ஊஞ்சல் தேநீர்



மிகமிகக் குறைந்த விலைதான் என்ற போதும்கூட வயிற்றுப்பாட்டுகே வழியில்லாமல் இருந்த அந்தக் காலத்தில் அண்ணன் வீர.சந்தானத்தின் விருப்பத்திற்கு என்னால் இசைவு தெரிவிக்க முடியாமல் போனது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை படப்பைக்கு வருகிறேன் என்றதும், “வேண்டுமானால் நான் கட்டியிருக்கும் வீட்டில் தங்கிக் கொள்ளேன்...” என்றார்.

எழுத்து, படைப்பு எல்லாவற்றையும் தாண்டி தாயுள்ளத்தோடு அவர் சொன்ன அந்த வார்த்தைகளில் பொதிந்திருந்த அன்புக்கு ஈடாக எதுவுமே இல்லை. எதையுமே அவருக்கு மறைத்து வைத்துப் பழக்கமில்லை. நண்பர்களோடு இணைந்து எப்போதாவது குடியைக் கொண்டாடுவார். சதா கைகளில் புகையும் சிகரெட்டை “விட்டுடலாமே அண்ணா...” என்றேன்.

“கோயிந்தசாமியை விட்டாலும் இவனை விட முடியவில்லையே!” என்றார்.‘‘அது யார் கோயிந்தசாமி?’’ என்றதும், “ஒருமுறை நண்பர்கள் தொந்தரவு தாங்காமல் குடிக்க நேர்ந்தது. குடி சும்மா இருக்குமா, நேரம் போனதே தெரியவில்லை. அப்போ ஒங்க அண்ணி மட்டுந்தான் வீட்டுல. நான் நண்பர்களோடு பேசிவிட்டு வீட்டுக்குப் போக தாமதமாகிவிட்டது.

வீட்டுக்குப் போனதும் குடிக்கப் போனேன் என்றால் தவறாகி விடுமேன்னு கோயிந்தசாமியைப் பாக்கப் போயிருந்தேன் என கதைவிட்டேன். அதிலிருந்து எப்போது குடிக்க நேர்ந்தாலும் கோயிந்தசாமியைப் பார்க்கப் போனதாக சொல்லத் தொடங்கினேன்.

ஒருகட்டத்தில், ஒங்க அண்ணியே ‘கோயிந்தசாமிய பாக்கப் போயிட்டீங்களா’ன்னு கேட்கத் தொடங்கினா. யாருன்னே தெரியாத கோயிந்தசாமி பலதடவ என்னக் காப்பாத்தியிருக்கான்...” என்று சொல்லிவிட்டு “அந்த கோயிந்தசாமி பயல நீ பாத்துடாத...” எனவும் எச்சரித்தார்.
அவர் வீட்டுக்குப் போனால் வீடு நிரம்ப அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களை வரிசையாகக் காட்டுவார்.

“இது போனவாரம் காவிரி பிரச்னைக்காக வரைந்தது. இது முல்லைப் பெரியாறுக்கு, அதோ அது இருக்கிறதே அது மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை முன்னிட்டு...” என தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்னைகளுக்கு எப்போதெல்லாம் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஓவியத்தால் எதிர்வினையாற்றினார்.

பெரும்பாலும் தமிழகத்தில் காணக்கிடைக்கும் பண்டைய ஓவியங்கள் கடவுளோடும் மதங்களோடும் சம்பந்தமுடையவை. ஆனால், உலகியல் சார்ந்த ஓவிய மரபு தமிழர்களுக்கு இருந்துள்ளது. அதற்கான சான்றுகளை நம்முடைய பழைய இலக்கியங்கள் வழங்குகின்றன.

அது பற்றிய விரிவான ஆய்வு தேவை என தமிழறிஞரும் பேராசிரியருமான கா.சிவத்தம்பி சொல்லியிருக்கிறார். அந்தப் பணியை மேற்கொள்ளத் தகுதியுடையவராக இருந்தவர்களில் வீர.சந்தானமும் ஒருவரென்று ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை தம்முடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆய்வுப்பணியை மேற்கொள்வது ஒருபுறமிருக்க, தன்னுடைய கலையாற்றலைக் கூட முழுமையாக வெளிப்படுத்தாமல், ஒரு முழுநேர தமிழ்த்
தேசியப் போராளியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் எனவும் அக்கட்டுரையில் எஸ்.வி.ஆர். வருந்தியிருக்கிறார்.

அண்ணன் வீர.சந்தானத்தைப் பொறுத்தவரை எந்த விளம்பரத்தையும் எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தியதில்லை. மாறாக, போராட்டக் களத்தில் இறங்கி முழக்கமிடுவதிலும் சிறை செல்லுவதிலும்தான் குறியாயிருந்தார்.அரசின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் அஞ்சாதவராகச் செயல்பட்டார். கலைஞர்களோ எழுத்தாளர்களோ பெரிதில்லை. களத்தில் நின்று போராடுபவர்களே பெரியவர்கள் என அவர் கருதினார்.

