ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 46

படைப்பூக்கம் மிகுதியாகக் காணப்பட்ட காலங்களில் எழுதப்பட்ட கதைகளையும், படைப்பூக்கம் ஓரளவு மட்டுப்பட்டிருந்த காலங்களில் எழுதப்பட்ட கதைகளையும் வகுத்தும் தொகுத்தும் இராசேந்திரசோழன் அலசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் செயல்பாட்டாளராக அவர் ஆனதற்குப் பிறகு அவரிடமிருந்து வெளிப்பட்ட கதைகள் தரவரிசையில் பின்னாலிருப்பது கவனிக்கத்தக்கது.

இக்கருத்தை வேறு யாராவது விவாதித்தால், ‘அப்படியில்லை. அவர் எப்போதுமே ஒரே தரத்தில்தான் எழுதிக்கொண்டிருந்தார்’ எனலாம். ஆனால், அப்படியில்லாமல் அவரே சொல்லும்போது அதை நம்மால் மறுக்கவோ எதிர்வாதம் செய்யவோ வழியில்லாமல் போய்விடுகிறது. தன்னுடைய படைப்புகளே சிறப்பானவை என்று அங்கிருந்தும் இங்கிருந்தும் மேற்கோள்களைக் காட்டி முட்டுக்கொடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், என்னுடையதில் இவை இவை போதாமையுடையன என விட்டுக்கொடுப்பதை இராசேந்திரசோழனிடம் மட்டுமே காணமுடியும்.

“சொல்லப்பட்ட செய்தியிலும் செய்நேர்த்தியிலும் தட்டித்தட்டி பொறுக்கிப் பார்த்து கனகச்சிதமாக செதுக்கப்பட்ட நெத்துப் பயிறுகள்...” என சில கதைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அந்த விதத்தில் அவர் ஓர் இருபது கதைகளை மட்டுமே ஆகச் சிறந்த கதைகளாக அறிவிக்கிறார். மீதமுள்ள கதைகளில் சில இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டியவை என்றும், வலுவாகச் சொல்லியிருக்க வேண்டியவையில் வேக்காடு குறைந்துவிட்டதாகவும் குறைப்பட்டிருக்கிறார்.

நன்னிப்பயிறாக சில கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு, “நன்னிப்பயிறுகள் விதைக்கு உதவாது. என்றாலும், தின்பதற்கு ருசி...” என்று சொல்லியிருக்கிறார். கதைகள் இலக்கிய ருசியோடும் இலக்கிய சாரத்தோடும் அமையப்பெறும். அதே வேளையில், பொதுவெளியிலும் அறிவுத் தளத்திலும் விவாதங்களை ஏற்படுத்தவேண்டுமென அவர் சிந்தித்திருக்கிறார். 77 கதைகளில் நான்கோ ஐந்தோ கதைகள்தான் தொழில்முறை விலைமாதர்கள் பற்றியவை. அப்படியிருந்தும் யாரோ ஒரு விமர்சகர், தன்னை தரந்தாழ்ந்து விமர்சித்தார் என்பதைக்கூட வெளிப்படையாகச் சொல்லிச் செல்லும் இராசேந்திரசோழன், தம்மைப் புகழ்பவர்களையும் சந்தேகத்துடனே அங்கீகரிக்கிறார்.

“என்னைப்பற்றித்தான் எனக்கே தெரியுமே... நீங்கள் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்பதே அவருடைய படைப்பு மனம். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘மனப்பத்தாயத்’திற்கு யார் யாரிடம் அணிந்துரை வாங்குவது என்று யோசித்தபொழுது இரண்டு பெயர்களை என்னால் தவிர்க்கமுடியவில்லை. கருத்து ரீதியாக ஞானக்கூத்தனிடம் எனக்கு மாறுபாடு உண்டென்றாலும் அவரையும் இராசேந்திரசோழனையும் என்னால் தவிர்க்க இயலவில்லை.

கருத்து ரீதியாக என்னை அப்போது ரொம்பவும் கவர்ந்திருந்த எழுத்தாளராக இராசேந்திரசோழனே முன்னிருந்தார். அப்பாவின் தோழர் என்பது கூடுதல் காரணமாயிருக்கலாம். அக்காலத்தில் ‘தமிழர் கண்ணோட்டம்’ என்னும் இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த கட்டுரைகளின் வழியேதான் அரசியல் பாடங்களைக் கற்றுக்கொண்டிருந்தேன்.

அந்தப் பாடத்தை இன்னமும் நான் முழுதாகக் கற்கவில்லை என்பது வேறு விஷயம். ஒருவேளை முழுதாகக் கற்றிருந்தால் நானுமே படைப்பூக்கத்திலிருந்து வேறு வேறு அரசியல் செயல்பாட்டில் இறங்கியிருப்பேனோ என்னவோ. எல்லா நன்மையிலும் தீமையுண்டு என்பதைப்போல எல்லா தீமையிலும் நன்மை இருக்கிறது. தனக்கு நன்மையும் சமூகத்திற்கு தீமையும் விளையக்கூடிய ஒன்றை மட்டும் எந்நாளிலும் செய்துவிடக்கூடாது.

