நிர்வாகத்துறையில் இருந்து நீதித்துறையை பிரித்தவர்!



தமிழ்நாட்டு நீதி மான்கள் - 25

கோமல் அன்பரசன்

கே.பாஷ்யம் ஆயிரம் சொன்னாலும், ஆட்சி, அதிகாரம் எல்லாம் இருந்தாலும் நீதிமன்றம் என்றால் அத்தனை பேருக்கும் பயம் இருக்கிறது. நீதிபதி என்றால் மரியாதை இருக்கிறது. கலெக்டரோ, கவர்னரோ நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டால் கூண்டில் ஏறித்தான் ஆக வேண்டும். அரசியலால் அனைத்தும் இன்றைக்கு மலினமாகிவிட்டாலும் கூட நீதித்துறைக்கென்று எஞ்சி இருக்கும் கௌரவம் இது!

அரசு நிர்வாகத்தின் அங்கமான, மாவட்ட ஆட்சியர் போன்றோரே நீதி பரிபாலனம் செய்ததை மாற்றி, நிர்வாகத்துறையிடமிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரித்தெடுத்ததே இப்போதிருக்கும் மரியாதைக்கு மிக முக்கிய காரணம். இந்த தீர்க்கதரிசனமான நடவடிக்கையைச் சட்டமாக்கி, செயல்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர் கே.பாஷ்யம். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் 1946ல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வென்றது.

ஓராண்டு காலமே பதவியிலிருந்த டி.பிரகாசம் அமைச்சரவையில், சட்ட அமைச்சராக கே.பாஷ்யம் பொறுப்பேற்றிருந்தார். அப்போதுதான் காலத்திற்கும் அவர் பெயரைச் சொல்லும் நீதித்துறை சீர்திருத்தத்தை செய்து முடித்தார். வெள்ளையர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்த அந்தக்காலத்தில், மாவட்ட ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் போன்ற அரசு உயர் அதிகாரிகள் நீதிபதிகளுக்கான அதிகாரங்களைப் பெற்றிருந்தனர்.

வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை அளித்தனர். அரசாங்க அதிகாரிகள் ஒருதலை சார்பாக நீதி வழங்கியதாக அந்நாளில் குமுறல்கள் எழுந்தன. அதே நேரத்தில், அரசு தரப்பிலோ அத்தகைய முறைக்கு பலத்த ஆதரவு இருந்தது. எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் மிகத்துணிவோடு நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரித்தெடுத்தார் சட்ட அமைச்சர் பாஷ்யம்.

தன் பதவிக்காலத்தில் இன்னொரு முக்கிய சட்டமான, வீட்டு வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தையும்  அவர் கொண்டுவந்தார். உலகப்போர் நடந்தபோது, பிரிட்டிஷ் இந்திய அரசு தங்களுக்கு வேண்டிய வீடுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளவும், அதற்கு வாடகை நிர்ணயிப்பதற்கும் ஏற்ற வகையில் சட்டம் கொண்டுவந்தது. அதில் உரிய மாற்றங்களைச் செய்து, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தினார் பாஷ்யம்.

கிடைத்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, குறுகிய காலத்தில் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட பாஷ்யம், வாழ்க்கை முழுதுமே போராட்டக் களங்களை அசாத்தியமான தன்னம்பிக்கையோடு எதிர்கொண்ட வழக்கறிஞர். கும்பகோணத்தில் அவர் பிறந்த வைதீக குடும்பம், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்தது. சாரங்கபாணி கோயில் புளியோதரையும் பொங்கலும்தான் இளமையில் பாஷ்யத்தின் பசி போக்கிய வரப்பிரசாதங்கள்.

ஆனால், படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்த அவர், வறுமைத்தீயில் லட்சியத்தைக் கருக விட்டுவிடவில்லை. பட்டப்படிப்புக்காக சென்னை மாநிலக்கல்லூரியில் காலெடுத்து வைத்தபோது நாட்டுப்பற்றும் அவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்திய விடுதலைப்போர் உச்சத்தில் இருந்த நேரம் அது. மாணவனாக பல போராட்டங்களில் அவரும் பங்கேற்றார்.

