வியாசர்பாடிஅறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

நான்கு பக்கமும் இரும்புக் கம்பிகளாலான வலைப்பின்னல்கள். நடுவில் பச்சைப் பசேலென புல்வெளி. அதனுள் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும். அனைவரது பாதங்களிலும் அத்தனை லாவகமாகச் சுழல்கிறது கால்பந்து. இதைச் சுவரில் இருந்து ரசித்தபடியே ரொனால்டினோவும், மெஸ்சியும் கைதட்டுகிறார்கள். எல்லாவற்றையும் பார்த்தபடி அந்தச் சிறிய மைதானத்தின் வாசலில் நிற்கிறோம்.

வியாசர்பாடி... கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் சென்னைக்குள் ஃபுட்பாலை ஆழமாக சுவாசிக்கும் ஓர் ஏரியா! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நான்கு கி.மீ.தொலைவில் இருக்கும் இந்தப் பகுதிக்குள் நுழைந்தால் வீட்டுக்கு ஒருவரோ அல்லது இருவரோ கால்பந்து வீரராக வலம் வருவதைப் பார்க்கலாம். அதனாேலயே, ‘குட்டி பிரேசில்’ என இப்பகுதி வர்ணிக்கப்படுகிறது. மட்டுமல்ல, கேரம் விளையாட்டிலும், கானா பாடலிலும், ஹிப்ஹாப் நடனத்திலும் உலகச் சாம்பியன்களாக ஜொலிக்கிறார்கள்.

‘‘நவீன் என்ன மாதிரி ஜிக்கிள் பண்ணுடா பார்ப்போம்...’’ சிறுவன் சஞ்சயின் கணீர் குரல் கேட்டுத் திரும்பினோம். ஓடிக்கொண்டே வலது காலால் பந்தை ஸ்டைலாகத் தூக்கி முன்பக்கமாக ஜிக்கிள் செய்கிறான். அதற்கு பதிலடியாக நவீனும் இதை எளிதாகச் செய்து ‘தம்ஸ்அப்’ காட்டுகிறான். பந்தை பாஸ் செய்ய இதுபோன்ற ஸ்டைல் உத்திகளை சீனியர்களைப் பார்த்து கற்றுக் கொள்கிறார்கள்.

‘‘இடது காலால் ஷாட் அடிச்சு பழகிட்டா சூப்பர் பிளேயரா மாறிடலாம்ணா. எல்லோருக்குமே வலதுகால் ஈஸியா வந்துடும். ஆனா, இடது கால் கஷ்டம். அதனால, லெஃப்ட்ல ட்ரை பண்ணிட்டே இருப்போம்...’’ விவரிக்கிறான் இர்ஃபான். சென்னையின் எஃப்சி  அணியின் அண்டர் 13ல் இர்ஃபான் இருக்கிறான். அவன் அருகிலிருந்த ஹேமலதாவிடம் பேச்சுக் கொடுத்தோம்.

ஒன்பதாம் வகுப்பு படிப்பதாகச் சொன்னார். இரண்டரை வருடங்களாகப் பயிற்சியில் இருப்பவர். பள்ளியிலும் கலக்குகிறார். ‘‘வீட்ல ஃபுட்பால் ஆட எந்தத் தடையுமில்ல. நல்ல சப்போர்ட் பண்றாங்க...’’ என்கிறார் வெட்கத்துடன். அப்போது வந்து சேர்ந்தார் மாஸ்டர் தங்கராஜ். இந்த மைதானத்தை உருவாக்கி குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருபவர். சென்னை மாநகராட்சி இவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குச் செவிமடுத்து மூன்றாண்டுகளுக்கு முன்பு ரூ.45 லட்சம் செலவில் இந்த மைதானத்தை உருவாக்கித் தந்திருக்கிறது.

