ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 13

‘‘தோழர் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடியவரிடம் எச்சரிக்கையோடு இருங்கள்...’’ என ஒரு காவல்துறை உயரதிகாரி கருத்து தெரிவித்திருக்கிறார். உண்மையில், தோழர் என்ற சொல், அவர் சொல்வதுபோல எச்சரிக்கைகளோடும் சந்தேகங்களோடும் அணுகவேண்டிய சொல் அல்ல. பொதுவுடமைக் கொள்கைகளில் தன்னைப் பிணைத்துக்கொண்ட அல்லது பிணைத்துக் கொள்ள விரும்புகிற ஒவ்வொருவரும் ஆசையோடு உச்சரிக்கும் மந்திரச் சொல் அது. எளிய மனிதர்கள் தங்கள் உணர்வுகளையும் ஆறுதலையும் அச்சொல்லில் இருந்தே பெறுகிறார்கள்.

துயர்மிகுந்த இக்காலத்தின் சூழ்ச்சியை தரைமட்டமாக்க உதவக்கூடிய வலிமை அச்சொல்லுக்கே உண்டு. தோழர் என்ற சொல்லின் மெய்யான அர்த்தத்தை எனக்குக் கடத்தியவர்களில் முக்கியமானவர் தோழர் இளவேனில். அவருடைய ‘கவிதா’, மற்றும் ‘25, வெண்மணித் தெரு’ ஆகிய நூல்களைப் பற்றித் தொடங்கியதே என் எழுத்துப் பயணம். அந்நூல்களை வாசிக்காமல் போயிருந்தால் கலை இலக்கியங்கள் குறித்த என் பார்வைகள் கவலைக்குரியதாக மாறியிருக்கும்.

இப்பவும் கலை, கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா? என்று நடத்தப்படும் விவாதத்திற்கு தத்துவார்த்த விளக்கங்களைத் தரக்கூடிய நூல்களாக அவற்றைக் கருதலாம். செளந்தர்ய உபாசகர்கள் என்னும் பதப் பிரயோகத்தை வைத்துக் கொண்டு அந்நூல்களில் அவர் செய்திருக்கும் எழுத்து உச்சாடனங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. உலகப் புரட்சிகளையெல்லாம் தன் எழுத்தின் வாயிலாக அவர் தொட்டுக்காட்டிய கம்பீரத்திற்காக எத்தனைமுறை வேண்டுமானாலும் அந்நூல்களை வாசிக்கலாம்.

மயக்குறு நடை என்பார்களே அப்படியான அழகுத் தமிழ்நடை அவருடையது. கவிஞர். விக்ரமாதித்தியன் சொல்வது போல விவிலிய மொழிநடையில் அவருடைய வாக்கியங்கள் அமைந்திருந்தாலும், அவற்றின் ஊடாக அவர் கட்டமைக்கும் கருத்துகள், புதிய ஏற்பாட்டின் மலைப்பிரசங்கத்திற்கு நிகரானவை. இன்றைக்கு தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகள் பலரையும் அவருடைய எழுத்துகள் கவ்வி இருக்கின்றன.

ஆனாலும், அவருக்கே உரிய தனித்துவம் பிறிதொருவருக்கு வாய்க்கவில்லை. ‘எனது சாளரத்தின் வழியே’ என்ற தலைப்பில் அவர் கார்க்கி இதழில் எழுதிய கட்டுரைகள் இடதுசாரிகளின் எழுத்துகளுக்கு சாட்சியம் கூறுபவை. பகத்சிங்கும் இந்திய வரலாறும் என்ற சுப. வீரபாண்டியனின் நூலுக்கு தோழர் இளவேனில் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவருடைய எழுத்துகள் எத்தகையன என்பதை எடுத்துச்சொல்ல.

