அறை எண் 22



-மோனிகா

சோவென விழும் அருவியின் இரைச்சல் பொங்கியெழும் ஆனந்தத்தையும் தரவல்லதாக இருந்தது. நீண்ட நேரம் அதன் நீரலையில் ஆடியிருக்க வேண்டும். தலைமுடி பிடரியோடு ஒட்டியிருந்தது. ஆடைகள் ஈரமாக உடலைக் கவ்விக் கொண்டிருந்தன. ஈரத்தை உதறி முடிக்கும் முன் நீர்ச்சுழி மலை முகட்டின் எல்லை நோக்கி உந்தத் தொடங்கியது.

மாபெரும் உந்தலால் திடீரென கீழே விழ... பள்ளம் பள்ளம்... விழுகையில் ஒரு கணம் மூச்சு நின்றுவிடுவது போல் ஒரு நெஞ்சடைப்பு. திடீரென சுவாசம் முட்டித் திரும்புகையில் ஒரு நீண்ட ஆற்றின் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள் சொப்னா. ஆற்றின் இரு மருங்கிலும் புதர்கள், நாணல்கள், கோரைப்புற்கள். நீரின் நடு நடுவே பாறைத்திட்டுக்கள்.

பாறைகளின் மேல் மோதிக் கொள்ளாமல் லாவகமாக நீரலைகளின் விசைக்கு உகந்தவாறு தன் உடலை தெப்பம் போல் செலுத்தி மிதந்து கொண்டிருந்தாள். சட்டென்று ஆறு மக்கள் நடமாட்டமில்லாத நெடுஞ்சாலையாக மாறியது. சாலை செல்லச் செல்ல ஊர்களும், வீடுகளும் வாகனங்களுமான தெருவாக மாறியது. தெரு ஒரு பெரிய நாகத்தின் நெளிவு சுளிவுகளுடன் ஒரு தண்ணீர்ப் பாம்பாக நீண்டு கொண்டிருந்தது.

அதன் நெளிவு சுளிவுகளுக்கிடையே மறுபடியும் தனது உடலை லாவகமாகச் செலுத்தி ஒரு கடிகாரத்தின் நேர்த்தியுடன் ஓடிக்கொண்டிருந்தாள். ‘‘சொப்னா மேடம், ஏன் இப்படி ஓடறீங்க. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு...” என்றாள் பின் தொடர்ந்து வந்த சுகன்யா. “எனக்கு நிதானமா நடக்கத்தெரியாது சுகி. என்ன செய்ய...” ஆமாம்.

நடை என்றாலே அவளுக்கு ஓட்டம்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் நடந்ததே இல்லை. ஓட மட்டுமே செய்திருக்கிறாள். ஓட்டமும் நடையுமாக அவளும் சுகியும் பரீட்சை கமிட்டி அறையை அடைந்தபோது, அது அங்கு ஒரு ராணுவ முகாம்போல இயங்கிக் கொண்டிருந்தது. கேள்வித்தாள்களும் பதில்தாள்களும், கட்டுவதற்கான நூல் கட்டுகளும், அறை எண்கள் தாங்கிய பழுப்பு நிற உறைகளில் இடப்பட்டு மேசைகள் மேல் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொருவரும் வேகவேகமாக வினாத்தாள்களையும் பதில் தாள்களையும் எண்ணி சரிபார்த்துக் கொண்டிருந்தனர். இவற்றைத் தூக்கிக் கொண்டு ஒரு நூறு மீட்டர் நடந்து லிஃப்ட் டில் ஏறி ஐந்தாவது மாடியில் உள்ள பரீட்சை எழுதும் அறைக்குச் செல்ல வேண்டும். எட்டு பேருக்கு மேல் நுழைய முடியாத அந்த லிஃப்ட்டுக்காக ஒரு பெரிய வரிசையே காத்துக் கிடக்கும்.

