ஊஞ்சல் தேனீர்யுகபாரதி - 41

எழுத்தாளர்களும் ஓவியர்களும் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவைகளை அண்ணன் வீர.சந்தானம் அவ்வப்போது உணர்த்திக்கொண்டிருந்தார். கவிதை நூல்களுக்கோ இலக்கிய பத்திரிகைகளுக்கோ அவர் வரைந்துகொடுக்கும் ஓவியங்களுக்கு விலையையோ சன்மானத்தையோ எதிர்பார்த்ததில்லை. நவீன இலக்கியப் படைப்பாளர்கள் பலருக்கும் அவர் பெரும் உந்துவிசையாக இருந்திருக்கிறார். அட்டை வடிவமைப்பில் கவனத்தை ஏற்படுத்தி, நூலின் தகுதியைக் கூட்டிக்காட்டியதில் அவருடைய ஓவியங்களுக்கு முக்கிய பங்குண்டு.

அப்படித்தான் ஆரம்பகால என்னுடைய கவிதை நூல்கள் அரசியல் தளத்திலும் விமர்சனத் தளத்திலும் வெகுவான கவனத்தை ஈர்த்தன. என் முதல் இரண்டு தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த அரசியல் கவிதைகளை ஆவேசத்தோடு பல மேடைகளில் சொல்லிக்காட்டி உற்சாகப்படுத்தியிருக்கிறார். கவிதைகளில் வெளிப்பட்ட அரசியலை வண்ணங்களின் வாயிலாகவும் கோடுகளின் வாயிலாகவும் உரக்கப் பேசுவதற்கு அவர் ஓவியங்கள் உதவின. தஞ்சை மாவட்டத்து நிலப்பரப்பை அவர் நன்கு உள்வாங்கியவர் என்பதால், வண்டல் மண் அரசியலை பொதுவெளியில் அவரால் தயக்கமில்லாமல் சொல்ல முடிந்தது.

ஒருபக்கம் திராவிட இயக்கமும் இன்னொரு பக்கம் இடதுசாரி இயக்கங்களும் வேரூன்றி கிளைபரப்பி நின்றபோதும், வேளாண்மையை மீட்டெடுக்க முடியாமல் போன துக்கத்தை அவர் ஓவியங்கள்  வெளிப்படுத்தின. பேராசிரியரும் கவிஞருமான த.பழமலய், அண்ணன் வீர.சந்தானத்தின் ஓவியக்கூடத்தில் அமர்ந்து எழுதிய ‘குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்’ என்னும் கவிதை நூல் குறிப்பிடப்பட வேண்டியது. அந்நூலுக்கு அண்ணன் வரைந்திருந்த ஓவியங்கள் அசாத்திய பொலிவைச் சேர்த்திருந்தது.

அதற்கு முன் கவிஞர் பழமலய் எழுதிய ‘சனங்களின் கதை’ என்னும் கவிதை நூல், அதுவரை இருந்த கவிதை மரபுகளையெல்லாம் புரட்டிப்போட்டது. வட்டாரச் சொற்களை மிகுதியாகக் கையாண்ட அந்நூல் வெளிவந்த பிறகுதான், எளிய சொற்களின் வழியே கவிதை எழுதக்கூடிய பெரும் பட்டாளம் ஒன்று உருவானது. “பாடுகளைப் பாடுதல்” என்னும் நிலையில் என்போன்றோர்க்கு பழமலய்யின் கவிதைகளே மாதிரிகளை வழங்கின. கலைகள் முழுவதுமே மக்களுக்கானவை என்னும் புரிதலிலிருந்த கவிஞர் பழமலய்யும், அண்ணன் வீர.சந்தானமும் எக்கலையாயினும் அதை மக்கள் மொழியிலேயே வெளிப்படுத்த முனைந்தது முக்கியமான காலகட்டம்.

திராவிட இயக்கத்தின் பின்புலத்தில் வளர்ந்திருந்தாலும் அவர்கள் இருவருமே தமிழ்த்தேசிய அடையாளத்தை கலைகளில் கட்டியெழுப்ப விரும்பினார்கள் குறிப்பாக, அண்ணன் வீர. சந்தானம் அவ்வரசியலில் சாதியத்தைத் தூக்கிப்பிடிக்காமல் பொதுவுடமைச் சார்பாளராக இறுதிவரை இருந்தார். இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்பது தான் அவர் கொண்டிருந்த அல்லது பற்றியிருந்த கொள்கை என நான் புரிந்துகொள்கிறேன். மிகச் சமீபத்தில் வெளியான என்னுடைய நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில், அவர் நம்பிக்கையோடு பேசிய உரையை நான் என் வாழ்நாள் பெருமிதங்களில் ஒன்றாகக் கருத இடமிருக்கிறது.

