ஆபீசர்ஸ் டிரைனிங் அகடமி (OTA)



அறிந்த இடம் அறியாத விஷயம்

சென்னை கிண்டியைத் தாண்டி மீனம்பாக்கத்தை நோக்கிச் செல்லும் அண்ணா சாலையில் பச்சை பசேலென விரிந்திருக்கிறது ஆபீசர்ஸ் டிரைனிங் அகடமி. சுருக்கமாக ஓடிஏ.இது ராணுவ ரகசியங்கள் பொதிந்து கிடக்கும் இடமல்ல.

‘ஓபன் டூ ஆல்’ என டிகிரி முடித்த மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்து, அவர்களை நேரடியாக லெப்டினென்ட் கிரேடில் ராணுவ அதிகாரிகளாக வார்த்தெடுக்கும் பயிற்சி மையம்.அதிகாலை நேரம்.

பயிற்சி முடித்து நாட்டுக்கு சேவை செய்ய காத்திருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான நிறைவு விழாவில் களைகட்டியிருந்தது ஓடிஏ. உள்ளே நுழைந்தோம். கம்பீரமான இரண்டு பீரங்கிகளுக்கு மத்தியில் நின்றிருந்த ராணுவ வீரர்கள் வழி மறித்தார்கள்.

‘‘பிரஸ்ஸா? அனுமதி இருக்கா?’’
கார்டையும், அழைப்பிதழையும் காட்டினோம். ‘‘ஓகே...’’ என்றதும் டூவீலரின் ஆக்ஸிலேட்டரை மெல்லத் திருகினோம். முந்நூறு மீட்டர் தூரத்திலேயே இன்னொரு வாயில். இதுதான் பிரதானம். அங்கேயும் நிறுத்தப்பட்டோம். சிறிது நேர காத்திருத்தலுக்குப் பிறகு பிஆர்ஓ அலுவலகத்திலிருந்து ஒரு வேன் வந்து சேர்ந்தது. அதில் ஏறினோம்.

நிறைவு விழா நிகழ்ச்சி இரண்டு நாட்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. முதல் நாளில் பயிற்சி முடித்த மற்றும் சீனியர் அதிகாரிகளின் வீர தீர சாகசங்கள் கோலாகலமாக நடக்கும். இரண்டாம் நாளில் பயிற்சி பெற்ற மாணவர்களின் அணிவகுப்பும், பதவியேற்பு உறுதிமொழியும் நடைபெறும்.

செயின்ட் தாமஸ் மலையின் அடிவாரத்தில் சுற்றிலும் மரங்கள் சூழ குளுமையாக இருக்கிறது அகடமி. கூடைப்பந்து மைதானங்கள், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் காட்சிப்பகுதி, நூலகம், மியூசியம், உணவகம், அணிவகுப்பு மைதானம்... என எல்லாவற்றையும் கடந்ததும் அடையாறு நதி. அதைத் தாண்டியதும் பயிற்சி மைதானம்.

கிட்டத்தட்ட மூன்று கிமீ தூரம். வரிசையாக அமைக்கப்பட்ட பந்தல்களில் பயிற்சி மாணவர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். ஓடிஏவின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜன் ரவீந்திரன் சரியாக 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்கின.

குதிரையில் பாய்ந்து வரும் வீரர்கள் கைகளாலும், ஈட்டியாலும் கீழே போடப்பட்டிருக்கும் அட்டையை எடுத்துக் காண்பிக்கும் நிகழ்ச்சி முதலில் அரங்கேறியது. அடுத்தடுத்து குதிரைகளிலிருந்து சாகசங்கள் செய்யப்பட ஆரவாரமும், கைதட்டலும் பின்னியெடுத்தது.
இதிலொருவர் கீழிருக்கும் துணியை எடுக்கவும், அதிலிருந்து புறா ஒன்று பறந்து செல்லவும் கூட்டம் மொத்தமும் மெய்சிலிர்த்தது. இதனையடுத்து, ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காட்டினார்கள் சில பயிற்சி மாணவர்கள். இவர்களுடன் வந்த ‘பஃபூன்’ வேடமிட்ட இருவர், குழந்தைகளை குதூ
கலப்படுத்தினர்.