அவ்வளவு விடைத்தாள்களையும் சுமந்து கொண்டு நடப்பதென்பது மிகவும் சிரமாக இருந்த நிலையில் நிர்வாகம் பெரிய பெரிய கட்டைப்பைகளைக் கொடுத்து தாள்களைத் தூக்கிச் செல்ல வசதி செய்து கொடுத்திருந்தது. அப்போதும் சில அறைகளில் காற்றும் மெல்லிய தேகம் கொண்ட பரீட்சை மேற்பார்வையாளர்களும் மட்டுமே செல்ல முடியும் என்கிற வகையில் இருக்கைகள் நெருக்கமாக இடப்பட்டு கிட்டத்தட்ட நூறு மாணவிகள் வரை அமர்த்தப்பட்டிருப்பார்கள்.

முதல் ஒரு மணிநேரம் அவர்களது விடைத்தாள்களில் கையெழுத்திடுவதிலும் அவர்களது பதிவைக் கையெழுத்திட்டு வாங்கிக் கொள்வதிலும் சென்றுவிடும். கடைசி ஒரு மணி நேரம் எல்லோரும் உபரி விடைத்தாள் கேட்கத் தொடங்குவார்கள். ஒவ்வொரு மாணவியிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு உபரி விடைத்தாளை ஒப்படைக்க வேண்டும்.

மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு என மாணவிகள் மாறி மாறி மேற்பார்வையாளர்களைப் பல்வேறு மூலைகளுக்கு அலைக்கழித்துக் கொண்டே இருப்பார்கள். இளம் உதவியாசிரியைகள் அமைதியாக வேலை செய்து கொண்டிருக்க முதுமை தள்ளியவர்கள் மட்டும் முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்கள். சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு இருவர் மேற்பார்வை பார்க்கும் அறையே நல்லது.

அப்போதுதான் அவர்கள் நடுவில் கழிப்பறைக்குச் செல்லமுடியும். தேநீர் கொண்டுவரும் பணியாளர் அந்த முதல் மற்றும் கடைசி மணி நேரங்களைத் தவிர்த்து நடுவில் வந்தாரானால் நன்று. இல்லையென்றால் தேநீர் குடிப்பதற்கு நேரமும் கிட்டாது. பேப்பர்களை எண்ணியவாறு சிறிது சாய்வுள்ள நாற்காலியில் அமர்ந்து விட்டாள் சொப்னா. தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டமையால் காலை உணவைத் தவிர்க்கவேண்டிய கட்டாயம். சில நாட்கள் இப்படி ஆகிவிடுகிறது.

கண்களை மூடி நிகழ்வுகளை அசைபோட ஆரம்பித்தாள் சொப்னா. தொலைக்காட்சி ஒளியூட்டப்பட்டது, சந்தனக் கலரில் சட்டை போட்டுக் கொண்டு நரைத்த தலையுடன் ஒருவன் சொல் கூசாமல் ‘பாப்ரி மஸ்ஜித் என்னும் அவமானச் சின்னத்தை அழித்துவிட்டோம்’ என்றும், ‘சிறுபான்மையினரின் கட்சி, மதம் சாரா கட்சி எங்கள் கட்சி’ என்றும் பேசிக் கொண்டிருந்தான். 

காட்சிகள் மாறின. ஒரு பெரிய மைதானத்திற்கு நடுவே நடந்து கொண்டிருந்தாள் சொப்னா. பரீட்சைத் தாள்களின் கனத்தில் தோள்பட்டை வலிக்கத் தொடங்கியது. கண் முன்னே பரவிக்கிடந்த மணல் படுக்கை. மேலே பளிச்சிடும் மஞ்சள் ஒளியுடன் சூரியன். திடீரென வானத்தில் கிறீச் கிறீச்சென்ற சத்தத்துடன் தரையின் மேல் நிழல்களை உருட்டிச் சென்றன கிளிகள். வரிசை வரிசையாய் மணல்வெளியைக் கடந்து சென்றன நிழல்கள்.

