பிரதமரை தத்தெடுக்க விரும்பும் தம்பதி!



-ச.அன்பரசு

‘அந்த நடிகரே எங்களுக்கு பிறந்தவர்தான்’ என தமிழக கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் - உத்தரப்பிரதேச தம்பதியின் பகீர் வேண்டுகோள் அல்லது ஆசை உலகையே அதிர வைத்துள்ளது.

அந்த ஆசையைத்தான் தலைப்பாக வைத்திருக்கிறோம்! உத்தரப்பிரதேசத்தின் ஹிந்தோனிலுள்ள மோடி நகரின் சுத்தமான தெருக்கள் வழியாக கைத்தடி ஊன்றி நடந்துவரும் யோகேந்தர் பால் சிங், இந்திய பிரதமர் மோடியை தத்துப்பிள்ளையாக்கி உச்சி முகர ஆசைப்படுகிறார். நகரின் முனிசிபல் சேர்மனாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட யோகேந்தரிடம் இன்றும் ஆலோசனை கேட்டு கூட்டம் குவிகிறது.

ஆனால், இப்போது அவரை வியப்புடன் சந்திக்க பலரும் வருவதற்குக் காரணம் - யோகேந்தரும் அவரது மனைவி அதார் காளியும் மோடியைத் தத்தெடுக்க கோர்ட்டில் மனு போட்டதுதான். உண்மையைச் சொல்வதென்றால், இவர்களை இப்படி செய்யத் தூண்டியதே நம் பிரதமர்தான்! சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த மாதம் உ.பி., வந்த மோடி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது, ‘‘நான் குஜராத்தில் பிறந்தாலும் உத்தரப்பிரதேசம் என்னைத் தத்தெடுத்துவிட்டது.

மண்ணின் மைந்தனாக, உங்களுக்கு பணிசெய்வது எனது கடமை!’’ என உணர்ச்சிபூர்வமாகப் பேசிவிட்டு ஃப்ளைட் ஏறிவிட்டார். இதை கப்பென்று பிடித்துக் கொண்ட மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரான நிஹாத் லாரி கான், ‘எங்க உங்க தத்தெடுத்த சர்டிஃபிகேட்டை காட்டுங்க...’ என கேட்டிருக்கிறார். இந்த விவரம் பத்திரிகையில் வெளியானதும் டென்ஷனான யோகேந்தர், நேராக காஸியாபாத் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பிரதமரைத் தத்தெடுக்க அப்ளிகேஷன் போட்டுவிட்டார்.

‘‘எனது அன்பைச் சொல்லக் கிடைத்த வாய்ப்பு இது. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. மோடி இந்தியாவை முன்னேற்ற பாடுபட்டு வருவதுடன் ஒப்பிட்டால் எனது கோரிக்கை வெகு சாதாரணமானது என்று தெரியும். நமக்காக, நம் நாட்டுக்காக உழைப்பவருக்காக இதைக் கூட நான் செய்யக் கூடாதா..?’’

அப்பாவியாகக் கேட்கும் யோகேந்தரின் தத்து அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்டுவிட்டது. என்றாலும் யோகேந்தரின் இந்த முடிவுக்கு அவரது மனைவியும் மகனும் கூட ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட். வழக்கமாக தன் வீட்டில் நாற்காலியில்தான் யோகேந்தர் அமர்வார். அந்த நாற்காலிக்கு மேல் அவர் முன்னாள் பிரதமர் சரண்சிங்குக்கு திலகமிடும் புகைப்படம் உள்ளது.

‘‘1979ம் ஆண்டு எடுத்த போட்டோ இது. அவரது நெற்றியில் திலகமிடுவதற்காகவே என்னை டெல்லிக்கு வரச் சொன்னார்!’’ என சிரிக்கும் யோகேந்தரின் தாராள வீடு, ஏராள வசதிகளால் பூரித்துள்ளது. 1980 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ‘தலித் மஸ்தூர் கிஸான்’ கட்சி சார்பாக முராத் நகரில் நின்று தோல்வி கண்ட யோகேந்தர், அதன்பிறகு எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

‘‘மோடியைத்தத்தெடுப்பதற்கான தடைகள் சிறிய ஏமாற்றம்தான். அதற்காகப் பின்வாங்குவேன் என்று அர்த்தமில்லை. தொடர்ந்து முயற்சிப்பேன்...’’ என்கிறார் உறுதியாக. இதில் மட்டும் இத்தம்பதியினர் வெற்றி பெற்றுவிட்டால், இவர்கள் வசிக்கும் ‘மோடி நகரு’க்கான பெயர்க் காரணம் ரெடி!