பட்டம் வாங்கிவிட்டு, பி.எல். படித்தபோதும் அரசியல் ஆர்வம் மிகுந்தவராகவே இருந்தார். அக்கால வழக்கப்படி படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் நடந்தது. சட்டத்துறையில் குறிப்பிடத்தகுந்தவராக இருந்த சர்.வி.சி.தேசிகாச்சாரியாரின் மகள் செண்பகத்தை பாஷ்யம் கரம்பிடித்தார். படிப்பு முடிந்ததும் அவரிடமே தொழில் பழகுநராகவும், பின்னர் ஜூனியராகவும் பணிபுரிந்தார்.

தேசிகாச்சாரியார் நீதிபதியானவுடன், பெயர் பெற்ற வக்கீலான வி.வி.சீனிவாச அய்யங்காரிடம் சிறிது காலமும் பின்னர் எஸ்.சீனிவாச அய்யங்காரிடமும் அவர் ஜூனியராக இருந்தார். இவர்களில் எஸ்.சீனிவாச அய்யங்கார் வக்கீல் தொழிலில் சிங்கம் போலத் திகழ்ந்தவர். இவர் வாதிடுகிறார் என்றால் நீதிமன்றம் கிடுகிடுக்கும்.

நீதிபதிகள் மிரள்வார்கள். ஆழ்ந்த சட்ட ஞானமும், அதிவேகமாகப் பேசும் ஆற்றலும், அதற்கிணையாகச் செயல்படும் திறனும் பெருங்கோபமும் கொண்டிருந்த இவரிடம் ஜூனியராகப் பணியாற்றுவது அத்தனை எளிதானதல்ல. தினந்தினம் சிங்கத்தின் குகையில் சென்று வருவதைப்போன்றுதான். ஆனாலும் இதையெல்லாம் தாண்டி ‘ஸ்ரீமான் சீனிவாச அய்யங்காரின் ஜூனியர்’ என்றால் அதற்கு தனி மரியாதை.

அவரிடம் இருந்த யாரும் சோடை போனதில்லை. கே.வி.கிருஷ்ணசுவாமி அய்யர், கே.ராஜா அய்யர் போன்றவர்களே இதற்குச் சான்று. சீனிவாச அய்யங்கார் வெறும் வக்கீலாக மட்டுமல்ல; காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய பிரமுகராகவும் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் ஒருவருமாவார். அப்படிப்பட்டவரிடம் அனுபவப்பாடம் படித்து சட்டத்துறையில் வெகு வேகமாக வளர்ந்த பாஷ்யம், அரசியலிலும் ஆர்வங்காட்டினார். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றார்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, பாஷ்யத்தின் தலையில் பேரிடியாக இறங்கியது டி.பி எனப்படும் எலும்புருக்கி நோய். இன்றைக்கு டி.பி எளிதாகக் குணப்படுத்தக்கூடிய நோய். 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அது கொடூரமான ஆட்கொல்லி நோய். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு எழுவது அரிதானது. தொற்றுநோய் என்பதால், நோயாளிகளைப் பார்க்கவே மற்றவர்கள் அஞ்சுவார்கள்.

அத்தகைய நோயின் பாதிப்புக்கு ஆளான பாஷ்யமும் தனிமைப்படுத்தப்பட்டார். சென்னைக்கு வெளியே, அன்றைக்கு சின்னஞ்சிறு கிராமப்பகுதியாக இருந்த பல்லாவரத்தில் தனி வீடொன்றில் வைத்து, அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையும் அதீத மன உறுதியும் அவரை மீண்டும் பழைய பாஷ்யமாக மீட்டுக் கொண்டுவந்தது.

தொழிலில் விட்டுப்போன இடைவெளியை சரி செய்ய மும்மடங்கு வேகத்தில் உழைத்தார். யாரிடமும் ஜூனியராக சேராமல் தனியாகவே வழக்குகளை நடத்தினார். சென்னை மாகாணம் முழுதும் சென்று வழக்குகளில் வாதாடினார். எவ்வளவோ இன்னல்பட்டு வாழ்வில் மேலே வந்து, நோயால் தோற்றுப்போனதாக இருக்கக்கூடாது என்ற வெறியோடு உழைத்தார்.

