கலர் பென்சிலில் மாயாஜாலம்!



-ஷாலினி நியூட்டன்

ஏன் நுண்கலைகளில் ஒன்றாக ஓவியத்தை சேர்த்தார்கள் என்று இப்போது புரிகிறதா? அதேதான். இங்கு வெளியாகி இருக்கும் அனைத்து ஓவியங்களும் வாட்டர் கலரில் வரையப்பட்டவை அல்ல. ஏன், கர்சரை நகர்த்தி கம்ப்யூட்டரில் தீட்டப்பட்டதும் அல்ல. மாறாக பட்டாடை கட்டிக்கொண்டு கல்லாங்காய் விளையாடும் பெண்கள், கம்பளி தைக்கும் பெண்கள், ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருக்கும் பெண் என சகலமும் நுணுக்கத்துடன் வரையப்பட்டது வெறும் கலர் பென்சிலால்தான்!

இந்த ஆச்சர்யத்துக்கு சொந்தக்காரர் - ஷஷிகாந்த் தோட்ரே. ‘‘படிப்புல பெரிய ஈடுபாடு இல்ல. எப்படியோ பத்தாவது வரை போயிட்டேன். என் விருப்பம் எல்லாம் சின்ன வயசுலேந்தே ஓவியம் வரையறதுலதான். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிரா மாநிலத்துல இருக்கிற குக் கிராமத்துல. அங்க ஓவியம் வரைய வாட்டர் கலர் எல்லாம் கிடைக்காது. அதிகபட்சம் கலர் பென்சில்தான் கிடைக்கும்.

மிஞ்சிப்போனா ஸ்கெட்ச், க்ரேயான்ஸ். இந்த இரண்டிலும் எனக்கு விருப்பமில்லை. அதுக்காக குறை சொல்றேன்னு அர்த்தமில்லை. என்னவோ ஸ்கெட்சும் க்ரேயான்சும் என்னை ஈர்க்கலை. அவ்வளவுதான். ஸோ, இயல்பாவே என் சாய்ஸ் கலர் பென்சிலா இருந்தது. ஒண்ணு தெரியுமா..? ஓவியம் வரைய பெயிண்ட், ஆயில், அக்ரிலிக்னு பல விஷயங்கள் இருக்குன்னே எனக்கு இப்பத்தான் தெரியும்!

பென்சில்ல கூட பல வெரைட்டி இருக்குனு சுத்தமா தெரியாது...’’ என்றபடி பளீரென்று சிரிக்கிறார் ஷஷிகாந்த் தோட்ரே. ‘‘இப்படி இருந்த என் உலகத்தை கலர் பென்சிலால வர்ணமாக்கினேன். என் கற்பனைகளுக்கு எல்லாம் உயிர் கொடுத்தேன். எந்நேரமும் கலர் பென்சிலும் கையுமா அலைஞ்சேனே தவிர படிப்புல கவனம் செலுத்தலை.

விளைவு... பத்தாவது எக்சாம்ல தோல்வி...’’ என்று சொல்லும் ஷஷிகாந்துக்கு அவரது அம்மா, சகோதரிகள், கிராமம், இயற்கை, தன் சொந்த ஊர் பெண்கள்...தான் ஓவிய இன்ஸ்பிரேஷன்ஸாம். “அப்பா மேஸ்திரி. தொடர்ச்சியா டைரி எழுதுவார். தன்னோட டைரியோட முதல் பக்கத்துல ஒரு வீடும் பூவும் வரைஞ்சிருப்பார். முதன் முதல்ல என் கவனம் ஓவியத்துல குவிஞ்சது அதைப் பார்த்த பிறகுதான்.

அப்பா, அம்மா கூடவே நானும் கட்டிட வேலை செஞ்சேன். அங்க ஓவியம் வரையறதுக்கான பல இமேஜஸ் கிடைச்சது. ஓய்வு நேரங்கள்ல அதை எல்லாம் பேப்பர்ல கொண்டு வர முயற்சி செஞ்சேன். ஓவியம் தொடர்பா படிக்கணும்னு ஆசை. ஆனா, அதுக்கெல்லாம் படிப்பு இருக்கானு தெரியாத வாழ்க்கை. தேடித் தேடிப் பார்த்தேன். ஓவியத்துக்குனு படிப்பு இருக்கறதும், அதை எப்படி படிக்கணும்னும் தெரிஞ்சுகிட்டேன்.

இதுக்கு நுழைவுத் தேர்வு எல்லாம் இருக்கறது கூட தெரிஞ்சது. ஆனா, எல்லாமே என் குடும்ப சூழ்நிலைக்கு அப்பாற்பட்டதா இருந்தது. ஆனாலும் ஆசை விடலை. ஓவியம் தொடர்பா படிக்கறதுக்காகவே பத்தாவது, பன்னிரெண்டாவது பாஸ் செஞ்சேன். முட்டி மோதி ஓவியக் கல்லூரிலயும் சேர்ந்தேன். ஆனா...’’ நிறுத்திய ஷஷிகாந்த், சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.

‘‘குடும்ப வறுமை, ரெண்டு சகோதரிகள், ஒரு சகோதரன்னு சாப்பாட்டுப் பிரச்னை... இதெல்லாம் சேர்ந்து ஒண்ணரை மாசத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியாம செய்தது. படிப்பை அப்படியே விட்டுட்டு திரும்பவும் கிராமத்துக்கே வந்துட்டேன். ஆனா, அப்பா கூட சேர்ந்து கட்டிட வேலை பார்க்க முடியலை.

கலர் பென்சிலும் பேப்பருமா உட்கார்ந்து மனசுல இருந்த கற்பனைகளுக்கு எல்லாம் உயிர் கொடுக்க ஆரம்பிச்சேன்...’’ என்று சொல்லும் ஷஷிகாந்த் வாழ்க்கையில் இந்தக் காலகட்டத்தில்தான் மகத்தான திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தன் நண்பர் வழியாக மும்பையில் நடந்த ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறார். பரிசையும் வென்றிருக்கிறார்.

அப்போது ஆரம்பித்த பயணம் இப்போது வரை தொடர்கிறது. எண்ணற்ற பரிசுகள், மகாராஷ்டிர மாநில விருது, கவர்னர் விருது, தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பரிசுகள்... என அவரது மகுடத்தில் வைரங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்று ஷஷிகாந்தின் ஓவியங்களுக்கு மேலை நாடுகளில் அவ்வளவு கிராக்கி. டாலர்களில் வாங்கிக் குவிக்க அம்மக்கள் போட்டி போடுகிறார்கள்!