குழந்தைகள் விளையாடுவதற்காகவே சாலையில் வாகனங்கள் செல்லத் தடை!400 ஆண்டுகளாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக கிராமம்

- அய்.கோபால்சாமி, சு.கோமதி விநாயகம்

‘ஓடி விளையாடு பாப்பா...’ என்றார் பாரதி. அந்த பாட்டை படித்துக் கொடுக்கும் பள்ளிகளில்கூட இப்போதெல்லாம் குழந்தைகளை விளையாட விடுவதில்லை. சுறுசுறுப்பாக விளையாடும் குழந்தைகளே படிப்பிலும் சுட்டியாக இருக்கும் என்று மனநல வல்லுநர்கள் கூறுவதையும் யாரும் மனதில் ஏற்றவில்லை. ஆனால், விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, உடலையும் மனதையும் பக்குவப்படுத்தும் அற்புத ஆற்றல் கேந்திரங்கள். 

கிராமத்தில் விளையாடும் நொண்டி, கண்ணாமூச்சி போன்றவை ஊனத்தைச் சமாளித்து இயங்கும் சாதுர்யத்தை சத்தமில்லாமல் போதிப்பவை. போலீஸ், கள்ளன் விளையாட்டு, புதையல் தேடும் விளையாட்டு ஆகியவை மதிநுட்பத்தைக் கூர்தீட்டும் பட்டறைகள். காய் நகர்த்தி ஆடும் தாயம், ஆடுபுலி ஆட்டங்கள் நாளை ராஜாங்கத்தை நிர்வகிக்கும் அளவுக்கு சிந்தனைத்திறனுக்கு அஸ்திவாரம் அமைப்பவை.

இப்படி ஒவ்வொரு விளையாட்டுக்குப் பின்னிருக்கும் ஆரோக்கிய காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொன்மையான விளையாட்டுகள் இருந்தன. அவை சிறுவர் முதல் முதியோர் வரை, ஆண், பெண் அனைவருக்கும் ஏற்றவை. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் உடலையும், மனதையும் வலிமையாக்கி உற்சாகமாக இயங்கச் செய்பவை.

இவற்றை எல்லாம் மறந்து விட்டு நம் பிள்ளைகளைக் கொலு பொம்மைகள் போலவும், கம்ப்யூட்டர் ரோபோக்கள் போலவும் வளர்த்து வருகிறோம். சிறார்களை விளையாட விடாமல் தடுப்பதும், சிட்டுக்குருவியின் சிறகை ஒடிப்பதும் ஒன்றுதான் என்பதை இந்தப் பொருளாதார யுகத்தின் பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை. அரசு தாமதமாகவேனும் இதைப் புரிந்துகொண்டு, நகரத் தெருக்களில் வாரத்துக்கு ஒரு நாள் வாகனப் போக்குவரத்தைத் தடைசெய்து, குழந்தைகளை விளையாட விடும் ‘மகிழ்ச்சித் தெரு’ திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இந்தத் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

ஆனால், ஐந்து தலைமுறைக்கு முன்பே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கடைக்கோடி கிராமம், குழந்தைகள் விளையாடும்போது குறுக்கே வரக் கூடாது என்பதற்காக சைக்கிளைக்கூட தெருக்களில் தடை செய்து முன்னோடி மகிழ்ச்சி கிராமமாக இருந்துள்ளது. எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி, பெயருக்கு ஏற்ப வீரம் விளைந்த பட்டியாகவே இருக்கிறது. ஊருக்குள் போராடி அனுமதி வாங்கிக் கொண்டுவந்த சமுதாய கமிட்டி பள்ளிக்குக் கூட சாதிப் பெயரை வைக்காமல், ‘நேதாஜி பள்ளி’ என்று வீரப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள் பைகளை வாசலில் நின்றவாறே வீட்டுக்குள் விட்டெறிந்துவிட்டு, வீதிக்கு விளையாடப் புறப்பட்டு விடுகிறார்கள். அங்கே வரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இரவு வரை ஒரே ஆட்டமும் பாட்டமும் உற்சாக விளையாட்டுகளுமாக ஆனந்தப்படுகிறார்கள். இவர்களது மகிழ்ச்சியை தடை செய்யக் கூடாது என்பதற்காகத்தான் நாம் மேலே சொன்ன இன்றும் தொடரும் வாகனக் கட்டுப்பாடு. அந்தக் காலத்தில் தெருவுக்குள் மாட்டு வண்டி வருவதற்குக்கூட தடை இருந்திருக்கிறது.

