ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 37

அரங்கக் கவிதைகளுக்கென்று அப்துல் ரகுமான் ஏற்படுத்திய வகைமாதிரிகள் ஒன்றிரண்டு அல்ல. ஒவ்வொரு கவியரங்க மேடையிலும் அவர் தனித்துத் தெரிவார். உத்திகளாலும் உச்சரிப்பினாலும் மொத்தக் கூட்டத்தையும் கட்டிப்போடும் வித்தையை அவர் கற்றிருந்தார். மேடையில் நிறுத்தி நிதானமாக அவர் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினால், இயற்கை அழைப்பே ஆனாலும், எழுந்துபோக மனம் வராது.

ஆளுமை நிரம்பிய அவருடைய உடல்மொழியை ரசித்துக்கொண்டே இருக்கலாம். கவிதைகளின் ஓசைக்கேற்ப முன்னும் பின்னும் அவருடைய கைவிரல் அசைவுகள், காற்றின் தீராத பக்கங்களில் எதை எதையோ எழுத முயலும். எந்த மேடைகளையும் அவர் குறைத்து மதிப்பிட்டதில்லை. தன்னையும் தன் கவிதைகளையும் விரும்பக்கூடிய யார் அழைத்தாலும், அவர்களின் அழைப்பை அவமதிக்காத பண்பு அவரிடமிருந்தது.

ஒருமுறை கம்பன் கழகத்தில் கவிதை வாசிக்க அழைத்திருக்கிறார்கள். அழைத்தவர்களுக்கோ, அழைப்பை ஏற்று கலந்துகொள்ள சம்மதித்தவர்க்கோ ஒரு பிரச்னையுமில்லை. இடையிலிருந்தவர்கள்தான் இடைஞ்சல் செய்கிறார்கள். திராவிட இயக்க மேடைகளில் கவிதை பாடிவரும் அப்துல் ரகுமானை கம்பன் கழகத்திற்கு அழைப்பதா? என்று அவர்கள் ஏற்படுத்திய சர்ச்சையை, கம்பன் கழகம் கருத்திற் கொள்ளவில்லை.

கம்பனை நேசிக்கக்கூடிய யார் ஒருவரையும் தவிர்க்கவோ, தடுக்கவோ மாட்டோமென்று கவிக்கோவின் வருகைக்குப் பச்சைக்கொடி காண்பித்தது. சர்ச்சைகள் சூழ்ந்திருந்த அந்த அவைக்கு கவிக்கோ வருகிறார். ‘‘ரகு, மானைத் தேடியதுதான் ‘ராமாயணம்’ என்றால், ரகுமானாகிய நான் கம்பனைப் பாடக்கூடாதா?’’ என்றதும், அரங்கத்தில் எழுந்த கைதட்டு விண்ணைப் பிளந்திருக்கிறது. இறுதியில் சர்ச்சையைக் கிளப்பியவர்களே கவிக்கோவிடம் கையெழுத்துப் பெற காத்திருந்தது தனிக்கதை.

தன்னை எதிர்ப்பவர்களையும் தன் கவிதைகளால் வளைத்துவிடும் திறனை அவர் பெற்றிருந்தார். எத்தனைபேர் அவருடன் கவிதை வாசித்தாலும் அவர் சிந்தனைகளும், கவிதை வார்ப்பு முறைகளும் வித்தியாசமான தொனியிலிருக்கும். முதல் பத்து வாக்கியங்களில் தவிர்க்கமுடியாத கவனத்தை அவர் பெற்றுவிடுவார். துண்டுத் துண்டு காகிதங்களில் அவர் சிந்தனைகளை அடுக்கிக்கொண்டே போகும்முறை வேறு எவருக்கும் வாய்க்காதது.

கவியரங்கக் கவிதைகளுக்குத் தனி அடையாளமும், கெளரவமும் வந்ததே அவரால்தான். கவிதைகளை நிகழ்த்துக் கலையாக மேடையில் அரங்கேற்றும் முறையை அவர் வைத்திருந்தார். அறுபது ஆண்டுக்கு மேலாக ஒருவர் ஒரு செயலை அலுப்போ, சலிப்போ இல்லாமல் தொடர்வது கடினம். அதுவும், தொடங்கும்போதிருந்த அதே அக்கறையுடன் அதே ஆர்வத்துடன் ஈடேற்றுவது சாத்தியமேயில்லை.

ஆனால், கவிக்கோவிற்கு அது சாத்தியப்பட்டது. ஏனெனில், வெறும் கைதட்டலுக்காக அவர் எங்கேயும் கவிதைகளை வாசித்ததில்லை. கவியரங்குகளின் மேன்மையை உத்தேசித்தே அவருடைய கவிதைகள் எழுதப்பட்டன. ‘ஓரல் பொயட்ரி’ என்ற வகைமைக்கு எத்தனையோ உதாரணங்களை அவர் தந்திருக்கிறார். தமிழாய்ந்த அறிஞர்களும் அவருடைய மேடைக் கவிதைகளில் மெய்சிலிர்த்திருக்கிறார்கள்.

