மாற்றுத்திறனாளி மாடலிங் ஏஞ்சல்



சோபியாவின் சக்சஸ் கிராஃப்

-ப்ரியா

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். அது கேரளாவின் ஒரு கோயில் திருவிழா. ஒரே கூட்டம்; மக்களின் ஆரவாரம்; கலகலப்பு. அந்தக் கூட்டத்தில் தங்களது ஒரு வயதே ஆன பிஞ்சுக் குழந்தையை கையில் வைத்துக் கொஞ்சியபடி இருக்கின்றனர் ஒரு இளம் தம்பதியர். அவர்கள் சோபியாவின் பெற்றோர். திடீரென ஊர்வலத்தில் வெடி போடத் தொடங்குகிறார்கள். வேட்டுச் சத்தம் கேட்டு எல்லா குழந்தைகளும் வீறிட்டு அழுகின்றன.

சோபியாவோ அழாமல் அமைதியாக இருக்கிறார். அம்மாவுக்கு ஏதோ தவறாகப்படுகிறது. வீட்டுக்கு வந்ததும் ஒரு கையில் தட்டும் இன்னொரு கையில் கரண்டியும் எடுத்துக் கொண்டு குழந்தையின் பின்புறம் நின்று கொண்டு தட்டில் கரண்டியால் ஓங்கித் தட்டுகிறார். குழந்தையிடம் எந்த சலனமும் இல்லை.

டாக்டரிடம் செல்கிறார்கள். அவர்கள் எதை நினைத்து பயந்தார்களோ அதைத்தான் சொல்கிறார் டாக்டர். ஆமாம்... சோபியாவுக்கு பிறவியிலேயே காது கேட்காது. குழந்தைக்குச் செவித்திறன் கிடையாது என்பதால் பேச்சுத்திறனும் இருக்காது. தலையில் இடியே இறங்கியது போலிருந்தது. ஒரு குழந்தை, அதிலும் பெண் சிசு... காது கேட்க; வாய் பேச முடியாது என்றால் அவள் எதிர்காலம் எப்படி இருக்கும்? அஞ்சிப் பதறுகின்றனர் அவர் பெற்றோர்.

ஆனால், நடந்தது என்ன?
சோபியா ஜோ இப்போது புகழ்பெற்ற மாடல்; மிஸ் தென் இந்தியா பட்டம் வென்ற அழகி; விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை அள்ளிக் குவிக்கும் சாம்பியன். தன்னுடைய உடலின் குறைபாட்டை சற்றும் பொருட்படுத்தாமல் தன் நிறைகளைப் பெருக்கிக் கொண்டு சாதனை ஏணியில் பயணித்துக் கொண்டிருக்கும் தங்கத் தாரகை. டெல்லியில் இருக்கும் இந்த தேவதையை மின்னஞ்சல் வழியே தொடர்பு கொண்டோம்.   

எப்படி இது சாத்தியமாச்சு?
என் பெற்றோர்கள்தான் என் பலம். என் உடல் குறையை அவர்கள் உணரவிட்டதே இல்லை. எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான் பேச வேண்டும் என்று ஆசை. பொதுவாக இந்தப் பிரச்னை உள்ளவர்கள் சைகை முறையில்தான் பேசுவார்கள். அப்பாவும் அம்மாவும் எனக்கு லிப் ரீடிங் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

அவர்களும் அதைக் கற்றுக்கொண்டனர். ஆறாம் வகுப்பு வரை மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியில்தான் படித்தேன். அதற்குப் பிறகு கல்லூரி வரை எங்களுக்கான சிறப்புப் பள்ளியில் படித்தேன். எனக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெறுவேன். குறிப்பாக, ஷாட்புட் மற்றும் டிஸ்கஸ் எறியும் விளையாட்டு. அதில் தொடர்ந்து ஆர்வமுடன் பங்கேற்றேன். விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் பரிசுகளை வென்றிருக்கிறேன்.

