மனோகர் பாத்தம் கவிதைகள்



மனோகர் பாத்தம் எல்லைப் பாதுகாப்புப் படையில் கூடுதல் டைரக்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர்.  இந்திய அரசு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் அரசு ஆலோசகராகவும் விளங்குகிறார். இந்தியா - பாகிஸ்தான், பங்களா தேஷ் எல்லைகளில் மோதல்களையும், திரிபுரா, ராஜஸ்தான், குஜராத், அசாம் பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல்களையும் நேரடியாகச் சந்திக்க நேர்ந்த அனுபவங்களையும், அந்தந்தப் பகுதி சார்ந்த மக்கள் வாழ்க்கையையும் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.

கருப்புப் பூனைப் படையை நிறுவிய சேவைக்காக குடியரசுத் தலைவரிடமிருந்து பதக்கம் பெற்றுள்ளார். ‘ஸர்ஹத் மேம்’ (எல்லையில்) என்ற கவிதைத்தொகுப்பு 17 இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘தீவிரவாதம் - சவால் மற்றும் போராட்டம்’ என்ற நூல், இந்திரா காந்தி ராஜபாஷா விருதினையும் மனித உரிமைக்கழகப் பரிசையும் பெற்றது. வானொலி மற்றும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கிறார்,

நமக்குள்

* உன் பூமியை நீ எடுத்துச் சென்றாய்
உன் பங்குச் சூரியனையும்.
என் சூரியன் என்னிடம் இருக்கிறது
எனினும் தினமும் சண்டையிடுகிறோம் நாம்
போகட்டும், இப்படிச் செய்தாலென்ன
என் சூரியனை உனக்குத் தருகிறேன் - நீயும்
உன் சூரியனை எனக்குத் தா
பகிர்ந்து கொள்வோம் இருவரும்
பாதி பாதி ஒளியையும்
பாதி பாதி இருளையும்.

சேறு

* நான் என் கால்களை எங்கெங்கிருந்துதான் காப்பேன்
நிலமெங்கும் குருதி தோய்ந்துள்ளது
முன்பு சேறு படாமல் காத்தேன் கால்களை  
இப்போது கால் பதிக்கச் சேற்றைத் தேடுகிறேன்.

அகழ்வாய்வின்போது

* இன்றுபோல் எல்லைகள் இருந்ததில்லை
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்
அதனால் அகழும்போது
கிடைக்கின்றன, தோலாவீரா, தட்சஷிலா, ஹரப்பா
பள்ளிகள், பல்கலைக் கழகங்கள்,
மல்யுத்த கோதாக்கள்,
சில கோயில்கள், மசூதிகள்,
கண்மாய், தெப்பக்குளம், கிணறுகள்
அகழ்கிறோம் நாம் நமது கடந்தகாலத்தை
பெருமைப்படுகிறோம் அவற்றின் மீது
வரும் நூற்றாண்டுகளில்
நானும் நீங்களும் இல்லாதபோது
அகழ்வாய்வில் கிடைக்கும்
எரிந்து பாழடைந்த கிராமங்கள்,
ஊனமுற்ற எலும்புக் கூடுகள்,
வெடித்ததும், வெடிக்காததுமான குண்டுகள்,
தெருக்களில் அழுகிய குருதி
காயமடைந்த புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள்
எல்லை கிடைக்காது
ஆனால் அகழ்வில் கிடைக்கும்
தீப்பிடித்த ஆம்புலன்ஸ்
எரிந்த சர்ச்சுகள்
உடைந்த கோயில் - மசூதிகள்
வெடிமருந்து துளைத்த குழிகள்
துருப்பிடித்த கம்பிகள்
இவற்றைத் தோண்டி எடுக்கும் தலைமுறைகள்
வெட்கமடையும்
தங்கள் முன்னோர்களை நினைத்து
அதாவது என்னையும் உங்களையும் நினைத்து
தலை கவிழ்ந்து கொள்ளும்
வெட்கத்தினால்.  

நீர்மேல் கோடுகள்

* விந்தையான எல்லை இது
ஆற்றின் நடுவினிலே
யாரே இழுக்க முடியும்
நீர் மேல் கோடுகள்
எங்காவது கண்டதுண்டா
இதயம் இரு துண்டுகளாவதை
மீன்களின் போக்குவரத்து
நடைபெறுகிறது வழக்கம் போல
ஆமைகளுக்கும் தெரியாது எல்லைக் கோடு
மீன்கள் பிடிக்கப்படும்போது
அவற்றின்  மீது எழுதியிருப்பதில்லை
நாடுகளின் பெயர்கள்
அறிவேன் வேடைக்காரன் யாரென்று
காண்கின்றேன்
துடிக்கும் மீன்களையும்

மூலம்: மனோகர் பாத்தம்
இந்தியிலிருந்து மொழியாக்கம்: மணி பாரதி