ஆபாசப் படத்தை எடுத்தவர்களாக எங்களை சித்தரிக்கிறார்கள்!குமுறும் மலையாள இயக்குநர்கள்

- ஷாலினி நியூட்டன்

ஸ்காண்டல் வீடியோக்களும் நீலப்பட வீடியோக்களும் மழையாகப் பொழியும் இந்த இன்டர்நெட் உலகில் சமீபமாக ஒரு திரைப்படத்தின் காட்சிகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அரைகுறை ஆடைகளும் அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகளுமாக அதிரடிக்கும் இந்த வீடியோ கிளிப்ஸ் ‘த பெயின்டட் ஹவுஸ்’ (The Painted House) மலையாளத் திரைப்படத்தின் காட்சிகள். ‘‘கவிதையாய் ஒரு படம் எடுக்க முயன்று இன்று கலங்கி நிற்கிறோம்.

நாங்க எடுத்தது ஆபாசப் படம் கிடையாது. இது ஒரு கலைத்தன்மை நிறைந்த இயல்பான சினிமா படம்...’’ என்று குமுறுகிறார்கள் இந்தப் படத்தின் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுமான சந்தோஷ் பாபுசேனன் மற்றும் சதீஷ் பாபுசேனன் சகோதரர்கள். ‘‘நாங்கள் இருவருமே சினிமா காதலர்கள். 1980 முதலே தேடித் தேடி சினிமா பார்ப்போம். மும்பையின் இசை ஆல்பங்கள், கமர்ஷியல் குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளர்களாக வேலை செய்தோம். நான் மும்பை IITயில் M.Des படித்தேன். என் அண்ணன் சினிமா படிப்பில் Ph.D படித்தார்.

எங்களுடைய 12 வருட தவத்தின் பலன்தான் இந்தப் படம். எந்த வீட்டையும் அதன் மேல்புறத்தைக் கொண்டு எடை போட முடியாது அல்லவா? அப்படித்தான் மனிதர்களும். வெளிப்புறத்தில் நமக்குத் தெரியும் மனிதர்களைக் கொண்டு அவர்களின் அகத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இதுதான் படத்தின் லைன். நேஹா மஹாஜன் பூனே பெண். நல்ல நடிகை. இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்தார்.

‘ஏன் ஆடையில்லா காட்சி, ஏன் படுக்கையறைக் காட்சி’ என்று எதுவுமே கேட்கவில்லை. இந்தக் கதைக்கு உயிர் கொடுத்ததே அவர்தான். எல்லாம் நல்லபடியாகச் சென்றது. ஆனால், நாங்க நினைத்தது ஒன்று; நடந்தது வேறொன்று. இந்தப் படத்தை உலக அளவில் பல திரையிடல் நிகழ்வுகளுக்கும், சர்வதேசப் போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கனவு கண்டோம். சில மொழிகளில் டப்பிங்கும் செய்தோம். அப்படி டப்பிங் செய்யும்போதுதான் ஒரு குழு படத்தை இணையத்தில் லீக் செய்துவிட்டார்கள்.

கொடுமை என்னவென்றால் நேஹாவின் ஆடையில்லா காட்சிகளை மட்டும் ஏதோ ஆபாச வீடியோ போல ஏற்றிவிட்டார்கள். அது, இணையதளம், வாட்ஸ் அப் எனப் பரவ ஆரம்பித்துவிட்டது. நேஹா படம் முடிந்து ஊருக்குப் போன போது கடும் எதிர்ப்பு. மனது உடைந்துவிட்டார். கூகுள் சர்வரில் ‘நேஹா MMS’ என்ற சொல் ட்ரெண்டாகியிருக்கிறது. இப்படியாக எங்கள் வண்ணம் பூசப்பட்ட வீடு என்ற படத்துக்கு நீல வண்ணம் பூசி, எங்கள் கனவுகளைச் சிதைத்து விட்டார்கள்.

இதைவிட அடுத்த சோதனை சென்சார் போர்டுதான். படத்தைப் பார்த்துவிட்டு ‘ஆடையில்லா காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டு வாங்க சான்றிதழ் தருகிறோம்’ என்று கூலாகச் சொன்னார்கள். அவற்றை நீக்கினால் படத்தின் அழகியலே போய்விடும். வேற வழியே இல்லாமல்தான் வழக்குத் தொடுத்தோம். ஒரு பக்கம் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தப் படத்தைப் பற்றிய தொடர்ச்சியான தவறான சித்தரிப்புகள். தயாரிப்பாளர்களாக எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்கூட பிரச்னை இல்லை.

ஆனால், இந்தப் படத்தை உருவாக்கிய கலைஞர்களான எங்களுக்கு இது கொடுத்திருக்கும் வலியும், மன உளைச்சலும் மோசமானது. வேறு யாருக்கும் இப்படி நேரவே கூடாது. ஏதோ நாங்கள் கமர்ஷியலுக்காக ஆபாசப் படம் எடுத்த மாதிரி ஒரு பிம்பம் உருவாக ஆரம்பித்துவிட்டது. ஆபாசப் படம் எடுப்பவர்கள் சென்சார் போர்டு பக்கமே வர மாட்டார்கள். இதை ஏன் சென்சார் போர்டு உணரவில்லை? பொதுவாக, ஒவ்வோர் இயக்குநரும் தன் படம் பெரிய திரையில் மாஸ் ஓப்பனிங்காக, கெத்தாக வெளிவர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

நாங்கள் அப்படிக்கூட நினைக்கவில்லை. இதை ஒரு கலைப்படைப்பாக உலகம் முழுக்கக் கொண்டு செல்ல நினைத்தோம். ஆனால், எங்கள் அத்தனை பேர் கனவையும் உழைப்பையும் மொத்தமாக அசிங்கப்படுத்தி விட்டார்கள். ஒரு காட்சியைத் தனியாகப் பார்த்துவிட்டு இதுதான் அதன் தரம் என முடிவு செய்வது அபத்தம். ஒரு படத்தில் ஒரு காட்சி ஏன் வருகிறது என்பதற்கு கலை சார்ந்த சில நியாயங்கள் உள்ளன. அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையுமே ஆபாசம் என்று கருதினால் அது மோசமான விஷயம்.

நிர்வாணம் ஆபாசம் என்றால் நம் பழங்கால சிற்பங்கள் எல்லாம் ஆபாசமானவையா? எதுவும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. நிர்வாணமாகப் படம் எடுப்பதாலேயே ஒருவர் எடுப்பது ஆபாசமாகிவிடாது. அது எப்படிக் காட்சிப்படுத்தப்படுகிறது, எப்படி முன்வைக்கப்படு கிறது என்பதுதான் முக்கியம். இந்த கெட்டதிலும் நல்லது என்னவென்றால், ஒரு சிலர் இணையத்தில் படத்தைப் பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டுவதுதான். இந்தப் பாராட்டுதான் எங்கள் காயங்களுக்கு மருந்து...’’ வருத்தமும் கோபமுமாக ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்தார்கள் சந்தோஷ் பாபுசேனனும் சதீஷ் பாபுசேனனும்.