தொழிலோடு பாஷ்யத்தின் பெயரும் சேர்ந்தே வளர்ந்தது. எந்த வழக்காக இருந்தாலும் அதன் கடைசி எல்லை வரை போராடுவது பாஷ்யத்தின் தனிச்சிறப்பு. நீதிபதிகள் தங்களுக்கு எதிராக இருந்தாலோ, வெல்வது கடினம் என்ற நிலை வந்தாலோ, பெரிய வழக்கறிஞர்களே பின்வாங்கிவிடுவார்கள். ஆனால், பாஷ்யம் விடாமல் போராடுவார். அப்படி பல வழக்குகளில் அவருக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. அதனால் கட்சிக்காரர்கள் அவரை மலை போல் நம்பினார்கள்.

பாஷ்யத்தின் இந்த குணமே தொழிலில் வெற்றி பெற பெரிதும் துணை நின்றது. அவருக்கென ஜூனியர்கள் வந்தார்கள். வி.சி.வீரராகவன், ஆர்.தேசிகன், டி.ஆர்.சீனிவாசன், எஸ்.கோபாலரத்தினம் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். அவருக்கு குழந்தை இல்லாததால், ஜூனியர்களை பிள்ளைகள் போல நடத்தினார்.

சென்னை லஸ் சர்ச் சாலையும் மௌபரீஸ் சாலையும் (இப்போது அது டி.டி.கே சாலை) சந்திக்கும் இடத்தில் இருந்த தமது ‘செம்பக விலாஸ்’ பங்களா அலுவலகத்தில் தினமும் காலையில் ஜூனியர்களோடு அவர் விவாதிப்பதைக் காண கண் கோடி வேண்டும். காங்கிரஸ் கட்சியிலும் குறிப்பிடத்தகுந்த தலைவர்களில் ஒருவராக பாஷ்யம் உயர்ந்தார். அப்போதைய காங்கிரசில் செல்வாக்கான தலைவராக இருந்த ராஜாஜியுடன் மோதும் அளவுக்கு வளர்ந்தார்.

‘வெள்ளையனே வெளியேறு’ உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய தேர்தலில் வென்று சட்ட அமைச்சரானபோது, நீதித்துறையைத் தனியாகப் பிரித்த அவரது புத்திக்கூர்மை காலத்திற்கும் போற்றுதலுக்குரியது. வழக்கறிஞர், அரசியல்வாதி, நிர்வாகி ஆகியவற்றுக்கு அப்பால், நல்ல பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் பாஷ்யம் திகழ்ந்தார்.

கன்னட வக்கீலான கே.ஓ. அடிகாவுடன் சேர்ந்து பாஷ்யம் எழுதிய ‘தி நெகோஷியபிள் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஆக்ட்’ என்ற அற்புதமான சட்டப்புத்தகம் என்றைக்கும் அவர் பெயரைச் சொல்லும். புரோநோட், காசோலைகள், ரசீதுகள், பத்திரங்கள் போன்ற பண கொடுக்கல் வாங்கல் பற்றிய சட்டத்தைப் பற்றி விளக்கும் இப்புத்தகம் பாஷ்யம் வாழும் காலத்திலேயே விற்பனையில் சக்கை போடு போட்டது.

சட்டத்தில் மட்டுமல்ல; சமஸ்கிருதத்திலும் அறிவு மிக்கவர். பண்டிதர்கள் சிலரின் உதவியுடன் ‘வேதாந்த தீபா’ உள்ளிட்ட வடமொழி காவியங்களை அவர் தமிழில் மொழிபெயர்த்தார். சட்டசபை மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்பிலும் உறுப்பினராக இருந்து பாராட்டத்தக்க பணியாற்றினார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராகவும், சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராகவும் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக மனித நேயமுள்ள மனிதராகத் திகழ்ந்தார். இல்லை என நாடி வருவோருக்கு இயன்றதை எல்லாம் செய்து தந்தவராக கடைசி வரை வாழ்ந்தார்.

