இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



அனுபவத் தொடர் - 7

பா.ராகவன்

ஆக, அசைவத்தில் கார்போஹைடிரேட் கிடையாது. நீங்கள் ஒரு முழுக் கோழியை ரவுண்டு கட்டி உள்ளே தள்ளினாலும் ஒரு சதவீதம் கூட உங்கள் சர்க்கரை அளவு ஏறாது. ஆடு அப்படித்தான். முட்டை அப்படித்தான். இதர கறி வகைகள் எதுவானாலும் அப்படித்தான். ஓரிரு மாதங்களுக்கு முன்னால் ஃபேஸ்புக்கில் ஓர் அம்மணி, ‘இன்று கரடிக் கறி சாப்பிட்டேன். ருசியாக இருந்தது; நல்ல ப்ரோட்டின், நீங்களும் ஏன் முயற்சி செய்யக்கூடாது?’ என்று எழுதியிருந்ததைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன்.

கரடிக் கறியெல்லாம் இந்தியாவில் கிடையாது. மேற்படி வீராங்கனை ரஷ்ய பார்டரில் உள்ள என்னமோ ஒரு குட்டி தேசத்தில் உத்தியோக நிமித்தம் வாழ்கிற தமிழ்ப் பெண்மணி. ஊர் பேர் மறந்துவிட்டது. எதைச் சாப்பிடுகிறோம் என்று பார்க்காமல், அதில் என்ன இருக்கிறது என்று மட்டும் பார்க்கிற பழக்கம் வந்துவிட்டால் கரடி, கரப்பான்பூச்சி, காண்டாமிருகம் எல்லாம் ஒன்றுதான்.

பேலியோவைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நியாண்டர் செல்வன், தன் வீட்டில் அவர் சமைக்கிற காட்சியை முன்பெல்லாம் வீடியோ எடுத்துப் போடுவார். காட்டெருமை நாக்குக் கறி, காட்டுப்பன்றிக் குடல் என்று கேள்விப்பட்டிராத நூதன ஜீவஜந்துக்களையெல்லாம் தேடிப் பிடித்து சமைத்துச் சாப்பிடுகிற கலாசாரத்தை இங்கே முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

எனக்கு அந்த வீடியோக்களைப் பார்த்தாலே குலை நடுங்கும். உடல் நலன் சார்ந்த அக்கறை மட்டும் பீறிட்டுவிட்டால் மனுஷ குமாரனாகப்பட்டவன் எந்த எல்லைக்கும் தயங்காமல் போவான் என்கிற பேருண்மை அப்போதுதான் புரிந்தது. பேலியோவில் கால் வைத்துவிட்டால் ஒருவேளை நானும் கட்சி மாறிவிடுவேனோ?

ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு சிக்ஸ் பேக்கோடு திரிகிற ஆசையெல்லாம் கிடையாது. என்றுமே கிடையாது. பாபா ராம்தேவ் மாதிரி கைகால்களை அஷ்டகோணலாக்கி, உடம்பால் எட்டுப் புள்ளி ஆறு கோடு கோலம் போட்டுப் பார்க்கிற உத்தேசமும் இல்லை. என்றால், என் தேவைதான் என்ன?

எனக்கு நடந்தால் மூச்சு வாங்கக்கூடாது. டாய்லெட் போய்விட்டுக் கழுவிக்கொள்ளக் கையைப் பின்பக்கம் கொண்டு போனால் இடுப்புப் பிராந்தியத்தில் மூச்சுப் பிடிப்பு வரக்கூடாது. ரொம்ப முக்கியம், என் கால் நகங்களை நானே வெட்டிக் கொள்ள வேண்டும். இதைவிட ஓர் அவலம் இருக்க முடியுமா பாருங்கள். கடந்த இருபது இருபத்தி ஐந்து வருடங்களில் ஒருமுறைகூட என் கால் நகங்களை நானே வெட்டிக்கொண்டதில்லை.

