இந்தியன் வங்கியை உருவாக்கியவர்!



-கோமல் அன்பரசன்

வி.கிருஷ்ணசுவாமி அய்யர்
தொழிலில் சாதனை, அரசியல், கல்வி, கலை, இலக்கியம், இசை, நாடகம், மருத்துவம், நிதித்துறை, சமயம், விடுதலைப் போராட்டம், சமூக சமத்துவ முயற்சிகள், தொலைநோக்கு சிந்தனைகள் என கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பெயரைப் பொறிப்பது அத்தனை சாதாரணமா? அதுவும் 50 வயதைக்கூட தொடாமல் அகால மரணமடைந்த ஒருவர், தமிழகம் தன்னை மறக்க முடியாதபடி சாதனை மனிதராக நிலைத்து நிற்பது அசாத்தியமல்லவா?

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் ‘முன்சீப்’ வெங்கட்ராம அய்யரின் மகனாக, சட்டப் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் (1863) பிறந்தாலும் வக்கீல் தொழிலில் வெற்றிக்கொடி கட்டுவது கிருஷ்ணசுவாமி அய்யருக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை. தஞ்சாவூரிலும் கும்பகோணத்திலும் படித்துவிட்டு, அன்றைக்கு சட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்பட்ட சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்தார்.

அவரை சட்டம் படிக்கத் தூண்டியவர் ‘ஹிந்து’ பத்திரிகை கஸ்தூரிரங்க அய்யங்காரின் அண்ணன் சீனிவாச ராகவன். 1885ல் சட்டப்படிப்பை முடித்துவிட்டு, அன்றைக்கு மூத்த வழக்கறிஞராக இருந்த ஆர்.பாலாஜி ராவிடம் தொழில் பழகுநராக சேர்ந்தார் கிருஷ்ணசுவாமி. பாலாஜி ராவின் நினைவாக சென்னை, ராயப்பேட்டையில் பாலாஜி நகர் இப்போது இருக்கிறது. பின்னர் மயிலாப்பூர் சர்.எஸ்.சுப்ரமணிய அய்யரிடம் ஜூனியராகச் சேர்ந்தார்.

கிருஷ்ணசுவாமியைத் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த சுப்ரமணிய அய்யர், சில ஆண்டுகளில் தனியாக தொழில் நடத்த அனுமதித்து, தனக்கு வந்த கட்சிக்காரர்களில் சிலரை ஜூனியருக்கு அனுப்பி வைத்தார். எல்லா முதல் தலைமுறை வக்கீல்களைப் போலவே கிருஷ்ணசுவாமிக்கும் ஆரம்ப நாட்கள் போராட்ட காலம்தான். ஆனால், விரைவிலேயே திருப்பம் ஏற்பட்டது. உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக இருந்து ‘முன்சீப்’ ஆன ராமசுவாமி அய்யங்கார், தன்னிடமிருந்த வழக்குகள் அனைத்தையும் கிருஷ்ணசுவாமியிடம் ஒப்படைத்தார்.

அவர் கொடுத்ததில் முதல் வழக்கு, கடலூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வாதங்களில் வெளுத்து வாங்கி, வழக்கில் வென்றார் கிருஷ்ணசுவாமி. இந்த வெற்றி, அவருக்குப் புதுப்புது கட்சிக்காரர்களைக் கொண்டுவந்து சேர்த்தது. சீர்காழி ஜமீன்தார் எஸ்டேட் வழக்கு ஒரே நாளில் அவரை உச்சத்திற்கு கொண்டுபோனது.

அவ்வழக்கில், மிகப்பெரிய சட்ட நிபுணரான பாஷ்யம் அய்யங்காரைத் தோற்கடித்ததன் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல வங்கி திவால் வழக்கு ஒன்று வந்தது. ஜார்ஜ் அர்பத்னாட் என்ற வெள்ளைக்காரர் நடத்திய ‘அர்பத்னாட் வங்கி’யில் ஆயிரக்கணக்கானோர் பணம் போட்டு வைத்திருந்தனர். திடீரென ஒரு நாள் வங்கி திவாலானதாக அறிவித்தார் ஜார்ஜ். வழக்கு நீதிமன்றத்திற்குப் போனது. பாதிக்கப்பட்டவர்களுக்காக கிருஷ்ணசுவாமி அய்யர் களமிறங்கினார்.