தமிழகத்தில் இன்றுள்ள எல்லா அரசியல் தலைவர்களோடும் அவருக்கு நெருக்கமான தொடர்புண்டு. என்றாலும், அவர்களில் யார் ஒருவர் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டாலும் அதை அவர் ஏற்றுக்கொண்டதில்லை.முகத்திற்கு நேரே விமர்சித்து வெளியேறிவிடுவார். ஓட்டு அரசியலைவிட்டு மக்கள் அரசியலுக்கு வாருங்கள் என்றுதான் ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்னும் பெயரில் தொல்.திருமாவளவனும், மருத்துவர் ராமதாஸும் கைகோர்க்க காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர் வீர.சந்தானமே.

‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்க’த்தின் மூலம் உதிரி உதிரியாயிருந்த தமிழ் அமைப்புகளை ஒன்றுசேர்த்து மாலையாகத் தொடுக்கும் ஆர்வம் அவருக்கிருந்தது. என்றாலும், பல்வேறு காரணங்களால் அவருடைய முயற்சிகள் பின்னடைவைக் கண்டன.தமிழ் இணைப்பு மூலம் சாதியத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய அவர் எடுத்துக்கொண்ட சங்கற்பம், பொய்யாய் பழங்கதையாய் போனது. இனத்தையும் மொழியையும் சாதி விழுங்கி ஏப்பம்விடும் என்பதை பின்னால்தான் அவருமே புரிந்துகொண்டார்.

அவர் ஆசை ஆசையாக தஞ்சையில் நிறுவிய முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு ஆளும் அரசால் ஆபத்து நேரவிருந்த சமயத்தில் குரல் தழுதழுக்க அவர் உரையாடிய உஷ்ணத்தை அவ்வளவு எளிதாக என்னால் கடந்துவிடமுடியாது.பத்திரிகையாளரும், நண்பருமான டி.அருள் எழிலன் எழுதி இயக்கிய ‘கள்ளத்தோணி’ குறும்படத்தில் வயதான ஈழ அகதியாகத் தோன்றுவார்.

பேத்திக்கும் தாத்தாவுக்குமான உரையாடல்கள், அச்சு அசலான உண்மைத் தன்மையோடு வெளிவர அவருடைய உடல்மொழி உதவியிருக்கிறது. போர் என்றால் என்னவென்று கேட்கும் பேத்திக்கு வேதனையோடு அவர் விளக்கிக் காட்டுவார். அப்போது உடல் நடுங்கி குரல் சிறுத்து அவரே வேறு ஒருவராய்த் தெரிவார்.அவர் அக்குறும்படத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள், கல்லான ஒருவரையும் கண்ணீர்க் கடலுக்குள் தள்ளிவிடும்.

அதேபோல லயோலா கல்லூரியின் ஊடகப் பிரிவினர் தயாரித்த ‘வேட்டி’யிலும் அவருடைய நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படி அமைந்திருந்தது. இறுதிக் காட்சியில் ‘தூ’ எனக் காறித்துப்பும்போது திருந்தாத சமூகத்தின் மீது மொத்தக் கோபத்தையும் கொட்டியிருப்பார்.
“ரொம்ப அருமையா துப்பியிருக்கீங்கண்ணே...” என்றபோது,‘‘பாரதி,ஒனக்குத் தெரியுமா, என்னுடைய காதலே காறித் துப்பிய காதல்தான்!”

என்றார். “என்னாண்ணே சொல்றீங்க..?” என்றதும், “நான் வேலை பார்த்து வந்த நெசவாளர் சேவை மையத்திற்கு அருகில்தான் சாந்தா வீடிருந்தது.
நான் வந்துவிட்டதைத் தெரிவிக்க மூன்றுமுறை காறித்துப்புவேன். உடனே சாந்தா வெளியே வந்து பார்த்துச் சிரிக்கும். உலகமே காதலைக் காறித் துப்பிக்கொண்டிருந்த காலத்தில் நானும் சாந்தாவும் காறித் துப்பித்தான் காதலை வளர்ந்தோம்!” என்று சொல்லி சிரித்துக்கொண்டார்.
இதே சம்பவத்தை மருத்துவமனையில் பலரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். சூழலின் இறுக்கத்தை தளர்த்த அவர் கையாளும் உத்திகளில் இதுவும் ஒன்று.