“என் தம்பிகள் ஒருபோதும் தோற்கமாட்டார்கள். தோற்பவர்களை நான் தம்பிகளாகப் பெறவில்லை” என்று கணீர் குரலில் அவர் பேசிய பேச்சைக் கேட்டவர்கள், அடுத்த சில வாரங்களில் அவர் இல்லாமல் போவார் என எண்ணியிருக்க மாட்டார்கள். அவ்விழாவில் ஐந்து தேசிய விருதுகளை வாங்கிய இயக்குநர் பாலுமகேந்திரா, அவ்விருதுகளை பாதுகாக்காமல் தவறவிட்ட துயரத்தை பகிர்ந்துகொண்டார். விருதுகளை வாங்குவதைவிட அதைக் காப்பது பெரிது என்று கூறிய அவர், “கலைகளில் ஜெயிப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள். நாம் கலையிலும் தோற்கக்கூடாது, வாழ்க்கையிலும் தோற்கக்கூடாது” என்றபோது அனுபவ வார்த்தைகளின் திரட்சியில் அரங்கம் உறைந்திருந்தது.

பெரிய பின்புலமோ வசதி வாய்ப்புகளோ இல்லாமல் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்த எனக்கு, அவர் அவ்வப்போது கொடுத்துவந்த நம்பிக்கைக்கு அளவில்லை. சோர்ந்துபோன வேளைகளில் அவரிடமிருந்து வரும் ஒரு தொலைபேசி, வாழ்வதற்கான கச்சாப்பொருளை சொற்களின் வழியே வழங்கிவிடும். எழுந்து நிற்பதற்கான சக்தியை யார் வேண்டுமானாலும் தந்துவிடலாம். ஆனால், எழுந்து நிற்பதற்கான அரசியலை அவர் போன்றவர்களால்தான் தரமுடியும்.

அண்ணன் வீர.சந்தானம் ஓவியத்தின் மூலம் தன்னுடைய அரசியலை நிறுவிய அதே சமயத்தில் அரசியல் மேடைகளை ஒரு கலைஞன் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கற்பித்திருக்கிறார். ஒருமுறை ஓர் அரசு பங்களாவில் நடந்த ஓவியப்பட்டறையில் அவருடைய ஓவியங்களும் பங்கெடுத்தன. அப்போது எதிர்பாராதவிதமாக அல்ல, எதிர்பார்த்தவிதமாக ஓர் அமைச்சரின் வருகையால் அவ்வோவியங்கள் அங்கிருந்து அகற்றப்படுகின்றன. ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரத்திலிருப்பவர்களும் கலைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்து அவரால் சும்மா இருக்க முடியவில்லை.

தன்னுடைய எதிர்வினையை வார்த்தையாக வெளிப்படுத்தாமல், ‘உடைந்து நொறுங்கும் நாற்காலிகள்’ என்னும் தலைப்பில் தொடர் ஓவியங்களைத் தீட்டி அதனைக் காட்சிப்படுத்தினார். அதிகாரத்திற்கு எதிராக முஷ்டியை உயர்த்திய அவருடைய ஓவியங்கள் கலகக் குரலுடையன. முற்று முழுக்க சிதிலுமடைந்த நாற்காலிகளை வெவ்வேறு வகைகளில் வரைந்து, நாற்காலிகளையும் அதில் அமர்ந்திருப்பவர்களையும் கோபமடைய வைத்திருக்கிறார். பதவியிலிருப்பவர்கள் கலைஞர்களை கெளரவிக்கத் தவறுகிற போதெல்லாம் அவருடைய தூரிகைக்குக் கோபம் வந்து விடும்.

அதேபோன்று வடக்கிலும் விவான் சுந்திரம் என்னும் ஓவியர், நாற்காலி வரிசையை வரைந்து அதிகார பீடங்களை அசைக்க முயன்ற தகவலை கலை விமர்சகர் இந்திரன், தம்முடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். பேசக்கூடிய ஓவியங்களையே அவர் விரும்பினார். கவிஞர்.காசி ஆனந்தன், “மோனாலிசா ஓவியம் தனக்குப் புரியவில்லை. ஓவியராக உங்களுக்கு ஏதாவது புரிகிறதா” என்றபோது, “எனக்கும் அந்த ஓவியம் என்ன சொல்ல வருகிறது என்பது புரியவில்லை” என்றுதான் சொல்லியிருக்கிறார். விசேஷ காரணங்களையும் வியக்கத்தக்க விவரங்களையும் அவரால் தந்திருக்க முடியும்.