வங்கி தரப்பில் வாதாடிய வெள்ளைக்கார பாரீஸ்டர் எர்ட்லி நார்டன், விசாரணையின் முதல் நாளில் அதிரடியாக ஒரு குண்டு போட்டார். ‘இன்சால்வன்சி’ எனப்படும் திவால் வழக்குகளை பாரீஸ்டர்கள் மட்டுமே நடத்த முடியும் என்ற அன்றைய விதியைச் சுட்டிக்காட்டி, ‘இந்திய வக்கீலான கிருஷ்ணசுவாமி அய்யர் இவ்வழக்கில் வாதாட முடியாது’ என்றார். ‘நெருக்கடியான நேரத்தில் சரியாகச் செயல்படுவதுதான் உண்மையான ஆற்றல்’ என்பதை நிரூபிக்கும் விதத்தில், நீதிமன்றத்தை அதிரவைக்கும் முடிவை உடனே எடுத்தார் கிருஷ்ணசுவாமி.

கறுப்பு அங்கியைக் கழற்றி வைத்த அவர், ‘வங்கி திவாலானதால் பணம் இழந்தவர்களில் நானும் ஒருவன்; ‘பார்ட்டி இன் பர்சன்’ ஆக வாதிடுகிறேன்’ என்றார். நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க பாடுபட்டார். பெரிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு ஜார்ஜுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இக்காலத்தில் கிருஷ்ணசுவாமிக்குத் தோன்றிய சிந்தனையின் வடிவம்தான் 8 இந்தியர்கள் சேர்ந்து உருவாக்கி, இன்றைக்கு வளர்ந்து நிற்கும் ‘இந்தியன் வங்கி’. வெள்ளைக்காரனின் வங்கியில் ஏமாறாமல், இந்தியர்கள் தாமே ஒரு வங்கி தொடங்கலாம் என்ற அவரது தொலைநோக்கு எண்ணம், இங்கே பல வங்கிகள் தோன்ற வழிகாட்டியது. நீதிமன்ற வாதங்களில் கிருஷ்ணசுவாமி அய்யர் உரக்க குரல் எழுப்பி பேசுவார்.

சில நேரங்களில் நீதிமன்றத்திற்கு வெளியேயும் அந்த கணீர் குரல் எதிரொலிக்கும். அதிரடியாக குறுக்கிட்டு எதிரிகளைத் திணறடிப்பார். இன்னொரு அரிய குணம் அவரிடம் இருந்தது. பட்டிக்காட்டு சுப்பனாக இருந்தாலும் பட்டணத்து கோமானாக இருந்தாலும் தன்னிடம் வரும் கட்சிக்காரர்களை ஒரே மாதிரிதான் நடத்துவார். இதைவிட முக்கியம் தொழில் ஊதியம் பெறுவதில் அவர் கடைப்பிடித்த நெறிகள். வழக்கறிஞரின் ஊதியம் குறித்து நீதிமன்றம் வரையறுத்துள்ள சட்டப்படியே செயல்படுவார்.

தன்னிடம் பணிபுரியும் ஜூனியர்களுக்கும் அதன்படி சரியாக ஊதியம் வழங்குவார். தொழில் பழகும் வழக்கறிஞர்களுக்காக மாலை நேர சிறப்புச் சொற்பொழிவுகள் அந்தக் காலத்தில் பார் கவுன்சிலில் நடத்தப்பட்டன. அதில் கிருஷ்ணசுவாமி ஆற்றிய அரிய உரைகள் புகழ் பெற்றவை. அவை நூலாக வந்திருக்கின்றன. 1889 முதல் 1902 வரை சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்து அவர் செய்த பணிகள் என்றென்றும் மறக்கமுடியாதவை.

இந்திய வக்கீல்களுக்கும் சம உரிமை வேண்டுமென போராட்டங்களை முன்னெடுத்தார். அப்போதைய தலைமை நீதிபதி ஆர்தர் காலின்ஸ், இந்திய வக்கீல்களின் கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை உணர்ந்தார். அதன் விளைவாகத்தான் நம்ம ஊர் வக்கீல்கள் கறுப்பு அங்கியும், காலில் ஷூவும் போட்டுக் கொண்டு உயர்நீதிமன்றத்திற்குள் செல்ல முடிந்தது. இதைப் போலவே இன்றும் வெளிவந்துகொண்டிருக்கும் ‘மெட்ராஸ் லா ஜெர்னல்’ உருவாக்கத்தில் கிருஷ்ணசுவாமியின் முன் முயற்சிகள் மிக முக்கியமானவை.

வக்கீல் தொழிலில் புகழ் பெற்றபோதே இன்னொரு பக்கம் சமூகத்திற்குப் பயனுள்ள பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தார். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1897 மற்றும் 1903 ஆண்டுகளில் சென்னையில் காங்கிரஸ் மாநாடுகளை நடத்தியதில் முக்கியபங்காற்றினார்.

காங்கிரஸ் கட்சிக்கு வெகு மக்கள் ஆதரவோடு நிதியும் திரட்ட இவர் கொடுத்த யோசனையின்படிதான், 25 காசு உறுப்பினர் திட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தார். மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் இருந்த இவரது ‘ஆஸ்ரமா’ பங்களா, காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வரும்போதெல்லாம் தங்கி நட்பு பாராட்டும் இடமாக இருந்தது. மகாத்மா காந்தி மட்டுமல்ல; கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி என பல வடநாட்டுத் தலைவர்கள் இவர் மீது அன்பைப் பொழிந்தனர்.

