காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்யுவகிருஷ்ணா - 22

‘சட்டம் வளைக்கப்படக் கூடியது’ என்பது உலகமெங்கும் வாழ்வாங்கு வாழும் எல்லா சட்டவிரோத சக்திகளுக்குமே தெரியும். அதனால்தான் சட்டத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுவதில்லை. அதே நேரம், ‘சட்டம் இருமுனை கத்தி’ என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். ‘எப்போது வேண்டுமானாலும் அது தங்களுடைய நெஞ்சில் பாய்ந்து, இருதயத்தை குத்திக் கிழிக்கும்’ என்கிற அறிவு இல்லாவிட்டால் அழிந்தே போவார்கள்.

மெதிலின் நகரின் முடிசூடா ராஜாவாக எஸ்கோபார் வலம் வந்து கொண்டிருந்தபோதே, சாதாரண இரு ஏஜெண்டுகள் அவரைக் கைது செய்ய முடிகிறது என்றால், தன்னுடைய சாம்ராஜ்யத்தைவிட சட்டம் பெரியதுதான் என்பதை ஒப்புக் கொண்டார். எப்போது வேண்டுமானாலும் சட்டத்தை தன் மீது பாய்ச்சி கார்டெல்லை முடக்கவோ... ஏன், தன்னை கொல்லவோ கூட முடியும் என்பதை அறிந்திருந்தார். எனவேதான் சட்டத்தை நிலைநாட்டும் அந்தஸ்தை தான் எட்டுவதற்காக ரொம்பவும் மெனக்கெட்டார்.

அரசு அதிகாரிளையும், அரசியல்வாதிகளையும் எந்த வகையிலும் தன் தரப்பு ஆட்கள் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று முனைப்பாக இருந்தார். “நாம் யாரையாவது அச்சுறுத்தினால்தானே நம்மை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்? நாம் அவர்களுடைய நட்பு சக்தி என்கிற எண்ணத்தை அவர்களுக்கு உறுதியாக ஏற்படுத்த வேண்டும்...” என்று கார்டெல் கூட்டங்களில் வலியுறுத்தத் தொடங்கினார். மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை விரிவுபடுத்தி நிறைய செலவு செய்ய ஆரம்பித்தார்.

ஏனெனில் அரசு தமக்கு எதிர்ப்பாக மாறினாலும், மக்கள் சக்தி தனக்கு துணையிருக்கும் என்று நம்பினார். நாடு முழுக்க கோகெயின் பயிரிட்டார். தன்னுடைய கார்டெல்லுக்கு மட்டுமின்றி, மற்ற கார்டெல்களுக்கும் அவற்றை மலிவு விலையில் கொடுத்து உதவினார். முக்கிய நகரங்களில் கோகெயினை பதப்படுத்தி பவுடர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவினார். இந்தத் தயாரிப்புகளை தங்குதடையின்றி சப்ளை செய்யக்கூடிய போக்குவரத்து கட்டமைப்பை நிறுவினார். பாப்லோ எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல்லுக்கு சாதாரண சைக்கிளில் தொடங்கி ஏரோப்ளேன் வரை வாகனங்கள் சகட்டுமேனிக்கு வாங்கப்பட்டன.

இந்த வேலைகளைச் செய்ய ஏராளமான இளைஞர்களுக்கு கொழுத்த சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. பாப்லோவின் காலத்தில் அரசு வேலைக்கு செல்வதைக் காட்டிலும், மெதிலின் கார்டெல்லில் வேலை பார்ப்பதே கொலம்பிய இளைஞர்களுக்கு கவுரவமான தேர்வாக அமைந்திருந்தது. எல்லாவகையிலான கொடுக்கல் வாங்கல்களிலும் குறிப்பிட்ட சதவிகிதம் ‘கட்டிங்’காக அதிகாரிகளுக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் கொடுத்தாக வேண்டும் என்பதில் பாப்லோ கண்டிப்பாக இருந்தார்.

அரசுத் தரப்பில் எந்தவொரு சிறியளவிலான பிரச்னை ஏற்பட்டாலும், “கத்தை கத்தையாக கணக்கு பார்க்காமல் பணத்தைக் கொண்டுபோய் சம்பந்தப்பட்டவன் முகத்தில் எறி...” என்பார் பாப்லோ. வன்முறை மட்டுமே கார்டெல்களின் வழிமுறை என்கிற நிலை, பாப்லோவின் காலத்தில் முற்றிலுமாக மாறியது. இவரது பாணி தொழில் செயல்முறைகளையே மற்ற கார்டெல்களும் பின்பற்றத் தொடங்கின. அவ்வகையில் உலக மாஃபியா வரலாற்றில் ஒரு புதிய டிரெண்டை பாப்லோ உருவாக்கினார். பாப்லோ, கொலம்பியாவில் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சி எத்தகையது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

1976 தொடங்கி 1980 வரையிலான வெறும் ஐந்தாண்டுகளில் கொலம்பியாவின் நான்கு நகரங்களில் இருந்த அனைத்து வங்கிகளின் இருப்பும் அப்படியே இரு மடங்கானது. நாட்டின் முதல் குடிமகனில் தொடங்கி, கடைக்கோடி வறியவன் வரைக்கும் பணத்தை மெத்தையில் போட்டுப் புரண்டார்கள். போதைத் தொழிலில்தான் தங்கள் நாடு கொழிக்கிறது என்பதை அறிந்திருந்தாலும் அரசாங்கம், கண்டும் காணாமலும்தான் இருந்தது. தங்களுக்கு முறையாக கப்பம் கட்டிவிட்டு நேர்மையாக (!) தொழில் செய்பவர்களை நாமும் ஆதரிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை அரசின் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஏற்பட்டு விட்டது.

