தங்கள் கிராம மேம்பாட்டுக்காக பெண்கள் பத்திரிகை நடத்துகிறார்கள்!



- ஷாலினி நியூட்டன்

பெண்கள் குழுவாகச் சேர்ந்தால் என்ன செய்வார்கள்? ஃபேஸ்புக்கில் குரூப் அரட்டை, சீட்டு. அதிகபட்சமாக ஒரு சுய உதவிக்குழு. இப்படித்தானே எல்லோரும் நினைப்பார்கள்? அதுவும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களால் வீட்டைவிட்டு வெளியே வரவே முடியாது. நான்கு சுவர்களுக்குள் முடங்க வேண்டியதுதான். இப்படிப்பட்ட சூழலில்தான் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தெலுங்குப் பத்திரிகை ஒன்றை நடத்துகிறார்கள்! பெயர் ‘நவோதயம்’. அதாவது ‘புதிய உதயம்’.

‘‘2001ம் வருடம் வெறும் 750 பிரதி களுடன் தொடங்கிய பத்திரிகை இது. எங்கள் பகுதி மக்களின் பிரச்னைகள், பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் போன்றவற்றை எதிர்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்தான் இதைத் தொடங்குவதற்கான உதவிகள் செய்தார். நாங்கள் மொத்தம் 12 பேர். ஆர்த்தி, மஞ்சுளா, ரத்னம்மாள், ஜெயந்தி, சந்திரகலா, மல்லிகா, சின்னக்கா, முனியம்மா, உமாதேவி, இந்திரா பிரியதர்ஷினி, அம்மாஜி, பத்மா. செய்திகள் சேகரிப்பது, புகைப்படங்கள் எடுப்பது, பத்திரிகை வடிவமைப்பு அனைத்துமே நாங்கள்தான்.

‘ஜில்லா சமாக்கியா’ என்கிற அரசு சார்ந்த சங்கம் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் நிலவும் மின்சாரம், மருத்துவ வசதி, கல்வி, பெண்கள் வன்கொடுமை, மது போன்ற பிரச்னைகள் பற்றி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இது தவிர, வெற்றிபெற்ற பெண்களின் கதைகள், அவர்களின் வெற்றிப் பயணம், வித்யாசமானவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் போன்றவற்றையும் பதிவு செய்கிறோம். குழந்தைத் திருமணங்களைக் களம் இறங்கித் தடுத்திருக்கிறோம்.

ஒருமுறை ராயலசீமா பகுதியில் பெண்கள் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. நாங்கள் பாலியல் தொழிலாளி போல அந்தப் பகுதியின் ஆபத்தான இடங்களில் நுழைந்து கடத்தப்பட இருந்த பெண்களைக் காப்பாற்றினோம். அங்கிருந்த பெண்களுக்கு வெறும் உள்ளாடைகள் மட்டும்தான் உடைகளாக இருந்தன. சிகரெட் சூடு, காயப்படுத்துதல் போன்ற கொடூரங்கள் வேறு நிகழ்த்தப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட கொடுமைகளில் இருந்து அந்தப் பெண்களைக் காப்பாற்றி மீட்டுக் கொண்டுவந்தோம். 

எங்கள் குழுவில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த பெண்கள் முதல் கல்லூரியில் மேற்படிப்பு முடித்தவர்கள் வரை இருக்கிறோம். இதுதான் எங்கள் பலம். இப்படி இருப்பதால்தான் சமூகத்தின் எல்லா தரப்புப் பெண்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது. எங்கள் பத்திரிகையில் ஒரு பிரச்னையை அடையாளப்படுத்தினால் அரசாங்கமும் உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்கிறது. எங்கள் குழுவில் ஒரு பெண்ணைத் தவிர்த்து மற்ற எல்லாருமே திருமணம் ஆனவர்கள். எங்கள் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் எங்களைப் புரிந்துகொண்டு உதவுகிறார்கள்.

‘உங்களுக்கு இதெல்லாம் தேவையா? போய் வேறு ஏதாவது உருப்படும் வேலையைப் பாருங்க’ என்று தொடக்கத்தில் அலட்சியப்படுத்தியவர்கள் கூட இன்று எங்கள் பணியைப் பாராட்டுகிறார்கள். எங்களுக்குள் பிரச்சனைகள் வரும்போது அமர்ந்து பேசித் தீர்ப்போம். ஒரு குடும்பமாக நாங்கள் வேலை செய்வதால் இப்போது எங்கள் பத்திரிகை 40 ஆயிரம் பிரதிகள் வரை விற்கின்றது. இந்தப் பத்திரிகையை மற்ற நகரங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். மொழி கடந்து பெண்களை ஒன்றிணைக்கும் சக்தியாக மாற வேண்டும். தமிழிலும், கன்னடத்திலும் பத்திரிகையைக் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது...’’ கண்களில் கனவு பொங்கப் பேசுகிறார்கள் இந்தப் புரட்சிப் பெண்கள்.