இந்து சமயத்தின் மதிப்பீடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், கோயில் சொத்துக்களின் வருமானம் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எடுத்தார். மிக இளம் வயதில் காஞ்சி மடாதிபதியாக பெரிய சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி பொறுப்பேற்றபோது, மடத்தின் நிர்வாகம் தவறானவர்களின் கரங்களுக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தினார். ‘தர்ம ரக்சன சபா’ என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் சுவாமி விவேகானந்தரின் உலகப்புகழ் பெற்ற சிகாகோ பயணத்திற்கு நிதி வழங்கினார்.

அவர் திரும்பிவந்தபோது உற்சாக வரவேற்பு கொடுத்ததிலும் கிருஷ்ணசுவாமி முதல் நபராக நின்றார். மயிலாப்பூரில் வெங்கட்ரமணா ஆயுர்வேத மருத்துவமனையையும் ஆயுர்வேத கல்லூரியையும் அந்தக் காலத்திலேயே ரூ.20 ஆயிரம் கொடுத்து ஏற்படுத்தினார். ஆயிரமாயிரம் அறிவுஜீவிகளைத் தந்த சென்னை பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி ஒரு கட்டத்தில் தடுமாறியபோது, தாளாளராக இருந்து தன்னுடைய நிர்வாகத்திறனால் அதனை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார்.

மயிலாப்பூரில் இன்றைக்கு நூறாண்டு தாண்டி நிற்கும் சமஸ்கிருதக் கல்லூரியை உருவாக்கியவர் இவர்தான். சமஸ்கிருதத்தில் பற்று கொண்டிருந்த அதேநேரத்தில், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் மீது பெருமதிப்பு கொண்டு அவற்றை விரும்பிக் கேட்டார். ‘சமஸ்கிருதத்தில் உயர்ந்த அர்த்தம் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால், பாடிய மாத்திரத்தில் மனதைக் கவ்விக்கொண்டு உருக்குவதில், தேவாரம், திருவாசகங்களுக்குச் சமமாக ஏதோ ஒன்றிரண்டுதான் அதில் இருக்கிறது’ என்று கிருஷ்ணசுவாமி அய்யர் கூறியிருக்கிறார்.

கர்நாடக இசையின்பால் பேரார்வம் கொண்டிருந்த கிருஷ்ணசுவாமி அய்யரும் கே.ஆர்.சுந்தரமய்யர் போன்ற அவரது நண்பர்களும் சேர்ந்து உருவாக்கி, வளர்த்தெடுத்ததுதான் சென்னை மியூசிக் அகாடமி. இசைப்பள்ளி, நூலகம், இசை ஆராய்ச்சி மாநாடுகள், விவாத அரங்குகள் போன்றவை நடத்தப்பட்டு, இசைத்துறையின் கௌரவக் குறியீடாக மியூசிக் அகாடமி மாற்றப்பட்டது கிருஷ்ணசுவாமி அய்யர் அதற்கு தலைவராக இருந்த காலத்தில்தான்.

நாடகத்துறையையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஷேக்ஸ்பியரின் உலகப்புகழ் பெற்ற நாடகங்களை தமிழுக்கு கொண்டுவந்தார். ‘தமிழ் நாடக உலகின் தந்தை’ எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சுகுண விலாஸ சபா’வில் அவற்றை அரங்கேற்றினார். அதில் சில நாடகங்களில் நடிக்கவும் செய்தார். நீண்டு கொண்டே போகும் கிருஷ்ணசுவாமி அய்யரின் சாதனைப் பட்டியலில் ‘மயிலாப்பூர் கிளப்’ முக்கியமானது.

காஸ்மோபாலிடன் கிளப்பிற்குப் போட்டியாக அவர் முன்னின்று உருவாக்கியதே அந்த கிளப். மயிலாப்பூர் ரானடே நூலகம், மெட்ராஸ் லைப்ரரி அசோசியேஷன் (மாலா), சவுத் இண்டியன் நேஷனல் அசோசியேஷன் என சொல்லிமாளாத அளவுக்கு கிருஷ்ணசுவாமி அய்யர் செய்த பணிகள் ஏராளம். உயர்நீதிமன்ற நீதிபதியாக ஓராண்டு காலமும், கடைசியில் சென்னை மாகாண ஆளுநரின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

