‘‘எடுத்த படத்தை வெளியிட முடியாமல் இரண்டு ஆண்டுகளாக தவிக்கிறேன். கடன் சுமை கழுத்தை நெருக்குகிறது. ஆனாலும் தமிழ் ரசிகர்களை நம்புகிறேன்...’’



-மை.பாரதிராஜா

வேதனையிலும் நம்பிக்கை இழக்காமல் பேசுகிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

‘‘நான் இயக்கியிருக்கும் ‘நெடும்பா’ படத்தின் தாமதத்திற்கான முழுக்காரணம் நான்தான். ஒரு தயாரிப்பாளராக இருப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லாத நான், இதை தயாரித்திருக்கக் கூடாது. கருத்து, கதையமைப்பு, காட்சியமைப்பு எனச் சிந்தித்துக் கொண்டிருந்த என்னை கடன், வட்டி, தவணை எனச் சிந்திக்க வைத்து சிதைத்துக் கொண்டிருக்கிறது இந்தப்படம்.

யாராவது என்னைக் கடத்திச் சென்று என் உடல் முழுக்க வெடிகுண்டைச் சுற்றி, அதன் ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு, ‘அடுத்த படமும் உன் சொந்தத் தயாரிப்பில்தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் பட்டனை அமுக்கி விடுவேன்’ என்று சொன்னால், அந்த ரிமோட்டை பிடுங்கி நானே அமுக்கி செத்து விடுவேன்...’’ - இது, ‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் துயரங்களில் மூழ்கி உருகிய பதிவின் ஒரு பகுதி.

மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவுப் படத்தை இயக்கி, தயாரித்தவரிடமிருந்தா இப்படியொரு வேதனை பதிவு? ‘‘ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நெடும்பாறை காடு என்ற இடத்தில் வாழ்ந்த மக்களின் இனமே ‘நெடும்பா’. வெளியுலக வாசனையே அறிந்திராத இனம் அது. இனம் காக்க, தங்களின் ஒழுக்கம் மிகுந்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் காக்க எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் மூர்க்கமான ஓர் இனமே ‘நெடும்பா’.

இந்த இனத்தின் வரலாற்றைத்தான் படமாகப் பதிவு செய்திருக்கிறேன்...’’ நிதானமாக ‘நெடும்பா’ குறித்து பேச ஆரம்பிக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். ‘‘ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைக் கேட்டு ஆராய்ந்து இப்படத்துக்கான கதையை எழுதியிருக்கிறேன். ‘வெங்காயம்’ படத்தில் சமூகத்திற்கு பயன்படக்கூடிய கருத்தை சொன்னது போல் இதிலும் ஒரு விஷயம் உண்டு.

பழங்குடி இன மக்கள் என்பதால், இதுவரை பார்த்திராத ஒரு களம், முகம் தேவைப்பட்டதால் எல்லா வேடங்களுக்கும் புதுமுகங்களையே தேர்வு செய்தேன். கிட்டத்தட்ட முந்நூறு புதுமுகங்கள். சேலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிருஷ்ணன் ஹீரோவாகவும், கேரள பெண் ஜானகி ஹீரோயினாகவும் அறிமுகமாகின்றனர். ‘வெங்காயம்’ படத்தில் தெருக்கூத்துக் கலைஞராக நடித்த எஸ்.எம்.மாணிக்கம், ஜோவியானா ஆகியோருக்கு மெயின் ரோல். ஆக்னஸ் வசீகரன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

‘நெடும்பா’ பல நூறு வருடங்களுக்கு முன் உள்ள கதை என்பதால், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசைக்காக நிறைய உழைத்திருக்கிறார். வயலின், கிடார், எலெக்ட்ரானிக் வகை இசைக்கருவிகள் எதையும் பயன்படுத்தாமல் பழங்குடி மக்களின் இசையைக் கொண்டு வந்திருக்கிறார். தலக்கோணம் காட்டுப்பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படமாக்கினோம்.

எங்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் படம் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள்...’’ பேசிக்கொண்டே வந்த சங்ககிரி ராஜ்குமார், சட்டென்று மவுனமாகிறார். துக்கத்தின் ரேகைகள் முகமெங்கும் படருகின்றன. சமாளித்துக் கொண்டு தொடர்ந்தார். ‘‘ஒரு படைப்பு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் படைப்பாளி நினைத்தது போல வரவேண்டுமென்றால் அந்த இயக்குநரே தயாரிப்பாளராக வேண்டும்.

அதனால்தான் ‘வெங்காயம்’ படத்தைத் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பினால் தைரியமாக ‘நெடும்பா’வையும் தயாரித்துள்ளேன். நம் தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்த படங்களை அவ்வளவு எளிதாகத் திரையிட்டுவிட முடியாது. நாமே வெளியிட முயற்சி செய்தாலும் அதனால் எந்தப் பலனும் ஏற்படாது.

