சென்ரலும் எக்மோரும்அறிந்த இடம் அறியாத விஷயம்

- பேராச்சி கண்ணன்

கிராமத்தில் ஒரு சபதத்தை போட்டுவிட்டு வீறு கொண்டு வேலை தேடி சென்னைக்கு வருவார் நம் சினிமா ஹீரோ. அவர் சென்னை வந்ததற்கான அடையாளம் மணிக்கூண்டுடன் கூடிய சிகப்பு கலர் பில்டிங்தான். இப்படியாகத்தான் இன்றும் தமிழக மக்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அறிமுகம் கிடைத்து வருகிறது. ஆனால், ஒரு ஷாட்டுக்குள் சுருங்கக் கூடியதல்ல சென்ட்ரலின் கதை. பரபரக்கும் ஒரு காலை நேரம். சென்ட்ரல் வாசல். பஸ்களும், ப்ரீ பெய்டு டாக்சிகளும், ஆட்டோக்களும் சரசரவென வருவதும் பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளியேறுவதுமாக இருக்கின்றன.

ப்ரீ பெய்டுக்குள் வராத ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம், ‘சார் ஆட்டோ... ஆட்டோவா...’ எனக் கேட்டபடியே உலவுகின்றனர். சிலர் ஏரியாவைப் பொறுத்து பேரம் பேசுகின்றனர். கட்டணம் கூடுதல் என நினைக்கும் பயணிகள் பஸ் ஸ்டேண்டை நோக்கி நகர்கின்றனர். மெயின் பில்டிங்குக்குள் நுழைகிறோம். ரயில்வே பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு வளையமும் உடைமைகளைச் சரிபார்க்கும் ஸ்கேனர் இயந்திரமும் வரவேற்கிறது. இடப்பக்கமாக நிலைய இயக்குநர் அறை. அருகேயே பயணிகள் சேவை மையம்.

அதன் பிறகு ஒரு நீண்ட அறை. அதனுள் முந்நூறுக்கும் மேற்பட்ட சேர்கள். அத்தனையிலும் ஆட்கள். அவர்கள் எதிரே பெரிய திரை. அதில், ரயில்கள் எந்த நடைமேடைக்கு வரும், எந்த நடைமேடையிலிருந்து கிளம்பும் என்கிற தகவல்கள் கலர் கலராக மின்னுகின்றன. இதனைப் பார்த்தபடியே பரபரப்பாகக் காத்திருக்கின்றன பல்வேறு முகங்கள். பரபரப்பு இல்லாதவர்கள் தினசரிகளிலும், வாட்ஸ் அப்பிலும், யூ டியூப்பிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களுக்காகவே அமரும் இடத்திலேயே சார்ஜ் செய்ய ஏராளமான பிளக் பாயின்ட்டுகள். கூடவே, இலவச வைஃபை.

பல்வேறு மக்கள்... பல்வேறு மொழிகள்... பல்வேறு வயதினர்... எல்லோரையும் அரவணைத்துக் கொள்கிறது சென்ட்ரல். ‘‘பாய் சாப்... டிக்கெட் கவுண்டர் கஹாங் ஹை?’’ நம்மிடம் பதட்டமாகக் கேட்கிறார் ஒருவர். ‘‘சப் அர்பன் ஸ்டேஷன்... கோ திஸ் வே...’’ தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்கு வழி சொன்னோம். அவர் பின்னாலே ஒரு தெலுங்குப் பெண்மணி. ‘‘பாபு... பினாகினி எக்ஸ்பிரஸ் பிளாட்பார்ம் நம்பரூ ப்ளீஸ்...’’ ‘‘ஸீ ஸ்கிரீன்...’’ திரையிருக்கும் திசையைக் காட்டினோம். சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் அந்த எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பார்மில் இருந்து உடனே கிளம்ப இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்நேரம் ஒலிபெருக்கி அறிவிப்பு வேறு. பதட்டமான அந்தப் பெண்மணி அடித்துப் பிடித்து ஓடுகிறார். மொத்தம் 12 பிளாட்பார்ம்கள். இதில், ஒன்று முதல் ஆறு வரையிலான நடைமேடைகள் நடுப்பகுதியிலும், இதன் இடையே 2ஏ என இடைச்செருகலாக ஒரு நடைமேடையும் அமைத்துள்ளனர். இடதுபக்கம் மீதமுள்ள ஐந்து பிளாட்பார்ம்கள் வருகின்றன. இதில், ஏழாவது நடைமேடையில் இருந்து திருப்பதி வண்டியும், பத்தாவது நடைமேடையில் இருந்து சென்னை  கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸும், தினமும் கிளம்பும் என நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

