COFFEE TABLE- குங்குமம் டீம்

கவிக்குயில்!
ரம்யா நம்பீசன், பாடகியாகவே ஃபேமஸ் ஆகிவிடுவார் போலிருக்கிறது. ‘பாண்டிய நாடு’ படத்தில் ‘ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை...’ என கிறங்கும் குரலில் பாடியவர், இப்போது ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ ஏ.எல்.வெங்கி இயக்கும் ‘கூத்தன்’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

அறிமுக இசையமைப்பாளர் பாலாஜி இசையில் விவேகாவின் வரிகளில் ‘ஓடு ஓடு காதல் காட்டுமிராண்டி...’ என்ற ரம்யாவின் ஸ்வீட் வாய்ஸுக்கு பாடல் பதிவின் போதே பாராட்டுகள் குவிந்திருக்கின்றன. ‘‘நிறைய மொழிகள்ல பாடினாலும், இந்த பாட்டுல இருக்கிற வார்த்தைகள உச்சரிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். இட்ஸ் எ நைஸ் ஸாங்!’ என சிணுங்குகிறது பொண்ணு.

நம்மால் எதுவும் முடியும்!
கடுமையான பயிற்சிகளும், சரியான முயற்சிகளும் இருந்தால் வாழ்வில் ஜெயிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. இதை உணர்த்துகிற அருமையான வீடியோ இது. நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத சாகசங்கள் இந்த உலகில் நிறையவே உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே ப்ராக்டிக்கலாக செய்து அசத்துகிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களுக்குள் நடந்த கோல்டன் மொமன்ட் சாகசங்களைத் தொகுத்து ‘people did a lot of awesome stuff in the first half of 2017, here’s the best videos so far!’ என்ற தலைப்பில் சின்னதொரு வீடியோவாகப் பதிவிட்டுள்ளது ஃபேஸ்புக்கின் ‘people are awesome’ பக்கம். அப்புறமென்ன, 21 கோடி பார்வையாளர்கள், 38 லட்சம் பகிர்வுகள் என வைரல் பரபரக்கிறது.

ஹோம் தியேட்டர் 

குறைந்த விலையான நல்ல தரமான ஹோம் தியேட்டரை வாங்க வேண்டும் என்பது சினிமா மற்றும் இசைப் பிரியர்களின் பெருங்கனவு. இதற்காகவே சோனி நிறுவனம் பிரத்யேகமாக ‘Sony HT-RT40’ என்ற ஹோம் தியேட்டரை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியர்களுக்காகவே இதை ஸ்பெஷலாக வடிவமைத்திருக்கிறார்கள்.

டிவி, டிவிடி பிளேயர் மற்றும் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வழியாக இதனுடன் இணைக்க முடியும். ‘‘தியேட்டர்களில் படம் பார்ப்பதைப் போல மிகச் சிறந்த அனுபவத்தை இந்த ஹோம் தியேட்டர் கொடுக்கிறது’’ என்கிறார்கள் வாடிக்கையாளர்கள். துல்லியமான 5.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம்தான் இதன் சிறப்பு. விலை ரூ.22,990.

அமெரிக்க நடிகைக்கு இந்திய பாடகரின் பரிசு!
இந்தியாவின் முதல் ராப் பாடகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் பாபா செகல். அமெரிக்க தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்களில் பட்டைையக் கிளப்பும் நடிகையான எலனின் தீவிர ரசிகர் பாபா. எலனுக்கு தன் ரசிக அன்பை வெளிப்படுத்தும் விதமாக ‘O Ellen, O Ellen, share with me some watermelon...’ என்று ஆரம்பிக்கும் பாடல் வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். சில மணிநேரங்களில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். ‘‘இந்தியாவிலிருந்து உங்களின் தீவிர ரசிகனின் அன்பு இந்தப் பாடல்...’’ என்று பாபா நெகிழ்வாக சொல்கிறார்.

ஊட்டச்சத்து குறைபாட்டில் முன்னிலை!
இந்தியாவில் சுமார் 93 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தாக்குதல், கண் பார்வை குறைபாடு, கற்றல் திறன் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. மட்டுமல்ல, இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஏழு வயதுகூட நிரம்பாதவர்கள் என்கிறது அந்த ஆய்வு.

‘மாறிவரும் நவீன வாழ்க்கை முறை, குழந்தைகளின் மீதான ஆரோக்கியத்தில் பெற்றோர்களுக்கு இருக்கும் கவனமின்மை, இன்ஸ்டன்ட் உணவு வகைகள்’ போன்றவை குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முக்கிய காரணமாம். இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை முழுமையாக சரிசெய்து குழந்தையின் ஆரோக்கியத்தை செழுமைப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.