என்றாலும், எந்தப் பாசாங்குமில்லாமல் மனதில் பட்டதை அப்படியே ஒப்புக்கொள்ளும் தன்மையே அவரிடம் இருந்திருக்கிறது. கலைகள் மக்களுக்கு ஏன் புரியவேண்டும்? கலா ரசிகர்களின் பசிக்குத் தீனியானால் போதாதா? என்றெல்லாம் கேட்கக்கூடிய நிலையில், மக்களுக்குப் புரியும் மொழியில் ஆக்கப்படுவதே கலை என்னும் உறுதியைக் கொண்டிருந்தவர் அவர். தமிழக சூழலில் அண்ணன் வீர. சந்தானம்  ஒருவர்தான் உலகம் முழுக்க நிலவிவந்த அரசியல் மாற்றங்களையும் எழுச்சிகளையும் ஓவியக் கித்தானில் சொல்ல விழைந்தவர். மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில் உயர் பதவியில் இருந்த போதும்கூட, அவர் எண்ணங்களும் செயல்பாடுகளும் மக்களை நோக்கியே அமைந்திருந்தன.

துறைசார்ந்த பங்களிப்பில் இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். பல்வேறு அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளுக்கு அவர் பந்தாடப்பட்டிருக்கிறார். ஈழ விடுதலையை முன்வைத்து அவர் ஆற்றிவந்த காரியங்களுக்காக அரசு அவருடைய பெயரை கண் காணிப்புப் பட்டியலில் வைத்திருந்தது. பணி நிமித்தம் தன் இரண்டு மகள்களிடமிருந்தும் மனைவியிடமிருந்தும் பிரிய நேர்ந்திருக்கிறது. என்றாலும், மக்களிடமிருந்து அவர் ஒருநாளும் பிரிந்ததில்லை. ஓவியத்தின் மீது தான் கொண்டிருந்த தீவிரமான ஈடுபாட்டால், தன் மனைவிக்கு பல ஆண்டுகளாகத் தனிமையைப் பரிசளிக்க நேர்ந்ததை கவலையோடும் விரக்தியோடும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனைவிக்கு மனநிலை பிறழ்ந்ததே தன்னால்தானென்ற குற்ற உணர்வை ஒளிவு மறைவில்லாமல் தன்னைப் பற்றிய ஆவணப் படத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார். பேரக்குழந்தைகளைக் கொஞ்சுவதுபோலவே குழந்தையான என் மனைவியையும் இப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கிறேன் எனச் சொல்லி, ஆறாகப் பெருக்கெடுக்கும் கண்களை அலட்சியத்துடன் துடைத்திருக்கிறார். மக்களை நேசிக்கக்கூடிய கலைஞனுக்கு இப்படியான  இக்கட்டுகளும் இடர்பாடுகளும் வேதனைக்குப் பதிலாக வேகத்தையே கொடுக்கின்றன. முன்னிலும் தீவிரமாகச் செயல்படும் மூர்க்கத்தையும் தாக்கத்தையும் அத்தகைய சூழல்கள் அமைத்துத் தருகின்றன.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஈழப் போராட்டத்தின் விதைகள் தமிழக மண்ணிலும் தூவப்பட்டன. மதம், கட்சி, சாதிப் பாகுபாடின்றி தமிழ்ச் சமூகமே ஈழத்துக்கான ஆதரவு நிலையை அப்போது எடுத்திருந்தது. அப்பாவித் தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டது போதாதென்று, இந்தியாவும் அமைதிப்படை என்னும் பேரால் தமிழர்களைக் கொன்று குவித்தது. இந்திராகாந்திக்குப் பிறகு இனப்படுகொலை என்னும் சொல்லைப் பயன்படுத்திய அண்ணன் வீர.சந்தானம், சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான ஓவியங்களைத் தீட்டிக் காட்சிப்படுத்தினார்.

அதன் விளைவாக வெவ்வேறு குழுக்களாக தமிழகத்தில் உலவிவந்த ஈழ விடுதலை அமைப்புகள் பலவற்றுடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே “முகில்களின் மீது நெருப்பு” என்னும் ஓவிய நூலும் வெளிவந்தது. கவிஞர் சேரனின் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்த அந்த ஓவிய நூல், அரசியல் தளத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகக் காத்திரமான விவாதத்தைத் தொடங்கிவைத்தது. இராசகிளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்நூலே தமிழில் வெளிவந்த முதல் ஓவிய நூல்.

ஈழத்தில் விடுதலைப் போராளி குட்டிமணியின் கண்கள் சிங்களப் படையினரால் பிடுங்கி எறியப்பட்டதைக் கண்டித்து அண்ணன் வீர.சந்தானம் வரைந்த ஓவியங்கள், இனப்படுகொலையின் கோரத் தாண்டவத்தை இப்போதும் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. மொழியால் மட்டுமே ஓர் இனம் மூச்சுவிடும் என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார். எனவேதான், தன் ஓவியங்களை அவர் தமிழ்பேசும் ஓவியங்களாகத் தகவமைத்தார். அவருடைய ஓவியங்களில் மிகுதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் முகங்களே வெளிப்பட்டன. புனரமைக்கப்படாத ஓர் ஆதி இனத்தின் அவலக் குரலை அவருடைய கோடுகள் பிரதிபலித்தன.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்