மற்ற வண்டிகள் எந்த நடைமேடைக்கு வரும், எந்த நடைமேடையிலிருந்து கிளம்பும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. ஹைதராபாத், மங்களூர், திருவனந்தபுரம் என மூன்று எக்ஸ்பிரஸ்கள் வரிசையாக அடுத்தடுத்து வந்து சேர்கின்றன. இந்த வண்டிகள் வரும் முன்பே சிகப்பு சட்டை அணிந்த போர்ட்டர்கள் அங்கே குவிந்துவிடுகிறார்கள். குறிப்பாக, ஏசி, ரிசர்வேஷன் கோச்சுகளாகப் பார்த்து நிற்கிறார்கள். வண்டி நடைமேடைக்குள் வர வர அந்த இடத்தில் குதிகாலிட்டு அமர்ந்து அவரவருக்கான இடத்தை குறித்துக் கொள்கிறார்கள். வண்டி நின்ற அடுத்த நொடி உள்ளேறி உடைமைகளைத் தூக்க சம்மதம் கேட்கிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் சிகப்புச் சட்டைக்காரர்களுக்கு பச்சைக் கொடி காட்டியதும் பேரம் நடக்கிறது. இப்படியாக, ஐநூறு ரூபாய்க்கு பேரம் பேசி முடிவில் முந்நூற்று ஐம்பதுக்கு ஓகே சொன்னது ஒரு குடும்பம். இப்போது, ‘‘சைடு... சைடு...’’ என போர்ட்டர் போடும் சத்தத்திற்கு வழிவிடுகிறோம். இரண்டு தோளிலும் பைகள். தலையில் சூட்கேஸ். விறுவிறுவென நடக்கிறார்கள். தொடர்ந்து, ‘ஓரம்போ, ஓரம்போ’ என சரக்குகளை டிராலியில் இழுத்து வரும் தொழிலாளியின் குரலுக்கு விலகி நிற்கிறோம். கொஞ்ச நேரத்தில் வெறிச்சோடி விடுகிறது நடைமேடை.

பிறகு, துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் வேலையைத் தொடங்கிவிடுகின்றனர். இயந்திரத்தின் மூலம் நடைமேடையையும், தண்டவாளத்தையும் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். கடைசி கோச் வரை ஓர் எட்டு வைத்தோம். வழியில், பயணிகள் பயன்படுத்திய பெட்ஷீட்களை வெளுப்பதற்காக அடுக்கிக் கொண்டிருந்தனர் சில தொழிலாளர்கள். இவர்களைத் தொடர்ந்து சில பணியாளர்கள் ரயிலை சுத்தப்படுத்துகின்றனர். வண்டி உடனடியாக கிளம்புவதாக இருந்தால் இங்கேயே சுத்தப்படுத்தி விடுகிறார்கள்.

இரவு கிளம்ப வேண்டியது என்றால் பேசின்பிரிட்ஜ் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகிறது. ஃபேன், சேர், ஜன்னல், வாஷ்பேசின், நடக்கும் வழி, டாய்லெட் என ஒன்று விடாமல் கிளீன் செய்யப்படுகிறது. பிறகு, அங்கிருந்து சென்ட்ரல் வந்ததும் இங்குள்ள வால்வுமேன்கள் ஒவ்வொரு கோச்சிலும் தண்ணீர் நிரப்புகிறார்கள். வண்டி ரெடி! மீண்டும் பின்னோக்கி நகர்ந்து அந்தப்பக்கமாக உள்ள ஏழாம் நடைமேடை கட்டிடத்திற்குள் நுழைந்தோம். ‘

பிரியாணி கடையிலிருந்து ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையம் வரை சகலமும் இயங்கி வருகிறது. மகளிர் பயணிகள் சேவை மையம், தாய்மார் பாலூட்டும் அறை போன்றவையும் இருக்கின்றன. ஒரு நடைமேடையில் டில்லி செல்லத் தயாராக இருக்கிறது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்.  வண்டியில் ஏறுபவர்களைவிட வழியனுப்புபவர்களே அதிகம். பல அறிவுரைகளும், சில விசும்பல்களும் காதில் விழுகின்றன. கேட்டதை அசைபோட்டபடியே எழும்பூர் சென்றோம். மாலை ஆறு மணி. 109 வருட பழமையான எழும்பூர் ஸ்டேஷன் வாசல். சென்ட்ரலைப் போலவே பாதுகாப்புடன் வரவேற்கிறது.

டிக்கெட் கவுண்ட்டரை கடப்பதற்கு முன்பு இடதுபக்கமுள்ள பிளாட்பார்ம் கவுண்ட்டருக்குச் சென்றோம். அதைத்தாண்டி உள்ளே நுழையும் இன்னொரு பாதை. அருகேயே பெரிய திரை. சாலையில் இருந்து பார்த்தால் கூட எந்த ரயில்... எந்த நடைமேடை எனத் ெதளிவாகத் தெரிகிறது. பக்கத்தில் நடைமேைடக்குச் செல்லும் படிக்கட்டுகள், உணவுக் கடைகள், பார்சல் சர்வீஸ் பகுதியும் உள்ளன. தொடர்ந்து டாக்சிகளும், கார்களும், ஆட்டோக்களும் பயணிகளை இறக்கிவிட்டபடியே இருக்கின்றன. சாலைக்கு வெளியே மீட்டர் ஆட்டோ திட்டமும் இருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி என தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் வரிசையாக அடுத்தடுத்த நடைமேடைகளில் நிற்கின்றன.

கூட்டமாகப் படியேறுவதைப் பார்த்துக் கொண்டே ஒரு ரவுண்ட் அடித்தோம். இங்கே பெரும்பாலும் நம் தாய் மொழியே காதில் விழுகிறது. அனந்தபுரி நிற்கும் இடத்தில் சற்று மலையாளமும், கன்னியாகுமரி செல்லும் நடைமேடையில் கொஞ்சம் இந்தியும் கேட்க முடிகிறது. ரயில்கள், பயணிகள், போர்ட்டர்கள், சமோசா, சப்பாத்தி விற்பவர்கள் எனப் பலரின் சத்தத்திற்கு இடையிலும் ேகட்கிறது, ‘தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் விரைவு வண்டி இன்னும் சற்று நேரத்தில் 7ம் நடைமேடையிலிருந்து புறப்படத் தயாராக இருக்கிறது...’  என்கிற அறிவிப்பு.  மழைச்சாரலில் மெல்ல ஊர்கின்றன ரயில் பெட்டிகள்.

