COFFEE TABLE- குங்குமம் டீம்

நியூ போர்டு


ரிப்பேரினால் செயல் இழந்து, சரி செய்யப்பட முடியாத கம்ப்யூட்டரின் கீபோர்டு உங்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள்? இகுப்பை என முடிவு செய்து எடைக்கு போட்டுவிடுவீர்கள். ஆனால், இந்த வீடியோ பார்த்தால் உங்கள் முடிவை மாற்றிக்கொள்வீர்கள். கீபோர்டில் உள்ள உதிரிப்பாகங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனி அழகுப் பொருட்களாக மாற்ற முடியும் என செய்முறை விளக்கத்தோடு விவரிக்கிறது இந்த வீடியோ.  இதை ஃபேஸ்புக்கின் ‘bride side’ பக்கத்தில் ‘Surprising hacks for and with your keyboard’ என்ற தலைப்பில் பதிவிட, ஒன்பது மணி நேரத்திற்குள் 20 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.

ஒயின் குயின்! 


பிட்னஸ், ஃபேஷன், லைஃப் ஸ்டைல் என செம மாடர்ன் மயிலாகிவிட்ட அமலாபாலின் நட்பு வட்டம் நாளுக்கு நாள் சிறகை விரித்து மகிழ்கிறது. சமீபத்தில் தனது தோழிகளுடன் நடந்த சந்திப்பில் நெகிழ்ந்த அமலாவிற்கு உமர் கய்யாமின் கவிதை துளிர்க்க... அதை அப்படியே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘‘Drink wine, this is life eternal
This, all that youth will give to you
It is the season for wine, roses
And drunken friends
Be happy for this moment
This moment is your life’’ என ‘ஏலேய்... be happy.. டோன்ட் வொர்ரி’ என சமூகத்திற்கு மெசேஜும் சொல்லியிருக்கிறார்!

கட்டாய தாம்பத்ய உறவு!

மனைவியுடன் கட்டாய தாம்பத்ய உறவு கொள்வது பாலியல் வன்முறைக் குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இந்தச் சட்டம் சில வருடங்களாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது. இப்போதுதான் இதுகுறித்தான விவாதங்கள், இதற்கு எதிரான போராட்டங்கள் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது. கணவர்களால் கட்டாய தாம்பத்ய உறவில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களின் புள்ளிவிவரத்தை அரசின் ஆய்வு 2005லேயே வெளியிட்டுள்ளது.

அதன்படி 20 முதல் 24 வயதான பெண்கள் 10.5 சதவீதமும், 25 முதல் 29 வயதான பெண்கள் 10.4 சதவீதமும், 40 முதல் 49 வயதான பெண்கள் 8.2 சதவீதமும் தங்கள் கணவர்மார்களால் கட்டாய தாம்பத்ய உறவுக்கு ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது. இது குறிப்பிட்ட சிலரிடம் மறைமுகமாக எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் விவரம் மட்டுமே. இன்னும் வெளிச்சத்துக்கு வராத புள்ளிவிவரங்கள் எத்தனையோ!

ஹெட்போன்

இசைப்பிரியர்கள் மற்றும் இசைக் கலைஞர்களை மனதில் வைத்து பிரெய்ன்வேவ்ஸ் நிறுவனம் ‘ஹெச்.எம் 5 ஸ்டூடியோ மானிட்டர்’ ஹெட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. பாடல்கள், இசைக் குறிப்புகளை மிகத் துல்லியமாக இதில் கேட்க முடியும். உயர் ரக பிளாஸ்டிக் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் அழகாக இதை வடிவமைத்திருக்கிறார்கள். 1.3 மீட்டர் நீளமுள்ள கேபிள் இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் எந்தவித தடையுமில்லாமல் சொகுசாக ஓர் இடத்தில் அமர்ந்து இசையை ரசிக்கலாம். இரண்டு வருட வாரண்டியும் உண்டு. அமேசான் இணையதளத்தில் கிடைக்கும் இந்த ஹெட்போனின் விலை ரூ.7,444.
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மீன்கள்!


கடந்த வாரத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வி சூறாவளி கபளீகரம் செய்தது. அங்கிருக்கும் ஹூஸ்டன் மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. நகரின் அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பலர் உணவுக்கே தவித்து வந்தனர். இந்தச் சூழலில் அங்கே வசித்து வந்த சல்தானாவின் சாதுர்யம் மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஆம்; சல்தானாவின் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துவிட்டது. அவர் உணவைத்தேடி வெளியே எங்கும் செல்லவில்லை. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிட்டிருக்கிறார். சல்தானா டைவ் அடித்து மீன்பிடிக்கும் காட்சியை அவரின் மகள் வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் தட்டிவிட, ஒரு கோடிப் பேருக்கும் அதிகமானோர் பார்த்து வைரலாக்கிவிட்டனர்.