புகைப்படங்களின் வழியே நம் வீட்டுப் பெண்களின் கதை



-ஷாலினி நியூட்டன்

டெல்லி நிர்பயா, கேரளா பாவனா, நம்மூர் ரித்விகா... தினம் தினம் எங்கேயோ இருக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்கிறோம். ஆனால், நம் வீட்டுப் பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து என்றேனும் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஒருநாள் நம் அம்மாவோ அல்லது மனைவியோ ஊருக்குச் சென்றுவிட்டாலோ அல்லது உடல்நிலை சரியில்லை என படுத்து விட்டாலோ வீட்டின் நிலை எப்படி இருக்கும்?

ஒவ்வொரு நாளும் நமக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை நாம் நினைத்துக் கூட பார்ப்பதிலை என்ற நிஜத்தை பொட்டில் அறையும் விதமாக போட்டோ கதை ஒன்றை ‘ஷட்டர் ஸ்பார்க் ஸ்டூடியோ’ உருவாக்கியிருக்கிறது. ஆம். ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் நிகழும் 13 சம்பவங்களைக்  கொண்ட புகைப்படத் தொகுப்பை இக்குழு படமெடுத்து கடந்த பெண்கள் தினம் அன்று சமூக இணையதளங்களில் பதிவேற்றியிருக்கிறது. 

“ஒரு போட்டோ ஒர்க்‌ஷாப்லதான் நாங்க அஞ்சு பேரும் சந்திச்சோம். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்ச பயணம் இப்ப இங்க வந்து நிக்குது. நான் செந்தில். சென்னை ஆட்டோ மொபைல் கம்பெனில வேலை பார்க்கறேன். இவன், பிரபு. பொள்ளாச்சியைச் சேர்ந்தவன். ஐடில வேலை பார்க்கறான். அவன் அடைக்கப்பன். சொந்த ஊர் சிவகங்கை. இங்க சேல்ஸ் & மார்க்கெட்டிங்ல இருக்கான்.

ரூபன், கோயமுத்தூரை சேர்ந்தவன். ஐடில இப்ப வேலை பார்க்கறான். கவின், நெல்லைக்காரன். மல்டி நேஷனல் பேங்க்ல வைஸ் பிரஸிடென்ட். எங்க அஞ்சு பேரோட முதல் எழுத்துதான் ‘Spark’. நல்லா இருக்கா?’’ கேட்ட செந்தில் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். “பஸ்ல, டிரெயின்ல, வேலை செய்யற இடத்துலனு பெண்களுக்கு எல்லா இடமும் பிரச்னைதான். இதெல்லாம் பத்தி பலபேர் பல காலங்கள்ல பேசிட்டாங்க.

பேசிக்கிட்டும் இருக்காங்க. ஆனா, வீட்ல பெண்கள் நிலை பத்தி அதிகமா யாரும் பேசலை. இதுதான் இந்த போட்டோ கதை உருவாக காரணம்...’’ என செந்தில் முடிக்க, கவின் தொடர்ந்தார். “அதிகாலைல அலாரம் எழுப்புதோ இல்லையோ குக்கர் சத்தம் எழுப்பிடுது. நமக்கு முன்னாடியே எழுந்து சமையலறைல நமக்காக பெண்கள் உழைக்க ஆரம்பிச்சிருப்பாங்க.

எல்லாம் முடிஞ்சு கணவன், குழந்தையை வேலைக்கும் பள்ளிக்கும் அனுப்பி... மறுபடியும் அவங்க வேலைக்குக் கிளம்பி... வாழறவங்களாலதான் இந்த கஷ்டத்தை உணர முடியும். சத்தியமா பெண்கள் வாழ்க்கையை நம்மால நினைச்சுக் கூட பார்க்க முடியாது...’’ கவினின் வியப்பை பார்த்தபடியே அடைக்கப்பன் தொடர்ந்தார்.

