நண்பன் கடவுளுக்குக்கூட கிடைக்காத வரம்...‘‘மனுஷனோட சந்தோஷம், துயரம் ரெண்டுமே உறவுகள்தான். அது ரொம்ப உணர்வு பூர்வமான விளையாட்டு. நட்பு, அன்பு, காதல் எல்லாத்தையும் ‘செஸ்’ விளையாட்டு மாதிரி ஆக்கிட்டா, காய் நகர்த்தல்லயே நம்ம காலம் முடிஞ்சிடும். உறவுகளை, நட்பை அனுபவித்து உணர்வோம். அதைப் பத்தியும் பேசற படம்தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. ரத்த சம்பந்தமான உறவு பெரிய விஷயமில்லை.

மனைவி கடவுள் தந்த வரம்... தாய் கடவுளுக்கு நிகரான வரம். நண்பன் கடவுளுக்குக் கூட கிடைக்காத வரம். ஆனால், எங்கோ பிறந்து, வளர்ந்து சுயநலமே இல்லாமல் வருது பாருங்க... நட்பு. அதையும் இந்தப் படம் பேசும்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன். வித்தியாசமாக, அனுபவங்களின் ஏணிப்படியில் ஏறி வந்தவர்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ எப்படியிருக்கும்?
இது ‘நான் மகான் அல்ல’ பாணியில் பயணிக்கும். நகரம் என்பது அழகான நரகம். அது எப்பவும் நல்லவங்களைத் தூக்கிச் சாப்பிட ரெடியா இருக்கு. அதில் எவ்வளவு கவனமாக இருக்கணும்னு சொல்லியிருந்தேன். எனக்கு மறுபடி இந்த மாதிரி படம் பண்றது ஒரு சவால். இதில் இருக்கிற சோஷியல் மெசேஜுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கும். என்னை இவ்வளவு தூரம் அள்ளி அணைச்சு கூட்டிட்டு வந்ததே நண்பர்கள்தான். இதில் நட்பு பற்றிய நல்ல புரிதலுக்கு இடமிருக்கு. ரொம்ப சந்தோஷமா கலகலன்னு நண்பர்கள், நட்பு போற இடத்துல திடீரென்று ஒரு சம்பவம் எல்லாத்தையும் கலைச்சுப் போடுது. கடைசியில் என்ன ஆனது என்பதுதான் கதை.

சினிமாவுல கதை சாமானியமாக இருந்தால் கூட போதும். திரைக்கதையில் அதை வைச்சு வைச்சு மெருகேத்தலாம். ‘வெண்ணிலா கபடிக்குழு’ அப்படி என்னங்க பெரிய கதை? மேட்ச் விளையாடப் போன பசங்க ஜெயிக்கிறாங்களா, இல்லையா... இதுதான். ஆனா, மெருகேத்தி புகழ்பெற்ற படம்தான் அது. அப்படி இதுவும் வந்திருக்கு. சில படங்கள் 100% சரியாக வந்திருக்குனு தோணுமே, அப்படித் தோணின படம் இது. அந்த உற்சாகத்தில காலேஜ் பின்னணியில் ‘ஏஞ்சலினா’னு புதுப்படம் ஆரம்பிச்சு 60% முடிச்சிட்டேன். அழுக்குச்சட்டையும் பீடியும் மட்டும் யதார்த்தம் கிடையாது. கார்ப்பரேட் நிழல் உலகமோ, லோக்கல் ரவுடியிசமோ எதைக் காட்டினாலும் அதோட ஒரிஜினல் முகத்தைக் காட்டணும். இந்த மாதிரி நாம் செய்கிற படங்களுக்கு வயசே ஆகாது.

சந்தீப் ரொம்ப நம்பிக்கைக்குரியவராக உருவெடுக்கிறார்... ஹீரோயின் மெக்ரின் அழகா இருக்காங்க...
சந்தீப் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டுப் பக்கம். பக்காவாக தமிழ் பேசுகிறார். டைரக்டர் சொல்ற கதையை ஹீரோ புரிஞ்சுக்கணும். எமோஷன், ஆக்‌ஷன் இரண்டுமே சந்தீப்பிற்குப் பிரமாதமா வருது. இந்தப் படத்துக்குப் பிறகு அவரை  எல்லோருக்கும் பிடிக்கும். பெருமைக்கு சொல்லலை. முதல் பிரதி பார்த்திட்டு தெளிவாச் சொல்றேன். மெக்ரின் அருமையான பொண்ணு. இந்தத் தடவையும் என் கூட இமான். அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார்.

