கடலுக்குள் சேசிங்!



-த.சக்திவேல்

ஆஸ்திரேலியாவின் தங்கக் கடற்கரை காதலர்களால் நிறைந்திருந்தது. மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எந்தவித ஆரவாரமுமில்லாமல் அமைதியாக இருந்தது கடல். திடீரென்று 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் வேகமாக அலையைக் கடந்து கடலுக்குள் ஓடுகிறான். அவனைத் துரத்திக் கொண்டே போலீஸ் ஜெட் ஸ்கீயில் கடலுக்குள் செல்கிறது. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரத்தில் அந்த இளைஞனைக் கைது செய்து போலீஸ் அழைத்து வருகிறது.

அவன், ‘‘கடல்நண்டு அதிகமாக வெந்துவிட்டது. சுவையே இல்லை...’’ என்று கத்திக்கொண்டே போகிறான். அந்த இளைஞனின் பெயர் டெர்ரி பெக். அவன் ஒரு ராப் பாடகன். டெர்ரி பெக் கடற்கரையை ஒட்டியுள்ள ஒமெரோஸ் ப்ரோஸ் ரெஸ்டாரண்டில் இறால், கடல் நண்டு, ஆக்டோபஸ், பீர் என்று ஒரு கட்டு கட்டியிருக்கிறான்.

600 டாலருக்கு பில் வந்திருக்கிறது. போன் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஜூட் விட்டிருக்கிறான்! போலீஸ் துரத்திப் பிடித்திருக்கிறது. சரி, கடல் நண்டு? ‘அது நன்றாக வெந்திருக்கிறது. அவன் பொய் சொல்கிறான்..!’ என்கிறது ரெஸ்டாரண்ட்!