இதுதான் ISI



-ச.அன்பரசு

பாகிஸ்தானின் முதன்மை உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ, இந்தியாவின் ‘ரா’ போல் சாதுப்பிள்ளை அல்ல. 1993 மும்பை தாக்குதல் முதல் பதான்கோட் ராணுவதளம் தாக்குதல் வரை ஸ்கெட்ச் போட்டு வேலைபார்க்கும் தடாலடி அமைப்பு. ஐஎஸ்ஐ குறித்து பல புனைகதைகள் வந்தாலும், ஆதாரபூர்வமாக யாரும் விளக்கியதில்லை, ஜெர்மன் நாட்டின் பேராசிரியர் ஹெய்ன் கீஸ்லிங் ‘Faith Unity Discipline’ என்ற நூலை 2011ல் எழுதும் வரை. அகலமான நெற்றியில் அழகான சிந்தனைச் சுருக்கங்கள். எதிராளியை அலசும் தீர்க்கமான கண்கள்.

உதடுகளில் மாறாத புன்னகை. ஹெய்ன் கீஸ்லிங்கின் வயது 80. கலவர பூமியான பாகிஸ்தானில் காற்று வாங்கவே பலரும் அச்சப்படும் நிலையில், ஹெய்ன் மட்டும் எப்படி ஆதாரபூர்வமான தகவல்களோடு புத்தகம் எழுதினார்? நூலின் பிற்சேர்க்கை மட்டுமே 20 பக்கங்கள்! ஜெர்மன் நிறுவனமான ஹேன்ஸ் செய்டல் பவுண்டேஷனின் சார்பாக ஹெய்ன் முதலில் அனுப்பப்பட்டது பலுசிஸ்தானுக்கு.

அங்கு தொழில்நுட்ப பயிற்சி மையத்தை தொடங்கியவர், பின் இஸ்லாமாபாத், கராச்சி என அதனை விரிவுபடுத்த... நாடாளுமன்றக்குழு, அரசியல் சட்ட அமைப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு அரசியல் பெருந்தலைகளின் தொடர்புகள் கிடைத்திருக்கின்றன. பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தலைவரான மிர்ஸா அஸ்லாம் பெக்கின் நட்பினையும் அவர் பெற்றது நூலில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் வழியே பளீரெனத் தெரிகிறது.

மிர்ஸாவின் நட்பினால் சீனா, மத்திய ஆசிய நாடுகள் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவு அவருக்கு தெரிய வந்திருக்கிறது. ஏனெனில் மிர்ஸாவுடன் அரசுமுறை பயணத்தில் பங்கேற்றது சாட்சாத் ஹெய்ன்தான்! தன்னிடமுள்ள இரண்டு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தானிலிருந்து வாகா வழியாக அமிர்தரஸுக்கு வந்து பொற்கோயிலில் ஓர் இரவு தங்கிய விவரத்தையும் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்!

‘நீங்கள் விதிகளை சரியாக அறிந்திருந்தால் போதும்...’ என்பதே இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கான ஹெய்னின் பதில். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோதுதான் உலகுக்கு ஐஎஸ்ஐ-யின் ஆபரேஷன்ஸ் குறித்து தெரிய வந்தது. 1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானை (இன்றைய பங்களாதேஷ்) பறிகொடுத்த பிறகு ஐஎஸ்ஐ-யின் முழுப் பார்வையும் ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது. அப்போது ரஷ்யாவின் ஆதிக்கம் அந்நாட்டில் நிலவி வந்தது.

எனவே ரஷ்யாவுக்கு எதிரான குழுக்களுக்கு முழு ஆதரவையும் வழங்கி, ஆயுதங்களை சப்ளை செய்து, எப்படி, எந்த இடத்தில் தாக்க வேண்டும் என இன்ச் பை இன்ச் ஆக ஸ்கெட்ச் போட்டுத் தந்தது. ‘‘பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் ஸர்தாரி, துர்க்மெனிஸ்தானிலிருந்து காந்தஹார் வழியாக பருத்தியை இறக்குமதி செய்ய திட்டமிட்டார். இது நிறைவேற வேண்டுமென்றால் வழியில் இருக்கும் அனைத்து தீவிரவாதக் குழுக்களையும் அழிக்க வேண்டும்.

