என் Cleavage என் உரிமை!



-ஷாலினி நியூட்டன்

பெண்களின் உடலில் வளைவு நெளிவுகள் தெரியக்கூடாது. நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எல்லாம் பெண்களின் உடைகளே காரணம்... விதவிதமான வார்த்தைகளில், வாக்கியங்களில் இதையேதான் காலம்தோறும் பேசியும் எழுதியும் வருகிறோம். குறிப்பாக பாலியல் வல்லுறவால் எந்தப் பெண் எப்போது பாதிக்கப்பட்டாலும் உடனே வெளிச்சத்துக்கு வருவது மேலே சொல்லப்பட்ட விஷயங்கள்தான்.

நரம்பு புடைக்க இப்படி சவுண்ட் விடும் அனைவரும் சுதந்திரமாக உடையணியாத பெண்களும், சிறுமிகளும் கூட எதனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று யோசிப்பதுமில்லை. வினாக்களை எழுப்புவதும் இல்லை. ஆக, பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் மீது நடக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதை மையமாக வைத்து கடந்த பெண்கள் தினத்தன்று நடிகை டாப்ஸியும் ஸ்வர பாஸ்கரும் இணைந்து வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இருவருமே சமீபகாலமாக பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்தும் படங்களிலும் கான்செப்ட் வீடியோக்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘How much cleavage is good cleavage’ என்ற தலைப்பில் ‘BookMyStyle’ யூ டியூப் சேனலில் இவர்கள் பகிர்ந்திருக்கும் வீடியோ, பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு பெண்ணின் உடையில் கழுத்துப்பகுதி எந்த அளவுக்கு இறங்கியிருக்கலாம் என்பதைக் குறித்து வீடியோ முழுக்க விரிவுரை கொடுத்திருக்கிறார்கள்.

POLO நெக் எனப்படும் கழுத்தை முழுவதும் மூடிக்கொள்ளும் உடையைக் கூட பயன்படுத்தலாம். வியர்த்தால் கூட பரவாயில்லை. துப்பட்டா பயன்படுத்துங்கள். திருமணம், கூட்டம் நிறைந்த இடங்களில் எல்லாம் எப்படி உடை உடுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கியிருக்கின்றனர். மூச்சு வாங்க இப்படி பேசி முடித்துவிட்டு - ‘பெண் என்றாலே வளைவும் நெளிவும் இருக்கத்தான் செய்யும். இப்படி என் உடல் இருக்க வேண்டும் என நான்(ங்கள்) தீர்மானிப்பதில்லை.

உடல்வாகு இப்படி அமைந்ததற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? எங்கள் அனுமதியின்றி அமைந்த இந்த உடலை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும்? வியர்வையில் வெந்து தணிய வேண்டும்? இது என்(ங்கள்) உடல். இதை நான்(ங்கள்) கொண்டாடுவேன்(வோம்). பிடித்த உடையை, காற்று உட்புகும் வெளியை பயன்படுத்துவோம். ஆம். நான்(ங்கள்) பெண்கள்தான். பெண்ணாக இருப்பதற்கான அடையாளங்களைக் கொண்டவர்கள்தான். இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நீங்கள்?’ இந்த வினாவுடன் வீடியோ முடிகிறது. பதில் நம்மிடம் இருக்கிறதா?