தலைமைக் கவிஞராக அவர் இருந்தால் பின்னால் வாசிப்பவருக்கு ஏற்றவாறு அரங்கத்தைத் தயார் செய்துகொடுப்பார். நல்ல வரிகளை யார் வாசித்தாலும் தயக்கமில்லாமல் திரும்பச் சொல்லச் சொல்லி, ‘‘இந்த இடத்தை கவனியுங்கள்’’ என்று கூட்டத்திற்கு ஆணையிடுவார். ‘அடடா, சபாஷ், அற்புதம்’ என்று அவரே ரசிகராக மாறி வாசிப்பவருக்கு உற்சாக மூட்டுவார்.

அரங்கு நிறைந்த கூட்டமானாலும் அவர் தலைமையென்றால் கூச்சலோ, குழப்பமோ துளியும் இருக்காது. அரங்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பார். எத்தனைபேர் கைதட்டினாலும் அவருடைய அந்த ஒற்றைப் பாராட்டுக்கு ஏங்கியே கவிதைகள் தங்களை எழுதிக்கொள்ள எண்ணும். முப்பது கவியரங்கிலாவது அவரோடு பங்கெடுத்திருப்பேன். ஒருதரம் கம்பன் கழகத்தில் அவர் தலைமையில் ஒரு கவியரங்கம்.
‘‘‘பத்துப்பாட்டு’ எழுதும் பக்குவமுடைய யுகபாரதி, சினிமாவில் குத்துப்பாட்டு எழுதலாமோ?’’ என என்னுள்பட சினிமா கவிஞர்களைச் செல்லச் சிலேடையில் சீண்டினார். “இருக்கிற எல்லா கல்லையும் / நீ ஒருவனே சிலை செய்துவிட்டதால் / பாவப்பட்ட எங்களுக்கு / பாக்கியிருப்பது அம்மிதான் / கொத்திக்கொண்டிருக்கிறோம் / உப்புப்புளிக்கு உதவுகிறது’’ என்றதும் அரங்கு அதிர்ந்தது.

அவ்வார்த்தைகள் அவருடைய புகழ்பெற்ற கூற்றுக்கு பதில் சொல்வதற்காக எழுதப்பட்டவைதான். என்றாலும், அதை தப்பிதமாக எடுத்துக்கொண்டு கோபிக்காமல், ‘‘பிரமாதம்... பிரமாதம்... எங்கே இன்னொருமுறை சொல்’’ எனக்கேட்டு, அதே அரங்கத்தில் என்னை மெச்சி மகிழ்ந்தார். நானறிந்தவரை கவியரங்கக் கவிதைகளை செப்பமாகவும், சிரத்தையாகவும் கையாண்டவர்களில் முதன்மையானவர் கவிக்கோதான்.

அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் மு. கருணாநிதி வரை பலருடைய தலைமைகளில் அவர் கவிதைகளை வாசித்திருக்கிறார். என்றாலும், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிடக் கூடிய ஆற்றல் அவரிடமிருந்தது. ‘முஷாயிரா, கஜல், கவாலி, நஸம், ஹைக்கூ’ என தமிழுக்கு அறிமுகமில்லாத பல வடிவங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் அவரே. அவருக்கு முன்பு அவ்வடிவங்களை யாருமே தமிழ்ப்படுத்தும் முயற்சியில் இறங்கவில்லை.

ஏனைய மொழிகளிலுள்ள வடிவங்களைத் தமிழ்ப்படுத்தி, அதை எல்லோருக்குமான வடிவமாக ஜனநாயகப்படுத்துவதில் அவர் காட்டிய ஆர்வம் குறிப்பிடத்தக்கது. இளம் கவிஞர்களை ஊக்குவித்து, அவர்களுக்கான புதிய சாளரங்களைத் திறந்துவைக்கும் பிதாவாக அவர் இருந்தார். வாணியம்பாடியில் கவிராத்திரி என்னும் நிகழ்வை ஏற்படுத்தி எத்தனையோ நல்ல கவிஞர்களும், கவிதைகளும் உருவாகக் காரணமாயிருந்தார். “இரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்று சுதந்திரத்தைப் பற்றி கவிதையெழுதிய அரங்கநாதன் அவருடைய மாணவர்களில் ஒருவர்.