சூரிய ஒளி கண்களைக் கூசச் செய்தது. கைகளை புருவத்திற்கு மேல் தூக்கி மறைத்துக் கொண்டு பறந்து செல்லும் கிளிகளை நோக்கினாள் சொப்னா. திடீரெனப் பறவையாகி கீழே நோக்கத் தொடங்கினாள். நகரின் சிறிய சாலைகளுக்கு நடுவே பெரிய பெரிய சதுரங்களாகத் தெரிந்தன கட்டிடங்கள். அவற்றிற்கு நடுவே வரைபடம் போல் வளைந்து செல்லும் சாலைகளில் உலோகப் புள்ளிகளாக வாகனங்கள் நகர்ந்தவாறிருந்தன.

ஓரிரு இடங்களில் அதைவிடவும் சிறிய புள்ளிகளாக எறும்புகள் போல் மனிதர்கள் தெரிந்தனர். உலோகப் புள்ளிகள் ஊர்ந்தவாறு இருக்கையில் மானுடப் புள்ளிகள் மட்டும் அதே இடத்தில் நிலைத்து நின்றன. வங்கியில் பணம் எடுப்பதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள். நேற்று பாபநாசம் அருகே 75 வயது முதியவர் வரிசையில் நிற்கும்போது இறந்துவிட்டார் என்றும் அவரது ஊரின் பெயர் ‘வாழ்க்கை’ என்றும் தெரிந்து கொண்டாள்.

தான் சம்பாதித்த காசுக்காக வங்கி வரிசைகளில் நின்று உயிர்நீத்தவர்களின் எண்ணிக்கை வேறு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... ஏன், முந்தாநாள் கூட பேருந்தில் சில்லறை தர இயலாத ஒரு பெண்மணி வழியிலேயே இறக்கிவிடப்பட்டார். அவர் செல்ல வேண்டியிருந்த இடம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள ஊரான ‘முக்கோணம்’.

ஊர் பெயரெல்லாம் தத்துவமாக இருக்கையில் நடைமுறை மட்டும் அதை சிறிதும் உள்வாங்காத பித்துவமாக அல்லவா இருக்கிறது. ‘இது என்ன கிரகம்? இதனை பார்க்காவிட்டால் என்ன?’ என்று அவளது மனம் சொல்லிக் கொண்டது. ஒருபுறம் இத்தகைய அரசியலும் மறுபுறம் வியாபாரமயமாகிப் போன கல்வியும் என்று சிந்தித்தவாறு கீழே இறங்கி நடக்கலானாள்.

அப்போதுதான் தரையைக் கவனித்தாள். கால்படும் இடம் யாவிலும் சிறிய சிறிய விலங்கினங்களின் மண்டையோடுகளாகத் தெரிந்தது. அவை பெரிய பெரிய பல்லிகளின் எலும்புக் கூடுகள் போலக் காட்சியளித்தன. அவற்றின் மேல் கால் வைப்பதைத் தவிர்த்து கஷ்டப்பட்டு நடந்துவந்தபோது திரும்பவும் பரீட்சைக்கான கமிட்டி அறையை அடைந்திருந்தாள். ‘‘புரொபஸர்னா இன்விஜிலேஷன் கிடையாது.

அஸோசியேட்னா இரண்டு... அஸிஸ்டெண்டுனா ஆறு, அதிலும் தனியார் பணியாளர்களுக்கு ஏழு அல்லது எட்டு நாள்...’’ என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தனர். ‘‘அட்டெண்டருக்கு ஆறாயிரம், பேராசிரியைக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம்...’’ என்று யாரோ ஒருவர் முணுமுணுப்பது கேட்டது.