அணிந்துரை என்பது ஒரு நூலுக்கு அணி சேர்ப்பது அல்லது அழகு சேர்ப்பது என்று எனக்கிருந்த கருத்தை மாற்றி, அறிவையும் அர்த்தபுஷ்டியையும் உண்டாக்குவதே அணிந்துரை என உணரவைத்தவர் இளவேனில். சுப.வீரபாண்டியனின் நூலை வாசிக்கையில் கண்ணீர்விட்டதாக இளவேனில் அந்த அணிந்துரையில் தெரிவித்திருப்பார். உண்மையில், இளவேனிலின் அணிந்துரையை வாசித்தபொழுதே எனக்கு அழுகை வந்தது.

நூலிலுள்ள சம்பவங்களை கண்ணீரோடு அவர் விவரித்திருக்கும் விதம் இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை நமக்குக் காட்டும். குறிப்பாக, மகாத்மாவாகப் போற்றப்படும் காந்தி, பகத்சிங்கை எப்படிப் பார்த்தார் என்பதை அக்கண்ணீரிலிருந்துதான் நம்மால் கண்டடைய முடியும். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக இளவேனிலின் எழுத்துகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். என்றாலும், அவர் அதே பொலிவோடு அதே தரத்தோடு எழுதிக்கொண்டிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

காட்சி ரூபங்களாக அவருடைய எழுத்துகள் விரிகின்றன. பிரஞ்சுப் புரட்சியையும் ருஷ்யப் புரட்சியையும் வியட்நாமையும், கியூபாவையும் அவர் சொற்களிலிருந்தே நானும் அறிந்துகொண்டேன். ‘கவிதா’வும், ‘வெண்மணித் தெரு’வும் எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை அவருடைய ஆத்மா என்றொரு தெருப்பாடகனும் புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கமும் ஏற்படுத்தத் தவறவில்லை. இடைவிடாமல் ஒரு  நூலை வாசிக்கமுடியும் என்னும் நம்பிக்கையை அவர் நூல்களே வழங்கின.

விடிய விடிய நூல்களை வாசிக்கும் பழக்கமுடைய யாரையும், அவருடைய நூல்கள் விழிப்பை நோக்கித் தள்ளிவிடும். அடித்தட்டு மக்களின் அவலநிலையை ஆவேச நெருப்பால் சுட்டுப்பொசுக்கும் அவருடைய எழுத்துகள் ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் வீரியமுடையவை. சென்னைக்கு வந்த புதிதில், யார் யாரையெல்லாம் சந்திக்கவேண்டும் என பட்டியல் வைத்திருந்தேனோ அந்தப் பட்டியலில் முதல் பெயராக தோழர். இளவேனிலின் பெயரையே வைத்திருந்தேன்.

எழுத்தில் மட்டுமே அறிந்திருந்த அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை, மூத்த பத்திரிகையாளரும் என் பத்திரிகை ஆசானுமான துரை என்கிற வித்யாஷங்கர் ஏற்படுத்திக் கொடுத்தார். பதினேழு ஆண்டுகளுக்கு முன், ஒரு மங்கிய மாலையில் சென்னை தி.நகர் இந்தியன் காபி ஹவுஸ் வாசலில் தோழர் இளவேனிலைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்த அந்த நாள், என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்களில் ஒன்று.

படைப்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள விரும்பாத என்னிலும் அச்சந்திப்பு நிழல் படம்போல் நிலைத்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக எழுத்தில் மட்டுமே நேசித்துவந்த ஒருவரை, நேரில் சந்தித்த அந்தத் தருணம் அதிஅற்புதமானது. எதிர்பார்ப்புகள் மொத்தமும் கைகூடின அந்தத் தருணத்தில் என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

‘‘பிரிந்தவர் சேர்கையில் பேசவும் தோணுமோ?’’ என கண்ணதாசன் எழுதுவார். பார்க்கப் போனால், பிரியமுள்ளவரை சந்திக்கையிலும் அப்படித்தான் நேர்கிறது. பேசுவதற்கு எவ்வளவோ இருந்தும்கூட தோழர் இளவேனிலிடம் என்னைநான் யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அது தயக்கமோ பயமோ அல்ல. பிரமிப்பு.