‘‘எங்க ஏரியா எப்ப கால்பந்துக்குனு ஸ்பெஷலா மாறுச்சுனு தெரியலை. இப்ப எனக்கு 54 வயசாகுது. நாலு வயசுல இருந்து ஃபுட்பால் ஆடறேன். எங்க தாத்தா காலத்துலயும் இங்க கால்பந்து விளையாடி இருக்காங்க...’’ என்கிறார் உற்சாகம் பொங்க. இவர், ‘ஸ்டெட்ஸ்’ (SCSTEDS) அமைப்பை உருவாக்கி கல்வியறிவையும் புகுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது முந்நூறு பேர் இவரிடம் பயிற்சி எடுக்கிறார்கள். இதில், பாதிக்குப் பாதி பெண்கள்!

‘‘சென்னையோட பூர்வகுடிகள்னு இவங்களை சொல்லலாம். கடுமையான உழைப்பாளிங்க. தைரியமானவர்களும் கூட. ஆனா, பொருளாதார ரீதியா பின்தங்கியிருக்காங்க. அதனால தப்பான வழிகளுக்கு மத்தவங்களால இவங்க பயன்படுத்தப்பட்டாங்க. அந்த நாட்கள்ல சாராயம் எல்லாம் இந்தப் பகுதில புழங்குச்சு. கொஞ்சம் பேர் செய்யற தப்பால எல்லாருக்கும் கெட்டபேரு.

இவங்களுக்கு கல்வியறிவு கொடுக்கணும்னு 1997ல ‘ஸ்டெட்ஸ்’ அமைப்பை தம்பி உமாபதி, நண்பர் சுரேஷோட சேர்ந்து ஆரம்பிச்சேன். இதுக்கு, ‘குடிசைவாழ் குழந்தைகள் விளையாட்டு திறமை மற்றும் கல்வி மேம்பாட்டுச் சங்கம்’னு அர்த்தம். ஃபுட்பால் வழியாதான் கல்வி அறிவை புகுத்துறோம். ஏன்னா போராட்ட குணமுள்ள விளையாட்டு இதுதான். எங்க அணுகுமுறைக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு.

இதுவரை இங்க 8 ஆயிரம் பேராவது ஃபுட்பால் விளையாடி இருப்பாங்க. தேசியஅளவுல நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க. நம்ம நாட்டுக்காகவும் விளையாடியிருக்காங்க. இப்ப கூட கல்யாணபுரத்துல இருக்கிற நந்தகுமார் அண்டர் 23 பிரிவுல இந்தியாவுக்காக விளையாடறார். சென்னையின் எஃப்சி அணிக்கும் தேர்வாகியிருக்கார்...’’ உற்சாகத்துடன் தங்கராஜ் மாஸ்டர் சொல்லி முடித்ததும் கல்யாணபுரம் சென்றோம்.

அரசுப் பள்ளி மைதானத்தில் மேல்சட்டை இல்லாமல் முக்கால் ட்ரவுசருடன் சில சிறுவர்கள் புழுதி பறக்க ஃபுட்பால் ஆடிக் கொண்டிருந்தனர். வெளியிலிருந்து ரசித்துக் கொண்டிருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘எங்ககிட்ட எல்லா திறமையும் இருக்கு. ஆனா, வசதியில்ல. எப்படி முன்னேறிப்போறது..? எங்க வீட்ல நிறைய கொயந்தைங்க. நான் ஆறாவது. அதனால, அஞ்சு வரைதான் என்னால படிக்க முடிஞ்சது. இப்ப ஒயின்ஷாப்ல வேைல பார்க்கறேன்.

ஃபுட்பால் ஆடி ரொம்ப வருஷமாச்சு. அப்பப்ப இப்படி வேடிக்கை பார்க்க வருவேன்...’’ என்கிறார் அந்த பெயர் சொல்ல விரும்பாத நபர். அங்கிருந்து பக்தவத்சலம் காலனி நோக்கி நகர்ந்தோம். பர்மாவில் இருந்து அகதிகளாக தாயகம் திரும்பிய தமிழர்களின் குடியிருப்புப் பகுதி. சர்மா நகர், சாஸ்திரி நகர் என உள்வரும் சில பகுதிகளிலும் இவர்களில் சிலர் வசிக்கிறார்கள்.

