காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்யுவகிருஷ்ணா - 18

டான் ஆவது சுலபமல்ல. ஆகிவிட்டால் அந்தப் பதவியை தக்கவைத்துக் கொள்வது அதைவிட கஷ்டம். அந்த சிரமத்தைத்தான் பாப்லோ பட்டுக் கொண்டிருந்தார். அந்நாளில் கொலம்பியாவில் கார்டெல் நடத்துவது என்பது தனியாக அரசாங்கமே நடத்துவது மாதிரி. ஒவ்வொரு நொடியும் பணம் தண்ணீராகச் செல வழிந்து கொண்டே இருக்கும். அதை ஈடுகட்ட இரு மடங்கு சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சிறிய அளவில் தொழில் செய்துகொண்டிருந்தபோதே அண்ணனைத் தன்னுடைய நிர்வாகத்துக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டதால் ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டிருந்தார் பாப்லோ. களப்பணிகளுக்கு இருக்கவே இருக்கிறார் நெருங்கிய நண்பர் குஸ்டாவோ. இருப்பினும் - ஒவ்வொரு நாளையும் கழிப்பது என்பது பெரும் யுகமாகவே ஆகிக் கொண்டிருந்தது. குஸ்டாவோவால் மெதிலின் நகர் முழுவதையும் கார்டெலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததுதான்.

ஆனால் - நாடு முழுக்க சரக்கு அனுப்ப வேண்டும். கொலம்பியா தாண்டி அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தெல்லாம் ஆர்டர்கள் குவிகின்றன. ஒரே ஒரு ஆர்டரை மறுத்துவிட்டாலோ அல்லது டெலிவரியில் சொதப்பிவிட்டாலோ போச்சு. நேரடி ஆர்டர்கள் தவிர்த்து மற்ற கார்டெல்காரர்களுக்கும் கமிஷன் அடிப்படையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஹிப்பி கலாச்சாரம் அமெரிக்காவில் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம் என்பதால், போதை சமாச்சாரங்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருந்தது. கஞ்சாவை மற்ற தயாரிப்புகளாக மாற்ற ஃபேக்டரிகளை உருவாக்கும் வேலை வேறு கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது பயல்கள் சொதப்பிவிட்டு வந்து நிற்பார்கள். சிலபேர் போலீசில் மாட்டிக் கொள்வார்கள். சில சமயங்களில் சரக்கு மொத்தமும் ஏதோ ஒரு துறைமுகத்திலோ அல்லது செக்போஸ்ட்டிலோ மாட்டிக் கொள்ளும். நேரத்துக்கு ஆள் அனுப்பியோ அல்லது நேரடியாகவோ சென்று பாப்லோதான் சமாளிக்க வேண்டும்.

குஸ்டாவோ நாளுக்கு நாள் முரடனாகி வந்தார். அவருக்கு போலீஸ் என்றாலே எரிச்சல். எடுத்ததுமே எகிறும் அவரை இதுபோல பஞ்சாயத்துகளுக்கு பாப்லோ அனுப்புவதில்லை. அதிகாரிகளிடம் அத்துமீறி பேசக்கூடாது என்பது பாப்லோவின் பாலிசி. என்ன இருந்தாலும் அத்துமீறுவதற்கு அரசாங்கத்தின் லைசென்ஸ் பெற்றவர்கள் அவர்கள். நாம் கொஞ்சம் அடங்கித்தான் போகவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். ஆனால் - ஒரு கட்டத்துக்கு மேலே போனால், தடயமே வைக்காமல் தலையை எடுத்து விடுவார்.

திடீர் திடீரென்று எஸ்கோபாரே லைனுக்கு திக்விஜயம் செய்வார். ஃபேக்டரிகளில் நுழைந்து தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று சோதிப்பார். மாறுவேடத்தில் அவரே லாரி டிரைவராக சரக்கு டெலிவரி செய்யக் கிளம்புவார். அப்போதைய கொலம்பிய கார்டெல்களில் பாப்லோவின் இம்மாதிரியான நடவடிக்கைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

“மெதிலின் கார்டெல் லீடரே நேரா ஃபீல்டுக்கு போறாரு. அந்தாளுதான்யா கெத்து. நம்ம ஆளும் இருக்காரே!” என்று மத்த கார்டெல் பணியாளர்கள் தத்தமது தலைவர்களின் வீரத்தை கேலி பேசினர். இதனால் வேறு வழியில்லாமல் பெயருக்காவது அவ்வப்போது ஃபீல்டுக்கு போகும் வழக்கத்தை கார்டெல் தலைவர்கள் கைக்கொண்டார்கள்.

அம்மாதிரிதான் அன்று ரேஃபலுக்கு செய்து கொடுக்க வேண்டிய அசைன்மென்ட் ஒன்றுக்கு, தானே களமிறங்கினார் பாப்லோ. மொத்தம் நாற்பது டிரக்குகளில் சரக்கு கொண்டு செல்ல வேண்டும். நீர்வழிப் போக்குவரத்துக்கு வாய்ப்பில்லாத நிலையில், சாலை வழியெங்கும் இருக்கும் செக்போஸ்ட்டுகளை சமாளிக்க, தானே போவதுதான் சரியென்று அவருக்குத் தோன்றியது.