சினிமாவில் கற்றுக்கொண்ட பாடம் என்ன..?
இங்கே கீழே விழுந்தால், உடனே வேகமாக எழுந்திருக்கணும்னு கத்துக்கிட்டேன். உண்மையா பிரதிபலன் பாராமல் உழைக்கணும். வெற்றி, தோல்வி வேற விஷயம். இங்க விசுவாசம் சிலர் பேர்கிட்ட மட்டும்தான் இருக்கு. சூரிகிட்டே அப்படி இருக்கு. நான் படம் பண்ணினா ஒரு விபரமும் கேட்காம மத்தவங்ககிட்டே இருந்து தேதிகளைப் பிச்சுகிட்டு வந்து நிற்பார். விஷ்ணு விஷாலும் அப்படியே. நான் கமர்ஷியல் ஹீரோக்களை ரொம்ப நம்பறவன் இல்லை. ‘ராஜபாட்டை’ பண்ணும்போது எத்தனை ஹீரோக்கள் போன் பண்ணுனாங்கன்னு எனக்குத் தெரியும். அந்தப் படம் சரியாகப் போகலை. அப்புறம் ஒருத்தரும் பேசலை.

ஒரு படம் பண்ணும்போது அடுத்த படத்தை கமிட் பண்ணணும்னு அங்கே கத்துக்கிட்டேன். ‘பாண்டிய நாடு’ வெற்றிக்குப் பிறகு ஒரு ஹீரோவைப் பார்த்தேன். அவரும் பெரிய ஹீரோ தான். அந்த சமயம் அவருக்கு பெரிய பிஸினஸ் இல்லை. ‘என்ன சார், என்னைப் போய் பார்க்க வந்திருக்கீங்க’னு ஆச்சர்யமாகக் கேட்டார். ‘பரவாயில்லை, படம் பண்ணுவோம்’னு சொன்னேன். இரண்டு, மூணு கதை சொன்னேன். ‘சார், உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதைப் பண்ணுவோம்’னு சொன்னார்.

அந்த இடைவெளியில அவருக்குத் தொடர்ந்து மூணு படங்கள் ஹிட். எனக்கு அப்ப ‘பாயும் புலி’ சரியா போகலை. மறுபடியும் அந்த ஹீரோகிட்டே போய் கதை சொன்னேன். ‘என்ன சார் மாஸ் ஆக இருக்கு. உங்க ஸ்டைலில் ‘லைவ்’வா இருக்கும்னு நினைச்சேன்’னார். அப்புறம் ‘லைவ்’வா கதை கொண்டு போனேன். அப்ப ‘கமர்ஷியலாக என்னை தூக்கிட்டுப் போங்க’னு சொன்னார்.

பார்த்தேன். இப்ப நம்ம கதைக்கு யார் ஹீரோன்னு பார்ப்போம்னு இருந்திட்டேன். ‘உங்களுக்கு எந்தக் கதை ஓகேயோ அந்தக் கதையை பண்ணலாம்’ என்று கூறிய அதே ஹீரோ ஆறு மாதத்திற்குப் பிறகு மாற்றிப் பேசியது ஆச்சர்யம். அப்போதுதான் தமிழ் சினிமாவில் மூன்று நிலை சினிமா இயங்கிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். ஓர் இயக்குநர் சொன்ன கதையில் எந்தவித கருத்தும் சொல்லாமல் அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, இந்தப் படத்திற்கு என்னை கதாநாயகனாக தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி என்று கூறினால் அது Director film.

ஓர் இயக்குநர், ஒரு கதாநாயகனுக்கு கதை சொன்ன பிறகு, அந்த கதாநாயகன் சொல்லும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அந்தத் திரைப்படத்தை திறம்பட முடித்து, அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, இந்தப் பட வாய்ப்புகளைத் தந்த கதாநாயகனுக்கு நன்றி என்று இயக்குநர் கூறினால் அது Hero film.

ஒரு தயாரிப்பாளர், ஒரு இயக்குநரின் கதையைத் தேர்ந்தெடுத்து, அந்த இயக்குநரின் கதைக்குப் பொருத்தமான கதாநாயகனை அந்தத் தயாரிப்பாளரே முடிவு செய்தால் அது Producer film. இந்த மூன்று நிலை சினிமாவில் மிகச் சரியான, மிக முறையான சினிமா என்றால் அது மூன்றாம் நிலை சினிமாதான். சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான்காம் நிலை சினிமா மட்டும் பெருமளவில் நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது முன்பெல்லாம் ஒரு தயாரிப்பாளர் 90% பணத்தை முதலீடு செய்த பிறகு மீதம் உள்ள 10% பணத்தை மட்டும் பைனான்சியரிடம் வாங்கும் நிலை இருந்தது. இன்று ஹீரோவின் பிஸினஸையும், இயக்குநரின் பிஸினஸையும் வைத்து, அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு 90% பணத்தை பைனான்சியர் வழங்குகிறார். அந்த பைனான்சியருக்கு கதையைப் பற்றி எந்த அக்கறையும் இருக்காது. இதுதான் நான்காம் நிலையான Financier film. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பைனான்சியரை நம்பியே படமெடுக்கிறார்கள். இதுதான் தமிழ் சினிமாவின் இப்போதைய அவல நிலை. இந்த நிலை மாறினால், தமிழ் சினிமா ஆரோக்கியமடையும். 

- நா.கதிர்வேலன்