இதுகுறித்து நேதாஜி நடுநிலைப் பள்ளியின் தாளாளர் செல்வராஜ் கூறுகையில், ‘‘400 வருடங்களுக்கு மேற்பட்டது எங்கள் ஊரின் கதை. தொடக்கத்தில் கரிசல் காட்டு விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தினோம். வானம் பார்த்த பூமியான விளங்காட்டுக்கு நெடுந்தொலைவு நடந்தே போக வேண்டும். சின்ன வயசிலேயே உடலில் வலு இருந்தால்தான் கரிசக்காட்டு விவசாயத்தில் நிலைக்க முடியும்.

அதனால் ஊரில் பள்ளிக்கூடம் வரும் முன்பே பிள்ளைகளை விளையாட்டில் பழக்கத் தொடங்கினோம். ஊரைச் சுற்றி உள்ள நான்கு தெருவிலும் காலையும் மாலையும் ஒரே விளையாட்டாகத்தான் இருக்கும். ஒருபுறம் ஆம்பளைப் பசங்க கிட்டிக்குச்சி, பம்பரம், கோலி என்று மும்முரமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். மறுபுறம் பெண் குழந்தைகள் நொண்டி, கிளித்தட்டு, கண்ணாமூச்சி என்று விளையாடுவார்கள்...’’ என்றார்.

அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திலகர். ‘‘சிறியவர்கள் என்று இல்லை; பெரியவர்களும் நேரம் கிடைக்கும்போது விளையாடுவார்கள். வாலிபர்கள் மந்தி தத்துவாங்க. வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் சிலம்பு விளையாடுவார்கள். மீசை நரைச்சவர்களும் காலையிலேயே கம்பு எடுத்து கைவலிக்க சுற்றிவிட்டுத்தான் கம்மாங்கரைக்குப் போவார்கள்.

அந்தக் காலத்திலேயே பெருமாள் ரெட்டியார் போன்ற வலிய வஸ்தாதுகள் (சிலம்ப ஆசான்கள்) ஊருக்குள் இருந்தார்கள். பருவப் பெண்கள் கூட கோ-கோவுக்கு இணையான ‘குலை, குலையா முந்திரிக்கா’ விளையாடுவார்கள். இங்கே ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து விளையாடும் விளையாட்டு கபடி. அதனால் எங்க பள்ளி கபடி அணி மாவட்ட, மாநில இடங்களைப் பிடிப்பது சகஜம்...’’ என்றார்.

கபடியில் தேசிய தென்மண்டல அணியில் விளையாடிய சுப்ரியாவை சந்தித்தோம். ‘‘சின்ன வயதிலேயே ஆண்கள் அணியுடன் எங்கள் பெண்கள் அணி மோதி விளையாடி ஜெயிச்சிருக்கு. 2010ல் பந்தல்குடி பள்ளியில் பிளஸ் டூ படித்தேன். மாரியம்மன் டீச்சர் கபடி கோச்சிங் சிறப்பாக இருக்கும். 2010ல் மாவட்ட, மண்டல போட்டிகளில் வென்றேன். 2011ல் காஞ்சிபுரம் போய் மாநில அணியில் இடம் பிடித்தேன். பஞ்சாபில் தேசியப் போட்டியில் ரன்னராக வந்தோம்.

ஆண்களைப் போல கடினமான பணிகளை பெண்களாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வருவதற்கு சிறு வயதில் எங்கள் ஊர் தெருக்களில் சுதந்திரமாக விளையாடிய விளையாட்டுதான் காரணம்...’’ என்றார். தடால் என கோதாவில் குதித்து ‘சிலா வரிசை’ காட்டும் சிலம்பு வித்வான்கள் இன்னும் இங்கு இருக்கிறார்கள். ஆனால், யாரும் வெளியூர் போட்டிக்குப் போவதில்லை. எதிரி இல்லாமல் இரட்டை வால் கட்டி ஆடும் ஆட்டமான அலங்கார சிலம்பாட்டம்தான் ஆடுகிறார்கள்.