அந்த பிரமிப்பிலிருந்து இன்றுவரை என்னால் விடுபடமுடியவில்லை. அமைதியாக அவர் அருகில் நின்று, அவர் யாரிடமாவது விவாதிப்பதை ரசித்துவிட்டு அப்போதுபோலவே இப்போதும் திரும்பிவிடுகிறேன். மிகவும் சகஜமாகப் பழகக்கூடியவரே அவர். என்றாலும், அவர் எனக்குள் அண்ணாந்து பார்க்கத்தக்க பிரமாண்டமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறார். அந்த பிரமாண்டத்திற்கு எதிரில் நிற்கையில் என்னைநான் சிறிய புல்லாகக் கருதுகிறேன்.

பெருக்கெடுக்கும் வார்த்தைகளை பாயவிடாமல் ஏதோ ஒருவித அடர்ந்த அமைதி என்னுள்ளே அணைகளைக் கட்டி எழுப்புகின்றன. அதைவிட, அவரைப்பற்றி அவரிடமே புகழ்ந்து சொல்ல, அதை அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்னும் எண்ணம் அமைதியாக வெளிப்படுகிறது. உலக இலக்கியமானாலும் உலக அரசியலானாலும் அனாயாசமாக காபி ஹவுஸ் வாசலில் நின்று பேசக்கூடிய ஒருவருக்கு, என்போன்றோர் அள்ளி வழங்கும் புகழுரைகளில் பெருமைப்படவோ பெருமிதப்படவோ ஒன்றுமே இல்லை.

‘மகரந்தங்களிலிருந்தும் துப்பாக்கி ரவைகள்’ என்னும் தலைப்பில் கவிஞர் இன்குலாப்பின் கவிதை நூல் குறித்து தோழர் இளவேனில் ஒரு முன்னுரை எழுதியிருப்பார். அதில், ‘ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு சிந்தனைக்கும் பின்னே ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது’ என மாசேதுங்கை மேற்கோள் காட்டியிருப்பார். என் சொல்லிலும் என் சிந்தனையிலும் அப்படியான வர்க்க முத்திரைகளைப் பதித்ததில் தோழர் இளவேனிலுக்குப் பெரும் பங்குண்டு.

சொல்லாலும் சிந்தனையாலும் என்னை ஈர்த்த அவரை பாட்டாளி வர்க்க முத்திரைத்தாளாகவே பார்க்கிறேன். ஒருகாலம்வரை நானுமே தொட்டால் தீப்பிடிக்கும் எழுத்துகளை எழுதக்கூடிய இன்குலாப்பும் இளவேனிலும் ஒருவரே என்றுதான் நினைத்திருந்தேன். காலம் செல்லச்செல்லத்தான் உரைநடையில் இளவேனிலாகவும் கவிதையில் இன்குலாப்பாகவும் வெளிப்பட்ட அவர்கள் இருவரும் ஒருவரல்ல என்னும் உண்மை தெரிந்தது. ஒத்த சிந்தனையுடையவர்கள் இருவராக இருந்தாலும் ஒருவராகவே அறியப்படுகிறார்கள்.

அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான புன்னகையில் ஒரே மாதிரியான கொள்கையில் ஒன்றியிருப்பவர்கள். எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியில்லாமல் வாழக் கூடியவர்களாக அவர்கள் தங்களை வடிவமைத்துக்கொள்ள மார்க்சீய சிந்தனைகளே அடிப்படை. போலி எழுத்துகளையும் போலி எழுத்தாளர்களையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. வார்த்தைகளை மடக்கிப்போட்டு கவிதை என்று சொல்பவர்களை அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.

மானுட விடுதலைக்கான போராட்டத்தில் கலையும் இலக்கியங்களும் அவர்களுக்கு மற்றுமொரு ஆயுதம் என்றுதான் சொல்கிறார்கள். ‘வாளோடும் தேன்சிந்தும் மலர்களோடும்’, ‘புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ ஆகிய நூல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அதிலும், தோழர் இளவேனில் பழைய பரவசத்தை எனக்கு ஏற்படுத்தத் தவறவில்லை.

