சரித்திரப் படங்களுக்கு பெருமை சேர்க்கும் அமராபள்ளி நகைகள்



‘பாகுபலி’ திரைப்படம் இந்திய சினிமாவின் சாதனைகளில் ஒன்று. எத்தனை நாட்கள் ஆனாலும் மனதைவிட்டு அகலாத பிரமாண்டம். வானை முட்டும் மாட மாளிகைகள், விஸ்தீரணமான அரசவைகள் என எல்லாவற்றிலும் பிரமாண்டம் காட்டியபோது, நகைகளிலும் அதே நுட்பமும் வசீகரமும் இருந்தன.

‘இது எல்லாம் நிஜமான நகைகளா? அந்தக் காலத்தில் இப்படி அற்புதமான டிசைன்கள் எல்லாம் இருந்தனவா?’ என அசந்து போனார்கள் நம் பெண்கள். அப்படிப்பட்ட ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர்கள் அமராபள்ளி நகை நிறுவனத்தினர். இவர்கள்தான் ‘பாகுபலி’ படத்துக்கு நகை வடிவமைத்துக் கொடுத்தவர்கள். அமராபள்ளி, சென்னைக்குத்தான் புதுசு. இவர்கள் வடநாட்டில் பெரிய, அளவில் காலூன்றியுள்ளனர். சினிமாவுக்கு எனப் பிரத்யேகமாக வடிவமைத்துத் தருவது இவர்களின் முக்கிய அம்சம்.

குறிப்பாக, சரித்திரப் படங்களுக்கு நகைகள் வடிவமைப்பதில் இவர்கள் எக்ஸ்பர்ட். பாலிவுட்டில் ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘ஜோதா அக்பர்’ ஆகிய படங்களுக்கும் இவர்கள்தான் நகைகள் வடிவமைப்பு செய்தார்கள். அமராபள்ளி 1978ம் ஆண்டு ஜெய்ப்பூரில் ராஜீவ் அரோரா, ராஜேஷ் அஜ்மீராவால் துவங்கப்பட்டது. இருவரும் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். பாரம்பரிய விரும்பிகள். ஜெய்ப்பூர் மிக நுணுக்கமான கலை அம்சம் கொண்ட, பழமை மாறாத நகரம். அந்த பழமையை மக்களுக்குக் கொண்டு செல்ல விரும்பினார்கள். அதனை நகைகளில் பிரதிபலித்தனர்.
 
நம் பாரம்பரிய டிசைன்களைத் தேடிப் பிடித்து இப்போதுள்ள தலைமுறைக்கு ஏற்ப மாற்றி அமைத்துத் தருவதுதான் இவர்கள் ஸ்டைல். நியூயார்க்கில் நடைபெற்ற மிலன் ஃபேஷன் ஷோவில் பங்கு பெற்ற ஒரே இந்திய நகை நிறுவனம் இவர்கள்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ‘‘பாகுபலி’ முதல் பாகத்துக்கும் நாங்கள்தான் டிசைன் செய்துள்ளோம். ஆனால், முழுப்படத்துக்கும் செய்யவில்லை.

‘பாகுபலி’ இரண்டாம் பாகத்துக்காக 1500க்கும் மேற்பட்ட நகைகளை டிசைன் செய்து கொடுத்தோம். முக்கிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமில்லை... சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்தவர்களுக்கும் நாங்கள்தான் ஆபரணங்களை டிசைன் செய்தோம். இரண்டு ராஜ்ஜியங்கள் பற்றிய திரைப்படம் என்பதால், இரண்டுக்கும் வித்தியாசம் காட்ட மெனக்கெட்டோம். மகிழ்மதி மிகப் பெரிய ராஜ்ஜியம்.

அவர்களின் கோட்டையே பிரமாண்டமானது என்பதால், நகையும் அதற்கு ஏற்ப ஆடம்பரமாக இருக்கும்படி வடிவமைத்தோம். மறுபக்கம் தேவசேனாவின் குந்தள தேசம். இது சிற்றரசு என்பதாலும், அவர்கள் மென்மையானவர்களாக சித்தரிக்கப்படுவதாலும், அவர்களுக்கான நகைகளில் அந்தத் தன்மையைக் கொண்டு வந்தோம்...’’ என்று சொல்லும் ராஜேஷ் அஜ்மீரா, ‘பாகுபலி’ படத்துக்கு நகைகளை வடிவமைக்க மட்டுமே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்ததாகக் குறிப்பிடுகிறார்.

‘‘அத்தனை ஆட்கள் தேவைப்பட்டதற்கு காரணம், கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் வெளிப்படுத்த வேண்டும் என்ற அக்கறைதான். உதாரணத்துக்கு ராஜ மாதா சிவகாமி. கதையின் முக்கிய கேரக்டரான இவர், மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தையே ஆள்பவர். எனவே இவரது கம்பீரம் இவர் அணியும் நகைகளிலும் பிரதிபலிக்க வேண்டும். எனவே, பெரிய, போல்டான நகைகளை உருவாக்கினோம்.

‘கண்ணா நீ தூங்கடா...’ என்ற கிருஷ்ணர் பாட்டில் தேவசேனாவின் நகைகள் எல்லாம் பூவின் வடிவில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கம்மல், ஹாத் ஃபூல் (கை விரல்களில் இருந்த செயின் போல வளையலில் இணைக்கப்பட்டிருக்கும்), சோக்கர்ஸ், புரோச், கழுத்தில் மட்டுமில்லாமல், தலையில் அணிந்திருக்கும் கிளிப் முதற்கொண்டு எல்லாமே பூ வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும்.