‘‘சொப்னா மேடம் பேப்பரை கொடுங்க...’’ யாரோ பதில் தாள்களைக் கையிலிருந்து பறித்துக் கொண்டபோதுதான், ‘ஐய்யய்யோ, மாணவர் பதிவுத்தாளை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டோமே... அது ஒருவேளை பரீட்சை அறையிலேயே இருக்குமோ? எனக்கு கொடுக்கப்பட்டிருந்த பரீட்சை அறை எண்: 22. நான்தான் அந்த அறைக்குச் செல்லவேயில்லையே! ஒரு வேளை தூக்கத்தில் கோட்டைவிட்டு விட்டேனோ? பின் எப்படி விடைத்தாள்கள் கையில் வந்தன?’ யோசித்துக் கொண்டிருக்கையில் விழிப்பு தட்டியது. ஞாயிற்றுக்கிழமையில் என்ன இப்படி ஒரு கனவென்று நினைத்தாள் சொப்னா.                           

பாம்போடு செல்ஃபீ!
\
ஜோத்பூரில் நடந்த செல்ஃபீதான் ஒருவரின் லைஃபுக்கு வைத்திருக்கிறது ஃபுல்ஸ்டாப்.  பாம்புப்பிடாரன் பாம்பை வளைத்து வித்தை காட்ட, அதோடு ஜாலி செல்ஃபீ எடுத்த பாபுராம் ஜாக்கரை திடீரென பாம்பு கொத்த, உடனே சோலி முடிந்தது. பிடாரனை அரஸ்ட் செய்த போலீஸ், பாம்புக்கு செக்யூரிட்டி தந்துள்ளது!

பிரான்சின் மானம் கால்களில்!

பாங்காக்கிலிருந்து சுகோதாய் செல்லும் பஸ்ஸில்தான் இந்த பஞ்சாயத்து. தாவோபன்யா என்ற இளைஞரின் பின் சீட்டில் பிரெஞ்சு லேடி அமர்ந்திருக்கிறார். கொஞ்சமும் டீசன்சி இல்லாமல் துவைக்காத சாக்ஸோடு தன் கால்களைத் தூக்கி இளைஞரின் சீட்டருகே தலைக்கு மேல் வைத்திருக்கிறார். தாவோபன்யா எதுவும் சொல்லவில்லை. மாறாக அதை வீடியோவாக எடுத்து முகநூலில் ஏற்றிவிட்டார்! பிரெஞ்சு மானம் வைரலாகிறது!

காருக்கு கான்க்ரீட்!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம். அங்குள்ள ஒரு கடையின் பார்க்கிங்கில் நின்றிருந்த ஒரு காரை சிமெண்ட் கொட்டி சமாதி செய்ய ஒருவர் முயன்றிருக்கிறார். அவரை சிமெண்ட்டும் கையுமாகப் பிடித்த போலீஸ், விஷயம் அறிந்ததும் திகைத்தது. ஏனெனில் அவர் சமாதி கட்ட முயன்ற கார் அவரது மனைவிக்குச் சொந்தமானதாம்! தன் பெயரை நீக்கிவிட்டு, வெனி என்ற சூப்பர் மார்க்கெட் பெயரின் மூலம் 1200 டாலர்களை அவர் மனைவி சம்பாதித்தாராம். அந்தக்கோபம் இப்படி வெளிப்பட்டிருக்கிறதாம்!

நெகிழ வைத்த தத்து!

நான்கு மனிதர்கள் சேர்ந்திருப்பதே கஷ்டம். இதில் நாய், பூனை, எலி ஃப்ரெண்ட்ஷிப் சாத்தியமா? விஸ்கான்சினிலுள்ள ஆஸ்கோஸ் விலங்கு காப்பகத்தில்தான் இந்த நெகிழ்ச்சி. சாஷா என்ற நாயும், ட்வீக்ஸ் என்ற எலியும், ஜாக் என்ற பூனையும்தான் புதிய கூட்டணி. ட்வீக்ஸை மட்டும் தத்தெடுக்க நினைத்த ஒருவர், இவர்களின் பாசத்தில் நெகிழ்ந்து மூவரையும் தத்தெடுத்துவிட்டார்.