உட்கார்ந்த வாக்கில் குனிந்து வெட்டிக்கொள்ள முயற்சி செய்தால் அடி வயிற்றில் இருந்து கழுத்து வரை அமுங்கி, மூச்சு முட்டி, வியர்த்துக் கொட்டிவிடும். காரணம், மத்தியப் பிராந்தியம் அத்தனை சுலபத்தில் மடியாது. உருண்டு திரண்ட என் தொப்பையானது நெஞ்சை அழுத்தி வஞ்சனை புரியும். குனிந்து நிமிர்ந்தால் முதுகுத் தண்டில் யாரோ கெரசின் ஊற்றிப் பற்றவைத்தாற்போல ஆகிவிடும். பெருங்குண்டர்களின் பிரத்தியேகப் பிரச்னைகளைச் சொல்லிப் புரியவைப்பது சிரமம்.

இம்மாதிரி இம்சைகளில் இருந்து மட்டும் விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்தேன். எனக்கு என் காரியங்களை நானே பார்த்துக்கொள்ள வேண்டும். அட, மலையேற முடியாது என்பதாலேயே என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு திவ்ய தேசத்துக்கு வருஷக்கணக்காகப் போகாமலிருந்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நான் சேவிக்க வேண்டுமென்றால் எம்பெருமான் இறங்கி வந்தால்தான் உண்டு. இதெல்லாம் ஒரு பிழைப்பா என்றால் அது என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதி வைத்த விதி. எனவே, குறைந்தபட்ச எடை இழப்பு இருந்தாலே நான் திருப்தியாகிவிடுவேன் என்று தோன்றியது. ஒரு பத்துக் கிலோ.

பதினைந்து கிலோ. போதுமே? பி.எம்.ஐக்குப் பொருத்தமான எடையில், போகிற வருகிறவர்களெல்லாம் திரும்பிப் பார்க்கிற விதத்தில் புதுப் பொலிவுடன் உலா வந்து என்ன ஆகப் போகிறது? தேவை, குறைந்தபட்ச சௌகரியம். முடிந்தது கதை. இப்போதுதான் என் நண்பர் சங்கர்ஜி எனது ரத்தப் பரிசோதனை அறிக்கையைப் பார்த்துவிட்டு நான் என்ன சாப்பிடலாம் என்று ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தார்.

முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா? பேலியோவில் இளைத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு பெங்களூர் தக்காளியின் தளதளப்பையும் சேர்த்துப் பெற்ற புண்ணியாத்மா அவர். பத்தல்ல, பதினைந்தல்ல. சைவ பேலியோவிலும் கணிசமாக எடைக் குறைப்பு சாத்தியமே என்று அவர் சொன்னார். சரி, என்ன சாப்பிடலாம்? காலை உணவாக, நெய்யில் வறுத்த பாதாம் ஒரு நூறு.

பாதாமைப் போல் அதி சத்துணவு இன்னொன்று இருக்க முடியுமா என்று தெரியவில்லை. உயர்தரக் கொழுப்பு, உயர்தர புரோட்டின், விட்டமின் ஈ, பயோடின், ரிபோஃப்ளாவின் என்று சொல்லப்படுகிற விட்டமின் பி2, கணிசமாக மக்னீசியம், கொஞ்சம் பொட்டாசியம். இதெல்லாம் இருப்பது கூடப் பெரிதில்லை. பாதாமில் கார்போஹைடிரேட் குறைவு. நூறு கிராம் பாதாம் சாப்பிட்டால் அதில் 22 கிராம் மாவுச் சத்துதான் உண்டு.

