ப்ரியங்கா சோப்ராவின் கலாட்டா COFFEE TABLE



குங்குமம் டீம்

ப்ரியங்கா சோப்ராவின் கலாட்டா

ஹாலிவுட்டுக்குச் சென்றதில் இருந்து ப்ரியங்கா சோப்ராவின் நட்பு வட்டம் அதிகரித்துவிட்டது. சமீபத்தில் அவர் செக்ஸி காஸ்ட்யூமில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சியபடி நியூயார்க்கில் உள்ள நண்பர்கள் ரெபல் வில்சன், ஆடம் டிவைன், ஹுயு ஷெரீடனுடன் ஜாலி அரட்டை அடித்திருக்கிறார். இதை ரெபல் வீடியோவாக தனது இன்ஸ்டாவில் பதிவிட, அதை ப்ரியங்கா தனது ஃபேஸ்புக்கில் ரீ போஸ்ட் செய்திருக்கிறார். அப்புறமென்ன, ப்ரியங்காவின் ஃபன் கலாட்டாவை மூணு லட்சம் பேர் பார்த்து ரசித்து வைரலாக்கி விட்டனர்.

ரீடிங் கார்னர் - கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

இந்திரன் தொகுப்பு: சுந்தரபுத்தன் [டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர் மேற்கு, சென்னை - 78. விலை ரூ.390/- தொடர்புக்கு: 8754507070] பத்திகள் போன்ற கட்டுரைகள், ஓவியங்கள், படைப்புகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. இந்திரன் படைப்பாற்றலின் உச்சம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நம் அறைக்குள் ஆப்பிரிக்க வானத்தையே அழைத்து வந்தவர். அவரின் மொழிபெயர்ப்புகள் தனித்துவமானவை.

கவிதை, ஓவியம், பயணம், இதழியல், புனைகதை, சிற்பம், சினிமா, மொழிபெயர்ப்பு, தலித் இலக்கியம், இசை, நடனம், நேர்காணல் என வரிசையாக புயல் கிளப்புகிறார். அவர் சற்றும் தளராமல் தொடர்ந்து இயங்கி வருவது தமிழ் கூறும் நல்லுலகத்தின் நற்பேறு. நூலை புரட்டுபவர்கள் தாங்கள் விரும்பும் எந்த வகையிலும் நேர்த்தியான வகைகளை அடையாளம் காண முடிகிறது.



இதில் இடம்பெற்றிருக்கும் இயக்குநர் மிருணாள் சென்னின் நேர்காணல் மிக முக்கியமானது. இந்திரனின் இத்தனை கால இலக்கிய வாழ்க்கைக்கு இந்த நூல் சிறப்பான நினைவூட்டல். சரியான தொகுப்பில் கொடுத்திருக்கும் சுந்தரபுத்தனின் ரசனை தெளிவாகிறது. ஒரு கவிஞன் தன் சொந்தக் கவிதையை கண்டுபிடிப்பது ஒரு பிரத்யேகமான விஷயம்.

சொல்லப்போனால் கவிஞன் கவிதையைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கவிதை கவிஞனைக் கண்டுகொள்கிறது. அப்படி ‘கண்டு’ கொண்ட கவிதைகளும் இதில் இருக்கின்றன. இந்திரனின் மொழிபெயர்ப்பு எவ்வளவு ஆழ்ந்த அக்கறைக்குரியது என்பது பூமி உருண்டை என்பது போல உண்மைதான். இடையிடையே அவருக்கு வந்த நண்பர்களின் கடிதங்கள். அவற்றின் பல்வேறு அம்சங்கள். மிகவும் சுவாரஸ்யமான தொகுப்பு. தனி அனுபவம்.

விமானத்தில் ஹேர் ஸ்டைல்!