பிறகு, பாராமோட்டார் டிஸ்ப்ளே. எல்ேலாரும் மைதானத்தின் மேலே பார்க்க, திடீரென பின்புறத்திலிருந்து ஒரு மோட்டார் சத்தம். வானத்தில் இரண்டு பாராமோட்டர்களை இயக்கி பார்வையாளர்களை அதிகாரிகள் பரவசப்படுத்தினர். பத்து நிமிடங்கள் வானத்தில் வட்டமிட்டு நடந்தது இந்த சாகசம்.

இதனையடுத்து, பாராசைலிங். ஜீப் ஒன்றில் கயிறு கட்டி பாராசூட்டில் இருப்பவரை இழுத்ததும் அவர் மேலே பறந்தார். அங்கிருந்தபடியே ஓடிஏவின் கொடியை எடுத்து சல்யூட் செய்ய... மீண்டும் மொத்த கூட்டமும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது. நிறைவாக, பேண்ட் வாத்தியக்குழு வீரர்களை உற்சாகமூட்டும் டியூன்களை வாசித்துக்காட்டி அப்ளாஸ் அள்ளியது.

‘‘நேரடியாக ராணுவத்தில் அதிகாரியாகும் வாய்ப்பை இந்த அகடமி அளிக்கிறது. இந்த அதிகாரி போஸ்ட்டிற்கு ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். தமிழகத்திலிருந்து வரும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. தமிழக மாணவர்கள் ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்ற முன்வரவேண்டும்...’’ என மீடியாசந்திப்பில் வேண்டுகோள் வைத்துவிட்டு நகர்ந்தார் ராஜன் ரவீந்திரன்.
அடுத்ததாக அங்கே, ராணுவத்தில் தனது கணவரை இழந்த சுவாதி மஹதிக்கைச் சந்தித்தோம். இவரும் பயிற்சி முடித்து தற்போது ராணுவ அதிகாரி
யாகப் போகிறார்.

சுவாதியின் கணவர் கர்னல் சந்தோஷ் மஹதிக் 2015ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடனான சண்டையில் இறந்தவர். ஒரு மகள், மகனுடன் வசித்து வருபவருக்கு, கணவரின் ராணுவ உடையைப் பார்த்து ஆர்மி ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
‘‘அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள், ‘your first love is Indian Army. your first love is uniform.’ அதுதான் எனக்கு இங்கே வர ஊக்கத்தை தந்தது...’’ என்கிறார் சுவாதி.

நெஞ்சுரத்துடன் அவர் பேசுவதைக் கேட்டுவிட்டு அங்கிருந்து மௌனமாக வெளியேறினோம்.இரண்டாம் நாள்... சரியாக காலை ஆறு மணி.
மழைத் தூறலில் நனைந்து கிடக்கும் அணிவகுப்பு மைதானம். நுழைவுப் பகுதியிலேயே ஒரு ராணுவ வீரர் கை நீட்டி உறுதிமொழி எடுப்பது போலான சிலை. அதனடியில், ‘Follow me Lead into Battle’ என்றொரு வாசகம். இந்தப் பகுதியைப் பரமேஸ்வரன் டிரில் ஸ்கொயர் என்கிறார்கள்.
1987ல் இலங்கையில் தேடல் ஆபரேஷனில் மரணமடைந்தவர் மேஜர் பரமேஸ்வரன். இவர் ஓடிஏவின் முன்னாள் மாணவர். மைதானத்தின் முன் அவரின் சிலையும் இருக்கிறது.

தென் பிராந்திய ராணுவ தளபதி பி.எம்.ஹரிஷ் வருகைக்காக காத்திருந்தோம். இரண்டு பக்கமும் உள்ள கேலரிகளில் பல்வேறு முகங்கள். பல்வேறு வயதினர். பல்வேறு உடைகள். பல்வேறு மொழிகள். திடீரென ஒரு முணுமுணுப்பு.

‘‘நிகழ்ச்சியைப் பார்க்க கமல் வந்திருக்கிறதா சொல்றாங்க. விசாரிங்க. மேலே ஜிம்மி ஜிப் மூலம் படப்பிடிப்பு நடக்குது பாருங்க. ‘விஸ்வரூபம் 2’ படமா இருக்கும்னு நினைக்கிறேன்...’’ என்றபடியே கேமராவை தூக்கிக் கொண்டு ஓடுகிறார் ஒரு கேமராமேன்.