மாடலிங் துறையில் எப்படி நுழைந்தீர்கள்?
2010ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் கன்ஜீனியாலிட்டி போட்டியில் தாலு கிருஷ்ணதாஸை சந்தித்தேன். அவர் ஒரு ஃபேஷன் கோரியோகிராஃபர். அவர்தான் மாடலிங் பயிற்சி அளித்தார். மாடலிங் என்னுடைய நீண்ட நாள் கனவு என்றே சொல்ல வேண்டும். மேடையில் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா போல் நடந்து வர வேண்டும் என்பது என் ஆசை. என்னால் அதைச் செய்ய முடியுமா என ஏக்கத்துடன் நினைத்துக் கொள்வேன்.

முதல் முறை மேடை ஏறி நடந்த போது என் கனவு நனவானது போன்ற உணர்வு ஏற்பட்டது. பிறகு மாடலிங்கே என் தொழிலாக மாறியது. கொச்சின், கொல்லம் தவிர சர்வதேச அளவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோக்களிலும் பங்கு பெறத் தொடங்கினேன். 2010ம் ஆண்டு ‘மிஸ் கன்ஜீனியாலிட்டி’ பட்டத்தைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் அண்ட் மிஸ் பாடி பெர்ஃபெக்ட் போட்டியில் ‘மிஸ் எடிக்கெட்’, மிஸ் தென்னிந்தியா போட்டியில் ‘மிஸ் டேலன்ட்’ பட்டமும்பெற்றேன்.

2014ம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சர்வதேச மாடல்களான லிசா ஹேடன், ரீமா கல்லிங்கலுடன் இணைந்து ஷோ ஸ்டாப்பராக வந்தேன். யாரைப் போல் மாடலிங் துறையில் வரவேண்டும் என்று நினைத்தேனோ அவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி செய்தபோது  எனக்குள் மலர்ந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கான அழகிப்போட்டியில் கலந்துகொண்ட அனுபவங்களைச் சொல்ல முடியுமா?
இந்தத் துறையில் இனிப்பை ருசித்த அளவுக்குக் கசப்பையும் கண்டுள்ளேன். ஒருமுறை ப்ராக், செக் குடியரசில் ‘மிஸ் டெஃப் அண்ட் டம்ப்’ ஃபேஷன் போட்டி நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து தேர்வானேன். வெளிநாடு என்பதால் அம்மா என்னைத் தனியாக அனுப்ப பயந்தார்.

ஆனாலும் கலந்துகொண்டேன். ஆனால், சர்வதேச அளவில் தேர்ச்சி என்ற சந்தோஷத்தை என்னால் முழுமையாகச் சுவைக்க முடியவில்லை. காரணம், இங்கு உள்ளவர்களே கூட எனக்கு உதவி செய்ய முன் வரவில்லை. மற்ற நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி சார்ந்த ஒருவர் துணையாக வந்தார்.

ஆனால் எனக்கு நம் நாட்டாலோ நிகழ்ச்சி நடத்துபவர்களாலோ யாருமே துணையாக நியமிக்கப்படவில்லை. சிகை மற்றும் உடை அலங்காரம் செய்ய உதவியாளர்களும் இல்லை. இந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களும் எனக்குச் சரியான தகவல்கள் கொடுக்கவில்லை. இப்படியான காரணங்களால் போட்டியில் இருந்து நான் விலக்கப்பட்டேன். நம் நாட்டை முன்னிலைப்படுத்தி போட்டியில் பங்கு பெற்றேன். ஆனால், நம் நாட்டின் சார்பாக எனக்குப் போதிய உதவிகள் கிடைக்கவில்லை... 

அடுத்து..?
மாடலிங் நிரந்தரம் இல்லை. எனவே, எனக்கே எனக்கு என ஒரு தொழிலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இப்போது டில்லியில் இருக்கிறேன். ஆனால், ஒன்று. நான் எந்த வேலை செய்தாலும் அதை முழுமையாக நிறைவாகச் செய்வேன். அதுதான் என் இயல்பு. குறை என்பது நம் மனநிலையில்தான் உள்ளது. நம் உடலில் இல்லை. ஒவ்வொரு மனிதரிடமும் பிளஸ், மைனஸ் இரண்டுமே இருக்கும். வெற்றியாளராக வேண்டும் என்று முடிவு செய்தால் நம்மிடம் உள்ள பிளஸ்ஸை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு முதலில் மைனஸ் என்ன என்பதை அறிய வேண்டும்!