பழங்குடிகளை ஆய்வு செய்யும் வனமகள்



ப்ரியா

இந்த நிலம் ஆதி மனிதன் காலந்தொட்டே மானுடர்கள் புழங்கிக்கொண்டிருக்கும் தொன்மையானது. நாகரிகத்தின் உச்சம் தொட்டுவிட்ட இந்த சந்திராயன் சகாப்தத்திலும், இங்குள்ள மலைகளிலும் வனங்களிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வசித்து வரும் பூர்வகுடிகள் இருக்கிறார்கள். ஆதிவாசிகள், மலைவாசிகள், பழங்குடிகள், பூர்வகுடிகள், ஷெட்யூல்ட் ட்ரைப் எனப் பல்வேறு பொதுப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இவர்களின் ஒவ்வொரு சமூகமும் தனித்துவமானது. தங்களுக்கு எனப் பிரத்யேகமான பண்பாடு, பழக்கவழக்கம், நம்பிக்கைகள், வழிபாடுகள் கொண்டது.

சமவெளியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களான நம்மைவிடவும் மனித நேயமும் சூழல் குறித்த அக்கறையும் மிகுந்தவர்கள். இந்த வெள்ளந்தி மனிதர்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் ஹேமமாலினி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இருளர்கள் இவர்கள் வட தமிழகத்தில் பெரும்பாலும் ஏரிக்கரையோரமாகத்தான் வசிக்கிறார்கள். ஆரம்பத்தில் காடுகளில்தான் வாழ்ந்துவந்தனர்.

கோவை, நீலகிரி, செங்கல்பட்டு, வட ஆற்காடு போன்ற இடங்களில் அதிகமாக வசித்து வருகிறார்கள். மலை மக்கள் என்பதால் விஷப்பூச்சிக் கடி, அலர்ஜி போன்றவற்றுக்கு இவர்களிடம் சிறப்பான சிகிச்சை உண்டு. எலி பிடிப்பதிலும் ஈடுபடுவார்கள். வேட்டை சமூகமான இருளர்களின் நிலத்தின் மீதான உரிமை, வெள்ளையர்களின் வன உரிமைச் சட்டத்தால் பறிக்கப்பட்ட பிறகு, சமவெளிகளில் பரவத் தொடங்கினர். சொந்தமாக நிலம் இல்லாததால், விவசாயமும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கிடைக்கும் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள். இவர்கள் செங்கல் சூளை, கோழிப்பண்ணை போன்ற இடங்களில் வேலை பார்க்கிறார்கள். படிப்பறிவு கிடையாது என்பதால் வாங்கிய கடன் குறித்த கணக்குகள் ஏதும் தெரியாது. இதனால், வேலை செய்யும் இடங்களில் கொத்தடிமை நிலைதான்.

தலைமுறை தலைமுறையாக இப்படித்தான் இருக்கிறார்கள். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியால் சிலர் மீட்கப்பட்டு அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டாலும், கிடைத்த பணத்தை முறையாகப் பராமரிக்கும் சுபாவம் இல்லாததால் வறுமைக்குச் சென்று மீண்டும் கொத்தடிமையாகும் அவலமும் நடக்கிறது. இவர்களுக்கு என நிரந்தர இடம் இல்லாததால், சாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு எதுவுமே கிடையாது.



கூட்டுச் சமூகமாக வாழ்ந்த இவர்கள் தொழிலின் நிமித்தம் சிறுசிறு குடும்பங்களாக உடைந்துபோனார்கள். வறுமையான சூழல் என்பதால் குழந்தைகளையும் படிக்கவைக்க முடியவில்லை. இவர்களின் குலதெய்வம் கன்னிமா தேவி. இவர் கடலில் தோன்றியதாக ஐதீகம். வருடந்தோறும் மாசி மகம் அன்று அனைவரும் ஒன்றுகூடி அம்மனுக்கு விழா எடுப்பார்கள்.

இவர்கள் இனத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் மதிக்கப்படுகிறார்கள். கணவன் இறந்துவிட்டாலோ அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ மறுமணம் செய்துகொள்ளும் உரிமை பெண்ணுக்கு உண்டு. மேலும் தன்னுடைய வாழ்க்கைத்துணை யார் எனத் தேர்வு செய்வதும் பெண்கள்தான்!

ஜவ்வாது மலை இருளர்கள் இவர்கள் வித்தியாசமானவர்கள். வெளியாட்களுடன் எளிதாகப் பழக மாட்டார்கள். பழகிவிட்டால் தங்களில் ஒருவராகக் கொண்டாடுவார்கள். இவர்கள் காஞ்சிபுரம் தங்கள் பூர்வீகம் என்கிறார்கள். ஆனால், காலங்காலமாக இந்த மலையில்தான் வாழ்ந்து வருகிறார்கள். காஞ்சியில் போர் வந்ததாகவும் பஞ்சம் வந்ததாகவும் அதனாலே இவர்களின் முன்னோர்கள் இங்கு வந்ததாகவும் நம்புகிறார்கள்.