இங்கிருந்து மட்டும் கால்பந்து வழியாக அரசு வேலை பெற்றவர்கள் குறைந்தது நூறு பேராவது இருப்பார்கள். இந்தப் பகுதியைச் சேர்ந்த தனபால் கணேஷ் இந்திய கால்பந்து சீனியர் அணியில் விளையாடி வருகிறார். ‘‘1965ல சென்னை வந்ததும் ஃபுட்பால் டீம் ஆரம்பிச்சோம். இதன் மூலமா நிறைய பேர் அரசு வேலைக்குப் போனோம். நான் மின்சார வாரியத்துல சேர்ந்தேன். இருபது வருஷம் அங்க ஆடினேன்...’’ என்கிறார் இங்குள்ள நேதாஜி ஃபுட்பால் கிளப்பை உருவாக்கியவரில் ஒருவரான மாயவன்.

திடீரென ‘‘என் அக்கா குடும்பத்தை பார்த்திட்டீங்களா? போய்ப் பாருங்க...’’ என முகவரி கொடுத்தார். எதற்காக என்று தெரியாமல் அந்த விலாசத்துக்கு சென்றோம். வீட்டின் தலைவர் வி.கே.செல்லம் நம்மை வரவேற்று பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்ட வராண்டாவில் அமர வைத்தார். சமையல் வேலை செய்கிறார் போல என நினைத்தோம். இல்லை... கூட்டுக் குடும்பத்துக்கான சமையல் பாத்திரங்கள் என அறிந்ததும் பிரமித்தோம். மொத்தம் 46 பேர் அங்கு வசிக்கிறார்கள்!

‘‘எனக்கு ஆறு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. எல்லோரும் ஒண்ணா இருக்கோம். பர்மால இருபது வருஷங்களுக்கு மேல ஃபுட்பால் விளையாடியிருக்கேன். சென்னை வந்ததும் பின்னி மில்லுல வேலைக்கு சேர்ந்தேன். என் பசங்களுக்கும் கால்பந்து மேல ஈர்ப்பு. நல்லா பயிற்சி எடுத்தாங்க. ஸ்போர்ட்ஸ் கோட்டால வேலைக்கு சேர்ந்தாங்க. இங்க இருக்கிற எல்லாரும் எங்களை ஃபுட்பால் ஃபேமிலினுதான் சொல்வாங்க...’’ என்று சிரிக்கிறார்.

இந்தப் பகுதியில் பர்மிய உணவுகள் பிரபலமாக இருக்கிறது. அத்தோ, மொய்ங்கோ, சிஜோ என உணவுகளில் வெரைட்டி காட்டுகிறார்கள். ‘‘பொதுவா வியாசர்பாடின்னாலே அடிதடி, வெட்டுக்குத்து, கொலைனு மோசமான எண்ணம்தான் எல்லார் மனசிலும் இருக்கு. அது வடிகட்டின பொய்...’’ என்று ஆரம்பித்தார் ‘தேவை’ இயக்கத்தைச் சேர்ந்த இளங்கோ. ‘‘இங்க இருக்கிற 18 குடிசைப் பகுதிகள்ல நிறைய திறமைசாலிகள் இருக்காங்க.

இப்ப கேரம் விளையாட்டையே எடுத்துக்குங்க. உலகளவுல பெயரெடுத்த ராதாகிருஷ்ணன், இளவழகி, நாகஜோதினு எல்லோருமே இந்தப் பகுதியைச் சேர்ந்தவங்கதான். அதே மாதிரி கானா பாடல்கள்ல உலகநாதன், பாலா, பாடலாசிரியர் லோகன்னு சினிமால கலக்கிட்டு இருக்குறவங்க நிைறய. பல பேர் தனியா ஆல்பம் கூட போட்டிருக்காங்க. இப்ப ஹிப் ஹாப் நடனத்துலயும் பின்னியெடுக்கிறாங்க.