அந்நாளைய கொலம்பிய அதிபர் அல்போன்ஸாவே இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். “நாங்கள் இதுவரை மூடிக்கிடந்த ஜன்னலைத் திறந்து விட்டோம்...” என்று வாக்கு  மூலமே கொடுத்திருக்கிறார். ஓர் அரசாங்கம் தன்னுடைய பொருளாதாரத்தை போதைத் தொழில் செய்து ஸ்திரப்படுத்திக் கொள்கிறது என்பது வெட்கக்கேடான சமாசாரம். ஆள்பவர்கள் யோக்கியமாக இருக்கும் பட்சத்தில் இதற்காகத் தலை காட்டவே வெட்கப்படுவார்கள். ஆனால்  நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்று கொலம்பிய அரசு, போதைத் தொழிலை மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கியதுதான் அவலம்.

தங்களை தட்டிக் கேட்பார் எவருமில்லை என்கிற நிலையில் கார்டெல்கள் கதகளி ஆடத் தொடங்கின. “அவரு கஷ்டப்பட்டு கஞ்சா பிசினஸ் செஞ்சு பெரிய ஆளாயிட்டாரு...” என்று போதை அதிபர்கள் குறித்து பெருமையாக கவர் ஸ்டோரி எழுதின கொலம்பிய ஊடகங்கள். கார்டெல்களில் பணிபுரிபவர்கள் கணவான்களாக சமூகத்தில் மதிக்கப்பட்டார்கள். இந்த நிலைக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமை பாப்லோவையே சேரும். கொடூரமான குற்றவாளியான கார்லோஸ், பாப்லோவின் நம்பிக்கைக்குரிய சகா. விமானங்களில் போதை கடத்தல் செய்வதற்கான நெட்வொர்க்கை அவர்தான் துல்லியமாக உருவாக்கினார்.

பஹாமாஸில் இந்த நார்மன் கேவ் பகுதியில் மிகப்பெரிய பங்களாவோடு ஒரு போதைத் தொழிற்சாலையையும், கிடங்கையும் அவர் ஏற்படுத்தினார். இதற்கு பாப்லோ மற்றும் கொலம்பிய அரசின் நல்லாசி எப்போதுமே இருந்தது. வெகுவிரைவில் நார்மன் கேவ் மொத்தத்துக்குமே அவர்தான் அதிபர் என்கிற நிலைமை ஏற்பட்டது. போதைத் தொழிலுக்காக இங்கு தனி விமான நிலையமே அமைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் கண்டிப்பான வற்புறுத்தலால் பஹாமா அரசாங்கம்,

போதை கடத்தல்காரர்களை கட்டுப்படுத்த முயற்சித்தபோது, ஒரு விமானம் முழுக்க பணத்தை நிரப்பி, பஹாமா முழுக்க இருந்த அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணமழை பொழியச் செய்து அசத்தினார் இவர். கார்லோஸ் ஓர் உதாரணம்தான். பாப்லோவுடன் ஒத்துப் போனவர்கள் ஒவ்வொருவருமே ஒரு தீவு வாங்கி, அங்கே தனி அரசாங்கம் அமைத்து ஆளத் தொடங்கினார்கள். கொலம்பிய கார்டெல் மாஃபியாக்களுக்கு கிடைத்த இந்த அந்தஸ்து மற்ற தென்னமெரிக்க மாஃபியாக்களையும் கவர்ந்தது.

அவர்களும் பாப்லோவோடு டீலிங் வைத்துக் கொள்ள போட்டாபோட்டி போட்டார்கள். குறிப்பாக மெக்ஸிகோவைச் சார்ந்த குழுக்கள். இவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்து ஒரு மிகப்பெரிய குற்றவியல் சாம்ராஜ்யத்தை, பேரரசாங்கம் கணக்காக தென்னமெரிக்காவில் நிறுவும் முயற்சியில் கிட்டத்தட்ட பாப்லோ வென்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இத்தகைய சாதனையை செய்திருந்தாலும் பாப்லோ சர்வசாதாரணமாக கொலம்பிய இளைஞர்களோடு பீச்சில் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார்.

கார் ரேஸ்களில் கலந்து கொள்வார். கொலம்பியாவில் நடைபெறும் எந்தவொரு திருவிழாவுக்கும் பாப்லோதான் சீஃப் கெஸ்ட். உலகமே இந்த பூனையா பால் குடிக்கிறது என்று ஆச்சரியப்படுமளவுக்கு நடந்துகொண்டார். அமெரிக்கா மட்டும் நறநறத்துகொண்டிருந்தது. தங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போதை போருக்கு காரணமானவரைப் போட்டுத் தள்ள திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தது.

(மிரட்டுவோம்)

படங்கள்: அரஸ்