நெருப்பு கக்கும் ஓவியங்களை ஒரு பக்கம் தீட்டிக்கொண்டே, எதார்த்த வாழ்வின் சுவாரஸ்யங்களை அவர் சுகிக்கத் தெரிந்தவர். ஒரு சம்பவத்தையோ சூழலையோ விவரிக்கும்பொழுது, பெரும்பாலும் அவர் ஒரு நாடகக்காரனாக அவதாரம் எடுத்துவிடுவார்.

சொல்ல வந்த விஷயத்தை சுவைபட கூறுவதில் அவருக்கிருந்த பேரார்வம் ஒரு தேர்ந்த எழுத்தாளனைத் தோற்கடித்துவிடக் கூடியது. ஈழத்தில் நிகழ்ந்த இறுதிப் போரை விவரிக்கையில், “காந்திதேசம் கொடுத்தது... புத்த தேசம் கொன்னது!” என ரத்தினச் சுருக்கமாய் ஓர் மேடையில் பேசினார்.
நீட்டி முழக்காமல் நேரடியாக சொல்லிவிடக் கூடிய ஆற்றல் அவருடையது. தனக்கு நெருக்கமானவர்கள் கருத்து ரீதியாக வேறுபட்டாலும் அரசியல் ரீதியாக மாறுபட்டாலும் அதை அவர்களிடமே தைரியத்தோடு விவாதிப்பார்.

‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ சிதைவுண்ட பொழுதும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபொழுதும் அதற்குக் காரணமானவர்களை அவர் கண்டிக்கத் தவறியதில்லை.ஈழப் பிரச்னையில் ஈடுபாடு கொண்டிருந்த வைகோவிடமும், பழ.நெடுமாறனிடமும் அவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் அதிகம். தமிழர்கள் ஒன்றிணையாமல் பங்காளிச் சண்டைகளைப் போட்டுக் கொண்டிருப்பதால்தான் எதிரிகள் நம்முடைய நிலத்தையும் வளத்தையும் அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொண்டிருந்தார்.

சர்வதேச சமூகத்திடம் சுட்டுவிரல் நீட்டி அவர் அறைகூவல் விடுத்த காணொளி இப்போதும் இணையத்தில் கிடைக்கிறது. “தமிழர்கள் தனி நாடு கண்டுவிடக் கூடாதென கங்கணம் கட்டியிருக்கும் இந்தியாவின் வேலைத் திட்டத்திற்கு ஒத்தூதும் சர்வதேச சமூகமே, ஒருநாள் எங்கள் கனவும் உறுதியும் பலிக்கத்தான் போகிறது.

உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் விடுதலைக் கனவை விலக்கிக்கொண்டதில்லை. எண்ணிக்கையிலும் அளவிலும் சிறியதாக உள்ள இனம்கூட
விடுதலை பெற்றிருக்கையில் எங்கள் தாயகக் கனவை நாங்கள் ஒருபோதும் ஒதுக்க மாட்டோம். மேலும் போராடுவோம்...” என்று அவர் தன்னிச்சையாகப் பேசி வெளியிட்ட பதிவிலிருந்தே அவருடைய உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்ள முடியும்.

சென்னை ஓவியக் கல்லூரிக்கு நூறாண்டுக்கும் மேலான பாரம்பர்யம் உண்டு. அந்த பாரம்பர்யத்தின் முதல் கண்ணியாக தனபால், முருகேசன், கே.எம்.ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, ஆர்.டி.பாஸ்கர் ஆகிய ஓவியர்கள் இருந்திருக்கிறார்கள்.அடுத்த கண்ணியாக வீர.சந்தானம், ட்ராஸ்கி மருது உள்ளிட்டவர்கள் வருகிறார்கள். அரசியல் புரிதலையும் ஓவிய மரபையும் உள்வாங்கிக்கொண்ட அவர்கள் ஒரே நேரத்தில் பத்திரிகை, அரசியல், சினிமா ஆகிய மூன்று தளங்களிலும் இயங்கியிருக்கிறார்கள்.

ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. மூன்று தளங்களுமே வண்ணங்களையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு யார் புதிய வண்ணங்களைத் தரப்போகிறார்களோ அவர்களே வெல்வார்கள்.

அண்ணன் வீர.சந்தானம் ஓவியராக இருந்தாலும் வண்ணங்களைவிட எண்ணங்களை விதைப்பதிலேயே விருப்பம் காட்டியவர். அவர் வரைந்து, முடியாமல் வைத்திருக்கும் ஓவியத்தை யார் வந்து முடிக்கப் போகிறார்களோ? தெரியவில்லை.

அதேபோல வண்ணங்களின் அரசியலைப் புரிந்துகொண்டு, இறுதியாக யார் வந்து இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் முகத்தில் கரியைப் பூசப் போகிறார்
களோ? அதுவும் தெரியவில்லை.

(பேசலாம்...) 

யுகபாரதி

ஓவியங்கள்: மனோகர்