வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



- பா.ராகவன்

பனீர், பாதாம், காய்கறிகள், வெண்ணெய், சீஸ், நெய், தேங்காய் எண்ணெய். இன்னும் என்ன? ஒரு ராஜ செட்டப் தயாராகிவிட்டதல்லவா? பேலியோவைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.  உலகிலுள்ள சகல ஜீவாத்மாக்களைக் காட்டிலும் எம்பெருமான் எனக்கு சில சொகுசு சௌகரியங்களைக் கொடுத்திருக்கிறான். அதிலொன்று எனக்கு வாய்த்த குடும்ப இஸ்திரி. இதை இங்கே குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. ரொம்ப ஆர்வமாக பேலியோ ஆரம்பிக்கும் பலபேர் எண்ணி ஏழெட்டு நாளில் ஆட்டத்துக்கு வரலை என்று ஒதுங்கிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். 

எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் ஒருவருக்கு நீரிழிவு அதன் உச்சத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. மாத்திரையெல்லாம் போதாமல், இருவேளை இன்சுலின் ஊசி தரத்து நீரிழிவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படியாவது அதிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்று விரும்பி வந்து, பேலியோவைப் பற்றித் தெரிந்துகொண்டு தமது உணவு முறையை மாற்றிக்கொண்டு சாதகத்தை ஆரம்பித்தார். நாலைந்து நாளில் ரிசல்ட்டும் அவருக்குத் தெரிய ஆரம்பித்தது. ‘நம்பவே முடியல சார். ஃபாஸ்டிங், பிபி ரெண்டுமே கணிசமா குறைஞ்சிருக்கு சார்’ என்று சந்தோஷமாகச் சொல்லவும் செய்தார்.

ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு ஆள் எங்கே போனார் என்றே தெரியவில்லை. விசாரித்ததில் எனக்குக் கிடைத்த தகவல், அவரது மனைவி இந்த உணவைச் சமைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார் என்பதுதான். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. ஏன், என்ன ஆயிற்று அவருக்கு? இத்தனைக்கும் நண்பருடன் பேசும்போது அவரது மனைவியையும் அருகே வைத்துக்கொண்டுதான் பேசினேன். அவர் என்ன சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடவேண்டும், எதெல்லாம் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடுவதால் என்ன ரிசல்ட் வரும், ஏன் அது வருகிறது

 ஒன்று விடாமல் தெளிவாக எடுத்துச் சொல்லித்தான் அனுப்பியிருந்தேன். ஆனாலும் ஏன் அவர் சமைத்துத்தர மறுத்துவிட்டார்?  காரணம் இதுதான். அந்தப் பெண்மணி வழக்கமாகச் செல்லும் மருத்துவரிடம் போய் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். கணவருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்திருக்கிறது. தினசரி ரத்தப் பரிசோதனை செய்து பார்க்கும்போது இது உறுதியாகத் தெரிகிறது. இந்த ரீதியில் எப்போது அவர் மாத்திரையை முற்றிலுமாக நிறுத்த முடியும் என்று கேட்டிருக்கிறார். கொஞ்சம் யோசித்துவிட்டு டாக்டர் சொன்ன பதில்: ‘சர்க்கரை அளவு நார்மலாகிவிடும்தான்.

ஆனால் இத்தனைக் கொழுப்பு சாப்பிட்டால் உங்கள் கணவர் கூடிய சீக்கிரம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிடுவார். அவர் சர்க்கரையோடு இருப்பது பரவாயில்லையா? அல்லது, சர்க்கரை வியாதி தீர்ந்து, இறந்தால் பரவாயில்லையா?’ மருத்துவம் ஒரு மகத்தான சேவை மட்டுமல்ல. தன்னிகரற்ற பிசினஸும்கூட. வாழ்நாள் முழுதும் ஒரு மனிதன் மருந்து மாத்திரைகளுக்கு மாதாந்திரக் கப்பம் கட்டுவதென்றால் எத்தனை லட்சம் கட்ட வேண்டியிருக்கும்! ஒரு தேசத்துக்கு சுமார் பத்து கோடிப் பேர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘‘

உலகம் முழுதும் எத்தனை கோடிப் பேர்! எத்தனை பில்லியன் வியாபாரம்! சட்டென்று மருந்துகளற்ற ஒரு பேருலகம் உருவாகிவிடுமென்றால் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்காதா! எப்படி இதை ஏற்பார்கள்? ‘இதையும் நான் அந்தப் பெண்மணியிடம் சொல்லித்தான் அனுப்பினேன். ஆனாலும் அவர் டாக்டரைத் தன் தரப்பில் வைத்துக்கொண்டு என்னையும் அவரது கணவரையும் எதிர்த்தரப்பில் நிறுத்திவிட்டார். முடியாதென்றால் முடியாது. சமைக்க மாட்டேன்! அதற்குமேல் என்ன பேச முடியும்? நண்பர் மீண்டும் இன்சுலின் துணையுடன் வாழத் தொடங்கினார்.

எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால், இம்மாதிரி சிக்கல் ஏதும் என் விஷயத்தில் வரவில்லை. காரணம், என்னை பேலியோவில் பிடித்துத் தள்ளியதே என்னுடைய மனைவிதான்.  பேலியோவில் HDL என்கிற நல்ல கொலஸ்டிரால் ஏறும். LDL என்கிற புரத அணுவின் அளவு பெரிதாகும். அதனால் அது இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களுக்குள் புகுந்து அடைத்துக்கொள்ளும் வழக்கம் அறவே ஒழியும். பேக்கரி உணவுப் பொருள்களோ, கார்போஹைடிரேட் உள்ள வேறெந்த விதமான உணவோ, எண்ணெய்களோ இனி நம் வாழ்வில் இல்லை என்பதால் டிரை கிளிசிரைட் கணிசமாகக் குறையும். ‘‘

ஹார்ட் அட்டாக்கில் இருந்து வெகு தொலைவு தள்ளி நிற்போம் என்பதை முதல் முதலில் எனக்கு எடுத்துக் காட்டியதே என் மனைவிதான். எனவே, நான் பேலியோ தொடங்கிய அதே நாளில் அவரும் ஆரம்பித்தார். காலை பாதாம். மதியம் காய்கறிகளுடன் வெண்ணெய், தயிர். இரவுக்கு பனீர். பதினொரு மணிக்கு எலுமிச்சை ஜூஸ். கூடவே ஒரு சீஸ் க்யூப். மாலைப் பசிக்கு கொய்யாக்காய். நாளொன்றுக்கு நாலு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர். தினசரி ஒரு மணி நேர நடை. விட்டமின்டிக்காக வெயிலில் நிற்கச் சொல்லியிருந்தார்கள். அது மட்டும் கட்டுப்படியாகவில்லை.

பகல் பதினொண்ணே முக்காலுக்கு நான் அரை நிர்வாணமாக மொட்டை மாடிக்குப் போய் நின்றால், துணி உலர்த்த வரும் நாரீமணிகளெல்லாம் துவந்த யுத்தத்துக்கு வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அதை மட்டும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். மற்றபடி முழுமையான பேலியோ. ஒரு நாள். இரண்டாம் நாள். மூன்றாம் நாள். எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. உற்சாகமாகவே இருந்தேன். சுறுசுறுப்பாக இருந்தேன். நாலாம் நாள் எடை பார்த்தபோது என்னுடைய 111 கிலோ 108 கிலோ ஆகியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தேன். ஒருவேளை எடை மெஷின் பழுதாகியிருக்குமோ?

அதைத் தூக்கி, குலுக்கி, உலுக்கி என்னென்னமோ செய்து மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தபோதும் அதையே காட்டியது. 108. ஆண்டவா, நாலு நாளில் மூன்று கிலோவா! என் மனைவியும் எடை பார்த்தார். ஆனால் அவருக்குக் குறைந்திருக்கவில்லை. அதெல்லாம் பத்து நாளில் இறங்க ஆரம்பித்துவிடும், அவசரப்படாதே என்றேன் ஆறுதலாக. [பெண்களுக்கு எடைக்குறைப்பு இதில் மிகத் தாமதமாகத்தான் நிகழும் என்பதைப் பிற்பாடு அறிந்தேன். இதைப் பற்றி விரிவாக எழுதவேண்டும். அதுவும் பிற்பாடு.]

எடை குறையாமல் இருந்தது ஒரு பிரச்னையல்ல. ஆனால் சட்டென்று அவரது செயல்பாடுகளில், நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. மிகவும் சோர்வாக உணர்வதாகச் சொன்னார். தலை சுற்றல் இருந்தது. வயிற்றில் ஒரு மிக்சி ஓடுவதுபோலப் புரட்டிப் போடுவதாகச் சொன்னார். வேலை செய்ய முடியவில்லை என்றார். கண் சொருகி, எப்போதும் மப்பாகத் தெரிந்தார். இரவு படுத்தால் தூக்கம் வருவதில்லை. மாறாக இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. இதயத் துடிப்பு காதில் கேட்கிறது என்றார்.

பகீரென்றாகிவிட்டது எனக்கு. அதைவிட பயங்கரம், மிகக் கடுமையான மலச்சிக்கல் பிரச்னை. உயிரே போய்விடும் அளவுக்குத் துடித்துத் துடித்துத் தணிய ஆரம்பித்தார். கலவரமாகிப் போனேன். பேலியோ கிடக்கிறது. பெண்டாட்டிக்கு ஒன்றென்றால் உத்தம புருஷன் உள்ளம் தாங்குமா? என்ன நடக்கிறது அவருக்கு? எதனால் இந்த விபரீதங்கள்? என்ன செய்தால் சரியாகும்?  டாக்டர் ப்ரூனோவை போனில் கூப்பிட்டேன்.
 

(தொடரும்)

பேலியோ கிச்சன் பனீர் இட்லி

அரிசி, பருப்பு மாவுக்கு பதில் பனீர். இதை முதலில் உதிர்த்துக்கொள்ளுங்கள். இரண்டு பிடி தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் ஒரு ஓட்டு.. ஒரு கரண்டி தயிர் சேர்த்துக் கலந்து உப்பு போட்டால் தீர்ந்தது விஷயம். ஆவியில் வேக வைத்து எடுத்தால் பனீர் இட்லி தயார். தேங்காய் சட்னியுடன் உண்ணப் பிரமாதமாக இருக்கும். இதையே பதம் மாற்றி பனீர் தோசையாகவும் வார்க்கலாம். என்ன கொஞ்சம் பார்க்கக் கண்ணராவியாக இருக்குமே தவிர, ருசி ஜோராக இருக்கும்!