அது கொடுக்கும் சுமார் அறுநூறு கலோரியில் மிச்சமனைத்தும் கொழுப்பிலிருந்து கிடைப்பதுதான். அதுவும் பத்தாமல் பசி வந்துவிடக் கூடாதே என்றுதான் அதை நெய்யில் வறுப்பது. நெய்யின் நற்கொழுப்பும் பாதாமின் புனிதக் கொழுப்பும் இணைகிறபோது வெறும் நூறு கிராமிலேயே ஒரு பெரும் விருந்து உண்டு முடித்த திருப்தி கிடைத்துவிடும். ஆச்சா? காலை உணவு பாதாம். மதியம்? இருநூறு கிராம் காய்கறிகள்.

அது தவிர ஒரு நூறு நூற்றைம்பது கிராம் அளவுக்குக் கீரை. பத்தாதா? போடு ஒரு ஐம்பது கிராம் வெண்ணெய். ஒரு கப் முழுக் கொழுப்புத் தயிர். இதில் வயிறு நிறைந்துவிடும். காய்கறிகள் விஷயத்துக்கு வருகிறேன். பூமிக்கு அடியில் விளைகிறவற்றுள் வெங்காயம், பூண்டு தவிர வேறெந்தக் காய்கறியும் கூடாது என்று சங்கர்ஜி சொன்னார். அதாவது கிழங்குகள் அனுமதியில்லை.

அவை தவிர, மேலே விளைகிற காய்களில் பீன்ஸ் வகையறாக்கள் கூடாது. அதாவது பீன்ஸ், அவரை, கொத்தவரங்காய், காராமணி போன்றவை (இதன் காரணத்தைப் பிறகு விளக்குகிறேன்). என்றால் என்ன சாப்பிடலாம்? கத்திரிக்காய், வெண்டைக்காய், முட்டைக் கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, பூசணிக்காய், புடலங்காய், கோவைக்காய், தக்காளி, முருங்கைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளரி, குடை மிளகாய், பீர்க்கங்காய், சுரைக்காய்.

கீரைகளில் பேதமே இல்லை. என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், எதையும் நெய்யில்தான் சமைக்க வேண்டும். பருப்பு சேர்க்கக் கூடாது. எவ்வளவு வேண்டுமானாலும் தேங்காய் சேர்த்துக்கொள்ளலாம். இரவுக்கு இருநூறு கிராம் பனீர். பனீர் டிக்கா, பனீர் புர்ஜி, பனீர் உப்புமா, பனீர் இட்லி, பனீர் வடை என்று பலவிதமான சமையல் சாத்தியங்களை அளிக்கும் கொழுப்புணவு.

நெய் சேர். வெண்ணெய் சேர். போனால் போகிறது, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சேர். மற்றபிற எண்ணெய் இனங்கள் எதுவும் கூடாது. பழங்கள் தொடாதே. தானியங்களை அறவே மறந்துவிடு. நூறு நாள் இதைத் தீவிரமாகக் கடைப்பிடித்துப் பார், இளைப்பது சுலபம் என்றார் சங்கர்ஜி. ஜெய் பேலியோ என்று மறுநாள் முதல் ஆரம்பித்தேன்.

(தொடரும்)

பேலியோ கிச்சன்

பனீர் தோசை
இருநூறு கிராம் பனீர். ஒரு பிடி தேங்காய்த் துருவல், இரண்டு கரண்டி தயிர். மிக்சியில் போட்டு மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளலாம். ரொம்ப வேண்டாம். உப்புப் போட்டுக் கலந்து தோசைக்கல்லில் ஊற்றி மிதமான சுட்டில் சுட்டெடுத்தால் பனீர் தோசை தயார்.

என்ன பிரச்னை என்றால் இதில் பேப்பர் ரோஸ்டெல்லாம் முடியாது. மாவு ஊற்றுகிற ஷேப்பில் அப்படியே வேகவிட வேண்டியதுதான். மேலுக்கு வெங்காயம், கொத்துமல்லி, தக்காளியெல்லாமும் போட்டுக்கொள்ளலாம். நெய்யில் வார்த்த பனீர் தோசை பிரமாதமாக இருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி இருந்தால் சொர்க்கம்.