பெரும் வழக்கறிஞராக, சட்ட அமைச்சராக இருந்தபோதும்கூட கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பிரசாதத்தால் தான் வளர்ந்ததை அடிக்கடி நினைவு கூருவார். நீதித்துறை இருக்கும் வரைக்கும் கே.பாஷ்யம் என்ற பெயரும் நிலைக்கப்போவதற்கு பழையதை மறக்காத, மறைக்காத இந்த நற்பண்புதான் காரணமோ?!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

அந்த ஓராண்டு...!

சட்டப்படிப்பு முடித்ததும் முன்பெல்லாம் மூத்த வழக்கறிஞரிடம் கட்டாயமாக ஓராண்டு தொழில் பழகுநராக (Apprentice ) இருக்க வேண்டும். அதன் பிறகே வழக்கறிஞராக பதிவு செய்து உரிமம் பெறமுடியும். இதன்மூலம் படித்து விட்டு வருபவர்களுக்கு நிறைய அனுபவ அறிவு கிடைக்கும். ஆனால், பிற்காலத்தில் இந்த முறை நீக்கப்பட்டுவிட்டது. அதனால் அருமையான வாய்ப்பு பின்னர் வந்த தலைமுறைக்கு கிடைக்காமல் போய்விட்டது.

பாஷ்யம் - பஷீர் அகமது தெரு

சென்னை ஆழ்வார்பேட்டையிலிருந்து போயஸ் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பாஷ்யம் - பஷீர் அகமது தெரு என்ற பெயர்ப் பலகையை இப்போதும் காணலாம். பார்க்கும்போதே, ‘இதென்ன இப்படியொரு பெயரா?’ என கூடவே வியப்பும் வரும். லஸ் சர்ச் சாலையும் மௌபரீஸ் சாலையும் (இன்றைய டி.டி.கே சாலை) சந்திக்கும் இடத்தில் பாஷ்யத்தின் பங்களா இருந்தது.

இன்னொரு புகழ் பெற்ற வழக்கறிஞரும் எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி நிறுவனருமான பஷீர் அகமது மௌபரீஸ் சாலை முடியும் இடத்தில் வசித்தார். எனவே, அதையொட்டிய இந்தத் தெருவுக்கு பெயர் சூட்டும்போது சமய நல்லிணக்கத்தின் அடையாளமாக இருவர் பெயரையும் சேர்த்து வைத்துள்ளார்கள்.

திறமைக்கு மரியாதை

அப்ரெண்டீஸ் மற்றும் ஜூனியர்களிடம் இருக்கும் திறமைக்கேற்ப அவர்களுக்கு தனி மரியாதை தருவார் பாஷ்யம். அப்படித்தான் தன்னிடம் அப்ரெண்டீசாக இருந்த எஸ்.கோபாலரத்தினம் மீது அவருக்கு கூடுதல் பிரியம் உண்டு. அர்ப்பணிப்பு உணர்வும், சட்டப்புத்தகங்களைக் கரைத்துக் குடித்து வைத்திருந்த கோபாலரத்தினத்தின் அறிவும்தான் அதற்குக் காரணம்.

ஒரு நாள் பாஷ்யத்தோடு சேர்ந்து அவசரகதியில் நீதிமன்றத்திற்கு வேட்டியிலேயே வந்தார் கோபாலரத்தினம். அப்போதெல்லாம் வக்கீல்கள் நீதிமன்றத்திற்குள் செல்லும்போது முறைப்படி ஆடை அணிந்திருக்க வேண்டும். நீதிபதிகள் அதை கூர்ந்து கவனிப்பார்கள். வக்கீல் என்றால் கறுப்பு கோட் மற்றும் கறுப்பு அங்கி அவசியம்.

ஆங்கிலேயர் ஆட்சியில் குடுமி வைத்த வக்கீல்கள் கண்டிப்பாக தலைப்பாகை அணிய வேண்டும். அப்ரெண்டீசுகள், பேன்ட், டை, கறுப்பு கோட் அணிந்திருக்க வேண்டும். இச்சூழலில் வேட்டி அணிந்து வந்த கோபாலரத்தினத்திற்காக நீதிபதி ஹார்வில்லிடம் சிறப்பு அனுமதி வாங்கி, அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டார் பாஷ்யம். சாதாரணமாக ஓர் அப்ரெண்டிசுக்கு எந்த வக்கீலும் இந்தளவுக்கு மரியாதை தரமாட்டார்கள்.