விஜய், அஜித்தை இயக்க வேற ஒரு மேஜிக் வேணும்!



-மை.பாரதிராஜா

சொல்கிறார் ‘இவன் தந்திரன்’ ஆர்.கண்ணன்

‘‘‘இவன் தந்திரன்’ பாடல்கள் கேட்டீங்களா..? பிடிச்சிருக்கா? டீஸர் பாக்கறீங்களா..?’’ எக்கச்சக்க பாசத்தோடு யூ டியூப்பிலிருந்து டீஸரைக் காட்டி வரவேற்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். ‘‘இது ஒரு சின்ன சாம்பிள்தான். படம், இன்ட்ரஸ்ட்டிங்கா வந்திருக்கு. இதுவரை நான் இயக்கின படங்கள்ல ரெண்டு படங்கள்தான் ரீமேக். மத்ததெல்லாம் சொந்த சரக்குதான். ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே ரொம்ப இடைவெளி எடுத்துக்கறேன்னு நண்பர்கள் அக்கறையா விசாரிக்கறாங்க.

ரீமேக்னா ஆறு மாசத்துக்கு ஒருமுறை செய்துடலாம். அப்படி எண்ணிக்கை கூட்ட விருப்பமில்லை. ஒருமுறை மணிரத்னம் சாரை சந்திச்சேன். ‘கண்ணன், நீங்க அடுத்த கட்டத்துக்கு போகணும்’னு அன்பா சொன்னார். அதுக்கான முயற்சிதான் இந்தப்படம். ‘இவன் தந்திரன்’ ஸ்கிரிப்ட்டுக்காகவே ரெண்டு வருஷம் உழைச்சிருக்கேன். வழக்கமான ஃபார்முலாவில் இருந்து வித்தியாசமான மேக்கிங் இருக்கும். இதுல வர்ற ‘bug கேமரா’ காட்சிகள் பேசப்படும். கிராஃபிக்ஸுக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கோம்...’’ ரிலீஸ் பரபரப்பிலும் திருப்தியாகப்
பேசுகிறார் ஆர்.கண்ணன்.

டைட்டிலிலேயே கதை தெரியுதே?
ஆமா. என்னோட படங்கள்ல கருத்து சொல்றேன்னு இதுவரை எந்த அட்வைஸையும் பண்ணினதில்லை. ஆனாலும் சமூக அக்கறையோடுதான் படங்கள் கொடுத்திருக்கேன். ‘இவன் தந்திரன்’ல என்ஜினீயரிங் படிச்சு முடிச்சுட்டு ஃப்ரெஷ்ஷா கல்லூரியிலிருந்து வெளியே வரும் திறமைசாலிகள் சந்திக்கற பிரச்னைகள், சவால்கள், சந்தோஷங்களை விறுவிறுப்பா சொல்லியிருக்கேன். கௌதம்கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்னு மூணு பேரையும் சேர்த்து பின்னப்பட்ட ஒரு உண்மைக் கதை.

இங்க ஒரு என்ஜினீயரிங் முடிச்ச பையனோட மாச சம்பளம், வெறும் பதினைஞ்சாயிரம்தான். ஆனா, வெறும் பத்தாங்கிளாஸ் படிச்ச ஒரு டாக்ஸி டிரைவரோட மாச சம்பளம் அறுபதாயிரமா இருக்கு. அப்ப நாலு வருஷங்கள் சின்ஸியரா படிச்ச படிப்புக்கு என்ன மரியாதை இருக்குனு தோணும் இல்லையா! அப்படி ஒரு அழுத்தமான விஷயத்தை ஜாலியான பொழுதுபோக்கா கொடுத்திருக்கோம்.
 
வில்லன்களா சூப்பர் சுப்பராயன் மாஸ்டரும், ஸ்டன்ட் சில்வா மாஸ்டரும் செய்திருக்காங்க. ரெண்டு பேருமே அவ்வளவு இயல்பா பண்ணியிருக்காங்க. பிரசன்னா எஸ்.குமாரோட ஒளிப்பதிவில் மழை சீக்குவென்ஸ் கவிதையா வந்திருக்கும். மழைக்காட்சிகள் ஃபிரேம்லதான் அழகா இருக்கும். ஆனா, அதை படமாக்கும்போது ஸ்பாட்டுல சொதசொதன்னு எல்லா இடங்கள்லேயும் தண்ணீர் தேங்கி நிற்கும். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அத்தனை பேரும் நடிச்சுக் கொடுத்தாங்க.

இந்தப் படத்தை நானும், என்னோட திருநெல்வேலி நண்பர் ராம்பிரசாத்தும் சேர்ந்து தயாரிச்சிருக்கோம். படம் ரெடியானதும் தனஞ்செயன் சாருக்கு காட்டினேன். நேஷனல் அவார்டு வாங்கின ஒரு விமர்சகர் அவர். அதனால படத்தைப் பத்தி எதாவது விமர்சனம் பண்ணுவார்னு நினைச்சேன். ஆனா, அவர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ‘நானே ரிலீஸ் பண்றேன் கண்ணன்’னு சொல்லிட்டார்!