ஒரே மாதிரியான தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த தமிழ்ப் புதுக்கவிதைக்கு சூஃபித்துவ அந்தஸ்தை ஏற்படுத்தியவர் கவிக்கோ. ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ என்னும் நூலில் கஜல் கண்ணிகளைத் தமிழில் எழுதியதுபோல ‘பறவையின் பாதை’ என்னும் நூலில் சூஃபித்துவ சிந்தனைகளை எழுதியிருப்பார். ஒரே வாசிப்பில் அக்கவிதைகளை விளங்கிக்கொள்ள இயலாது. அக்கவிதைகள் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு மாதிரியான அர்த்தங்களைத் தரக்கூடியன.

இம்மையிலும், மறுமையிலும் ஒருவர் எதைத்தேட விரும்புகிறாரோ அதைப்பற்றிய அவதானிப்புகளே அக்கவிதைகள். முழுக்க முழுக்க ஒரு சூஃபியின் குரலை ஒத்திருக்கும் அக்கவிதைகளின் வழியே ஞானத்தை எட்டுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பார். ‘பித்தனு’ம், ‘ஆலாபனை’யும் அவருடைய லட்சியப் படைப்புகள். ‘‘தத்துவங்களின் நேர்முக வெளிப்பாடு ‘ஆலாபனை’ எனில் எதிர்முக வடிவில் வெளிப்பட்ட கவிதைகளே ‘பித்தன்’ என்று அவரே சொல்லியிருக்கிறார்.

‘‘கதவு தட்டும் ஓசை கேட்டால் / யாரென்று கேட்காதே / ஒருவேளை அது / நீயாக இருக்கலாம்’’ என அவர் பித்தனில் எழுதிய கவிதையை வாசித்தவர்களுக்கு அவருடைய குரலில் வெளிப்பட்ட சூஃபித்துவம் விளங்கும். சூஃபித்துவ கவிதைகளை எழுத விரும்புவோர், மெளலானா ஜலாலுதீன் ரூமி போன்றோருடைய கவிதைகளை வாசிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ‘பித்தன்’, ‘ஆலாபனை’, ‘ரகசியப்பூ’, ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’, ‘பறவையின் பாதை’ ஆகிய தொகுப்புகளில் கவிக்கோ கையாண்ட மொழிநடை
விசேஷமானது.

பின்நவீனம், முன்நவீனம் என்றெல்லாம் தன்னையோ தன் கவிதைகளையோ அறிவித்துக்கொள்ளாமல் அறிவுக்கும் ஞானத்திற்குமான பாலத்தை அக்கவிதைகளின் வழியே அவர் போட்டிருக்கிறார். சக்தி உபாசகனாக பாரதி தன்னை அறிவித்துக்கொண்டதுபோல், ஏகத்துவத்தின் தேடலே தன்னுடையதென அறிவித்துக்கொள்ளாமல் அத்தேடலில் மூழ்கியிருந்தார்.

‘‘அவர் சொல்லும்வரை ‘அ’ கரம் என்பது பக்கவாட்டில் நிற்கும் மாட்டின் வடிவம்’’ என்று அறியாமலிருந்ததாக எழுத்தாளர் சிவசங்கரி சொல்லுவார். இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற பணியில் அவர் ஈடுபட்டபொழுது, கவிக்கோவைச் சந்தித்திருக்கிறார். அச்சந்திப்பில் கவிக்கோ பகிர்ந்து கொண்டதை கட்டுரையாகவும் நேர்காணலாகவும் வெளியிட்டிருக்கிறார். அந்த நேர்காணலில் தொன்மையிலிருந்து அண்மைவரை இலக்கியத்தை கவிக்கோ தொட்டுக் காட்டியிருப்பார்.

‘‘சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து வருவதுதான் சமய இலக்கியமா?’’ என்ற கேள்விக்கு, “முதலி லிருந்தது அகம், புறம். அப்புறம் வந்ததுதான் இகம், பரம்” என்றிருப்பார். காலத்தையும், இலக்கியத்தையும் உள்வாங்காமல் அப்படியான பதிலை ஒருவர் சொல்ல முடியாது. “திணையென்றால் ஒழுக்கம் என்று பொருள். இலக்கணத்தை எழுதிய காலத்திலேயே ஒழுக்கம் குறித்த சிந்தனைகள் நம்மிடம் இருந்திருக்கிறது. அதனால்தான் உயர்திணை என்ற சொல்லுக்கு எதிர்ப்பதமாக தாழ்திணை என்று சொல்லவில்லை.

எதையும் தாழ்த்தக்கூடாது என்னும் சிந்தனையுடைய தமிழர்கள், தாழ்திணையை அல் திணையென்றே அறிவித்தார்கள். அதுதான் அஃறிணையாகியிருக்கிறது. காலத்தின் கொடுமையைப் பார்த்தீர்களா, தாழ்திணையை அஃறிணையாக்கிய நம்மிடம் வந்து, விலங்குகள் நலவாரியம் பசுவதை கூடாதென்னும் பாடத்தை நடத்திக்கொண்டிருக்கிறது” என வேதனைப்பட்டிருக்கிறார்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்