இந்த நோக்கத்துடனேயே தலிபான்கள் உருவாக்கப்பட்டார்கள். கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை கச்சிதமாக முடித்த தலிபான்கள், காந்தஹாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தனர். 1989ல் ஆப்கனை விட்டு ரஷ்யப் படைகள் வெளியேறியபின், தலிபான்கள் தங்களது நடவடிக்கைகள் வழியாக அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக இவர்கள் நம்புகிறார்கள். ஆனால், தலிபான்களை உருவாக்கியது ஐஎஸ்ஐ அல்ல...’’ என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

போலவே காஷ்மீர் பிரச்னையும் பல இந்திய மக்கள் நினைப்பது போல் அவ்வளவு சிம்பிளானது அல்ல என்கிறார். இதற்கு உதாரணமாக மிர்ஸாவுடன், தான் அருந்திய காலை உணவுபற்றிக் குறிப்பிடுகிறார். ‘‘ஒருநாள் அவருடன் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பேச்சுவாக்கில் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு சொன்னேன். உடனே சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மிர்ஸாவின் முகம் மாறிவிட்டது.

‘நீங்கள் இந்தப் பொழுதையே நாசம் செய்து விட்டீர்கள்...’ எனச் சீறினார்...’’ இந்நூல் வெளியானது 2011ல்தான். ஆனால், 2004 முதலே இதற்கான தகவல்களைத் திரட்டத் தொடங்கியிருக்கிறார் ஹெய்ன். 18 ஆண்டுகள் பாகிஸ்தானில் வசித்திருக்கிறார். அப்போது அங்கு அலுவலக இயக்குநராக இருந்த ஐரின் வாங்கை திருமணம் செய்து கொண்டார். நூலுக்கான ஆராய்ச்சித் தரவுகளை வழங்கியது மிஸஸ் ஹெய்ன்தான்!

ஆண்டுக்கு இரு முறை என்ற அடிப்படையில் ஐந்து ஆண்டுகளில் பத்து முறை இந்தியாவுக்கு வந்து இந்நூலை முழுமைப்படுத்தி இருக்கிறார். ‘ஜெர்மன் உளவு நிறுவனத்தில் 6 ஆயிரம் பேர் உள்ளனர். ஐஎஸ்ஐயில் 3 ஆயிரம் பேர் இருக்கலாம்...’ என்கிறார் ஹெய்ன் கீஸ்லிங்.     

ஐஎஸ்ஐ வரலாறு!
ஆஸ்திரேலிய தளபதி சர் வால்டர் ஜோசப் கவ்தோரால் 1948ம் ஆண்டு தொடங்கப்பட்ட உளவு நிறுவனமே ஐஎஸ்ஐ (Inter-Services Intelligence). பாகிஸ்தானின் தரைப்படை, விமானப்படை, கப்பல் படை ஆகியவற்றுக்கிடையே தகவல் பரிமாறுவதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்த அமைப்பை உருவாக்கினார்கள். உள்நாட்டிலுள்ள ஐந்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இதுவே ப்ரீமியர் அமைப்பு. ஏனோதானோ என்றிருந்த ஐஎஸ்ஐயின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி கச்சிதமாக்கிய செயல்தலைவர், முன்னாள் கடற்படைத் தளபதியான சையத் முகமது ஹசன்.

ரஷ்ய ஆதிக்கத்துக்கு எதிரான போரில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவுடனும், ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் அமைப்புடனும் இணைந்து ஐஎஸ்ஐ செயல்பட்டது. தன் வெளிநாட்டு நிதியைக்கொண்டு மதக் கல்வி மையங்களைத் தொடங்கி, மாணவர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்களாக அவர்களை இவ்வமைப்பு மாற்றுவதாகவும், கூடவே ஆயுதங்களை சப்ளை செய்வதாகவும் உலக நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.

1965ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நடைபெற்றது. அடுத்த ஆண்டே பாகிஸ்தான் அரசு இந்த அமைப்பை அங்கீகரித்தது. 1969ல் முழுமையாக ஐஎஸ்ஐ மாற்றியமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் 21வது தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெனரல் நவீத் முக்தார் (டிச.11, 2016), பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான பொறுப்பை இதற்கு முன் வகித்தவர்.