உங்க டூத் பேஸ்ட்ல முக க்ரீம்ல பிளாஸ்டிக் இருக்கு!



-ஷாலினி நியூட்டன்

‘உங்க பேஸ்ட்டில் உப்பு, கிராம்பு, வேம்பு இருக்கா..?’ இப்படித்தான் கேட்பார்கள். ஆனால், பிளாஸ்டிக் கலந்திருப்பதை சொல்லவே மாட்டார்கள்! இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கள் நாடுகளில் விற்பனையாகும் சில டூத் பேஸ்ட்ஸ், முக க்ரீம் உள்ளிட்ட காஸ்மெடிக்ஸ் பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ளன. காரணம், அவற்றில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் நுண்துகள்கள்.

‘முன்பை விட அதீத சுத்தத்துக்கு மைக்ரோ பார்ட்டிக்கிள்ஸ் அடங்கிய டூத் பேஸ்ட்’, ‘பளிச் முகத்துக்கு மேஜிக் பார்ட்டிக்கிள்ஸ் அடங்கிய சூப்பர் க்ரீம்’ என விளம்பரப்படுத்தும் அனைத்து அயிட்டங்களுக்கும் ‘எச்சரிக்கை’ போர்டு போடுகிறது மருத்துவ உலகம். முக்கியமாக ஜெல் வடிவ பேஸ்ட்டுகள், க்ரீம்கள். இவற்றில்தான் பிளாஸ்டிக் நுண்துகள்களை லாவகமாக கலக்கிறார்கள். இவற்றால் மனிதனின் உடல் மட்டுமல்ல, உலகமே பாதிக்கப்படுகிறது.

யெஸ். சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பிளாஸ்ட்டிக் நுண்துகள்கள் நாம் பயன்படுத்தும் ஒற்றை முக க்ரீம் டியூப் அல்லது ஒற்றை பேஸ்ட் டியூப்பில் இருக்கின்றன. இவற்றை தேய்த்து நாம் வாய் கொப்பளிக்கிறோம். முகத்தை கழுவுகிறோம். இந்த நீர், வாஷ்பேஸின் வழியாக சாக்கடைக்கும் அதன் மூலம் நிலத்தடிக்கும் செல்கிறது. விளைவு, பிளாஸ்டிக் நுண்துகள்களே நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன என அதிர்ச்சியை அள்ளி வீசுகிறது அமெரிக்க ஆய்வறிகை ஒன்று.

இந்த அபாயத்தை தடுக்க முற்படாமல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக மட்டுமே போராடுகிறார்கள் என்று மருத்துவ உலகம் சுட்டிக்காட்டுகிறது. இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்ததே தற்செயலாகத்தான். அமெரிக்காவின் பல் நிபுணர்களில் ஒருவர் டாக்டர் கார்சியா. ஒருநாள் எதேச்சையாக முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் நீல நிற துகள் ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறார்.

இது எப்படி தன் பற்களுக்கு வந்தது என்று யோசித்தவர் அதை எடுத்து ஆராய்ந்திருக்கிறார். அப்போதுதான் அது பிளாஸ்டிக் நுண்துகள் என்பதும், காலையில், தான் தேய்த்த பற்பசையில் இருந்த பொருளே அது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார். ‘இதனால் பெரிய அளவில் நமக்கு பாதிப்பு ஏற்படும்.

ஆனால், தொடக்கத்தில் எதுவுமே தெரியாது. உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நம் உடலில் என்ட்ரி கொடுத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ அவற்றை விட பலமடங்கு ஆபத்து நாட்கள் செல்லச் செல்ல இந்த பிளாஸ்டிக் நுண்துகள்களால் ஏற்படும். போலவே பூமியில் இருக்கும் நீர் ஆதாரங்களும் மாசடையும்...’ என தக்க ஆதாரங்களுடன் அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதற்கு வலு சேர்ப்பது போல் வட அமெரிக்காவின் புனித லாரன்ஸ் நதியில் ஒரு லிட்டருக்கு ஆயிரம் என்ற விகிதத்தில் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பதும், அவ்வூர் மக்கள் பயன்படுத்திய பற்பசையும் முக க்ரீமுமே இதற்கு காரணம் என்பதும் கண்டறியப்பட்டது. எனில், தங்கு தடையின்றி நம் நாட்டில் நடமாடும் இந்த பற்பசை மற்றும் முக க்ரீம்களால் இங்கிருக்கும் நதிகள் எந்தளவுக்கு அசுத்தமாகி இருக்கும்? யோசிக்கும்போதே அடிவயிறு கலங்குகிறது.