எல்லா இடங்களிலும் பெண்கள் பெண்களே! அதற்கு ஓர் உதாரணம் இது. ஏர் ஆசியாவின் ஸ்டைலீஷான விமானப் பணிப்பெண், தன்னுடைய ரெஸ்ட் ரூமில் தலை சீவும் அழகை வீடியோவாக்கியிருக்கிறார். அந்த வீடியோவை ஃபேஸ்புக்கின் vdoobv.com பக்கத்தில் பதிவிட 35 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். இரண்டரை லட்சம் பேர் ஷேர் செய்து மகிழ்ந்துள்ளனர். ‘‘இவ்வளவு டைட்டா தலை சீவினால், அப்புறம் தலைவலி வரும் புள்ளே!’’ என ஹெல்த் டிப்ஸ் கமென்ட்டுகளும் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தியாவும் சோம்பேறி!

உலக அரங்கில் சோம்பேறிகள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துவிட்டது. சமீபத்தில் 46 நாடுகளில் வாழ்கின்ற ஏழு லட்சம் மக்களிடையே அவர்களின் ஒரு நாள் நடையை வைத்து யார் சோம்பேறிகள் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். இதற்காக பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜி ஸ்மார்ட்போன்தான். ஒரு நாளில் எவ்வளவு ஸ்டெப் நடக்கிறார்கள் என்பதை ஸ்மார்ட்போனில் உள்ள ஆப் அளந்து கொடுக்கும். இதை வைத்து தூரத்தைக் கணக்கிட்டிருக்கின்றனர். மிகக் குறைவான தூரமே நடந்து சோம்பேறிகளின் நாடு என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது இந்தியா!



சைலண்ட் கார்னர்

பயண சரித்திரம் (ஆதி முதல் கி.பி 1435 வரை)

முகில் (சிக்ஸ்த் சென்ஸ், 10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை - 600 017. விலை ரூ.333/- தொடர்புக்கு: 7200050073) பயணங்கள் போல் சுவாரஸ்யங்கள் ஏதுமில்லை. வீட்டிலிருந்து வெளியேறுபவர்களே ஆச்சர்யங்களையும், உன்னதங்களையும் கண்டடைகிறார்கள். ஆகச்சிறந்த இருப்பில் இருக்கிற ஒரே உண்மை இதுதான்.

அலெக்ஸாண்டர், பாஹியான், யுவான் சுவாங், மார்க்கோ போலோ, இவன் பதூதா போன்றவர்களின் பயண அனுபவங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. முகிலின் எப்போதைக்குமான புரண்டோடும் நடை. கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிற விதம். நம் சௌகரியத்திற்காக நமது முன்னோர்கள் பட்ட பாடுகள், இயற்கையின் கடுமையை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் தவித்த விதம், எல்லாமே நேர்த்தி சிறிதும் தளராமல் எழுதப்பட்டிருக்கிறது.

முற்றிலும் புதிர் நிறைந்த, எது வேண்டுமானாலும் நேரலாம் என ஒரு புது இடத்திற்குப் பயணம் செய்வது சாதாரண காரியம் இல்லை. வரலாறுகளை அறிவதைத் தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை. அடுத்த ஸ்டாப்புக்கு ஆட்டோ தேடுகிற நமக்கு, இந்த வரலாறுகளை எழுதப் புறப்பட்டவர்களின் சூரத்தனங்கள் திகில் ஊட்டும்.

அவர்களில் பலர் தங்களின் உடல்நலத்தை இழந்து, உயிரை பணயம் வைத்திருக்கிறார்கள். வரலாறும், சமூகமும்தான் நம்மை உருவாக்கி வைத்திருக்கின்றன. இவற்றைப் போராடிப் பெற்றவர்களின் சாகசத்தை நமக்கு அறியச் செய்ததில் முகிலின் பங்கு அசாத்தியமானது. அரிதான புகைப்படங்களின் வரிசையும் இருக்கிறது. இந்நூலைத் தவறவிட்டால் ஒரு நல்ல அனுபவத்தை இழந்தவர்களாவோம்.