என்ன... எதுவுமே வெளிச்சத்துக்கு வரலை. எங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச இந்தப் பகுதியோட திறமை ஒருநாள் கண்டிப்பா உலகத்துக்கு தெரிய வரும்!’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் இளங்கோ. அதற்கேற்ப கானா பாடல் ஒன்று ஒலிக்கத் தொடங்கியது. ‘வடசென்னை உள்ள வந்து பாரு பொறுமையா எங்க ஊரு பிள்ளைங்க எல்லாம் ரொம்ப திறமையா!’

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

கானா

குணாநிதி, பாலசந்தர், முத்து, சீனிவாசன், ஆகாஷ், டோலக் அடிக்கும் சூர்யா... இந்த ஆறு பேரும் கானா பாடலில் பின்னியெடுக்கும் இன்றைய இளைஞர்கள். ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ படத்தில், ‘சங்கி மங்கி’ பாடலைப் பாடியவர் குணாநிதி. இப்போது, ‘விக்ரம் வேதா’ படத்தில் ‘டஸக்கு டஸக்கு டும் டும்’ பாடலை முகேஷ், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பாடியிருக்கிறார்.

‘‘இங்க கானா ஃபேமஸ். இறந்தவங்க வீட்டுல போய் பாடுவாங்க. அப்படித்தான் எனக்கு சின்ன வயசுல அறிமுகமாகி அப்புறம் உசுராச்சு. கானா உலகநாதன், லட்சுமிபதி, பாலா, பழனி, அந்தோணினு நிறைய பேர் மரண கானா பாடுவாங்க. அந்த கேள்வி ஞானம்தான் எங்களுக்கு பாடம்...’’ என்று குணாநிதி முடிக்க, பாலசந்தர் தொடர்ந்தார். இவர், ‘தெறி’ படத்தில் ‘சிக்கு சில்லாடி’ பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியவர்.

‘‘விக்ரம் பிரபு நடிக்கிற ‘நெருப்புடா’; கார்த்திக் சுப்புராஜ் இயக்கற ‘மேயாத மான்’ படங்கள்ல இப்ப நடிச்சிருக்கேன். 29 வயசாகுது. எங்கம்மா கானா பழனி அண்ணனோட பாட்டை கேட்டுக்கிட்டே இருப்பாங்க. 8 வருஷங்களா பாடிட்டு இருக்கேன். இப்ப கல்யாண கச்சேரிங்க நிறைய வருது...’’ என்கிறார். இவரைப் போல் கானா முத்துவும் ஆல்பம் வெளியிட்டவர். குணாநிதி, பாலசந்தருடன் இணைந்து பணியாற்றுகிறார்.

ஹிப் ஹாப்

ஹிப் ஹாப் நடனத்தில் வியாசர்பாடி வடிவேலும், கலையும் அசத்துகிறார்கள். வடசென்னை முழுக்க இவர்கள் பிரபலம். குறிப்பாக, பீ பாய் வேலு, பீ பாய் கலை என்றால் ஈஸியாக அடையாளம் சொல்கிறார்கள். இதில், கலை ஒரு மாற்றுத்திறனாளி. அதென்ன b boy? ‘‘இது ஹிப் ஹாப் டான்ஸ்.

அவ்வளவுதான். மெரினா பீச்ல சந்துரு மாஸ்டர்கிட்ட கத்துகிட்டோம். எங்களோட புரொபஷனே இதுதான். ரெண்டு பேரும் அஞ்சாவது வரை படிச்சிருக்கோம். இப்ப பீச்ல 20 பேருக்கு கிளாஸ் எடுக்கறோம். வியாசர்பாடில ஃப்ரீயா கத்துத் தர்றோம். இதுலயே வால் பேக், ரவுண்ட் டிராக், ஹெட் ஸ்பின்னுனு நிறைய டிரிக் இருக்கு...’’ என்று சொல்லும் இவர்கள் சினிமாவிலும் தலைகாட்டி வருகிறார்கள்.