காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன் 24



“யார் அந்த ராபர்ட் முஸெல்லா?”
எஸ்கோபார் கேட்டபோது யாராலும்
உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.

ஏனெனில் -அதுவரை யாருமே முஸெல்லாவை நேரில் கண்டதில்லை. அவரது கீர்த்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.எஸ்கோபார் மட்டுமல்ல. கொலம்பிய கார்டெல் தலைவர்கள் அத்தனை பேருமே சந்திக்க ஆசைப்பட்ட நபர் முஸெல்லா.அவர் கருப்பா, சிகப்பா, ஒல்லியா, குண்டா, உயரமா, குள்ளமா எதுவுமே யாருக்கும் தெரியாது.

அமெரிக்க வர்த்தகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வால்ஸ்ட்ரீட்டில் அத்தனை பேருமே முஸெல்லா பெயரை அப்போது பயபக்தியோடு உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகளில் தொடங்கி, உள்ளூர் காவல்நிலையத்தின் கடைக்கோடி போலீஸ்காரர் வரை முஸெல்லாவைப் பற்றி ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று நேரம், காலமில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்.

எஸ்கோபார் முஸெல்லாவைப்  பற்றி விசாரித்ததற்கு தகுந்த காரணம் இருந்தது.எண்பதுகளின் தொடக்கத்தில் திடீரென போதைத் தொழில் பெரும் சரிவினைச் சந்தித்தது. தென்னமெரிக்காவில் அரசுகளின் மறைமுக உதவியோடு கார்டெல்கள் டன் டன்னாக போதையை உற்பத்தி செய்தாலும், அதற்குரிய சந்தை அமெரிக்காவில்தான் இருந்தது.

அமெரிக்காவில் விற்றது போக மிச்சம் மீதி இருந்தால்தான் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் ஷிப்பிங் நடக்கும்.இப்படிப்பட்ட நிலையில் -திடீரென ஒட்டுமொத்த அமெரிக்காவுமே இரும்புக் கோட்டையாக மாறியது.போதைப் பொருட்களை கைமாற்றிவிடும் தரகர்கள் பலரும் கைதானார்கள். அல்லது நடுத்தெருவில் நாய் மாதிரி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அறுபதுகளில் இருந்து அமெரிக்காவுக்கும், தென்னமெரிக்க கார்டெல்களுக்கும் இடையே இருந்த தொடர்பு திட்டமிட்டு ஒவ்வொன்றாக துண்டிக்கப்பட்டு வந்தது.

வழக்கமான ஏஜெண்டுகள் பலரும் உயிருக்கு பயந்து இந்தத் தொழிலை விட்டு விலகி ஓட ஆரம்பித்தார்கள்.அமெரிக்காவில் தொழில் நடத்த வேண்டுமானால் முஸெல்லாவின் தொடர்பின்றி யாரும் செய்ய முடியாது என்கிற நிலை ஏற்பட்டது.எனவேதான், நம்முடைய காட்ஃபாதரும் முஸெல்லாவை வலைபோட்டு தேடிக் கொண்டிருந்தார்.

பெயருக்கு சைக்கிள் வர்த்தகம் செய்யும் தன்னுடைய அண்ணன் ராபர்ட்டோ எஸ்கோபாரை பிசினஸ் ட்ரிப் என்கிற பெயரில் அமெரிக்காவுக்கு அனுப்பி, முஸெல்லாவை தொடர்புகொள்ள முயற்சித்தார். பாப்லோவின் அத்தனை அமெரிக்க நண்பர்களும் முயற்சித்தும்கூட ராபர்ட் முஸெல்லாவை தொடர்புகொள்ளவே முடியவில்லை.முஸெல்லா எப்போதுமே தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருப்பார். அவரிடமிருந்து நேரடியாக எவருக்குமே தொலைபேசி அழைப்புகூட வந்ததில்லை. ஆனாலும், அமெரிக்க கிரிமினல்கள் வட்டாரத்தில் முஸெல்லாவின் பேருக்கு நல்ல மரியாதை இருந்தது.

ஒரு கொடுக்கல் வாங்கலில் முஸெல்லாவின் பெயர் அடிபட்டால், வேறு யாருமே வம்பு தும்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். தொழிலில் நாணயமானவர் என்று வெகுவிரைவிலேயே பெயர் எடுத்துவிட்டார். பல அமெரிக்க அரசியல்வாதிகளின் பினாமி சொத்துகளை முஸெல்லாதான் நிர்வகிக்கிறார் என்றார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்றாடப் பிரச்னைகளும் முஸெல்லாவிடம் கொண்டு செல்லப்பட்டு, சகாயமான ரேட்டில் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டன.

அவருக்கு எந்த வேலை செய்கிறோம் என்பதில் அக்கறையில்லை. செய்யும் வேலையில் எவ்வளவு லாபம் என்பதை மட்டுமே பார்ப்பார். நூறு டாலர் கிடைக்கிறது என்றால், எந்த காரணமும் இல்லாமல் கழுத்தறுக்கவும் தயங்காத கொலைவெறியர் அவரென்று பேசிக்கொண்டார்கள்.எல்லாமே பேசிக் கொண்டார்கள், கேள்விப்பட்டார்கள்தான்.