கௌதம் கார்த்திக் ஷூட்டிங்குக்கு சரியா வந்தாரா?
அவரை கமிட் பண்றதுக்கு முன்னாடி, கௌதமும் அவங்க அப்பா மாதிரிதான், டைமிங் ஃபாலோ பண்ண மாட்டார்னு நிறைய பேர் சொன்னாங்க. எனக்கும் கொஞ்சம் தயக்கமாதான் இருந்தது. ஆனா, அதெல்லாம் பொய். நான் கேள்விப்பட்டதுக்கு நேர்மாறாக இருந்தார் கௌதம். எப்ப ஷூட்டிங்னாலும் கரெக்ட்டான டைமுக்கு வந்தார். சொன்னதை சிறப்பா பண்ணினார். ரியலாகவே அவரும், ஆர்.ஜே.பாலாஜியும் என்ஜினீயரிங் ஸ்டூடன்ட்ஸ். ஸோ, இந்தக் கதைக்கு ரொம்ப பொருத்தமா இருந்தாங்க.

படத்துல ஷ்ரத்தாவுக்கு டூயட்டே இல்லையாமே?
படத்துல மொத்தமே ரெண்டு பாடல்கள்தான். ரெண்டுமே மான்டேஜ் ஸாங்ஸ். ஷ்ரத்தாவுக்கு டூயட் இல்லைங்கறதுல எந்த வருத்தமும் இல்லை. அவங்க கன்னடத்துல நடிச்ச ‘யு டர்ன்’ படம் பார்த்துதான் இந்த கதைக்குள்ள வந்தாங்க. அப்பவே அவங்க, ‘மணி சார் படத்துல சின்ன போர்ஷன் பண்றேன்’னு சொன்னாங்க. இதுல ஃபைனல் இயர் ஸ்டூடண்டாக வர்றாங்க. ரொம்ப அழுத்தமான கேரக்டர். படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே அவங்க நிவின்பாலியோட ‘ரிச்சி’, ‘விக்ரம் - வேதா’வில் விஜய்சேதுபதியோடனு ரெண்டு படங்கள் கமிட் ஆகிட்டாங்க.

உங்க இயக்கத்துல சந்தானம் நாலு படங்கள் பண்ணியிருக்கார். என்ன சொல்றார் ஹீரோ சந்தானம்?
சந்தோஷமா இருக்கு. அவரை ஹீரோ ஆக்கணும்னு முதன் முதலில் முயற்சி பண்ணினது நான்தான். ‘ஐயையோ... ஹீரோவா?’னு அவரும் பயந்துக்கிட்டேதான் இருந்தார். ‘நீங்க அடுத்த கட்டத்துக்கு போகணும் பிரதர்’னு சொல்லியிருக்கேன். அவரை ஹீரோவா வச்சு, முதலில் நான் படம் பண்ணியிருக்க வேண்டியது. சில சந்தர்ப்பங்களால அது கூடிவரல. சந்தானம் ரொம்ப திறமையானவர். எப்ப ஸ்பாட்டுக்கு வந்தாலும் படத்தைப் பத்தியே சிந்திச்சிட்டிருப்பார். அவரை அடுத்து நான் பிரமிச்சது ஆர்.ஜே.பாலாஜியைத்தான்! அவரும் அப்படி ஒரு உழைப்பாளி.

நீங்க மணிரத்னம் அசிஸ்டென்ட். இயக்குநராகி பத்து வருஷங்களாகப் போகுது. விஜய், அஜித்னு மாஸ் ஹீரோக்களை எப்ப டைரக்ட் செய்யப் போறீங்க?
உண்மையைச் சொல்லணும்னா, மாஸ் ஹீரோக்களுக்கான கமர்ஷியல் கதை பண்றதுல இன்னும் நான் முழுமையான கவனம் செலுத்தல. அதுக்கு வேற ஒரு மேஜிக் வேணும். என்னை நம்பி படம் கொடுக்கும் தயாரிப்பாளரை நடுரோட்டுல கொண்டு போய் விட்டுடக்கூடாதுங்கற கவனமும் பொறுப்பும் எனக்கு இருக்கு.

அஞ்சு கோடி பட்ஜெட்ல படம் பண்ணும்போதே, புரொட்யூசர் போட்ட காசை திருப்பி எடுத்திடணும்னு பயமாவும் இருக்கு. விஜய் சார், அஜித் சார் படங்கள் எல்லாம் 65 கோடி, 70 கோடிங்கறப்ப ரொம்ப ரொம்ப கவனமா கையாளணும். அப்படி பட்ஜெட் படம், சரியா போகலைனா அந்த தயாரிப்பாளர் எழுந்துக்க பல வருஷம் ஆகும். ஸோ, என்னை இன்னும் தயார்படுத்த வேண்டியிருக்கு. இன்னும் ரெண்டு மூணு படங்களுக்குப் பிறகு நீங்க சொன்னது நடக்கலாம்.