விண்வெளியில் 3வது இந்தியப்பெண்!



-ச. அன்பரசு

சத்யத்தில் மேட்னி, ஆடி ஆஃபரில் புடவைக்கடை, மிஸ் ஆகாத தள்ளுபடியில் பருப்புகள் தரும் சூப்பர் மார்க்கெட் என்றுதான் பெண்கள் போகவேண்டுமா? இதோ ஷாவ்னா பாண்டியா என்ற இந்த கனடா வாழ் இந்தியப்பெண் 2018ல் விண்வெளிக்கு விர்ரெனப் பறக்கப் போகிறார் யெஸ். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து விண்வெளியில் வலது காலை எடுத்து வைக்கும் மூன்றாவது இந்திய வம்சாவளிப் பெண் இவர்தான்!

பொது மருத்துவரான ஷாவ்னா, சிட்டிசன் சயின்ஸ் ஏஸ்‌ரோநெட் நிகழ்வில் கலந்து கொண்ட 3 ஆயிரத்து 200 நபர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவர். இவரோடு 8 வானியலாளர்களும் பயணிக்கிறார்கள். கனடாவின் ஆல்பெர்டா பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் பி.எஸ்சி படித்தபின், இன்டர்நேஷ்னல் பல்கலையில் விண்வெளி அறிவியல் படித்தார். கூடுதலாக மற்றொரு படிப்பான மருத்துவத்தில் எம்டியையும் ஆல்பெர்டா பல்கலையில் முடித்தார். சுருக்கமாக சொல்வதென்றால், ஷாவ்னா மல்டி டாஸ்க் ராணி!

2009ம் ஆண்டு எமர்ஜென்சி சேவைகளுக்கான சிவிகார்டு பணியைத் தொடங்கினார். ‘‘நாங்கள் தொடங்கிய இந்த தொழில்நுட்ப முயற்சி கிட்டத்தட்ட 100 கோடி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது...’’ என்கிறார் ஷாவ்னா. இப்போது ஆல்பெர்டா பல்கலை மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநராக பணிபுரியும் இவர், ரஷ்யன், ப்ரெஞ்ச், ஸ்பேனிஷ் மொழிகளையும் கற்று வருகிறார்.

மட்டுமல்ல. இவர், இன்டர்நேஷனல் தேக்வாண்டோ தற்காப்புக்கலை சாம்பியனும் கூட. அத்துடன் சீல் எனும் அமெரிக்க படையில் கடும் பயிற்சியையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். சிகரம் என்றால் அது ஷாவ்னாவின் எழுத்தாளர் முகம். ‘‘சிறுவயது முதலே அறிவியல் என்றால் பிடிக்கும்.

நட்சத்திரங்களும், அகண்ட வானமும் இப்போதும் என் கனவை நிரப்புகிறது...’’ என்று சிரிக்கும் இவர், நாசாவின் ஜான்சன் விண்வெளி தளத்தில் இன்டர்ன்ஷிப் முடித்திருக்கிறார். துருவப் பகுதிகளின் சூழல் மாறுபாடு குறித்த ஆய்வுக்காக (PoSSUM) அடுத்த வருடம் விண்வெளிக்கு செல்லும் முன் ஃப்ளோரிடாவில் உள்ள உலகின் முதல் ஆழ்கடல் ஆய்வகத்தில் ‘போஸிடான்’ (கடல், நீர், குதிரை ஆகியவற்றுக்கான கடவுள்) என்ற 100 நாள் ஆராய்ச்சித் திட்டத்தில் வேலை பார்க்கப் போகிறார்.