வானவில் கிராமம்!



-த.சக்திவேல்

ஏழு வண்ண வானவில் அப்படியே மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு பூமியில் இறங்கி ஒரு கிராமத்தின் மீது படர்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது கெம்பங்க் பெலங்கி. இந்தோனேஷியாவின் ஒரு மலைச்சாரலில் அமைதியாக அமர்ந்திருந்தது கெம்பங்க் பெலங்கி என்ற குக்கிராமம். கடந்த மாதம் வரைக்கும் இப்படியொரு கிராமம் இருக்கிறது என்றே யாருக்கும் தெரியாது. இந்தோனேஷியர்களுக்கும் கூட.

ஆனால், இன்று இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்... என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கெம்பங்க் பெலங்கி தான் டிரெண்ட். வரும் காலங்களில் உலகின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்தக் கிராமமும் இருக்கலாம் என்கிறார்கள். ஏறக்குறைய 200 வீடுகள் மட்டுமே உள்ள இந்தக் கிராமத்தை அரசே தன்னுடைய சொந்த செலவில் புதிதாக வடிவமைத்திருக்கிறது.

ஓவ்வொரு வீட்டுக்கும் வானவில்லின் வண்ணங்களில் முப்பரிமாண முறையில் பெயின்ட் அடித்திருக்கிறது. வீட்டின் சுவர்களில் அழகழகான ஓவியங்கள், நடைபாதையில் பசும் புல்வெளிகள், கண்ணாடி போன்ற தூய்மையான சாலைகள்... என ஓவியம் போல கெம்பங்க் பெலங்கி காட்சியளிக்கிறது!