“இயல்பான லைட்டிங்லதான் எல்லா போட்டோஸையும் எடுத்தோம். சிலர் ஏன் பஸ் இல்ல, ஆட்டோவை காட்டாம ஏன் ரயிலை காமிச்சீங்கனு கேட்டாங்க. மின்சார ரயிலை காண்பிச்சுதான் இந்தியாவோட நகர வாழ்க்கைய சுலபமா புரிய வைக்க முடியும். நகரத்து பெண்கள்தான் ரொம்ப பரபரப்பா வாழ்ந்துட்டு இருக்காங்க. அதை அடையாளப்படுத்தத்தான் ரயில்.

இவங்கல்லாம் நிஜமான தியாகிகள். பெரும்பாலான பெண்கள் காலை உணவை எடுத்துக்கறதேயில்லை. அதுக்கு ஆகிற 15 நிமிஷங்களை குடும்பத்துக்காக செலவிடவே நினைக்கிறாங்க. மதிய உணவை அள்ளிப்போட்டுச் சாப்பிடறவங்களும் உண்டு, ஸ்கிப் பண்றவங்களும் உண்டு. மாலை சரியான நேரத்துக்கு வீட்டுக்குப் போகணும், குழந்தையைப் பார்க்கணும்னு ஏங்கிக்கிட்டிருக்காங்க.

ஆண்கள் அப்படியில்லை. வெளில வந்துட்டா வீட்டை மறந்துடுவாங்க...’’ என அடைக்கப்பன் முடிக்க, பிரபு தொடர்ந்தார். ‘‘செப்பல் கழட்டற போட்டோவுக்குதான் அதிக பாராட்டு கிடைச்சது. எங்களையே அந்த இடத்துல பார்த்தோம்னு பல பெண்கள் எங்ககிட்ட சொன்னாங்க. பெண்களோட கண்கள் எப்பவும் செருப்பை கழட்டும்போது எதார்த்தமா வீட்டு சூழலை ஆராயும். இதைத்தான் அந்த போட்டோல மையப்படுத்தி இருந்தோம்.

இந்தப் புகைப்படத் திட்டம் உருவானதுமே யாரை ஹீரோயினா போடலாம் என்கிற கேள்விதான் எழுந்தது. பல மாடல்கள், ‘அம்மா... நோ...’னு சொல்லிட்டாங்க. இந்த நேரத்துலதான் ரோஹிணியை சந்திச்சோம். ஓகே சொன்னவங்க ஒரே டேக்குல எல்லா போட்டோஸையும் எடுக்க உதவினாங்க...’’ ‘‘இதுக்கெல்லாம் எங்க அம்மா, மனைவிக்குதான் நன்றி சொல்லணும்...” என ஆரம்பித்தார் ரூபன். “ஒரு வீக் எண்டைக் கூட அவங்களுக்காக நாங்க செலவிட்டதே இல்லை. அவங்களே எல்லாத்தையும் பார்த்துப்பாங்க.

சினிமாக்கள்ல ஃப்ரெண்ட்ஸ பிரிக்கறதே மனைவியும் காதலியும்னுதான் காட்டறாங்க. மத்தவங்களுக்கு எப்படினு தெரியாது. எங்க வீட்ல பெட்ரூமுக்குள்ள மொத்தக் குடும்பத்தையும் லாக் பண்ணிட்டெல்லாம் ஷூட் பண்ணியிருக்கோம். இதுவரை ஏன் எதுக்குனு கேட்டதில்லை. எங்களுக்கு போட்டோகிராபி பிடிக்கும்.

அதுக்கு இடைஞ்சல் கொடுக்கக் கூடாதுன்னு எங்களுக்காக பார்த்துப் பார்த்து ஷெடியூல் போடுவாங்க. உண்மைலயே நாங்க லக்கி.  எங்களைப் பொறுத்தவரை நம்ம வீட்டுல நமக்காக உழைக்கிற பெண்களோட மெஷின் வாழ்க்கையைப் பத்தியும் பேசணும்னு நினைக்கறோம். அவங்களுக்காக நேரத்தை ஒதுக்கணும்னு சொல்றோம். சரிதானே?’’ தங்கள் குழு சார்பாகக் கேட்கிறார் ரூபன். உங்கள் பதில் என்