முதல் கவிதைத் தொகுப்புக்கான வேலைகள் மும்முரமாக தொடங்கியபோது, ‘ராஜரிஷி’ என்னும் அரசியல் வார ஏட்டில் உதவி ஆசிரியனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கவிதைகள் என்று நான் நம்பி வைத்திருந்த காகிதங்களில் இது இது மட்டுமே கவிதை என தேர்ந்தெடுத்துக் கொடுத்த பெருமை வித்யா ஷங்கருக்குரியது. ‘நக்கீரன்’ துரை என்று அழைக்கப்பட்ட அவர், வித்யா ஷங்கர் என்னும் பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். ‘சந்நதம்’ என்னும் தலைப்பில் வெளிவந்த அவருடைய கவிதைத் தொகுப்பு அப்போதும் என் அபிமானத்துக்குரிய கவிதைகளைக் கொண்டிருந்தன.

மனப்பாடம் செய்து அக்கவிதைகளை அவரிடம் சொல்லி நன்மதிப்பைப் பெற்றிருந்தேன். இராசேந்திரசோழனிடம் அணிந்துரை பெறலாம் என எண்ணியதை அப்பாவிடமும், ஆசிரியர் துரையிடமும் பகிர்ந்துகொண்டேன். இருவருமே ஏக பெருமிதத்துடன் என் விருப்பத்தை வழிமொழிந்தார்கள். மின்னஞ்சல் வசதியெல்லாம் அப்போது கிடையாது. எது ஒன்றையும் தபால் மூலமோ தந்தி மூலமோதான் தெரிவிக்கவேண்டும். இராசேந்திரசோழனிடம் என் தொகுப்பு குறித்த விவரங்களைச் சொன்னதும் அவரும் அகம் மகிழ்ந்து அணிந்துரை தர ஒப்புக்கொண்டதை அப்பாவே தொலைபேசியில் தெரிவித்தார்.

மயிலம் முகவரிக்கு கவிதைகளை அஞ்சல் செய்யச் சொன்னதாக அப்பா சொன்னபோதும் எனக்கென்னவோ அது அவ்வளவு சரியாகப்படவில்லை. நானே அவரை நேரில் பார்த்து கவிதைகளைத் தந்து விடுவதாகச் சொல்லி திண்டிவனத்திற்கு பஸ் ஏறினேன். அவர் வீட்டுக்கு நான் போனபோது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. கதைகளில் நான் படித்திருந்த மயிலம் நேரிலும் அப்படியேதானிருந்தது. இராசேந்திரசோழனின் கதைகளை ஊன்றிப் படித்தால் மயிலத்தின் வரைபடம் கண்முன்னே விரியும்.

தி.ஜானகிராமனை வாசிக்கையில் எப்படி கும்பகோணத்தின் சுற்றுவட்ட ஊர்கள் விரியுமோ அப்படி. காவிரிக்கரையும் அக்ரகாரத் தெருக்களும் அட்சரம் பிசகாமல் தி.ஜா.வின் எழுத்துக்களில் தென்படுவதைப்போலவே வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டத்தின் தெருக்களையும் மனிதர்களையும் இராசேந்திரசோழனின் கதைகளில் காணலாம்.

நடுநாட்டு இலக்கிய கர்த்தா ஒருவரைச் சந்திக்கப் பயணிக்கிறோம் என்ற கெக்களிப்பில் வெயிலும் வேர்வையும் ஒருபொருட்டே இல்லையென்று வீடு சேர்ந்த என்னை அவர் புன்முறுவலோடு வரவேற்றார். அப்பா தொலைபேசியதையும் தொகுப்பு தயாராவது குறித்த மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார். இரண்டொரு நாளில் எழுதி அனுப்புகிறேன் என்றார்.

சொன்னதுபோலவே நான்காவது நாள் அவருடைய அணிந்துரை தபாலில் வந்து சேர்ந்தது. ‘கூட்டை உடைத்துக்கொண்டு’ என்னும் தலைப்பில் அவர் எழுதி அணுப்பிய அணிந்துரை உண்மையாக, என் எழுத்துலக விஜயத்திற்கு அணி செய்வதாக அமைந்தது. சிறுவயது முதலே என் எழுத்து முயற்சிகளைக் கண்ணுற்றிருந்த அவர், “கவிதையுலகில் தனக்கென ஓர் அடையாளத்தைப் பதிக்கவும், அதன்வழி அவ்வுலகில் தன்னுடைய பயணத்தைத் தொடரவும் விழையும் ஒரு படைப்பாளியின் நம்பிக்கை மிகுந்த வெளிப்பாடுகளாகவே இக்கவிதைகள் தென்படுகின்றன.