‘‘சார்... முதல்ல நிகழ்ச்சியை பார்ப்போம்...’’ என்றது அருகிலிருந்தவரின் குரல். இப்படியாக சில நிமிடங்கள் கடக்க ராஜன் ரவீந்திரனை தொடர்ந்து பி.எம்.ஹரிஷ் வந்து சேர்ந்தார். அவர் முன் பயிற்சி முடித்த 322 மாணவர்களின் ஆறு குழுக்கள் கம்பீரமாக நின்றன. இதிலொரு குழு முழுவதும் பெண்கள். இந்தக் குழுக்களுக்கு எல்லாம் தலைமை, பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்டு தங்க மெடல் வென்ற அபிஷேக். இவரின் கமாண்ட்படியே அத்தனை குழுக்களுக்கும் செயல்படுகின்றன.

பிறகு, ராணுவ தளபதி ஜீப்பில் ஏறி நின்று குழுக்களை பார்வையிட்டு பயிற்சி முடித்தவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். ரம்மியமான இந்தக் காட்சிகள் நடந்து முடிய ஒரு மணி நேரமானது. நிறைவில் பதவியேற்பு நிகழ்ச்சி. காலை உணவை முடித்து அனைவரும் பரேடு மைதானத்தின் அருகிலுள்ள கார்டனுக்கு வந்து சேர்ந்தனர்.

பயிற்சி முடித்த மாணவர்கள் உள்ளே வரிசையாக அணிவகுக்க, அவர்கள் முன் இஸ்லாமிய, சீக்கிய, கிறிஸ்துவ, இந்து மதங்களைச் சேர்ந்த நான்கு பேர் கையில் புனித நூலுடன் நின்றனர். பயிற்சி எடுத்தவர்களில் நான்கு பேர் இவர்கள் முன் நின்று உறுதிமொழி சொல்ல அனைவரும் அதை ஏற்றனர். அவ்வளவுதான். இனி அந்த பயிற்சி மாணவர்கள் அதிகாரிகள்!

இதனையடுத்து பேண்ட் வாத்திய இசைக்குழு, தேசிய உணர்வை ஊட்டும் அணிவகுப்பு பாடலான, ‘கதம் கதம் பதயே ஜா’ பாடலை வாசித்தது. எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடினார்கள். பிறகு, தேசிய கீதம். இதற்கிடையில் சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்கள் பலூன், பட்டாசுகளுடன் தயார் நிலையில் வந்து சேர... கொண்டாட்டம் தூள் பறந்தது.ஒவ்வொருவரும் ராணுவத்தில் அதிகாரியான மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். சிலர் வட்டமாக புல்அப்ஸ் எடுத்தபடி கத்தினர்.உற்சாகக் குரலில் மிதக்கிறது ஓடிஏ!

வரலாறு

* 1963ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பரப்பளவு சுமார் 750 ஏக்கர்.

* இந்தியாவில் 1942 - 45 வரை ஏழு ஆபீசர்ஸ் டிரைனிங் ஸ்கூல்கள் இருந்தன. காரணம், இரண்டாம் உலகப் போரில் இந்திய மற்றும் காமன்வெல்த் ராணுவத்திற்கு அதிகாரிகள் தேவைப்பட்டதுதான். உலகப் போர் முடிவுக்கு வந்ததும் இந்தப் பள்ளிகள் மூடப்பட்டன.

*  1962ல் நடந்த இந்திய - சீனா போரின் போது மீண்டும் அதிகாரிகளின் தேவை உணரப்பட்டது. இதனால் புனேவிலும், சென்னையிலும் இரண்டு பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

*  1964ல் புனே பள்ளி மூடப்பட்டது.

*  1988 முதல், பள்ளி என்பது ‘ஆபீசர்ஸ் டிரைனிங் அகடமி’ என்றானது.

*  இந்தியாவில் பெண் ராணுவ அதிகாரிகளை உருவாக்கும் ஒரே பயிற்சி மையம் இதுதான்!

* இதுவரை 24 ஆயிரத்து 704 ஆண்களும், 2 ஆயிரத்து 276 பெண்களும் ராணுவப் பயிற்சி எடுத்து அதிகாரிகளாகி உள்ளனர்.

