ஹைவேஸ் ரோட்டில் நின்ற சதா!



‘‘விஜய், ப்ரியங்கா சோப்ரா நடிச்ச ‘தமிழன்’ படத்துக்கு அப்புறம் சில படங்கள் இயக்கினேன். சமீபத்துல பண்ணின ‘பைசா’வை எல்லாரும் பாராட்டினாங்க. குறிப்பிட்டு பேசறாங்க. இனி அதுமாதிரி அழுத்தமான கதைகளோடதான் படம் பண்ணணும்னு முடிவெடுத்திருக்கேன். அதன் விளைவுதான் இந்த ‘டார்ச் லைட்’. இது பாலியல் தொழிலாளிகளோட பளபளப்பை மட்டுமில்ல... அவங்களோட வலியையும் வேதனையையும் முகத்துல அறையற மாதிரி சொல்லப் போகுது.

வசனங்கள் எல்லாமே பாதிக்கப்பட்ட பெண்களோட கோணத்துலதான் இருக்கும்...’’ நிதானமாகவும் அழுத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் மஜீத். ‘‘இப்ப நேஷனல் ஹைவேஸ் ரோடுகள் நாலு வழிச்சாலையா இருக்கு. முன்னாடி அது இருவழிச் சாலைதான். அதாவது 1990கள்ல. அந்தக் காலகட்டத்துல நீங்க ரோட்டோரம் பார்த்த விஷயங்கள்தான் இந்த ‘டார்ச் லைட்’.

லாரி போக்குவரத்து நிறைஞ்ச இடங்கள்ல வாகனங்களை மடக்கி பாலியல் தொழில்ல ஈடுபட்ட பெண்களைப் பத்தின கதை இது. ஸ்கிரிப்ட் எழுதறதுக்கு முன்னாடியே அப்படித் தொழில்ல ஈடுபட்ட பெண்களை சந்திச்சு பேசினேன். அவங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்களை, ஆண்கள் அவங்க மேல தொடுத்த வன்முறைகளை சொல்லி அழுதாங்க. இதையெல்லாம்தான் படத்துல கொண்டு வந்திருக்கேன்.

இந்தக் கதையை பலபேர்கிட்ட சொன்னேன். யாரும் தயாரிக்க முன்வரலை. கடைசியா என் நண்பர்கள் அந்தோணி எட்வர்ட், ராஜ் பாஸ்கரோட சேர்ந்து நானே தயாரிப்புல இறங்கிட்டேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படம்...’’ என்றபடி தலையைக் கோதி விட்டுக் கொள்கிறார் மஜீத்.

சதாவுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கணும்னு ஏன் தோணுச்சு?
உண்மையைச் சொல்லணும்னா, சதாதான் இந்தக் கதையைக் கேட்டு நடிக்க சம்மதிச்சாங்க. ஆரம்பத்துல நிறைய ஹீரோயின்ஸ்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். எல்லாருமே சொல்லி வச்ச மாதிரி ‘எங்க இமேஜ் என்னாகும்?’னு பயந்து பின்வாங்கினாங்க. அதனாலயே சதாகிட்ட கதை சொல்றதுக்கு முன்னாடி ‘நீங்க பாலியல் தொழிலாளியா நடிக்கணும்’னு சொன்னேன். அதிர்ச்சியா என்னைப் பார்த்தவங்க கதையை சொல்லச் சொன்னாங்க. கேட்கும்போதே அழுதுட்டாங்க.

‘கண்டிப்பா பண்றேன் மஜீத்’னு நம்பிக்கை கொடுத்தாங்க. நிச்சயம் இந்தப் படத்துக்குப் பிறகு சதா மறுபடியும் பிசியாவாங்க. இன்னொரு ஹீரோயினா ‘மெட்ராஸ்’ ரித்விகா பண்ணியிருக்காங்க. இவங்களைத் தவிர இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், சரவணசக்தி, ரங்கநாதன்... அப்புறம் நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. ஆயிரம் விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணின சக்தி, ஒளிப்பதிவு செய்திருக்கார். ‘பைசா’ ஜே.வி. இசையமைச்சிருக்கார். 90கள்ல நடக்கற கதை. அதனால இருவழிச் சாலையுள்ள ஏரியாக்களா தேடித்தேடி ஷூட் பண்ணியிருக்கோம். திருநெல்வேலி, குற்றாலம் சுத்தியுள்ள பகுதிகள்லயும்  சென்னைலயும் லைவ்வா எடுத்திருக்கோம்.

இப்படி ஒரு சப்ஜெக்ட் எப்படி தோணுச்சு..?
நண்பர்கள்ட்ட பேசும்போது கேள்விப்பட்ட விஷயம்தான் முதல் பொறி. அப்புறம் பாலியல் தொழிலாளர்  சிலர்கிட்ட பேச முயற்சி பண்ணினேன். பலரும் பேச முன்வரலை. ஒருசிலர்தான், ‘நாங்க ஆடம்பரமான வாழ்க்கைக்கோ, சொகுசு பங்களா கட்டறதுக்கோ இந்த தொழிலுக்கு வரல. சாப்பாட்டுக்கே வழியில்லாமதான் இந்தப் பொழப்புக்கு வந்தோம். குடிகார, வேலைக்கு போகாத புருஷன், குழந்தைகள் படிப்புனு எல்லா சுமையும் நாங்களே சமாளிக்க வேண்டிய கட்டாயம்’னு தங்களோட ரணத்தை பகிர்ந்துகிட்டாங்க.

அவங்க சொன்னதுல ஒரு விஷயம் அதிர்ச்சியா இருந்தது. லாரி டிரைவர்கள் தொடர்பானது அது. ‘நாங்க லிப்ஸ்டிக் போட்டுட்டு போனா, கூடுதலா பத்து ரூபா கிடைக்கும். ஆனா, எங்ககிட்ட லிப்ஸ்டிக் வாங்குறதுக்கு காசு இருக்காது. அதுக்காக பழைய சிகரெட் அட்டைகளோட ஓரத்துல ஒட்டிட்டு இருக்கிற சிவப்பு கோட்டுல தண்ணீர் கலப்போம். அதை லிப்ஸ்டிக் மாதிரி தடவிப்போம்.

அதேமாதிரி கண் மை டப்பா வாங்கினா, ஒரு வாரத்துல காலியாகிடும். ரொம்ப நேரம் கண்ணுலயும் இருக்காது. அதனால கருவேல மரத்துல இருந்து வர்ற மையை தடவிப்போம். இது விஷம்தான். ஆனாலும் வேற வழியில்லையே...எங்களை கட்டாந்தரைலதான் படுக்க வைப்பாங்க. சிலர் குடிச்சுட்டு மோசமா நடந்துப்பாங்க. இன்னும் சில பேரு உன் மூஞ்சியே சரியில்லனு முகத்துல குத்துவாங்க...’ இப்படியெல்லாம் அவங்க சொல்லச் சொல்ல என்னையும் அறியாம அழுதிட்டேன். இதெல்லாம் சதா பேசறா மாதிரி படத்துல வரும். படத்தைப் பார்த்தா எந்தப் பெண்ணுக்கும் இந்தத் தொழிலுக்கு போகக் கூடாதுனு தோணும். ஆண்களுக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும். அப்படியொரு
அவேர்னெஸ் படம் இது.

- மை.பாரதிராஜா