கவிதை வனம்காலத்தில்


பெயரிட்டழைத்து தலைகுனிந்து தேடிய பின்
நீ தோளுக்குமேலே உயர்ந்து நிற்பது,
ஆடையகத்தில் சிறுமியுடையைத் தேர்ந்த பின்
நீ என் ஆடையை அணிந்து சென்றது,
அம்மாவென்ற மழலைக்
குரலொன்றில் திரும்பியபின்
நீ கல்லூரிக்குச் சென்றிருப்பது,
குழந்தைப்பாடல் ஒலிக்கச் செய்தபின்
நீ எட் ஷீரனை விரும்பிக் கேட்பது,
பூனைக்குட்டியின் காணொளியைக்
காண அழைத்தபின்
நீ டிராகனுடன்
வேற்றுக்கிரகம் பயணித்திருப்பது,
இப்படியே கரடிபொம்மையை
பரிசளித்த பின்,
சாக்லேட்டை பகிர்ந்துகொள்ள
விரும்பிய பின்,
உறக்கத்தில் அணைத்துக்கொள்ள
துளாவிய பின்
என வெவ்வேறு சமயங்களில்
சற்றே தாமதமாகவேனும் நினைவு வருகிறது
சேயாய் நீ பிறந்த அதே நாளில்
தாயாய்ப் பிறந்த எனைவிட்டு
கால மழையில் நீ மட்டும் வளர்ந்திருப்பது
எத்தனை முயற்சித்தும் நினைவு வருகிறதில்லை
அது எந்தத் துளியில் நிகழ்ந்ததென்பது.

 பா.வனிதா ரெஜி