ஏனெனில் இந்தியாவில் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் / ஃபேஸ் க்ரீம் கம்பெனிகளில், ஐந்தில் மூன்று இப்படி பிளாஸ்டிக் நுண்துகள்களை தங்கள் ப்ராடக்டில் கலக்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாம் கால் பதித்துக் குதித்து விளையாடும் கடல், ரசித்துக் குடிக்கும் நதி / ஏரி நீர்... என சகலத்திலும் புற்றுநோய் செல்கள் போல பிளாஸ்டிக் நுண்துகள்கள் ஆக்கிரமித்திருக்கின்றன.

சரி. டூத் பேஸ்ட், முக க்ரீம்களில் மட்டும்தான் பிளாஸ்ட்டிக் இருக்கிறதா?
இல்லை. ஷாம்பூ, வீடு துடைப்பான், கிருமி நாசினி, உரம்... என எவற்றை எல்லாம் அத்தியாவசியமாகப் பயன்படுத்துகிறோமோ அவற்றில் எல்லாம் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுகின்றன. ஒரு மனிதன் தொடர்ந்து நூறு கிராம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொண்டால் என்ன நடக்கும்? இந்த பற்பசைகள் உண்மையிலேயே நம் பற்களை சுத்தம் செய்கிறதா..? நாள்தோறும் நம் முகத்தை பிளாஸ்டிக்கால் தேய்த்தால் சருமம் என்னவாகும்..?

அடுக்கடுக்கான இந்தக் கேள்விகளை பல் மருத்துவரான செந்தில்குமாரிடம் கேட்டோம். ‘‘பற்களை சுத்தம் செய்ய வெள்ளை நிற பேஸ்ட்டே போதும். இதைத் தாண்டி எந்தவிதமான சிறப்புத் துகள்களும் தேவையில்லை. ஒரு சின்னத் துகள் நம் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் சிக்கினால் முதலில் வீக்கம், எரிச்சல் மாதிரியான பிரச்னைகள் தோன்றும். பிறகு வேதியியல் மாற்றம் பெறும் துகள்களால் ஈறுகள் பாதிப்படையும்.

மட்டுமல்ல, அஜீரணத்தில் தொடங்கி இரைப்பையில் புற்றுநோய் ஏற்படுவது வரை எதுவும் நடக்கலாம். சில குழந்தைகள் பேஸ்ட்டுகளை உட்கொள்வார்கள். இது எந்தவிதமான ஆபத்தை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள்...’’ என்றார். இதை அப்படியே ஆமோதிக்கிறார் சரும மருத்துவரான எல்.ஆர்த்தி. ‘‘முதலில் மைக்ரோ படிகக் கற்கள்தான் பயன்படுத்தப்பட்டன.

பிறகுதான் பிளாஸ்டிக் நுண்துகள்களை கலக்கத் தொடங்கினார்கள். ஏனெனில் கற்களை விட இவை மென்மையானவை. முகத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலக்கப்பட்ட க்ரீமை பூசும்போது தோல் துளைகளில் இவை சிக்கிக் கொள்ளும். நாட்கள் செல்லச் செல்ல கருப்புத் திட்டுகளாக அந்த இடம் மாறும். அலர்ஜியும் ஏற்படலாம். பிளாஸ்டிக் துகள்களுக்கு பதிலாக பாதாம் / அக்ரூட் பருப்புகளை பயன்படுத்துவோம் என காஸ்மெடிக் நிறுவனங்கள் அறிவித்து பல மாதங்களாகின்றன. ஆனால், இன்னமும் அதை யாரும் நடைமுறைப்படுத்தவில்லை...’’ என்கிறார் சரும டாக்டர்.