எழுத்தாளர் வண்ணநிலவன் உள்பட சிலர், எழுத்தில் முற்போக்கு பிற்போக்கு என்பதெல்லாம் இல்லை; அப்படி ஒரு பாகுபாடு உள்ளதாகச் சொல்லுவது கம்யூனிஸ்ட்டுகள் ஏற்படுத்தும் மாயை என்று வாதிடுவார்கள். அதற்காக இடதுசாரி இலக்கியங்களாக அறியப்பட்ட பல நூல்களை வாசித்து மதிப்பெண்ணும் போட்டிருக்கிறார்கள். தொ. மு. சி. ரகுநாதன், டி. செல்வராஜ், கு. சின்னப்பபாரதி, இராஜேந்திரசோழன் போன்றோரைப் பட்டியலிட்டு சங்கப் பிரச்சனைகளை எழுதுவது எப்படி இலக்கியமாகும் என்றும் கேட்கிறார்கள்.

எதுதான் இலக்கியமென்று சொல்லமுடியாத அவர்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்வதில் காட்டும் தயக்கம் கவனிக்கத்தக்கது. அவர்கள் அப்படிச்சொன்னாலும், மக்கள் எழுத்து என்ற ஒன்று இல்லாமல் இல்லை. மக்களை எழுதுவதும் மக்களுக்காக எழுவதுமே முற்போக்கு இலக்கியம் என்று உலகமே ஒப்புக்கொண்டபின் இவர்களுடைய உசாத்துணைகள் தேவையே இல்லை.

யார் நம்மை எழுத வைக்கிறார்கள், யாருக்காக நாம் எழுதுகிறோம் என்ற தெளிவில்லாமல் எழுவதுவதும் எழுத்தா? என்பது வேறு விஷயம். சுவாரஸ்யத்துக்காகவும் சுய நுகர்வுக்காகவும் எழுதுவது அல்ல எழுத்து. தன்னைப் பின்தொடரும் அல்லது தான் பின்தொடரும் மக்களை முன்வைப்பதே எழுத்து. வெகுசன ஏடுகளில் வெளிவரும் வணிக எழுத்துகளைவிட, வாழ்வை அச்சு அசலாகப் பிரதியெடுக்கும் எதார்த்தப் படைப்புகளுக்கு ஆயுள் அதிகம்.

வித்வத்துக்காக எழுதுவதும் அவ்வாறு எழுதிக்கொண்டிப்பவர்கள் தங்களுக்குள்ள வித்யாகர்வங்களை வெளிப்படுத்த எண்ணுவதும் விமர்சனத்துக்குரியவை. ஒரு கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சிற்றிதழில் கவிதை பிரசுரமானால் இலக்கிய அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக அதை எழுதியவர் பெருமைகொள்ளும் சூழல் இருந்தது. எதையாவது கவிதை என்று எழுதுகிறவர்களை ஊக்குவிக்கும் வேலையை அச்சிற்றிதழும் செய்துவந்தது. தோழர் இளவேனில் அச்சிற்றிதழின் உண்மைத் தன்மையை உலகுக்குக் காட்ட ஒரு காரியம் செய்தார்.

தன்னுடைய நண்பர்கள் சிலரை வரவழைத்து, ஆளுக்கொரு வார்த்தையைச் சொல்லச்சொல்லி கவிதை மாதிரி ஒன்றை அச்சிற்றிதழுக்கு அனுப்பி வைத்தார். வெறும் சொற்குவியலாக அமையப்பெற்ற அவ்வாக்கியங்களை கவிதை என்னும் பெயரில் அச்சிற்றிதழும் பிரசுரித்தது. சொற்குவியலை கவிதையாகப் பார்த்த அச்சிற்றிதழ், அதை எழுதியவர் அரூபசொரூபன் என அச்சிட்டிருந்தது அக்காலத்திய நகைச்சுவை. இப்படித்தான் இன்றைய நவீன கவிதைகள் எழுதப்படுகின்றன என நிறுவ, வேடிக்கையாக அவ்விளையாட்டை எண்பதுகளின் இறுதியில் நிகழ்த்தியவர் இளவேனில்..

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்