பெல்ட் மாட்டுங்க கேர்ள்ஸ்!



-ஷாலினி நியூட்டன்

கார் பயணம் முதல்... ஜாலி கண்காட்சியில் சுற்றும் ராட்டினம் வரை பெல்ட்டின் தேவை எல்லா கட்டங்களிலும் அவசியம்! கராத்தே, ராணுவம் என சகல இடங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த பெல்ட் - ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அவர்கள் மட்டும்தான் டக் இன் செய்கையில் கெத்தாக அணிய வேண்டுமா? ‘‘நோ...’’ என்கிறார்கள் ஃபேஷன் டிசைனர்களான யோகாவும் ஃபரிதா நவாஸும்.  

“ஆண்களோட உடல்ல நெளிவு சுளிவு கிடையாது. ஆனா, பெண்கள் அப்படியில்ல. அடிப்படைலயே இவங்களோட உடல்வாகு நெளிவு சுளிவோட இருக்கும். அகன்ற பின்பக்கம் இவங்க ஸ்பெஷல். அதனால ஸ்கர்ட்டோ, பேன்ட்டோ சிக்குனு நிக்கும். ஸோ, பெல்ட் அணியும் தேவை பெண்களுக்கு இல்லை. ஆனா, எந்த ஓர் உடையையும் அழகா மாத்தற வித்தை பெல்ட்டுக்கு உண்டு.

இதனாலதான் இப்ப ஃபேஷன் உலகத்துல பெண்களுக்கான ஸ்பெஷல் பெல்ட்டும் வந்திருக்கு...’’ என்று சொல்லும் யோகா, இது தொடர்பான விஷயங்களை பகிர ஆரம்பித்தார். ‘‘ஆண்களோ பெண்களோ எல்லாருக்குமே உடலின் கீழ்ப் பகுதியை விட மேல் பகுதி வெயிட்டா இருக்கும். குறிப்பா பெண்களுக்கு. இயற்கையே இது மாதிரி அமைச்சிருக்கறதால நாம பெல்ட் அணியறப்ப அந்த வெயிட்டை அது தாங்கி நிற்கும்.

அதனாலதான் பெல்ட் அணியற பெண்களுக்கு பெரும்பாலும் முதுகுவலி வர்றதில்லை. இதை எல்லாம் மனசுல வைச்சுதான் அந்தக் காலத்துல நம்ம முன்னோர்கள் இடுப்புல அருணாக் கயிறு கட்டச் சொன்னாங்க. இதனோட நவீன எக்ஸ்டென்ஷன்தான் பெல்ட்...’’ என்று யோகா முடிக்க அதை ஆமோதித்தபடி தொடர்ந்தார் ஃபரிதா. ‘‘சேலையோ, சல்வாரோ... எதுவா இருந்தாலும் டிரெஸ் ஸுக்கு மட்டும்தான் நாங்க டிசைன் செய்வோம்.

வளையல், தோடு மாதிரியானதெல்லாம் அந்த உடைகளை மேலும் அழகுபடுத்தக் கூடிய விஷயங்கள். பெல்ட்டும் அப்படித் தான். சொல்லப்போனா மாடர்ன் உடைகளுக்கு ஏற்றது பெல்ட்தான். எந்த அளவுக்கு பெல்ட்டை ரிச் ஆக காட்டுறோமோ அந்த அளவுக்கு ஃபேஷன் தூக்கும். இப்ப நம்ம விஷயத்தையே எடுத்துப்போம். ப்ரக்யா, ஒரு மாடல். இவங்களுக்கு நான் சிவப்பு உடைதான் தயாரிச்சேன்.

ஆனா, அதுக்கு ஏற்ற பெல்ட்டை யோகா அணிவிச்சதும் ப்ரக்யாவோட லுக்கே மாறிடுச்சு பாருங்க. முத்து பெல்ட்டுக்கு ஒரு ஸ்டைல், தங்க நிற பெல்ட்டுக்கு வேறொரு ஸ்டைல்னு ஒரே உடைக்கு விதவிதமான பெல்ட் வழியா வேற வேற ஸ்டைலை கொடுக்க முடியும்...’’ என ஃபரிதா முடித்ததும் யோகா தொடர்ந்தார். ‘‘வெள்ளையும் நீலமும் கலந்த knee லெங்ந்த் உடையை ப்ரக்யா பயன்படுத்தியிருப்பாங்க.

அதுல சரியா மார்புக்கு கீழ ஒரு நீல பட்டி டிசைனை ஃபரிதா கொடுத்திருப்பாங்க. அதுல சின்ன கோல்ட் பெல்ட்டை பயன்படுத்தினேன். என்ன ஆச்சு? உடை க்கு கிடைச்ச லுக்கை விட பெல்ட் அணிந்த பிறகு தூக்கலா ராயல் லுக் கிடைச்சிருக்கு. இதுதான் பெல்ட்டோட சீக்ரெட். உண்மையை சொல்லணும்னா எல்லா காலத்துலயும் பெண்களுக்கு பெல்ட் இருந்துட்டுதான் இருக்கு.

இப்ப ஒட்டியாணத்தை எடுத்துப்போம். நம்ம உடம்போட வளைவுகளை சேலையோட முந்தியும் மடிப்புகளும் மறைச்சுடும். அதுவே ஒட்டியாணம் அணியறப்ப நம்ம உடலோட வளைவை அது எடுத்துக் காட்டும். இப்பவும் திருமணங்கள்ல ஒட்டியாணம் ஸ்பெஷலா இருக்கக் காரணம் இதுதான். இதே சைக்காலஜி பெல்ட்டுக்கும் பொருந்தும். இப்ப வர்ற ஜீன்ஸ் எல்லாமே லோ வெயிஸ்ட் ரகம்.

கீழ குனிந்தாலும் நிமிர்ந்தாலும் சட்டுனு இறங்கிடும். உள்ளாடை தெரியவும் வாய்ப்பிருக்கு. பெல்ட் அணிந்தா இந்த தர்மசங்கடத்தை தவிர்க்கலாம். லோ ஹிப், க்ராப் டாப் பேன்ட்ஸ் அணியறப்பவும் கையோட பெல்ட் மாட்டறது நல்லது. முக்கியமான விஷயம், பெல்ட் வெறும் பாதுகாப்புக்கு மட்டுமில்ல. அது ஃபேஷனுக்கும்தான். ஸோ... கமான் கேர்ள்ஸ்... பெல்ட் அணிங்க!’’ கோரசாக சொல்கிறார்கள் யோகாவும் ஃபரிதா நவாஸும்.

மாடல் : ப்ரக்யா
மேக் அப்: Arupre, makeup artist

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்