பிரபல சமஸ்கிருத மேதை திருவாலங்காடு ராமசாமி சாஸ்திரிகளின் மகள் சுந்தரி என்பவரை மணமுடித்த கிருஷ்ணசுவாமிக்கு 2 மகன்கள், 4 மகள்கள். மூத்த மகன் பாலசுப்ரமணிய அய்யர் தந்தையைப்போல வழக்கறிஞராக இருந்தார். இளைய மகன் சந்திரசேகரன் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, தந்தை தொடங்கிய நிறுவனங்கள் இன்றளவும் நின்று சேவை செய்யும் அளவுக்கு மாற்றிய நிர்வாகியாகத் திகழ்ந்தார். இவர்தான் கிருஷ்ணசுவாமி அய்யரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

கிருஷ்ணசுவாமியின் மகள் சாவித்திரி தமிழிலும் ஆங்கிலத்திலும் அசத்தலான நூல்களை எழுதி, குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராக முத்திரை பதித்தார். தன் சொத்தின் ஒரு பகுதியை இவர் கொடுத்து உருவாக்கியதே சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி. தமிழக வரலாற்றில் மறக்கவே முடியாத கிருஷ்ணசுவாமி அய்யர் குடும்பத்தின் வாரிசுகள் இன்றும் மூதாதையரின் வழியில் தொண்டுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் பெருமைமிக்க வழித்தோன்றலாகத் திகழ்பவர் கிருஷ்ணசுவாமி அய்யரின் கொள்ளுப்பேத்தியும் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பிரபா தேவன். 15.6.1863ல் பிறந்து 28.12.1911ல் மறைந்து, மொத்தம் 48 ஆண்டுகளே வாழ்ந்தாலும், இத்தனை சாதனைகளோடு பெயர் சொல்லும் நல்ல சந்ததியையும் விட்டுச் சென்றிருக்கிறார் கிருஷ்ணசுவாமி அய்யர். ‘மகா புருஷர்’ என்று இவரை மகாத்மா காந்தியடிகள் அழைத்தது எத்தனை பொருத்தம்!

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்


மெரினாவைக் காப்பாற்றியவர்!

இன்று மெரினா கடற்கரை சேதாரமின்றி இருக்கிறதென்றால், அதற்கு காரணம் கிருஷ்ணசுவாமி அய்யர்தான். கிண்டி - மயிலாப்பூர் - கோட்டை என்ற மார்க்கத்தில் மெரினா கடற்கரை வழியாக ரயில்பாதை அமைக்க 1903 ஆம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது. தென்னிந்திய ரயில்வேயின் இத்திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியும் அனுமதியளித்துவிட்டது. ‘இந்த கடற்கரை சென்னையின் நுரையீரல் போன்றது. இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்’ என்று மிகப்பெரிய மக்கள் கூட்டத்தைத் திரட்டி எதிர்த்தார் கிருஷ்ணசுவாமி. ஆங்கிலேய அரசும் பணிந்தது. அவரது தீர்க்கதரிசனத்தால் மெரினா கடற்கரை காப்பாற்றப்பட்டது.

பாரதியின் எழுத்தை முதலில் அச்சிட்டவர்!

காங்கிரசில் மிதவாதிகள் பக்கமிருந்த கிருஷ்ணசுவாமி அய்யருக்கு, தீவிரவாத தரப்பில் இருந்த மகாகவி பாரதியைப் பற்றி அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இல்லை. பாரதியார் ஆவேசமாக எழுதிய கட்டுரைகளும் சுதந்திரத்தைப் பற்றிய அவரது அதிதீவிர சிந்தனைகளுமே அதற்கு காரணம். ஒரு முறை பாரதியார் ‘வந்தே மாதரம்’ கவிதையைப் பாடும்போது நேரில் கேட்ட அய்யர், மெய்சிலிர்த்துப் போனார். உடனே பாரதியின் கவிதைகளை அச்சிட்டு தமிழ்நாடு முழுதும் வெளியிட பணம் கொடுத்தார். ‘பாரதியின் கவிதைகள்’ அவர் வாழ்ந்த காலத்தில், முதல் முறையாக நூலாக வெளிவந்தது அப்போதுதான். அந்த வரலாற்றுப் பெருமை கிருஷ்ணசுவாமி அய்யரையே சாரும்.

தாழ்த்தப்பட்டோர் படிக்க ஏற்பாடு!

அன்றைக்கு மெட்ராஸ் சர்வகலாசாலையாக இருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்புகளில் இருந்த கிருஷ்ணசுவாமி அய்யர், அதன் வளர்ச்சிக்காக நிறைய பணிகளை ஆற்றினார். அதில், தாழ்த்தப்பட்டவர்களுக்குப் படிக்க வாய்ப்பளிக்காத கள்ளிக்கோட்டை கல்லூரியைப் போராடி பல்கலைக்கழகத்துடன் இணைத்தது, முக்கியமான வேலை. அதன்பிறகே அக்கல்லூரியில் தாழ்த்தப்பட்டோரும் படித்தனர். இதற்காக கிருஷ்ணசுவாமி அய்யருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது.