கட்சிசாரா விவசாயிகள் சங்க தலைவரா இருக்கேன்!விவேகம் ஒளிப்பதிவாளர் வெற்றியின் இன்னொரு முகம்

- மை.பாரதிராஜா

‘விவேகம்’ படத்தில் அஜித்தையடுத்து செம ஸ்கோர் அள்ளியிருப்பவர் ஒளிப்பதிவாளர் வெற்றிதான். ‘வீரம்’, ‘வேதாளம்’ என அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் இயக்குநர் சிவாவுடன் கை கோர்த்து பயணித்தவர். ‘‘என்னோட முந்தைய படங்களோட ஒர்க் பார்த்து சக ஒளிப்பதிவாளர்கள் பாராட்டினதா, நிறைய நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா, ‘விவேக’த்துக்கு நேரடியாகவே என்னை ரொம்பவே பாராட்டி, கூச்சப்பட வச்சிட்டாங்க. இவ்வளவு பாராட்டுக்கள் கிடைக்கறது இதான் முதல் தடவை!’’ அழுத்தமான கை குலுக்கலுடன், நெகிழ்ந்து வரவேற்கிறார் வெற்றி.

‘‘இயக்குநர் சிவாவும் நானும் ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல ஒரே பேட்ச். அப்போதிலிருந்து சிவாவை தெரியும். அவர் தெலுங்கில் ஒளிப்பதிவாளரா கேரியரை தொடங்கினது, அவர் இயக்குநரானதுனு எல்லா கால கட்டத்திலும் அவரோடு ட்ராவல் பண்ணியிருக்கேன். இங்க அவர் ‘வீரம்’ பண்ணும்போது, ‘வெற்றி நீதான் கேமரா பண்றே’னு சொன்னார். அதுக்கு முன்னாடி தமிழ்ல நான் மிடில் பட்ஜெட் படங்கள்தான் பண்ணிட்டிருந்தேன். சிவா சொன்னதை என்னால நம்பவே முடியல.

‘அஜித் சார்கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா’னு நம்பாம கேட்டேன். சிவா சிரிச்சுட்டார். ‘உங்களுக்கு யார் கம்ஃபோர்டபிளா இருப்பாங்களோ அவங்களே இருக்கட்டும் சிவா...’னு அஜித் சார் சொன்னாராம். ‘வீரம்’ தொடங்க சில மாதங்களாச்சு. ‘சிவா, கேமராமேனை நேர்ல மீட் பண்ணணும், அவரை வரச் சொல்லுங்க’னு அஜித் சார் ஒருதடவை கூட சொல்லலை. ஷூட்டிங் முதல் நாள் அன்னிக்குதான் அவரையே சந்திச்சேன்...’’ பிரமிப்பு மாறாமல் பேசுகிறார் வெற்றி.

‘விவேகம்’ ஒளிப்பதிவில் ஒரு ஹாலிவுட் ஃபீல் இருக்கே..?


நன்றி! அஜித் சாரோட மூன்றாவது முறையா கூட்டணி அமைஞ்சிருக்கு. ஸோ, இதுவரை யாரும் தொடாத ஒரு ஜர்னரா இருக்கணும்னு டைரக்டரும், அஜித் சாரும் முடிவு பண்ணினாங்க. அப்படித்தான் spy thriller சப்ஜெக்ட் கிடைச்சது. ஹீரோ இன்டர்நேஷனல் ஏஜென்ட். அதனால அஜித் சாரும் அதுக்கேற்ப தன்னை ஃபிட்டா ரெடி பண்ண ஆரம்பிச்சார். டெக்னிகல் சைடுலேயும் ஸ்டிராங்கா இருக்கணும்னு நிறைய யோசிச்சோம். ஹாலிவுட் ஸ்டைல், மேக்கிங் கொடுக்கணும்னா, அதே குவாலிட்டி, லொகேஷன்ஸ் தேவை. நாம இங்கேயே ஷூட் பண்ணிட்டு, வெளிநாட்டுல எடுத்த மாதிரி மேட்ச் பண்ணியிருக்க முடியும்.

அப்படி ஏமாத்த வேணாம். ரியலாவே ஃபாரின் லொகேஷன்ஸ் போயிடலாம்னு முடிவு பண்ணினோம். தமிழ்ல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அவ்வளவா வந்ததில்லை. பல்கேரியாவுல ஹாலிவுட் மேக்கிங்குக்கான அத்தனை வசதிகளும் இருக்கு. அதுக்கு பக்கத்துலதான் செர்பியா, ஸ்லோவேனியா நாடுகள்.  ஸோ, பக்கத்து பக்கத்து நாடுகள் போயிட்டு வர, வேற வேற லொகேஷன்ஸ்னு அங்க ஷூட் பண்றதுக்கான வசதிகள் அதிகம் அமைஞ்சது. சேஸிங், ஃபைட்லயும் அங்கே உள்ள ஆட்கள் உதவினாங்க.

அஜித்தோட தொடர்ந்து மூணு படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கீங்க... என்ன சொல்றார்?


 ‘விவேகம்’ படம் முடிஞ்சதும் கடைசியில் வரும் behind the scenes பாத்திருப்பீங்க. அதுல அவர் மைனஸ் இருபது டிகிரி குளிர்ல வெடவெடத்து நடுங்குறதும், மரத்துல இருந்து குதிக்கும் போது அவருக்கு உடம்புல ரத்தம் சொட்டுறதும் ரியலா நடந்த விஷயம்தான். அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம நடிச்சு குடுத்தார். செர்பியா பனிமலைல அஞ்சு நாட்கள் எடுத்தோம். ‘சிவா நாம வேற லொகேஷன் மாத்திடலாம். ஊசி மாதிரி குளிர் இருக்குது’னு அவர் சொல்லியிருந்தார்னா, உடனே அந்த லொகேஷனை டைரக்டரும்மாத்தியிருப்பார்.

புரொடக்ஷன் சைடுலேயும் எதுவும் சொல்லியிருக்க மாட்டாங்க. ஆனா, அஜித் சார் அப்படி எதுவும் சொல்லலை. டைரக்டர் விரும்பினதை நடிச்சுக் கொடுத்தார். அதே மாதிரி அவர் ஒரு லாங் ஷாட்ல நடந்து வரணும். அந்த ஷாட்ல அவர்தான் வரணும்னு அவசியம் இல்ல. பனிமலைல ஷூட்னா, எல்லாருமே முழுக்க போர்த்தின காஸ்ட்யூம்லதான் இருப்பாங்க. வேற யாரையாவது வச்சு, ஷூட் பண்ணியிருந்தா கூட அதைக் கண்டுபிடிச்சிருக்க  முடியாது. ஆனா, அவர் அப்படி பண்ணலை.

அந்த லாங் ஷாட் சீன்லேயும் நடிச்சார்.  ‘இந்த சீனை ஃப்ரீஸ் பண்ணி பார்த்தால் கூட ரசிகனை ஏமாத்திட்டாங்கனு யாரும் நினைச்சிடக்கூடாது. நாம உண்மையா இருப்போம்’னு சொன்னார். அப்படி ஒரு டெடிகேஷன் அவர்கிட்ட இருக்குது. அவர் யூனிட்ல ஒர்க் பண்ற ஒவ்வொருத்தரையும், அவங்களுக்கே தெரியாம தன்னோட கேமராவில் படம் பிடிப்பார்னு எல்லாருக்குமே தெரியும். அப்படிப்பட்டவர் ‘வீரம்’, ‘வேதாளம்’ முடிஞ்சும் என்னை புகைப்படம் எடுக்காதது ஃபீலிங்கா இருந்தது.

அவர்கிட்டேயே அதை கேட்டுட்டேன். ‘வெற்றி உங்கள க்ளிக் பண்ண நானும் நிறைய டைம் முயற்சி பண்ணினேன். நீங்க ஒர்க் மோட்லேயே இருந்து டுறீங்க. நீங்க எப்போ சிரிப்பீங்கனு காத்திருந்தேன். அப்படி ஒரு மொமன்ட் எனக்கு அமையல. கடைசியா நீங்க ஸ்மைல் பண்ணாத போதுதான் ஷூட் பண்ண  முடிஞ்சது’னு ஒரு போட்டோ எடுத்து பிரிண்ட் பண்ணி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்.  

அஜித் அடுத்தடுத்து சிவாவை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

சிவா அசுர உழைப்பாளி. தூக்கமே இல்லாம கூட தீயா வேல செய்வார். தெளிவான திட்டமிடல் இருக்கும். ஒரு லொகேஷன் வந்துட்டார்னா, அன்னிக்கு எடுக்க வேண்டிய அத்தனை ஷாட்டையும் முடிப்பார். அந்தளவுக்கு அவர் மைண்ட்ல பிக்சர் ஓடும். சீன் ஆர்டர்ல கரெக்ட்டா இருப்பார். டெக்னிகலாவும் கில்லாடி. மத்தவங்ககிட்ட வேலை வாங்கற ஸ்டைலும் அழகா இருக்கும். சிவாகிட்ட இதெல்லாம் எனக்கு பிடிச்ச விஷயங்கள். இதனால கூட அஜித் சார் தொடர்ந்து அவரோட பணி புரியலாம்.

நீங்க விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்...

ஆமா. பல்லடம் பக்கம் உள்ள நாதகவுண்டம் பாளையம்லதான் பிறந்தேன். முழுப்பெயர் வெற்றிவேல் பழனிசாமி. எங்க அப்பா பழனிசாமி கோவை கல்லூரில ஆங்கிலப் பேராசிரியரா பணியாற்றியவர். அப்புறம் கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவரா, சட்டமன்ற உறுப்பினரா சேவை செய்தார். எனக்கு சின்ன வயசுலேந்தே சினிமா மேல ஆர்வம். ஃபிலிம் இன்ஸ்ட்டிட்டியூட் பத்தி தெரிஞ்சதும், அதுல சேர நினைச்சேன். டிஎஃப்டி முடிச்சேன். ஒளிப்பதிவாளர் சரவணன் சார்கிட்ட சில படங்கள் ஒர்க் பண்ணினேன்.

ஒளிப்பதிவாளரா ‘தெனாவட்டு’ல அறிமுகமானேன். தெலுங்கிலும் அஞ்சு படங்கள் பண்ணிட்டேன். அப்பாவோட மறைவுக்குப் பிறகு அங்க விவசாயிகள் சங்க தலைவராகவும், ஏர்முனை இளைஞரணி தலைவராகவும் இருக்கேன். விவசாயிகளின் நலன் சார்ந்த விஷயங்கள்ல இளைஞர்களை ஒருங்கிணைச்சு அக்கறையான செயல்கள்ல கவனம் செலுத்திட்டிருக்கேன்.