இந்த ஜாக் கெட்டை தைக்க கூலி மட்டும் ரூ.5 ஆயிரம்!



-ஷாலினி நியூட்டன்

பின்லேடன் இருந்த இடத்தைக் கூட அமெரிக்க உளவுத்துறை ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடித்துவிட்டது. ஆனால், சரியான ஜாக்கெட் யார் தைக்கிறார்கள் என்பதை மட்டும் கல்தோன்றி மண் தோன்றா காலம் தொட்டே பெண்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! இப்படி தலைமுறை தலைமுறையாக வேதனை தொடரும் நிலையில் - அடுத்த தாக்குதல் அவர்கள் மீது சமீபகாலமாக வீசப்பட்டு வருகிறது.

‘என்னம்மா... புடவை எட்டாயிரம்னா... ப்ளவுஸ் பத்தாயிரமா..?’ கிண்டலுக்காக கேட்கப்படும் கேள்வி என்றாலும் எதார்த்தமும் அப்படித்தான் இருக்கிறது. திருமணம், வரவேற்பு, சங்கீத், மெஹந்தி... என எல்லா விழாக்களுக்கும் அணியும் புடவைகளுக்கான மேட்சிங் ப்ளவுஸ் தைக்க கூலி மட்டுமே ரூபாய் மூவாயிரம் என்கிறது கள நிலவரம். ஏன் இவ்வளவு விலை? ஒரு மீட்டர் துணியில் அப்படி என்னதான் இருக்கிறது..? கேள்விகளை டிசைனர் ஜெமிமா பியூலாவிடம் முன்வைத்தோம்.

‘‘மூவாயிரமா..? என்கிட்ட மினிமமே ஐந்தாயிரம். தெரியுமா?!’’ கெத்தாக தோளைக் குலுக்கியவர் கைநிறைய கலர்ஃபுல் ப்ளவுஸ்களை அள்ளி வந்தார். ‘‘நீங்களே பாருங்க. ஒவ்வொரு ப்ளவுஸும் ஒரு கிலோ இருக்கும். இருங்க... இருங்க... என்ன கேட்க வர்றீங்கனு புரியுது. சொல்லிடறேன். ‘கொடி இடையாள்’னு பெண்களை என்னதான் வர்ணிச்சாலும், ஜீரோ சைஸ்ல அவங்க இருந்தாலும் உடை, நகைகள்னு எத்தனை கிலோ கொடுத்தாலும் அவங்க உடல் தாங்கும்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கின ‘தேவதாஸ்’ இந்திப் படத்தை பார்த்திருப்பீங்களே... அதுல ‘டோலாரே...’ பாட்டுல ஐஸ்வர்யா ராயும், மாதுரி தீக்‌ஷித்தும் போட்டிருந்த சேலையோட வெயிட் எவ்வளவு தெரியுமா? தலா 25 கிலோ! விலையை கண்டுக்காம சல்லீசா செலவு பண்ணினா ரூ.150 சேலைக்கான ப்ளவுஸைக் கூட ஹை க்ளாஸ் லுக்கா மாத்திடலாம்!’’ என்ற ஜெமிமா பியூலாவிடம் திருமண ப்ளவுஸ் மட்டும் ஏன் இந்த விலை என்று கேட்டோம்.

‘‘பின்னே... இன்னைக்கு ஒவ்வொரு கல்யாண நிகழ்ச்சிக்கும் வீடியோ, புகைப்படம்னு மட்டும் குறைந்தபட்சம் அறுபதாயிரம் ரூபா செலவு பண்றாங்க. தரமான லென்ஸ்லதான் போட்டோஸும் வீடியோவும் எடுக்கறாங்க. அப்படீன்னா அதுல உடைகள் பளிச்சுனு தெரிய வேண்டாமா? சிம்பிளா ப்ளவுஸ் இருந்தா நல்லாவா இருக்கும்?

சரி. ப்ளவுஸ் விலை ஏற என்ன காரணம்? ஆரி / குந்தன் வேலைப்பாடுகள்தான். ஆரி வேலைகள்ல ஒரிசா மக்கள் கில்லாடிங்க. அதனாலயே பல டிசைனர்ஸ் ஒரிசா மக்களை குடும்பத்தோட கூட்டிட்டு வந்து இங்க வீடு பார்த்து தங்க வைச்சிருக்காங்க. சில கற்கள் வேலைப்பாடுகளுக்காக நிறைய செலவு செய்வோம். அதை மூக்குத்தி கற்கள்னு சொல்றோம்.

வேலைப்பாடுக்குத் தகுந்தா மாதிரி இந்த கற்களோட விலையும் தரமும் மாறும்...’’ என்று புன்னகைக்கிறார் ஜெமிமா பியூலா. கேட்கக் கேட்க தலை சுற்றியது. வீட்டு ஆண்கள் பாவமில்லையா? ‘‘என்ன செய்யறது...’’ என பக்கென்று சிரித்தார் டிசைனர் புவனேஸ்வரி. ‘‘எல்லா பெண்களும் தங்களை நயன்தாரா, அனுஷ்காவா நினைச்சுக்கிட்டுதான் எங்ககிட்ட வர்றாங்க. அந்த அளவுக்கு அவங்களை மாத்த முடியலைனாலும் ஓரளவுக்கு மேட்ச் பண்றோம்.

அப்புறம் ஒரு விஷயம். இன்னிக்கி பெரும்பாலான வீடுகள்ல LCD, LED, 4K டிவிக்கள்தான் இருக்கு. HD தரத்துலதான் எல்லாத்தையும் பார்க்கறாங்க. கல்யாண வீடியோ உட்பட. ஆக, அந்த குவாலிட்டில பார்க்கிறப்ப ஒவ்வொரு இன்ச்சும் பளிச்சுனு தெரியும். குறிப்பா ப்ளவுஸ். இதெல்லாத்தையும் விட முக்கியமானது செல்ஃபி ஃபோபியா.

செல்ஃபிஸ் எப்பவும் நம்ம மேல்பகுதியதான் டார்கெட் செய்யும். அப்ப புடவையவிட ப்ளவுஸ் ஸ்பெஷலா இருக்கணும். இதையெல்லாம் கணக்குல எடுத்துக்கிட்டுதான் நாங்க டிசைன் பண்றோம். மெனக்கெடறோம். ஒரு பெண்ணுக்கு டிசம்பர்ல கல்யாணம்னா அவங்க ப்ளவுஸை நாங்க செப்டம்பர்லேந்தே ரெடி பண்ண ஆரம்பிச்சுடுவோம். ஏன் தெரியுமா? பின்பக்கம் வைக்கிற கயிறு, குஞ்சம் கூட ரெடிமேட்ல வாங்கக் கூடாதுனு இப்ப சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

அதனாலதான் நாங்க குறைஞ்சது ஒரு ப்ளவுஸ் தைக்க ரெண்டு மாசம் கேட்கறோம். அறுபது நாட்களும் எங்களுக்கு வேலை இருக்கு. எல்லா பெண்களுக்குமே கல்யாணம் ஒரு கனவு. அது நினைவாகற நாளுக்கான வேலைகள்ல 50% டிசைனரான நாங்களும் 50% மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ஸும் எடுத்துக்கறோம்...’’ என்கிறார் புவனேஸ்வரி. 

மாடல்: அக்ருதி சிங்
ஸ்டைலிஸ்ட்: என்.திவ்யா
உடைகள் & நகைகள்: CLIO Sarees, JAZZ Collections
மேக்கப்: Arupre Makeup Artist 

படங்கள்: ஆண்டன் தாஸ்