இவ்வெளிப்பாட்டின் பக்குவப்பட்ட சொல்லாட்சியே இவைகளைக் கவிதைகளாகவும் ஆக்குகின்றன...” என்று எழுதியிருந்தார். “உயிர்த்துடிப்பற்ற யந்திரத்தனமான கட்சி வாழ்க்கையில் தந்தையின் பங்குபற்றி ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடாக, ‘வணக்கம் காம்ரேட்’ கவிதை வந்திருக்கிறது...” எனவும் அவ்வணிந்துரையில் எழுதியிருந்தார். அக்கவிதை குறித்து மிக மென்மையாக அப்பாவிடம் கோபித்துக்கொண்ட தோழர்கள் என் நடவடிக்கையில் அச்சம் கொண்டிருந்ததை நூல்வெளியீட்டில் வெளிப்படுத்தினார்கள்.

அப்பாவைப் பற்றிய என்னுடைய விமர்சனம், அப்பா அப்போது சார்ந்திருந்த கட்சித் தோழர்களுக்கு உசிதமாகப்படவில்லை. அப்பா மீதான விமர்சனத்தை, அவர்கள் மீது வீசிய கணையாக எடுத்துக்கொண்டார்கள். சுதந்திர சிந்தனைகளோடு வளரக்கூடிய ஒருவனின் செயலூக்கமுள்ள கவிதையாக அவர்கள் அக்கவிதையைப் பார்க்கவில்லை.

புரட்சிக்கு எதிரான மனமுடைய ஒருவனை தோழர் மகனாகப் பெற்றுவிட்டாரே என அப்பா மீதுதான் அனுதாபப்பட்டார்கள். வேறு வழியே இல்லாமல் அவரும் அதை ஏற்கவேண்டியதாயிற்று. இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இராசேந்திரசோழனை வாசிக்கும்போது, சிறிய அளவில் எனக்கேற்பட்ட சம்பவங்கள் அவருக்கும் ஆரம்பகாலத்தில் ஏற்பட்டதை அறியமுடிகிறது.

எதிர் விவாதம் செய்யக்கூடிய அறிவோ ஆற்றலோ அப்போது எனக்கில்லை என்பதால் நான் என்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எளிதாகக் கடந்துவிட்டேன். ஆனால், இராசேந்திரசோழனோ தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தர்க்கத்தோடும் நியாயத்தோடும் தகர்த்தெறியத் துணிந்திருக்கிறார். போலி இலக்கிய, அரசியல் விமர்சனங்களை அவரால் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடிந்ததில்லை. புரட்சி என்னும் சொல்லை வறட்டுத்தனமாகப் பயன்படுத்திய மார்க்சியவாதிகள் மீது அவருக்கு ஏற்பட்டது அளப்பரிய வருத்தம்.

அந்த வருத்தத்தின் விழைவே அவரை இத்தனை நூல் எழுத வைத்திருக்கிறது. ‘திராவிடம், தமிழ்த் தேசியம், மார்க்சியம்’ என்னும் நூலில் மூன்றுக்குமுள்ள பொருத்தப்பாடுகளை அவர்போல் இன்னொருவர் எளிதாக விளக்கியதில்லை. ‘அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்’ என்னும் நூலில் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியது ஏன் என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

“மதமே சாதியை நிலைத்திருக்க வைக்கிறது என்பது உண்மையெனில், அதை விட்டொழிக்க அல்லது விலகியிருக்க எண்ணாமல் இன்னொரு மதத்தைத் தழுவிக்கொள்வது எப்படி சரியாகும்..?” எனக் கேட்டிருக்கிறார். “இந்து மதத்திற்கு எதிராக புத்த மதத்தைத் தழுவுவதைவிட இந்து மதத்திலேயே இருந்துகொண்டு இந்துமதத்திலுள்ள சிக்கல்களைக் களையவேண்டும்...” என்றிருக்கிறார். அதுமட்டுமல்ல, மதங்களிலேயே ஜனநாயகமுடைய மதமாக அவர் இந்துமதத்தைத்தான் பார்க்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் அதிலிருந்து வெளியேறினால் அதைவிட ஜனநாயகமுடைய மதம் என்ன இருக்கிறது என்பதுதான் அவருடைய கேள்வி. கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல மிக ஜாக்கிரதையாக அவ்விஷயத்தைக் கையாண்டிருக்கிறார். மார்க்சியவாதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஒருவர், இந்துமத சார்பு நிலையை எடுப்பதிலுள்ள சங்கடங்களையும் அந்நூலில் சொல்லாமல் இல்லை. இடையிடையே இப்படி நினைக்கக்கூடாது, அப்படி நினைக்கக்கூடாது என அவரே அணையையும் கட்டிவிடுகிறார். அந்நூலை வாசிக்கும்போது இவர் சொல்வது சரிதானே என்பதுபோல் இருந்தாலும், புத்தகத்தைக் கீழே வைத்ததும் ஏதோ நெருடுகிறது.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்