எதார்த்தத்தில் செயல் வடிவம் பெறாத ஆசையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும்..?



பதில் சொல்கிறார் மாயவன் சி.வி.குமார்

-நா.கதிர்வேலன்

‘‘ம்ம்ம்... சினிமா எனக்கு தீராத ஒரு கனவு. டைரக்டர் ஆனதை நல்ல மாற்றமா நினைக்கிறேன். சினிமாவின் அதி தீவிர காதலனாக இருந்தால், அவர் லைட்மேன், கேமராமேன் இப்படி எப்படி இருந்தாலும் இந்த இடத்திற்கு வரமுடியும். தானாக கனிகிற விஷயம் இது. நலன் குமாரசாமி போன்றவர்கள் ‘உங்களால் சினிமாவை சிறப்பாகச் செய்ய முடியும்’ என்றார்கள். நல்ல அவகாசம் எடுத்துக்கிட்டு என்னையும் புதுப்பிச்சுக்கிட்டு செய்திருக்கிற படம்தான் ‘மாயவன்’.

சில ஸ்கிரிப்ட்தான் நம்மை உள்ளே கொண்டுபோய் நிறுத்தும். ஆழமா இறங்கலாம்னு பரபரக்கச் சொல்லும். ‘நல்ல சினிமா எது’ என்பதில் உங்களுக்கு ஒரு கருத்திருக்கும், எனக்கு ஒரு கருத்திருக்கும். ஆனால், இரண்டு பேரும் ஒத்துப்போகிற இடம் வருமில்லையா? அந்த இடத்தில் ‘மாயவன்’ இருக்கு...’’ சிறப்பாகப் பேசுகிறார் சி.வி.குமார். ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்’, ‘தெகிடி’ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த படங்களின் தயாரிப்பாளர். இப்போது இயக்குநர்! 

‘மாயவன்’ என்ன மாதிரி கதையம்சம் கொண்ட படம்?
தொடர்ச்சியாக நடக்கிற கொலைகளை தொடர்ந்து போய் கண்டுபிடிக்கிற ஒரு போலீஸ் ஆபீஸரின் கதை. Super cop கிடையாது. ஒரு புள்ளியை கண்டுபிடிச்சு, நூல் பிடிச்சு போகிற ஆள். நம்ம எல்லார் மனசிலும் ஒரு ஆசை இருக்கும். வெளியே சொல்லக்கூடியது, சொல்ல முடியாதது என அதுல பிரிவு இருக்கு.

இதைத்தாண்டி சில ஆசைகள் உங்கள் கற்பனைக்குள்ளேயே இருக்காது. கற்பனைக்குள்ளேயே இல்லாமல் எவ்வாறு ஆசை இருக்கும்? இன்றைய சூழலில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத, அதாவது யதார்த்தத்தில் செயல் வடிவம் இல்லாத ஆசையாக அவை இருக்கும். அவை நாகரீகம், நாகரீகம் அற்றவை என்பதற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

அந்த ஆசைக்கான வழித்தடம் இன்றைய தேதிக்கு சாத்தியமற்று இருக்கலாம். ஆனால், ஒரு சூழ்நிலையில் அது நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் என்னவாகும் என்பதே ‘மாயவன்’. இது சீரியல் கில்லர் ஜானர். அடுத்தடுத்து கொலைகள், அடுத்தடுத்து வில்லன்கள்... அதில் மாட்டி திணறும் ஒரு போலீஸ் அதிகாரியாக கதாநாயகன்.

எப்படி அத்தனை கொலைகளுக்கான விடையையும் கண்டுபிடிக்கிறான், தன்னைவிட பன்மடங்கு பலம் கொண்ட எதிரிகளையும் எவ்வாறு எதிர்க்கிறான் என்பதே சுவாரஸ்யம். போலீஸ் இன்வெஸ்டிகேஷன் பாணியில் சற்று யதார்த்தமும் அட்ரினலின் எகிறும் பதைபதைப்பும் எமோஷனும் கலந்து பயணமாகும் கதை என்பதால் பட்ஜெட் ஏழு கோடிக்கு மேல் ஆகிவிட்டது.

