மாநகரம்



-குங்குமம் விமர்சனக்குழு

நகரங்களின் இன்னொரு முகத்திற்கான மனிதர்களை அடையாளம் காண்பதே ‘மாநகரம்’! ஒரு தாதாவின் மகனை அடையாளம் தெரியாமல் கடத்தி வந்து விடுகிறார்கள். விஷயம் தெரிந்தவுடன் அவரிடமே பணம் பறிக்க துணிகிறது மூன்று பேர் கொண்ட கூட்டணி. இதே வேளையில் வெளியூரிலிருந்து வேண்டாவெறுப்பாக வேலைக்கு வரும் யும், காதலிக்காக அடிதடி வரைக்கும் போகும் சுதீப் கிஷனும், ஒரு கட்டத்தில் ஒரே நேர்க்கோட்டில் வருகிறார்கள்.

கால் டாக்ஸி டிரைவராக சார்லியும் இன்னொரு வகையில் இவர்களோடு சம்பந்தப்பட, மாநகரத்தில் என்ன நடக்கிறது என்பதே கதை. மிகவும் இயல்பாக நகரத்தின் முகத்தை தெளிவுபட காண்பித்த அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கவனம் ஈர்க்கிறார். ஆர்ப்பாட்டமில்லாமல், மிகை இல்லாமல், அட்டகாசப்படுத்திய வகையில் நம்பிக்கை வரிசையில் இடம் பிடிக்கிறார் கனகராஜ். வாழ்த்துகள் பிரதர்!

மனிதர்களின் பிரத்யேக இயல்பை வைத்தே ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்திரத்தையும் தெளிவாகத் தீட்டியது, அவ்வளவு பதட்ட நிலையிலும் ரெளடிகளோடு முனீஸ்காந்தின் அப்பாவி கேரக்டரை நுழைத்தது, இன்னார் ஹீரோ, இவங்கதான் வில்லன் எனத் தனித்து சொல்ல முடியாமல் ஒவ்வொருவர் மீதும் கதையின் கனத்தை ஏற்றியது, அவ்வப்போதான மனிதர்களின் இருண்ட மனநிலையை முன்வைத்தது... என கலகலப்பு மாநகரமாகிறது!

சென்னையில் இருந்துவிட்ட மனிதர்கள், நகரத்தின் ஆரவாரத்தை அனுசரிக்க முடியாமல் தடுமாறும் வெளியூர்க்காரர்கள், நகரின் அடையாளத்தை அறிந்துக் கொள்ள தவறும் இளைஞர்களின் நிலையை அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். நகர மனிதர்களின் கோபம், படபடப்பு, காதல், நட்பு என அனைத்தையும் யதார்த்தத்தோடு காட்டிய வகையில் மெருகேற்றுகிறார் இயக்குநர்.

ஊரிலிருந்து கிளம்பி வந்து நகர் மீது கோபப்படும் இளைஞராக ஸ்ரீ ரொம்பவும் நம்பகமான வளர்ச்சி. ரெஜினாவிடம் ‘இந்த நகரமே எனக்குப் பிடிக்கவில்லை, ஊருக்குப் போகிறேன்’ என்று புலம்பும் போது அவ்வளவு இயல்பு. முரட்டுத்தனத்திலும், காதலிலும் சரிசமமாக இருக்கும் சுதீப் கிஷன் அருமையான தேர்வு. தன் காதலியை மிரட்டியவனை ஓடும் பஸ்ஸில் சென்று கலங்கடிப்பது பரபரப்பு.

அதிகம் தென்படாவிட்டாலும் இருக்கிற வரையிலும் இருப்பு தெரிவிக்கிறார் ரெஜினா. இவ்வளவு கூட்டத்திலும் அதிகம் கவர்கிறார் முனீஸ்காந்த். தனக்கிடப்பட்ட ஒவ்வொரு அசைன்மென்டையும் அந்தரத்தில் விட்டுவிட்டு விழிப்பது, கொத்தாக கோடி ரூபாயை தூக்கிப் போடும்போது திரும்பிப் பார்க்காமல் நடப்பது என ஜொலிக்கிறார்.

மாநகரத்தின் மாண்பு குறைவுக்குக் காரணம் நகரம் அல்ல, அதன் மனிதர்களே என்று சார்லி லாஜிக் வகுப்பு எடுக்கும்போது அத்தனை நிஜம். மூன்று கதாபாத்திரங்களும் ஒன்று சேர்கிற விதம் அழகான நெசவு! வெறும் த்ரில்லராகவே மட்டுமே போய் இருக்கலாம் என்ற கணக்கில் வைக்காமல் எளிய மனிதர்களின் அன்பைப் பேசுவது அழகு. நான்கு நபர்களின் நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக தெளிவாக கண்ணுக்கு கடத்துகிறது செல்வகுமாரின் காமிரா. ஜாவீது ரியாஸின் பின்னணி இசை, பெட்டர் ஸ்கோர்! ‘அசல்’ மாநகரம்!