ஏற்கனவே சொன்னமாதிரி முஸெல்லாவை யாரும் நேரில் கண்டதில்லை. அவர் தொடர்பான எந்தவொரு குற்றத்திலுமே, அவர் பெயரை தொடர்பு படுத்தி குற்றம் சாட்டுவதற்கு ஒரே ஒரு ஆதாரம்கூட இருந்ததில்லை.‘இவரைப் பற்றி ஓவர் பில்டப்பாக இருக்கிறதே?’ என்று நமக்கு எழும் சந்தேகம்தான் ஆரம்பத்தில் எஸ்கோபாருக்கும் எழுந்தது.

எனவேதான், மற்ற கார்டெல்கள் முஸெல்லாவை தொடர்புகொள்ள போட்டா போட்டி போட்டபோதும்கூட இவர் மட்டும் ஆர்வமே காட்டாமல் இருந்தார்.ஆனால் -தன்னுடைய பிரத்யேக போதை நகரில் தயாரிக்கப்படும் சரக்குகள் எதுவுமே அமெரிக்காவுக்கு கடத்தப்படாமல், மலை மலையாக கிடங்குகளில் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டதும், வேறு வழியின்றி முஸெல்லாவுக்கு சரணம் போட்டே ஆகவேண்டிய கட்டாயம்.

கொலம்பிய கார்டெல்கள் கடைவிரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்கிற தகவல் முஸெல்லாவுக்கு தெரியாமலா இருக்கும்?
லாபத்தில் சதவிகிதம் பேசுவதில் தன்னுடைய கை ஓங்கும் வரை அவர் காத்திருந்தார். கிட்டத்தட்ட ஐம்பதுக்கு ஐம்பது என்று பேரம் பேசப்பட்ட நிலையில் களத்தில் குதித்தார்.

முதலில் முஸெல்லாவின் ஆட்கள் தொடர்பு கொண்டது எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல் போன்ற பெரிய அமைப்புகளை அல்ல.
கொலம்பியாவில் குடும்பமாகவே சின்ன அளவில் கார்டெல் அமைத்து போதைத்தொழில் செய்து வந்த கன்ஸாலோ மோரா என்பவரை, ஆழம் பார்த்து காலை விடுவதற்காக, முஸெல்லா இவரை தேர்வு செய்திருக்கலாம்.

கன்ஸாலோவின் கண்டெயினரை துறைமுகத்தில் தங்கள் வாகனங்களில் ஏற்றியதுமே உரிய தொகைக்கான செக் கிழித்துத் தரப்பட்டது. ‘கையிலே காசு, வாயிலே தோசை’ என்பது முஸெல்லாவின் சித்தாந்தம்.

‘கடன் அன்பை முறிக்கும்’ என்பதில் உறுதியாக இருந்தார். அவரும் யாரிடமும் கடன் சொல்லமாட்டார். அவரிடமும் யாரும் கடன் சொல்லக்கூடாது.
மோராவுக்கு ஒரு டீலிங்கை முஸெல்லா முடித்துக் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல் பரவியதுமே கொலம்பிய கார்டெல்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்களில் ஒருவன் சாதித்து விட்டதாக கொண்டாடினார்கள்.

மோராவும், அவருடைய தந்தை மற்றும் சகோதரர்களும் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் ஓர் சிறியளவிலான வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். பேருக்கு அது ஓர் ஃபைனான்ஸ் கம்பெனியாக இருந்தாலும், முறைகேடான தொழில் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒரு சட்டபூர்வமான முகமாகவே இருந்து வந்தது.

மெதிலின் கார்டெல் ஆட்களுக்கு ‘ஹவாலா’ டைப்பில் அமெரிக்காவில் இருந்து பணத்தை கொண்டு வரும் ஸ்டாக் புரோக்கர் ஒருவர் மோராவின் நெருங்கிய நண்பர். இந்த புரோக்கரோடு பாப்லோவின் குழுவினருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. இவர் மூலமாக மோராவை அவர்கள் தொடர்பு கொண்டார்கள். சுலபமான ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்கள்.

“முஸெல்லாவோடு நல்ல நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத லாபத்தை, எந்த முதலீடுமின்றி, உழைப்புமின்றி அந்த நட்புக்காக மட்டுமே நீங்கள் பெறுவீர்கள்...”

பாப்லோவின் வாக்குறுதி மோராவுக்கு உற்சாகத்தை அளித்தது. மெதிலின் ராஜாவே, தன்னை போன்ற சின்ன லெவல் மாஃபியோவோடு தொடர்பு கொண்டு பேசியது பெரிய கவுரவம் என்று நினைத்தார்.எனவே, முஸெல்லாவை சந்தித்துவிட முடிவெடுத்தார்.முஸெல்லாவுக்கும், மோராவுக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு எமிலோ என்கிற தரகர்தான்.

கொலம்பிய கார்டெல்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக, தான் முஸெல்லாவை சந்தித்துத்து உரையாடவேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று எமிலோவை அவர் கேட்டுக் கொண்டார்.“முஸெல்லா யாரையும் சந்திக்க விரும்புவதில்லையே? அவருடைய முகம் யாருக்கும் தெரியாததுதான் அவரது பலம். அதுவுமின்றி இப்போதுதான் நீங்கள் எங்களோடு தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள். அதற்குள்ளாக...” எமிலோ முடிப்பதற்குள் மோரா குறுக்கிட்டார்.

“நான் பாப்லோ சார்பாக சந்திக்க விரும்புகிறேன்!”பாப்லோவின் பெயரைக் கேட்டதுமே எமிலோ, கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான்.“பாப்லோவின் சார்பாக என்பதால் ஒருவேளை அவர் உங்களை சந்திக்க விரும்பலாம். கேட்டுப் பார்க்கிறேன்...”

(மிரட்டுவோம்)

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்