சென்ட்ரல்

* 1856ல் மெட்ராஸ் ரயில் கம்பெனி ராயபுரத்தில் முதல் ரயில்வே ஸ்டேஷனை உருவாக்கியது.
* மெட்ராஸ்  வியாசர்பாடி லைன் உருவாக்கத்தின்போது இரண்டாவது நிலையமாக சென்ட்ரல் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ராயபுரம் துறைமுக ஸ்டேஷனின் நெரிசல் குறையவும் இப்படியொரு ரயில் நிலையம் தேவையாக இருந்தது.
* 1873ல் சென்ட்ரல் நிலையம் கட்டப்பட்டது. இதனை ஜார்ஜ் ஹார்டிஞ்ச் எனும் ஆர்க்கிடெக்ட் கோதிக் கட்டிடக்கலையில் வடிவமைத்தார். சுற்றிலும் இருக்கும் ஐந்து டவர்களையும் நடுவிலுள்ள மணிக்கூண்டு டவரையும் ராபர்ட் சிஸ்ஹோம் கூடுதலாக டிசைன் செய்தார்.
* ஆரம்பத்தில் சென்ட்ரல் பகுதி போர்த்துக்கீசிய வணிகர் ஜான் பெரேரா என்பவரது தோட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்த இவர் 1660ல் மெட்ராஸில் செட்டிலாகி இருக்கிறார். பிறகு இந்தத் தோட்டம் சேவல் சண்டைக்கான மையமாகவும் திகழ்ந்துள்ளது. 1870ல் ரயில்வேயின் வசமானது.
* தினமும் சுமார் 47 ஜோடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, ைஹதராபாத், போபால், டில்லி, திருவனந்தபுரம் என இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் இங்கிருந்து ரயில் இருக்கிறது.
* நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் பயணிகள் வந்து போகிறார்கள்.
* சென்ட்ரலின் வருமானம் தோராயமாக ஒரு நாளைக்கு ரூ.2.5 கோடி.
* 9 ஏசி ஓய்வறைகளும், 2 நான் ஏசி அறைகளும் உள்ளன. தவிர, Dormitory எனப்படும் தங்குமிடங்கள் ஆண்களுக்கு 23ம், பெண்களுக்கு 5ம் உள்ளன.
* ஒரு தனியார் மெடிக்கல் கேர் சென்டரும், ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது.


எழும்பூர்
* 1908ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதனை இந்தோ  சாராசெனிக் கட்டிடப்பாணியில் ஹென்றி இர்வின் வடிவமைத்தார். 17 லட்சம் ரூபாய் செலவில் சாமிநாத பிள்ளை கட்டினார்.
* 2.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது இந்த ரயில் நிலையம். இதில் 1.7 ஏக்கர் நிலம் டாக்டர் பால் ஆண்டி என்பவரிடம் இருந்து பெறப்பட்டது. இவர், பிரிட்டிஷ் மெடிக்கல் டிகிரி பெற்ற முதல் இந்தியர். ஆரம்பத்தில் இந்த இடத்தை தர மறுத்தவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்து பெற்றிருக்கிறது சௌத் ரயில் கம்பெனி.
* இன்று 29 ஜோடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. 9 நடைமேைடகள் தவிர்த்து இரண்டு புறநகர் நடைமேடைகளும் உள்ளே இருக்கின்றன.
* சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் பயணிகள் பயன்
படுத்துகின்றனர்.
* நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறது.

தூய்மையாக்கம்

* சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களைச் சுத்தப்படுத்தும் பணியை சென்னை கோட்ட சுற்றுச்சூழல் மற்றும் தூய்மையாக்கம் பிரிவு செய்து வருகிறது.
* சென்ட்ரலை மூன்று மண்டலங்களாகப் பிரித்து துப்புரவுப் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 233 பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
* எழும்பூர் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுமார் இருநூறு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
* பயணிகள் ரயில் நிற்கும்போது கழிவறைகளைப் பயன்படுத்துவதால் தண்டவாளங்கள் அசுத்தம் அடைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு இப்போது ‘பயோ டாய்லெட்’ முைறயை அறிமுகப்படுத்தி வருகிறது தென்னக ரயில்வே.
* தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்திய சென்ட்ரல் தற்போது நீர் தட்டுப்பாட்டால் 10 லட்சம் லிட்டர் மட்டுமே பயன்படுத்துகிறது. இதனால் ரயிலைச் சுத்தப்படுத்தும் பணிக்கு, பயன்படுத்திய கழிவு
நீரையே மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறார்கள். இதற்கென ஒரு பிளான்ட் பேசின்பிரிட்ஜ் யார்டு அருகே அமைத்திருக்கிறார்கள்!.
 என்கிறார் இந்தப் பிரிவின் மேலாளர் ஆர்.பரிமளக்குமார்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்