நீங்க நினைத்திருந்தால் பெரிய நடிகர்கள் வந்திருப்பாங்க...
இதில் ஹீரோன்னு ஓர் இடத்தில் கதை நிற்காது. அடுத்தடுத்த விசாரணைன்னுபடி நிலைகள் இருக்கு. இதில் ஹீரோ வர்ஷிப் கிைடயாது. அப்படியிருக்கும்போது இதில் சந்தீப் அழகாகப் பொருந்தினார். படத்தில் தெரிஞ்சது அவரோட வேறு முகம். ஒரு நல்ல ஹீரோவுக்கான எல்லாத் தகுதிகளோடும் அவர் இருக்கார். இந்தப் பொண்ணு லாவண்யா திரிபாதி ஒரு சைக்கியாட்ரிஸ்ட். சில தெலுங்குப் படங்களைப் பார்க்கும்போது அவரின் யதார்த்தமான நடிப்பு மனசில் நின்னது.

டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப்னு ஏகப்பட்ட வில்லன்கள்...
டேனியல் பாலாஜியைத் தெரியும். அவரைத் தாண்டி வருகிறவர், அவரையும் தூக்கிச் சாப்பிடணும். அப்படி ஓர் ஆள் வேணும். படம் ஷூட்டிங் போயி 25 நாட்கள் ஆகியும் அப்படி ஒரு ஆளை கண்டுபிடிக்க முடியலை. என்னுடைய அசோசியேட் திடீரென்று சொன்ன பெயர்தான் ஜாக்கி. ‘அடடா, எப்படிடா இந்தப் பெயர் ஞாபகத்தில் இல்லாமல் போச்சு’ன்னு நினைச்சு அவரைப் பிடிச்சோம். ரகுவரன் மாதிரி அவ்வளவு உயரத்தில், படு வித்தியாசமான நடிப்பில் அலற வைச்சிட்டுப் போயிட்டார். சும்மா சொல்லக்கூடாது, சில நடிகர்களின் இடங்களை வேறு யாரும் இட்டு நிரப்ப முடியாது போல. ஜாக்கி அதில் ஒருவர்.

எப்படி வந்திருக்கு மியூசிக்..?
ஜிப்ரானை கவனிச்சுக்கிட்டே இருக்கேன். ரொம்ப அடக்கமா, ஆனால் பாடல்கள் அருமையாக வந்துக்கிட்டே இருக்கு. இதில் பின்னணிக்கு கடுமையான இடங்களும், வேலைகளும் இருக்கு. அப்புறம் இந்தப் படத்தை புரிஞ்சு கொள்கிற இயல்பு வேணும். இது எல்லாமே அவர்கிட்டே இருக்கு. ஒட்டு மொத்த மனித இனமும் தோன்றிய நாளிலிருந்து தேடிக்கிட்டு இருக்கிற சில விஷயங்கள் இருக்கு. அதை அடைய முடியுமா? அதற்கான தேடல் என்பதால் இதில் இசைக்கும் ஒரு முக்கியப் பணியிருக்கு.

இப்போ டைரக்டர் ஆனதும், அவங்களோட கஷ்டம் தெரியுதா...?
அப்பவே தெரிஞ்சதுதான். நான் என் டைரக்டர்களை மதிச்சு வந்திருக்கேன். ஆனால், அவர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்படணும். 10 கோடி ரூபாய்னு தயாரிப்புக்கு நிர்ணயம் செய்த பிறகு ஏழெட்டு கோடியில் படத்தை முடிச்சுக் காட்டணும். ஏகப்பட்ட பணம் புழங்குகிற, பதட்டத்தில் இருக்கிற இடத்தில் டைரக்டர்களின் திறன் முக்கியமானது.

சினிமாங்கிறது தயாரிக்கிறவர்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல, அதை பார்க்கிறவர்களின் சந்தோஷமும் கலந்திருக்கு. பட்ஜெட்டை மீறி காவியத்தைக் கொடுத்தால்கூட, தயாரிப்பாளர்களின் மகிழ்ச்சி போயிடும். இப்போது வருகிற இயக்குநர்கள் அனுபவம், திறமை, செலவழிக்கிறதில் கட்டுப்பாடுன்னு அமைஞ்சு வந்தாலே போதும். சினிமா நல்லாயிருந்தால் அதைவிட சிறப்பு வேறு எதுவும் இல்லை. எப்பவும் ஒரு கலைஞனை அவனோட வயசு, அனுபவம், பக்குவம்னு ஏதாவது ஒண்ணு அடுத்தடுத்து கையைப் பிடிச்சு அழைச்சிட்டு போகுது. அதற்கு இயக்குநர்கள் தயாராக இருக்கணும்னு விரும்புகிறேன்.