இங்குள்ள தெருக்களில் வாகனப் போக்குவரத்தை மட்டுமல்ல, வெளியிடத்து தின்பண்டங்களைக் கூட அனுமதிப்பதில்லை. விளங்காட்டில் விளையும் கம்பு, தினை, சோளத்தில் விதவிதமான பண்டங்கள் செய்து எடுத்து தெருவுக்கு வந்து ‘நிலாச் சாப்பாடு’ சாப்பிடுகிறார்கள். அப்போதும் ஆட்டம் பாட்டம் உண்டு. சிறிது காலத்துக்கு முன்பு வரை ஊருக்குள் சிகரெட் புகைக்க, மது அருந்தத் தடை இருந்துள்ளது. இப்போது அந்த விதி சற்று தளர்ந்துள்ளது என்பது மட்டுமே கசப்பான மாற்றம்.     

படங்கள்: பெலிக்ஸ்

இயற்கை விவசாயம்!

இந்த ஊரின் இன்னொரு சிறப்பு இயற்கை விவசாயம். ஆட்டுக்கிடை போட்டு, மாட்டு சாணமிட்டுத்தான் வேளாண்மை செய்கிறார்கள். இதற்காக முதுகுளத்தூர் பக்கமிருந்து செம்மறி மந்தையுடன் ஆட்கள் வந்து கிடை போடுகிறார்கள். கரிசல் என்றாலும் வஞ்சனையின்றி அள்ளிக்கொடுக்கும் பூமி என்பதால் தானிய தவசங்களைக் கொட்டி வைக்க குதில்கள், கொட்டாரங்களை பயன்படுத்துவதில்லை. மாறாக, குறைந்தது 10க்கு 10 அடி பரப்புள்ள பட்டறைகளை வீடுகளைப் போலவே எழுப்பியுள்ளனர்.

தரையில் இருந்து 3 அடிக்கு மேல் தளம் அமைத்து சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பி, மண்ணால் பூசி, உள்ளுக்குள் நொச்சி விளார்களை வளைத்து ‘வயரிங்’ செய்துள்ளனர். வெளியே சுண்ணாம்பும், உள்ளே சாணமும் இட்டு பூசியும், மெழுகியும் உள்ளனர். மேலே தகரக் கொட்டகை வேய்ந்துள்ளனர். 10க்கு 10 அடி கொண்ட ஒரு பட்டறை 50 கோட்டை (100 மூட்டை) தானியம் குவிக்கக்கூடியவை. 10 ஆண்டுகளுக்கு மேல் தட்ப, வெப்ப மாற்றத்தாலும், பூச்சி பொட்டுகளாலும் கெட்டுவிடாமல் தாக்குப்பிடிக்கக் கூடியவை.

கார்கள் இல்லை!

இந்த கிராமம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் அயன்வடமலாபுரம் வரதராஜன், ‘‘சுமார் ஆயிரம் வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் 7க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கோவில்பட்டி அருகே கடலையூர் - முத்துலாபுரம் செல்லும் சாலையில் மெயின் ரோட்டிலிருந்து சுமார் 100 அடி தூரத்திலேயே அமைந்துள்ளது வீரப்பட்டி கிராமம்.

முன்பு இங்குள்ள மக்கள் விவசாயப் பணியில் இருந்ததால் காரை சுவரும், மண் தரையுமாக காட்சியளித்த வீடுகள் தற்போது நவீன காலத்திற்கேற்ப சிமென்ட் வீடுகளாகவும், கிரானைட் தரையுடனும் மின்னுகின்றன. நவீன காலத்திற்கேற்ப வீடுகள் மாறினாலும் இங்குள்ள மக்கள் தங்கள் பழமையான பழக்கத்தை மறக்கவில்லை. இதனால் யாரும் இதுவரை கார்கள் எதுவும் வாங்கவில்லை.

கார்கள் வாங்கினால், அவைகளை வீட்டு வளாகத்தில் நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தெருவில் தான் நிறுத்த வேண்டியது வரும். அப்படி நிறுத்தினால் குழந்தைகளின் விளையாட்டுக்கு இடையூறாகும் எனக் கருதி அதனைத் தவிர்த்துள்ளனர். அதேபோல ஒருசில இளைஞர்கள் பைக் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களும், மெயின்ரோட்டில் இருந்து ஊருக்குள் திரும்பியதும், எஞ்சினை அணைத்துவிட்டு தெருக்களில் உருட்டியபடியே வீட்டுக்கு வருகின்றனர்...’’ என்றார்.