‘ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா...’ என்ற டூயட் பாட்டுக்காக முத்து டிசைன் கொண்ட நகைகளாக வடிவமைத்தோம். அதேபோல், தேவசேனா மகிழ்மதிக்குள் நுழையும்போது வேறு டிசைன் நகைகள் இருக்கும். தேவசேனா மற்றும் ராஜமாதா இருவருக்கும் செய்யப்பட்ட டிசைன் போல் வேறு யாருக்கும் டிசைன் செய்யவில்லை. இவர்களின் ஒவ்ெவாரு உடைக்கும் ஏற்ப பார்த்துப் பார்த்து வடிவமைத்தோம். எல்லாமே தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்டது போன்ற நகைகளைத்தான் அவர்கள் படம் முழுவதும் அணிந்திருப்பார்கள்.

நெக்லஸ் வடிவில் இருக்கும் கொலுசு ஒன்றை உருவாக்கினோம். இதை இரண்டு பக்கமும் போட்டுக்கொள்ளலாம். ஒரு பக்கம் பூ டிசைன். மறுபக்கம் கல்வைத்த டிசைன் இருக்கும். வரலாற்றுப் படங்களில் பெண்கள் மட்டுமே நகைகளை அணிந்திருக்க மாட்டார்கள். எனவே ராணா மற்றும் பிரபாஸுக்கும் அவர்களது கேரக்டர்களுக்கு ஏற்ப தனித்தனியாக டிசைன் செய்தோம். அனைத்துமே தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகள். கட்டப்பா உள்ளிட்ட முக்கியமான துணைக் கதாபாத்திரங்களுக்கு வெள்ளி நகைகள்தான். அதில் தலையில் வைக்கும் நெற்றிச்சுட்டி முதல் காலில் அணியும் மெட்டி வரை எல்லாமே அடங்கும்.

ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப நகைகளும் மாறுபடும். சில புரோச் கம்மலாக இருக்கும். நாத் எனப்படும் மூக்கில் இருந்து காது கம்மலுடன் இணைக்கப்பட்ட நகை இருக்கும். அடுத்து கை விரல்களில் இருந்து வளையல்களுடன் இணைந்திருக்கும் ஹாத் ஃபூல். இப்படி எல்லாமே வித்தியாசமாகப் பார்த்துப் பார்த்து செய்யப்பட்டது.

துணைக் கதாபாத்திரங்களுக்கான நகைகள் எளிமையாக இருந்தாலும் அதிலும் நுட்பமான வேலைப்பாடுகள் இருக்கும். வடநாட்டில்தான் நாத் போன்ற நகைகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். தென்னிந்தியாவில் அந்த நகைகள் கிடையாது. எனவே, அதையும் தென்னிந்திய அமைப்புக்கு ஏற்ப மாற்றி அதில் முத்துக்களைச் சேர்த்து அமைத்துக் கொடுத்தோம்.

இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டவை எல்லாமே தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகள். இந்தத் தங்க நிறத்தை சிட்ரி என்பார்கள். சினிமாவில் பார்க்கும்போது தங்கம் போலவே தெரியும். ஒன்று தெரியுமா... எல்லாமே கைகளால் டிசைன் செய்யப்பட்டவை. எந்திரங்களை நாங்கள் பயன்படுத்தவேயில்லை. இதனால்தான் நகை வடிவமைப்பாளர்கள் மட்டுமே இப்படத்தில் 150 பேர் வரை வேலை பார்த்தார்கள்...’’ என்று சிரிக்கும் ராஜேஷ் அஜ்மீரா, இதற்காக தாங்கள் ஊர் ஊராக அலைந்ததாகக் குறிப்பிடுகிறார். 

‘‘ஊர்தோறும் சென்று அங்கு ஏலத்தில் விற்கப்படும் பழைய மற்றும் பாரம்பரிய நகைகளை வாங்கி வந்து, அந்த டிசைனில் புதுமையைப் புகுத்துவோம். ஆன்டிக் நகைகள் மேல் உள்ள அதீத பற்றினால், சரித்திர காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மற்றும் ராணிகள் உட்பட சகலரும் அந்தக் காலத்தில் என்ன மாதிரியான நகைகளைப் பயன்படுத்தினார்கள் என்று ஆராய்வதுதான் எங்கள் வேலை.

அதன் பிறகு அதை திரைப்படங்களுக்கு ஏற்ப கொஞ்சம் நவீனம் புகுத்தி மாற்றுவோம். ஒரு விஷயம் மட்டும் காலத்துக்கும் மாறாது. உடை எதுவோ அதற்கு ஏற்பத்தான் நகைகள் என்பதுதான் அது. அந்தக் காலத்தில் தினசரி வாழ்க்கையிலும் பெரிய நகைகள் அணிவார்கள். இப்போது அப்படியில்லை. எளிமையான வடிவத்தில் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட அழகான நகைகள்தான் இன்றைய ட்ரெண்ட். எங்களுக்கு பழமையின் பாரம்பரியமும் தெரியும். புதிய தலைமுறையின் விருப்பமும் புரியும். இந்த இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து அசத்தலான ஆபரணங்கள் தருவதுதான் எங்கள் சிறப்பு...’’ என்கிறார் ராஜேஷ் அஜ்மீரா.       

- ப்ரியா