மரகத நாணயம்



-குங்குமம் விமர்சனக்குழு

புதுமையாக ஆவிகளையும் அழைத்துக்கொண்டு புதையலைத் தேடிப் போவதே ‘மரகத நாணயம்.’ சேர்த்து வைத்திருக்கிற கடனைத் தீர்க்க வேண்டி சென்னைக்கு வருகிறார் ஆதி. அவரின் நண்பன் டேனியல். இருவரும் சேர்ந்து சிறு திருட்டுகள் செய்து பிழைக்கிறார்கள். பெரும் செல்வத்திற்கு ஆசைப்பட்டு மரகத நாணயத்தைத் தேடிச் செல்லும்போது என்ன நடந்தது என்பதே கதை!

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனியாக ஈர்க்கச் செய்து, ‘சுருக் சுருக்’கென ப்ளாக் காமெடியில் வசனங்களைத் தோய்த்துவிடுவதுடன், இன்னார் ஹீரோ இன்னார் வில்லன் என்று சொல்ல முடியாமல் ஒவ்வொருவரின் மீதும் கதையின் கனத்தை ஏற்றி, கலகலப்பாக தொடங்கிய அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் கவனம் ஈர்ப்பது உண்மை.

ஆவிகளில் அதிகம் கவர்கிறார் முனிஸ்காந்த். தன்னால் இடப்பட்ட ஒவ்வொரு அசைன்மென்டையும் மற்றவர்கள் குளறுபடி செய்து வைக்க மிரட்டுவதும், கெத்து காட்டுவதுமாக தியேட்டரை அதிர வைக்கிறார். மன்னர் இரும்பொறை வாளில் வைத்திருந்த மரகத நாணயம், வெற்றிகளில் அவருக்கு உதவியாக இருந்தது; கடைசியில் கல்லறைக்குள் அவருடன் சேர்ந்தே அது உறங்கியது என கதையில் புதுமை கூறியிருப்பது நிஜம்.

ஹீரோ ஆதி சலித்துக் கொள்ளாமல் கூட்டத்தோடு இணைந்து அத்தனை அம்சங்களிலும் சேர்ந்து மரகதநாணயத்தை மீட்க போராடுவது விறுவிறு! நண்பனாக, அடிக்கடி மாறும் முகபாவனைகளில் வேடிக்கை காட்டினாலும் ரசிக்க வைக்கிறார் டேனியல். சுத்தத் தமிழில் அடுக்கடுக்காகப் பேசும் சங்கிலி முருகன், அனுபவத்தில் மிரட்டுகிறார். முதலில் கிடைக்கிற பிணங்களுக்கு உயிரூட்டுகிற வேலையில் நிக்கி கல்ரானியே மனித உருவெடுப்பது அதிர்ச்சி.

அதிலும் அவர் ரவுடி மாதிரி கால்களைப் பரப்பி வைத்துக் கொண்டு, முரட்டு ஆண் குரலில் பேசத் தொடங்குவது இன்னும் அதிர்ச்சி. அந்த கேரக்டருக்கு அச்சு அசலாகப் பொருந்துகிறார் நிக்கி. ‘நானும் ரெளடிதானி’ல் ஆச்சர்யப்படுத்தியதைத் தொடர்ந்து இதிலும் மிடுக்குடன் இருக்கிறார் ஆனந்த்ராஜ். ஸ்டைல், உச்சரிப்பு, பார்வை என புது இளைஞர்களுக்கும் அவர் பொருந்துகிறார்.

முதல் பாதியில் ஆதியும், நிக்கியும் கண்ணால் கதை பேசுகிற இடங்கள் சுவாரஸ்யம். ஆனால், அதுவும் நிக்கி கல்ரானி ஆவியாக கன்வர்ட் ஆகும்போது முடிந்து போகிறது. பிரம்மானந்தம் கொஞ்ச நேரமே வந்தாலும் சூப்பர்! கேஷுவல்தன்மை அவரிடம் ஆல் டைம் ஃபேவரிட்! ஆங்காங்கே ஹாலிவுட் படங்களின் ஊடுருவல் தட்டுப்பட்டாலும், கதை உள்ளூர் கலருடன் ஃபேன்டஸி சேர்த்து டெக்னிக்கலாக விவரித்திருப்பது படத்தின் சுவாரஸ்ய பிளஸ்.

கிட்டத்தட்ட ஒரே மார்க்கத்தில் நடக்கும் கதையை முடிந்தவரை உற்சாகமாக கண்களுக்குக் கடத்துகிறது பி.வி.ஷங்கர் கேமரா. பாடல்களில் முன்னிலை பெறாவிட்டாலும் திபுநைனன் தாமஸின் பின்னணி இசை பெட்டர்ஸ்கோர். அவ்வளவு கஷ்டப்பட்டு  மீட்ட  மரகத நாணயத்தை திரும்பவும் கொண்டு போய் இருந்த இடத்தில் வைப்பது அயர்ச்சி! துரத்துகிற அந்த துருப்பிடித்த வண்டி முதலில் மிரட்டினாலும், மற்ற இடங்களில் அலுப்பு. ஃபேன்டஸி காமெடிக்கு இன்னும் டெம்போவை உருவாக்கியிருக்க வேண்டும். அதில் நழுவியிருக்கிறார்கள். பட்டை தீட்டியிருந்தால் இன்னும் மின்னியிருக்கும்.