* சென்னை தவிர கயாவிலும் ஒரு ஓடிஏ செயல்பட்டு வருகிறது.

தமிழக மாணவர்களின் அனுபவம்

இந்த முைற பத்து மாணவர்கள் தமிழகத்திலிருந்து பயிற்சி முடித்து லெப்டினென்ட் ஆக தேர்வாகி உள்ளனர்.

* ஆறடி உயர வினீஷ் பி.எஸ்சி அக்ரி முடித்தவர். அப்பா பாலா எஸ்ஐ ஆக இருந்து ஓய்வு பெற்றவர். ‘‘சொந்த ஊர் கோயம்புத்தூர். சின்ன வயசுல இருந்தே ராணுவத்துல சேர ஆசை. ஸ்கூல், காலேஜ் இரண்டுலயும் என்சிசில இருந்தேன். பிறகு, combined services தேர்வுக்கு கோச்சிங் எடுத்து பாஸானேன். ஆரம்பத்துல அம்மாவுக்கு நான் ராணுவத்துல சேர பயம். இப்ப, அவங்க பெருமைப்படுறாங்க!’’ என்கிறார் வினீஷ்.

* ராகுல் சித்தார்த்தும் கோவையைச் சேர்ந்தவர்தான். பிஇ முடித்திருக்கிறார். டெக்னிக்கல் பிரிவில் சேரவிருக்கிறார். அப்பா சிவக்குமார் கொரியர் பிசினஸ். அம்மா நிர்மலாதேவி கல்லூரி பேராசிரியர். ‘‘ சென்னைல வெள்ளம் வந்தப்ப ரிஸ்க் டீம்ல சேர்ந்து சர்வீஸ் பண்ணினேன். போன வருஷம் இந்தத் தேர்வு எழுதி முதல் தடவையே பாஸானேன். சந்தோஷமா இருக்கு...’’ என்கிறார்.

* இவரைப் போலவே சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த செல்வகுமார், குரோம்பேட்டைச் சேர்ந்த கோகுல் அசோக் ஆகியோரும் எஞ்சினியரிங் முடித்தவர்கள். ராணுவத்தில் அலாதியான விருப்பம் கொண்டவர்கள்.

* சைதாப்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ் வறுமையான குடும்பப் பின்னணி உடையவர். அப்பா ராமச்சந்திரன் வெல்டராக இருக்கிறார். அம்மா சுந்தரி இட்லிக் கடை நடத்துகிறார். ‘‘ஸ்கூல் என்சிசில இருந்தேன். உணவு கிடைக்கும்னுதான் முதல்ல சேர்ந்தேன். ஆனா, ரொம்ப பிடிச்சுப் போச்சு. காலேஜ்லயும் என்சிசில இருந்தேன்.

என்னுைடய துறைத் தலைவர்தான் இந்த கோர்ஸ் பத்தி சொன்னார். பிறகு அவரே ஒரு ஓய்வுபெற்ற கர்னல்கிட்ட அனுப்பி தேர்வு குறித்து கேட்க வைச்சார். முதல்முறையிலயே பாஸானேன். நான் என் குடும்பத்துல முதல் தலைமுறை பட்டதாரி மட்டுமல்ல, ராணுவ அதிகாரியும் கூட!’’ என்கிறார் கை உயர்த்தியபடி!

Short Service Commission-ல் சேருவது எப்படி?

* இந்தத் தேர்வை யுபிஎஸ்சி நடத்துகிறது. வருடத்திற்கு இரண்டு முறை தேர்வுகள் நடக்கும்.

* இதில் தேர்வானவர்கள், சர்வீஸஸ் செலக்‌ஷன் போர்டு (SSB) என்ற அமைப்பு ஐந்து நாட்கள் நடத்தும் ஸ்கிரீனிங் டெஸ்ட், சைக்காலஜி டெஸ்ட், குரூப் டாஸ்க், இன்டர்வியூ என எல்லாவற்றிலும் பாஸாக வேண்டும்.

* பிறகு, ஓடிஏவில் பயிற்சி பெற்று நேரடியாக ராணுவ அதிகாரிகளாக மாறலாம்.