இந்தப் படத்தை எப்படி விற்கப் போகிறேன் எனத் தவித்தபோது, துடுப்பு போல உதவிக்கு வந்தார் சேரன் அண்ணன். ‘உன் அடுத்த படத்தை மசாலாவாக எடுக்காமல், மறுபடியும் ‘வெங்காயம்’ போல ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கே...’ என மனதாரப் பாராட்டினார். அத்துடன் ‘நெடும்பா’வையும் தானே ரிலீஸ் செய்ய விரும்பினார். ஆனால், சிலபல காரணங்களால் அது நடைபெறவில்லை. அதன்பிறகு வேறு சில நிறுவனங்கள் மூலம் வெளியிட முயற்சி செய்தேன்.

அந்த சமயம் உயர்மதிப்பு நோட்டு பிரச்னை வந்தது. இப்படி எதிர்பாராத சிக்கல்கள் எட்டுத் திசையில் இருந்தும் அழுத்தத் தொடங்கியது. இருந்தாலும் துவண்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அலம்பல்களை ரசிக்கப்பழகிய மக்கள் மத்தியில் புலம்பல்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இன்றுவரை ‘நெடும்பா’ வெளியீட்டுப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனாலும் என் சொந்த சோகத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். ‘ஒன்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி, தயாரித்து முடித்துவிட்டேன். அந்தப் படத்தில் மொத்தமே நான்கு கேரக்டர்கள்தான். அந்தப் நான்கு கதாபாத்திரங்களையும் நானே ஏற்று நடித்திருக்கிறேன். தொழில்நுட்பம் உட்பட சகலமும் ஒருவர்தான். அதனால்தான் படத்துக்கு ‘ஒன்’ என்று பெயர்.

இதுவும் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. விஞ்ஞானம் கலந்த கதை. நிஜமாகவே ஒரு வித்தியாசமான முயற்சி. என் குருநாதர் வேலு பிரபாகரன் சார் மாதிரியே விஞ்ஞான அடிப்படையிலான கதையை இயக்கியுள்ளேன். ‘நெடும்பா’ முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்பதால் அதற்காக  வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்ட வேண்டிய சூழல் நெருக்குகிறது.

ஒரு இயக்குநராக செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பும், மரியாதையும் தாராளமாகவே கிடைக்கிறது. ஆனால், ஒரு தயாரிப்பாளராக வெளிக்காட்ட வேண்டிய நிலையில் கூனிக்குறுகிப் போய்விடுகிறேன். கடன் அளித்தவர்கள் நல்லவர்கள்தான் என்றாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

என் படம் தரமான படம் என்பதால் அவர்களும் என்னை பொறுத்துக் கொள்கிறார்கள். என்றாலும் எத்தனை நாட்களுக்கு? சமீபத்தில் காடு தொடர்பாக வந்த இரு படங்களின் டிரைலரைப் பார்த்தபிறகுதான் என் மீதான பயம் அதிகமாகியது. என் படம் முடிந்து இரு வருடங்களாகிறது. ரிலீஸ் செய்ய இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் டிரெய்லரை வெளியிட்டிருக்கும் அவ்விரு படங்களும் உடனே வெளியாகும் சூழல் இருக்கிறது.

இதற்குப் பிறகு என் ‘நெடும்பா’ வெளியானால் என்ன ஆகும்? ‘இதே மாதிரி ஏற்கெனவே ரெண்டு படம் வந்திருச்சு...’ என்றோ  ‘அந்தப் படத்த பாத்து காப்பி அடிச்சுருக்கான்...’ என்றோ நீங்கள் கமெண்ட் அடித்துவிட்டுப் போவீர்கள். அப்போது நான் ஊர் பக்கம் ஏதேனும் ஒரு காட்டு வேலை செய்து கொண்டிருப்பேன்...’’ வேதனையின் அழுத்தம் தாங்காமல் வெடித்த சங்ககிரி ராஜ்குமார், இப்போதும் ரசிகர்கள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘நம் தமிழ்சினிமா ரசிகர்கள் புதியமுயற்சிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பவர்கள். ‘வெங்காய’த்திற்கும் அந்த வரவேற்பைக்கொடுத்தார்கள். அதே ஆதரவு ‘நெடும்பா’விற்கும் கிடைக்கும் என நம்புகிறேன். இந்த நம்பிக்கையில்தான் என் அத்தனை கவலைகளையும் ஓரம்கட்டிவிட்டு படைப்பாளியாக இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறேன்..!’’ என்கிறார் கண்களில் நீர் திரள...