிறந்து ஜெர்மனியில் பொருளாதாரத்தில் மேலாண்மையியல் படித்த இவருக்கு ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழிகள் தெரியும். 2011ல் முதன்முதலாக பிட் காய்ன் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து தொடர்ந்து இதைப்பற்றி பேசியும், எழுதியும் வருகிறார். இந்த கிராஃபிக் நாவலை எழுத்தாளர் ஜூஸப்புடன் இணைந்து 7 மாதங்களில் உருவாக்கினார்.

ஓவியர் ஹொசெ அன்கிள் ஆரெஸ் (37, ஸ்பெயின்): ஓவியக் கல்லூரியில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்திய பீட்டர் என்று அழைக்கப்படும் இவரது ஓவியங்கள் ஆரம்பத்தில் வெகுஜனப் பத்திரிகைகளில் வந்தன. கடந்த 8 ஆண்டுகளாக இவர் வரைந்த கிராஃபிக் நாவல்கள் ஐரோப்பாவில் சிலாகித்துப் பேசப்படுபவை. வித்தியாசமான கேமரா கோணங்களில் வரைவதை தனது டிரேட்மார்க் ஆகக் கொண்டவர் இவர்.

ஸ்நிப்பெட்ஸ்

Bitcoin - The Hunt for Satoshi Nakomoto (ஆங்கிலம்)

எழுத்தாளர்: ஜூஸப் புக்கெத்
ஓவியர்: ஹொசே ஆரெஸ்
பதிப்பாளர்: யூரப் காமிக்ஸ், டிஜிடல் எடிஷன்
விலை: ரூ.656, 114 பக்கம்
கதை: பொருளாதாரத்தின், குறிப்பாக பணத்தின் மீதான அரசாங்க மற்றும் தனியார் கட்டுப்பாடுகளைக் குறைக்க புதிய பரிவர்த்தனை முறையை உருவாக்கியவரின் கதை.

அமைப்பு: சடோஷி நகோமோட்டோ என்ற மர்ம மனிதரைத் துரத்துகிறது ஒரு கும்பல். அவர் யாரென்றே தெரியாத நிலையில், பலரையும் வேட்டையாடுகிறார்கள். இந்த புயல்வேகத் துரத்தலுக்கு இடையேதான் பிட் காய்ன் என்றால் என்ன, அதன் பயன்பாடுகள் பற்றியெல்லாம் நமக்கு எளிமையாகச் சொல்லப்படுகிறது.

ஓவிய பாணி: மெல்லிய, உறுதியான கோட்டோவியங்களைக் கொண்டதுதான் ஆரஸின் ஓவியப்பாணி. இதில் வண்ணங்கள் எதுவுமில்லாமல், வெறும் லைட்டான நீல நிறத்தை மட்டும் மிட்-டோனில் கொடுத்து, ஒருவிதமான புதிய பாணியை உருவாக்கியுள்ளார். அதைப்போலவே, ரியலிஸ்டிக்காகவும் இல்லாமல், கார்ட்டூன் பாணியிலும் இல்லாமல், இரண்டிற்கும் இடையேயான ஒருவித மத்திய நிலையில் இருக்கின்றன இந்த ஓவியங்கள். ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் சேஸிங் படம் எடுப்பதற்கான ஸ்டோரி-போர்டைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.