டிரக்குகளில் ஏற்றப்பட்டிருந்தது பெரும்பாலும் எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள்தான். ஆனால், ஐந்து வண்டிகளில் மட்டும் ‘பவுடர்’ இருந்தது. முதல்தர போதை. நாக்கில் வைத்தால் சுர்ரென்று நொடியில் சொர்க்கத்தைக் காட்டும். “ரொம்ப கவனமா கொண்டு வந்துடு பாப்லோ. ஏகத்துக்கும் முதலீடு பண்ணியிருக்கேன். பார்த்துக்கோ...” என்று ஒன்றுக்கு நாலு முறை போன் செய்து பேசியிருந்தார் ரேஃபல்.

பாப்லோவின் டிரக்குகள் டர்போ நகரிலிருந்து மெதிலினுக்கு வரிசையாக அணிவகுத்துக் கிளம்பின. பாப்லோவின் திறந்த ஜீப்தான் அந்த ஊர்வலத்தில் முதன்மையாக வந்து கொண்டிருந்தது. ஓரிரு இடங்களில் போலீஸ்காரர்கள் மடக்க முயற்சிக்க, முன்னணியில் படை நடத்தி வரும் தளபதி மாதிரி வீற்றிருந்த பாப்லோவைக் கண்டதுமே சல்யூட் வைத்தார்கள். சல்யூட் வைத்தவர்களுக்கெல்லாம் சன்மானத்தை வாரி வழங்கிக் கொண்டே வந்தார் பாப்லோ.

மெதிலினை நெருங்கிய வேளையில், ‘இனி பிரச்னையில்லை. பயல்கள் பாதுகாப்பாக கொண்டு வந்துவிடுவார்கள்’ என்கிற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டு விட்டது. சாலையோர மோட்டல் ஒன்றில் ஜீப்பை நிறுத்தினார். லேசாக தாகசாந்தி செய்துவிட்டுப் போகலாம் என்று இருந்தது. டக்கீலாவை ஒரு ஷாட்தான் ருசித்திருப்பார். டிரைவர் ஒருவன் வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்து பாப்லோ முன்பாக நின்றான்.

“என்னடா, எல்லாம் சேஃபா ஊருக்குள்ளே போயிடிச்சி இல்லை?” “இல்லை தலைவரே. மடக்கிட்டானுங்க...” “யாரு?” “போலீஸ்!” “மெதிலின் கார்டெல் டெலிவரின்னு சொல்ல வேண்டியதுதானே?” “நாம சொல்லுறதுக்கு முன்னாடியே அவங்களுக்கு தெரியும் தலைவரே. தெரிஞ்சேதான் கை வெச்சிருக்கானுங்க. மொத்த சரக்கையும் சீஸ் பண்ணி போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸுக்கு கொண்டு போறாங்க...” “சரி விடு. நான் நேரா போய் பேசிடறேன்...” அடித்துக் கொண்டிருந்த சரக்கை அப்படியே வைத்துவிட்டு எழுந்தார்.

“வேணாம் தலைவரே!” அவன் தயங்கித் தயங்கி சொன்னான். புரியாமல் அவனைப் பார்த்தார். “சரக்கும் கையுமா உங்களைப் புடிச்சி உள்ளே வைக்கிறதுதான் அவங்க திட்டம். நல்ல வேளையா அவங்க புடிக்கிறப்போ நீங்க இல்லை...” பாப்லோவுக்குப் புரிந்தது. எவனோ எதிரி விளையாடிக் கொண்டிருக்கிறான். ஒரே ஒரு முறை பாப்லோவை உள்ளே உட்கார வைத்துவிட்டால் போதும். மார்க்கெட்டில் மெதிலின் கார்டெல்லின் மவுசை அப்படியே அமுக்கி விடலாம்.

என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தார் பாப்லோ. சரக்கு ரேஃபலுடையது. அவருக்குத்தான் முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கிருந்தபடியே போன் அடித்தார். “ஏற்கனவே மேட்டர் கேள்விப்பட்டேன் பாப்லோ. ஸ்கெட்ச் போட்டிருக்கிறது என்னோட சரக்குக்கு இல்லை. உனக்குத்தான். நாலாபக்கமும் உன்னை வலைவீசி தேடிக்கிட்டிருக்காங்க. மாட்டிட்டேன்னா சரக்கும் கையுமா உன்னை லிங்க் பண்ணி உள்ளே போட்டுருவானுங்க. நான் எப்படியும் ரெண்டு நாளில் சரக்கை எடுத்துடுவேன்.

அதுவரைக்கும் நீ போலீஸ் கண்ணுலே பட்டுடாதே...” பாப்லோ தன்னுடைய ஜீப்பை அங்கேயே விட்டுவிட்டார். மெதிலினுக்கு போகும் பஸ் ஒன்றில் ஏறி டிக்கெட் எடுத்தார். மெதிலினின் காட்ஃபாதர் சாதாரண பஸ்சில் பயணிகளோடு பயணியாக பயணிப்பார் என்பதை யார்தான் யூகிக்க முடியும்? ஊர்வந்து சேர்ந்ததுமே முதலில் குஸ்டாவோவைத்தான் அழைத்து விசாரித்தார். “என்ன ஏதுன்னு ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?” “ரெஸ்த்ரொபே!” பற்களைக் கடித்தபடி அழுத்தமாகச் சொன்னார் குஸ்டாவோ.

(தொடரும்)

ஒவியம்: அரஸ்