short & sweetதொகுப்பு: மை.பாரதிராஜா

ரத்னவேலு
டிஜிட்டலோட வளர்ச்சி தவிர்க்க முடியாததா இருக்கும்னு நினைச்சிருக்கீங்களா? புது டெக்னாலஜி வர்றப்ப நாமும் மாறணும். கத்துக்கணும். பழகிக்கணும். ஆறு மாசத்துக்கு ஒரு கேமரா மாறும். அதை உடனே தெரிஞ்சுக்கறதுதான் புத்திசாலித்தனம். ஏன்னா, அட்வான்டேஜ் என்னனு அறிஞ்சாதான் வித்தை காட்ட முடியும்.

இன்னிக்கு எல்லாருமே டிஜிட்டல்லதான் பண்றாங்க. ‘அவதார்’, ‘ஜங்கிள் புக்’ மாதிரி ஆடியன்ஸுக்கு புது அனுபவம் கொடுக்கற படங்கள்னா அது எந்த டெக்னாலஜில வந்தாலும் மக்கள் ரசிக்கறாங்க. ‘எந்திரன்’ படத்தை முதல்ல டிஜிட்டல்ல ஷூட் பண்ணலாம்னு நினைச்சோம். ஆனா, அதோட மல்டிலெவல், சி.ஜி., கரெக்‌ஷன்ஸ்னு எல்லாத்துக்கும் ஹை ரெசல்யூஷன் தேவைப்பட்டதால ஃபிலிமுக்கு போனோம். அப்ப எங்க அப்டேட் அப்படி. இப்பன்னா அந்தப் படத்தை தைரியமா டிஜிட்டல்ல எடுத்திருப்போம்!

சமந்தா
தமிழ், தெலுங்கு ரெண்டிலும் சில ஹீரோக்களுடன் மட்டும் இரண்டு இரண்டு படங்கள் பண்ணியிருக்கீங்க. இது திட்டமிட்டதா? ஒரு ரகசியம் சொல்றேன். என் படங்கள்ல ஹீரோ யார்னு நான் பார்க்கறதே இல்ல. டைரக்டர் யார், இதுக்கு முன்னாடி அவங்க என்னென்ன ஹிட்ஸ் கொடுத்திருக்காங்கனு மட்டும்தான் கவனிப்பேன். ஜெயிச்ச டைரக்டர்ஸ் கூட ஒர்க் பண்றது ஈஸினு நினைக்கறேன். அப்படி நினைச்சு செலக்ட் பண்றப்பதான் ஏற்கனவே நடிச்ச ஹீரோக்களுடன் மறுபடியும் நடிக்க வேண்டிய சூழல் அமையுது. தட்ஸ் ஆல்!    

ஸ்ருதிஹாசன்
கமல் அரசியலுக்கு வருவாரா? நான் எப்படி சொல்ல முடியும்? பாலிடிக்ஸுக்கு வர்றது பத்தி அப்பாதான் முடிவெடுக்கணும். பலதடவை அரசியலுக்கு வரமாட்டேன்னு அவரே சொல்லியிருக்காரே..! எங்களுக்கு அவர் சொல்ற அட்வைஸ்... ‘பெஸ்ட் சிட்டிசனா இருக்கணும். நாட்டுப்பற்றுடன் இருக்கணும்.

கவர்மென்ட்டை ஏமாத்தாம டேக்ஸ் கட்டணும். சோஷியல் அவேர்னெஸ் வேணும்’. நான் இங்கிலாந்துல இருந்திருக்கேன். அங்க ஒரு பிரச்னை வந்தா மக்கள் தைரியமா குரல் குடுப்பாங்க. அவங்களே அடிக்கடி பார்லிமென்ட் போய், பாலிடிக்ஸ் நடவடிக்கைகளை தெரிஞ்சுப்பாங்க. இந்தியாவுல அப்பா மாதிரி சிலர்தான் குரல் கொடுக்கறாங்க. நல்ல விஷயம்தானே!         

சுந்தர்.சி.
டிரெண்ட் அடிக்கடி மாறுதே..? எனக்கு டிரென்ட் மேல நம்பிக்கை இல்ல. எந்தப் படமா இருந்தாலும் அது நல்லா இருந்தா ஆடியன்ஸ் வருவாங்க. இப்ப பேய்ப்பட டிரெண்ட்னு சொல்லப்பட்டப்ப எத்தனை பேய் படங்கள் ஓடுச்சு? நல்ல ஆக்‌ஷன் படம் எடுத்தாலும் ஓடும். காதல் படம் எடுத்தாலும் ஓடும்.

காமெடி படமும் பட்டையை கிளப்பும். இந்த சீசன்ல இதைத்தான் பார்ப்பேன்னு எந்த ரசிகரும் விரதம் இருக்கல. எதுவா இருந்தாலும் அது அவங்களை என்டர்டெயின் செய்யணும். இதை மட்டும்தான் ரசிகர்கள் நம்மகிட்ட கோரிக்கையா வைக்கிறாங்க. இப்ப என் படத்துல இது இது இருக்கும்னு ஒரு மைண்ட் செட்டோட வர்றாங்க. அதை நான் சரியா கொடுத்துட்டா போதும். மத்தபடி எந்த ஜானரா இருந்தாலும் மக்கள் ஏத்துப்பாங்க!          

எழில்
உங்களுக்கு மட்டும் இமான் ஸ்பெஷலா மியூசிக் பண்றாரே? எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. ஸ்டூடியோதான் அவருக்கு உலகம். கம்போஸிங்க்காக வெளில எங்க கூப்பிட்டாலும் வரமாட்டார். அதுவே சாப்பிட கூப்பிடுங்க. உடனே வெளில வருவார். ஹெல்தி ஃபுட்ஸை தேடித் தேடி சாப்பிடுவார். ஒருமுறை மும்பைல ஒரு தாபாவை அறிமுகப்படுத்தினார். பிரமாதமான டேஸ்ட்.

எப்பவும் உடனே பாட்டுபோட்டுக் கொடுங்கனு தொந்தரவு பண்ணமாட்டேன். ‘ஸாங் வேணும். கூப்பிடுங்க...’னு சொல்லிட்டு வந்துடுவேன். அவர் ரெண்டு நாள்லயும் கூப்பிடுவார். பத்து நாட்கள் கழிச்சும் அழைப்பார். இடைல இதைப்பத்தி ஞாபகப்படுத்த மாட்டேன். அவரா ஃப்ரீ பண்ணிட்டு அழைப்பார். ஸாங் போட்டு காட்டுவார். உடனே ‘நல்லா இல்ல’னு சொல்லிடுவேன். அவர் பொறுமையா, ‘நாளை காலைல வந்து சொல்லுங்க... மாத்திக்கலாம்’பார். காலைல அதே பாட்டு ரம்மியமா இருக்கும்!               

கோவை சரளா
பேய்ப்பட ஸ்கிரிப்ட்னா உடனே இடம்பிடிச்சுடறீங்களே? ஒரு உண்மையை சொல்றேன். நிஜமாவே எனக்கு பேய்னா ரொம்ப பயம். சின்ன வயசில இருந்து ராத்திரில தனியாவே தூங்க மாட்டேன். அவ்வளவு பயப்படுவேன். பேய்ப்படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னா, எனக்கு பதிலா யாராவது நடிப்பாங்க. அப்புறம் காசுக்கு நான் என்ன பண்றது? பணம் கொடுக்கறாங்க. நடிக்கறேன். ஒரு விஷயம் சொல்லட்டுமா? பேய்தான் எனக்கு சோறே போடுது!