நல்ல நேரம் கணித்துச் சொல்லும் கணியன் என்று ஒருவர் இவர்களிடையே உண்டு. மேஸ்திரி வேலை முதல் ஆசாரி வேலை வரை தங்களின் அனைத்து வேலைகளையும் தாங்களே செய்துகொள்கிறார்கள். ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமானதுமே மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். வரதட்சணையாக நெல், தானியம், பன்றிக் கறி எல்லாவற்றையும் ஆண்கள்தான் தர வேண்டும்.



இவர்களிடையே ஆவி வழிபாடும் உண்டு. சமவெளியில் வசிக்கும் மக்கள் கொண்டாடும் இந்துப் பண்டிகைகள் எதையும் இவர்கள் கொண்டாடுவது இல்லை. ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலங்கலான ஆற்றுப்படுகைகள் நகைக் கடைத் தெருக்கள் மற்றும் சாக்கடைகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுப்பதுதான் இவர்களின் வேலை. நகைக் கடைகளில் தங்கத்தை சுத்தம் செய்த பின் அந்தத் தண்ணீரை அவர்கள் கடை வாசலில் உள்ள சாக்கடையில் கொட்டுவது வழக்கம்.

சாக்கடை மண்ணை எடுத்து வந்து நீரை வடிகட்டி, உலர வைக்கிறார்கள். பிறகு தேவையற்ற கசடுகள் நீங்கும் வரை நன்கு சலிக்கிறார்கள். மென்மையான நுண்ணிய கருமணலில் பாதரசத்தை விட்டு தேய்க்கும்போது மணலில் உள்ள தாதுக்கள் பாதரசத்தில் ஒட்டிக்கொள்ளும். பிறகு, பாதரசத்தை நன்கு சூடுபடுத்த தங்கம் தனியாகப் பிரிந்துவரும். இது நூற்றாண்டுகள் பழமையான தொழில்.

இந்தத் தொழில் செய்பவர்களைப் பற்றி எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வறிஞர் ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற நூலில் ‘ஜலகடுகு‘ (jalagaduku) என்று குறிப்பிடுகிறார். சி.பி.பிரெளன் தனது தெலுங்கு அகராதியில் இவர்களை ‘சாக்கடையிலும் பொற்கொல்லர் வீட்டுக் குப்பையிலும் தங்கத்தைத் தேடும் சாதியார்’ என்கிறார்.

நரிக்குறவர்கள் தமிழகத்தில் உள்ள நரிக்குறவர் சமூகத்தவர்கள் ஆரவல்லி மலைத் தொடர், மேவார், குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழகத்தில் குடியேறியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் கி.பி. 6 - 7ம் நூற்றாண்டு களில் புலம்பெயர்ந்திருக்கக் கூடும். மராட்டிய மன்னன் சிவாஜி தோற்ற பிறகு தென்னகம் நோக்கி புலம் பெயர்ந்தனர் என்ற கருத்தும் உண்டு. 



நரியினை வேட்டையாடி அதன் இறைச்சியினை உண்டதாலும், நரியின் தோல், பல், நகம், வால், போன்றவைகளை விற்றதாலும் ‘நரிக்குறவர்’ என்றும், குருவிகளை வேட்டையாடி உண்டதால் ‘குருவிக்காரர்’ எனவும் அழைக்கப்படுகிறார்கள். தங்களின் இனப்பெயரை ‘வாக்ரி’ என்று சொல்லும் இவர்கள் தங்களை சத்ரபதி சிவாஜி யின் வம்சத்தினர் என்கிறார்கள். ‘வாக்’ என்றால் மராட்டி மொழியில் ‘புலி’ என்று அர்த்தம். ‘வாக்ரி’ என்றால் புலியினத் தவர்கள் என்று பொருள்.

தமிழ்நாட்டில் 36 வகையான பழங்குடியினர் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உட்பிரிவுகளும் உள்ளன. பொதுவாக, பழங்குடியினருக்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற எதுவும் கிடையாது. எந்த அடிப்படை வசதியும் கிடைக்காததாலும் நாடோடியாய் அலைந்துகொண்டே இருப்பதாலும் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க  முடியாமல் இருக்கிறார்கள்.    
               
யார் இந்த ஹேமமாலினி?

திருவள்ளூர் மாவட்டம் முதப்பை கிராமத்தைச் சேர்ந்தவர். இப்போது கணவருடன் திண்டிவனத்தில் வசித்து வருகிறார். ‘சிறுவயதில் இருந்தே பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களை கவனித்திருக்கிறேன். இதுதான் பின்னாளில் என்னை மானுடவியல் துறையைத் தேர்வு செய்ய வைத்தது’ என்று சொல்லும் ஹேமமாலினி, தன்னுடைய பிஹெச்.டி ஆய்வுக்காக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடி மக்களைச் சந்தித்து வருகிறார்.